புதிய அரசியல் புதிய தலைமை – கருணாகரன்

“முள்ளிவாய்க்கால் 10” நிகழ்வுகள் உலகின் பல இடங்களிலும் கடந்த மே 18 டோடு முடிந்து விட்டன. கனடா, லண்டன் போன்ற  வெளிநாடுகளில் மிகப் பெரிய ஏற்பாடுகளோடு நினைவு கூரல்கள், இனப்படுகொலை குறித்த கருத்தமர்வுகள் எல்லாம் நடந்திருக்கின்றன.

ஆனால் இங்கு எதுவும் மாறவும் இல்லை, மாறப்போவதும் இல்லை. மே -18 நினைவுகூறும் வருடங்களின் எண்ணிக்கையை தவிர” என வலிமையான ஒரு குறிப்பினை எழுதியிருக்கிறார் மகிழ் பாலா.

அவருடைய இந்தக் குறிப்பில் தீராத் துக்கமும் வலிதரும் ஏமாற்றமும் உட்கனலாய்க் கோபமும் தொனிக்கின்றன. இது தனியொருவரின் கொதிப்போ சலிப்போ ஆற்றாமையோ அல்ல. முள்ளிவாய்க்கால் அனுபவத்தைப் பெற்றவர்களுக்கும் தமிழர்களுடைய எதிர்காலத்தைக் குறித்து அக்கறையோடு சிந்திப்போருக்கும் உண்டாகும் உணர்வு இதுவேயாகும்.

ஏனெனில் போர் முடிந்து 10 ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த ஒரு தசாப்த காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டிய பணிகள் ஏராளம். அவை ஒன்று கூட நிகழ்ந்தேறவில்லை. இடையில் வந்த இரண்டு தேர்தல்களிலும் தமிழ் அரசியல் தலைமைகள் அளித்த வாக்குறுதிகள் பல. அவ்வளவும் முக்கியமானவை. அந்த வாக்குறுதிகளை நம்பி ஆதரவளித்த மக்கள் ஒன்றும் சாதாரணர்களில்லை. போராட்டத்திற்காகப் பெருந்தியாயங்களைச் செய்தவர்கள். போரிலே மிகப் பெரிய இழப்பைச் சந்தித்தவர்கள். தங்கள் காயங்கள் ஆற்றப்படும். தங்களுடைய கனவுகள் கொஞ்சமேனும் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடுதான் மக்கள் வாக்களித்தனர்.

ஆனால், அவர்களின் வாக்குகளைப் பெற்ற அரசியல்வாதிகள் (சம்மந்தன், விக்கினேஸ்வரன் உள்பட) தமது சொந்த நலனையும் கட்சி நலனையும் மையப்படுத்திச் செயற்படுகின்றனரே தவிர, மக்களின் நலனைக் குறித்துச் சிந்திக்கவில்லை. அப்படிச் சிந்தித்திருப்பார்களானால் இன்று தமிழ் அரசியல் இப்படிக் கையறு நிலைக்குள்ளாகியிருக்காது.

இதனால்தான் எந்த வகையிலும் தமிழ்ச்சமூகத்தின் அரசியல் ஈடேற்றத்தைக் காணமுடியவில்லை. தமிழ் மக்களுடைய வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படவில்லை. குறைந்த பட்சம் சனங்களுக்கான தொழில் வாய்ப்புகளே சரியாக இல்லை. போரிலே உடல் உறுப்புகளை இழந்தோருக்கான உதவிகள், ஆண்துணையை இழந்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான ஆதாரம், காணாமலாக்கப்பட்டோரின் விவகாரம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விவகாரம், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், பௌத்த விரிவாக்கம், ஆதாரவற்ற சிறார்களுக்கான உதவித்திட்டங்கள் என எதற்கும் எந்த விதமான தீர்வுகளும் எட்டப்படவில்லை.

இதை விட அரசியல் தீர்வு, அதற்கான அரசிலமைப்புத்திருத்தம், நிலைமாறு காலகட்ட நீதிச் செயற்பாடுகள், பொறுப்புக்கூறல், கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்கம் என எதிலும் முன்னேற்றமில்லை.

ஆகவே போர் முடிந்த 2009, 2010 சூழலில் எப்படி மக்கள் இருந்தனரோ அதே நிலையிலேயே இன்னும் உள்ளனர். ஆக வீடுகளில் மின்சாரம் ஒளிர்கிறது. வீதிகள் சுமாராக மாறியுள்ளன. வன்னி, வாகரை போன்ற இடங்களில் அதுவுமில்லை. மற்றும்படி மனச்சுமைகளும் வாழ்க்கைச் சுமைகளும் குறையவில்லை. அரசியல் பாதுகாப்பின்மை தொடர்கிறது. அனாதரவான சூழல் நீடிக்கிறது.

குறைந்த பட்சம் சர்வதேச மட்டத்திற்கூட தமிழ் மக்களுக்குச் சாதகமான ஏதுநிலைகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. புலம்பெயர் சூழலில் உள்ளவர்களால் கூட இதற்கென உருப்படியான எதையும் செய்யவில்லை. இதில் புலிகளை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் ஒன்றுதான். தமிழ்த்தேசியவாதிகளும் எதிர்த்தேசியவாதிகளும் ஒன்றே. எந்தத் தரப்பிலும் ஒருங்கிணைந்த, நிறுவன மயப்பட்ட சிந்தனைக்கட்டமைப்போ செயற்கட்டமைப்போ இல்லாத நிலையிலேயே தமிழ்ச்சமூகம் இன்றுள்ளது.  இதையே கடந்த பத்தாண்டுகால ஈழத்தமிழரின் அரசியல் மற்றும் செயற்பாடுகளைக் குறித்துப் பேசும்போது “2009 க்கு முந்திய அரசியலானது றிஸ்க் எடுத்துச் செயற்படுமளவுக்கான பண்பைக் கொண்டிருந்தது. 2009 க்குப் பிந்திய அரசியல் பிழைப்புக்கான ஒன்றாகியுள்ளது” என்று அரசியல் பத்தியாளர் நிலாந்தன் விமர்சித்திருக்கிறார்.

இந்தப் பத்தியாளர்கூட இந்த நிலையைப் பற்றிப் பல தடவை சுட்டிக்காட்டியிருக்கிறார். “மக்களுக்கான அரசியல் வேறு. மக்களை வைத்துப் பிழைக்கும் அரசியல் வேறு. மக்களுக்கான அரசியல் என்பது மக்களுடன் இணைந்திருப்பது. அவர்களுடைய கஸ்டங்களிலும் துயரங்களிலும் இணைந்து நின்று பங்கேற்பது. அவர்களுடைய மகிழ்ச்சியில் கலந்திருப்பது. மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பது. அவர்களை பிரச்சினைகளிலிருந்து விடுவிப்பது. அவர்களை மேம்படுத்துவது” என.

மேலும் மக்களை வைத்துப் பிழைக்கும் அரசியலென்பது மக்களுக்கு மேலான பிரமுகர்களாகத் தம்மைக் கட்டமைப்பது. தமது பிம்பங்களை மேலுயர்த்துவது. மக்களுடைய பிரச்சினைகளை மேலும் வளர்ப்பது. அந்தப் பிரச்சினைகளைப் பேசிப் பேசியே காலத்தைக் கடத்துவது. நடைமுறைக்கும் யதார்த்தத்துக்கும் அப்பாலான தீர்வைப் பற்றிப் பேசுவது. பொருத்தமற்ற நிபந்தனைகளை முன்வைப்பது. தமது நலனுக்காக மக்களுக்கு விரோதமாகச் செயற்படும் அதிகாரத் தரப்புகளோடு – அரசோடு உறவுகளைப் பேணுவது. அதன் மூலம் மக்களைத் தூர வைத்துத் தமது நலன்களை அனுபவிப்பது”  என.

பல்லாயிரக்கணக்கானோரின் துக்கமும் இதுதான். தங்களுக்கு எதிரான அரசியலைத் தங்களை வைத்தே செய்யும் அரசியல் தலைமைகளைக் குறித்த கோபம் மக்களின் மனதில் கொழுந்து விட்டெரியத் தொடங்கியுள்ளது. மகிழ் பாலாவின் உளக் கொதிப்பும் ஏறக்குறைய இதுவேதான்.

ஆனால், இதையெல்லாம் யார்தான் கண்டு கொண்டார்?

நிலாந்தன், மகிழ் பாலா மற்றும் இந்தப் பத்தியாளர் உள்ளிட்ட அனைவரும் முள்ளிவாய்க்கால் நிலைமைகளை தங்களின் வாழ்வனுபவமாகக் கொண்டவர்கள். இதில் மகிழ் பாலா முள்ளிவாய்க்காலில் பேரிழப்பைச் சந்தித்தவர்களில் ஒருவர். ஈழப்போராட்டத்தில் பெரும் பங்களிப்பைச் செய்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இன்னும் ஈழக்கனவோடும் சனங்களின் விடுதலை அரசியலோடும் கலந்திருப்பவர். கோமாளித்தனமான அரசியலுக்கும் சுயநலனுக்கான சமரசங்களுக்கும் எதிரானவர்.

எனவேதான் அவருக்கு நடந்த, நடந்து கொண்டிருக்கும் இந்த மாதிரியான நிகழ்வுகளும் நடவடிக்கைகளும் சினத்தையூட்டுகின்றன. தமிழரின் அரசியல் கோமாளித்தனங்களும் வஞ்சனை அரசியலும் எதையும் மாற்றப்போவதில்லை என்பதை அவர் மிகத் துல்லியமாகவே விளங்கி வைத்திருக்கிறார். இவ்வளவுக்கும் மகிழ் பாலாவின் வயது இருபத்தி எட்டுக்குள்ளேதான்.

இந்தச் சிறிய வயதில், பின்முள்ளிவாய்க்கால் அரசியலை அல்லது புலிகளுக்குப் பிறகான “நாடக அரசியலை” அவர் துல்லியமாக இனங்கண்டு வரையறை செய்திருக்கிறார் என்பது முக்கியமானது. இந்த வயதுடைய பலரும் புலிமோக அரசியலின் பின்னால் கவரப்பட்டுத் தட்டுத்தடுமாறி, புலிவேஷ அரசியலின் பின்னால் இழுபட்டுக் கொண்டிருக்கும்போது அதிலிருந்து தன்னைத் தெளிவாக வேறுபடுத்தி, மக்கள் அரசியலின் பக்கமாக மகிழ் பாலா சிந்திப்பது கவனத்திற்குரியதாகும்.

இதுவே சரியானது. இதுவே அவசியமானதும் கூட. அதாவது மாற்று அரசியல் ஒன்றுக்கான முன்வரைபாக.

இப்போது நாம் மிகத் தெளிவாக ஒன்றை வரையறை செய்ய வேண்டியுள்ளது.

மாற்று அரசியல் குறித்து தீர்க்கமாகவும் தீவிரமாகவும் சிந்திக்க வேண்டிய அவசியதிலிருக்கிறோம் என்பதாக. தயவு தாட்சண்யமின்றி, தாமதமில்லாமல் இதைச் செய்ய வேண்டும். ஆனால், இதையே திசை திருப்பி விடுவதற்கு குழப்பவாதிகள், மேலாதிக்கச் சிந்தனையுடையோர் நம்மைச் சூழ்ந்திருக்கின்றனர். இது இன்னொரு ஆபத்து.

இவர்கள் மாற்று அரசியல் என்பதை உருமாற்றி, தமக்கிசைவாக ஒரு பொய்த்தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். மக்களுக்கு மயக்கத்தை உண்டாக்கி, கட்சியை மாற்றுவதன் மூலமும் ஆட்களை மாற்றுவதனூடாகவும் மாற்றத்தை உருவாக்கலாம் என்ற விதமாக ஒரு தோற்றத்தைக் கட்டமைப்பதற்கு முயற்சிக்கின்றனர். இதன் வெளிப்பாடே சம்மந்தனுடைய தலைமைக்குப் பதிலாக விக்கினேஸ்வரனுடைய தலைமை எனச் சிலரும் சம்மந்தனுக்குப் பதிலாக கஜேந்திரகுமார் எனச் சிலருமாக உருக்கொண்டாடுகின்றனர். வேறு சிலர் தமக்கிசைவான வேறு தலைமைகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், மாற்று அரசியல் என்பதும் அதை முன்னெடுக்கும் தலைமை என்பதும் பண்பு ரீதியாக, குணாம்ச ரீதியாக வேறுபட்டிருக்க வேண்டும். அது மக்களை மையப்படுத்தியதாக, மக்களுடைய நலன்களை கொஞ்சமும் விட்டுக்கொடுக்காத, அதில் சமரசங்களைச் செய்யாததாகவும் இருக்க வேண்டும். அதிகாரத் தரப்பை மக்களை நோக்கி வளைத்துக் கொண்டு வரவேண்டும். அதற்கான அரசியல் தந்திரோபாயத்தையும் உறுதிப்பாட்டையும் கொண்டிருக்க வேண்டும் என்பதாக அந்த வரையறை இருப்பது அவசியம்.

இதைத் துணிவுடன் செய்யவில்லை என்றால், இன்னொரு முள்ளிவாய்க்கால் துயரமே தமிழர்களைச் சூழும். 2009 க்குப் பிறகான 2019 வரையான பத்தாண்டுகளும் ஏறக்குறைய இன்னொரு முள்ளிவாய்க்கால்தான். ஆகவே இரண்டாவது முள்ளிவாய்க்கால் இப்போது அரங்கேறியுள்ளது. இனியும் இதிலிருந்து பாடங்களைப் படிக்கவில்லை என்றால், இன்னும் இதிலிருந்து மீளவில்லை என்றால், அடுத்த ஆண்டுகளில் முள்ளிவாய்க்கால் மூன்று என்றே நினைவு கூரல்களைச் செய்ய வேண்டியிருக்கும். மகிழ் பாலா சொல்வதைப்போல இங்கே எதுவும் மாறவில்லை. எதுவும் மாறப்போவதுமில்லை என்பதாகவே அமையும்.

மாறுதல்களைக் காணாத – மாற்றங்கள் நிகழாத எந்தச் சமூகமும் முன்னொக்கிப் பயணிக்கவும் முடியாது. பிரச்சினைகளிலிருந்து தன்னை விடுவிக்கவும் முடியாது.

2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவு கூர்வதென்பதும் அதை விமர்சிப்பதும் அதிலிருந்து மீண்டெழுவதற்கான வழியே தவிர, அதை ஒத்த துயரங்களை வளர்ப்பதல்ல. அனைத்துத் தரப்பினருக்கும் இது சமர்ப்பணம்.

Share:

Author: theneeweb