நாட்டு மக்கள் இலவச சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக குடும்ப வைத்தியர் முறை நடைமுறைப்படுத்தப்படும் – சுகாதார அமைச்சர் ராஜித

எமது நாட்டில் வாழும் அனைத்து மக்களும் இலகுவாக சுகாதார சேவையினை செலவின்றிப் பெற்றுக்கொள்வதற்காக சுகாதார அமைச்சு குடும்ப வைத்தியர் முறையினை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன தெரிவித்துள்ளார்.

ஜெனீவா நகரில் நேற்றுமுன்தினம் (20) முதல் ஆரம்பமாகி நடந்துவரும் உலக சுகாதார மகாநாட்டில் நேற்றைய தினம்(21) அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன  உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
இலங்கையில் தொற்றாநோய்களை ஆரம்பத்திலேயே இனங் காண்பதற்கும் அவை ஏற்படாது தடுப்பதற்கும் என நாடளாவிய ரீதியில் 846 ஆரோக்கிய வாழ்வு நிலையங்கள் மற்றும் 906 சுகவனிதையர் ஆய்சாலைகள் அமைக்கப்பட்டிருப்பதனை எடுத்துக்காட்டிய அமைச்சர், புகையிலைக்கு விதிக்கப்பட்டுள்ள 90 வீத வரி மற்றும் விற்பனை சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கடுமையான விதிகள் காரணமாக தற்போது 13 வீதமாக உள்ள புகைப்பிடிப்போர் எண்ணிக்கை எதிர்காலத்தில் மேலும் குறையும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் உணவு மற்றும் பானங்களில் கலந்துள்ள சீனி, உப்பு மற்றும் திரிபடைந்த கொழுப்பு ஆகியற்றின் அளவுகளை காட்டுவதற்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிறக்குறியீட்டு முறை குறித்தும் அமைச்சர் விளக்கினார்.
சிறுநீரக நோயாளர்களது நன்மை கருதி அந்த நோய்த்தாக்கம் அதிகமுள்ள பிரதேசங்களில் தற்போது செயற்பட்டுவரும் 600 குருதிச் சுத்திகரிப்பு உபகரணங்களின் எண்ணிக்கையினை இவ்வருட இறுதிக்குள் 900 ஆக அதிகரிக்க உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் புதிதாக செயற்பட ஆரம்பித்துள்ள மூன்று புதிய மருத்துவ பீடங்கள் மற்றும் 2000 தாதியர்களை பயிற்றுவிக்கவல்ல புதிய தாதிய பீடம் ஆகியவற்றின் மூலம் நாட்டில் நிலவும் மருத்துவ ஆளணிப் பற்றாக்குறையினை எதிர்காலத்தில் இல்லாது ஒழிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதனை சுட்டிக்காட்டிய அவர்

மேலும் காலம் காலமாக உலக சுகாதார நிறுவனம் வழங்கிவரும் தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகளால் மிகவும் பாராட்டப்பட்ட இந்தச் சிறப்புரையில் இலங்கையின் சுகாதாரத்துறையின் சாதனைகள், அது எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அச்சவால்களை முறியடிக்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கிய இலங்கையின் சுகாதார அமைச்சர். இலவச வைத்திய சேவையினை அனைவருக்கும் பாரபட்சமின்றி வழங்குவதில் இலங்கை உலக நாடுகளுக்கு முன்னோடியாக இனியும் செயற்படும் என உறுதியாகத் தெரிவித்தார்.

இந்த உலக சுகாதார மகாநாட்டில் சுகாதார அமைச்சருடன் அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் லக்ஸ்மி சோமதுங்க, மேலதிக செயலாளர் வைத்தியர் சுனில் டி அல்விஸ், செயலாளர் வசந்த பெரேரா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க , பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகங்கள்,  மற்றும் பணிப்பாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர் எனச் சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share:

Author: theneeweb