லங்கைத் தமிழ்ச் சமூகம் எப்போது கரையேறும்?

மூன்று தசாப்தங்கள் உள்நாட்டுப் போரால் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளான இலங்கையில், அமைதியும் வளர்ச்சியும் திரும்பப் பத்தாண்டுகள் போதுமானதல்ல என்றாலும், இந்தப் பத்தாண்டுகளில் போரால் உருக்குலைந்த தமிழ்ச் சமூகம், எந்த அளவுக்கு மீண்டெழுந்து மேலே கரையேறி வந்திருக்கிறது என்பதைப் பார்க்கும்போது ஏமாற்றமும் வேதனையுமே எஞ்சுகிறது.

பத்தாண்டுகளாக நிலவும் அமைதியால் ஓரளவுக்கே பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தமிழ்ச் சிறுபான்மைச் சமூகத்தினரின் பெரும்பாலான குறைகள் அப்படியே தீர்க்கப்படாமல் தொடர்கின்றன. மறுகுடியமர்த்தல்கள், மறுவாழ்வுப் பணிகள் ஓரளவுக்கு நடந்துள்ளன. ஆனால், அவை குறித்தும் மக்களிடையே புகார்கள் அனேகம். தங்களுடைய காணிகளை ராணுவம் இன்னமும் ஆக்கிரமித்திருக்கிறது என்கின்றனர் தமிழர்கள். தமிழர்களுடைய நிலங்கள் மட்டுமல்ல; அரசுக்குச் சொந்தமான நிலங்களும் ராணுவத்தின் வசம் உள்ளன. உறவினர்களை இழந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் பத்தாண்டுகளாகியும் அவர்களைத் தேடவும் முடியாமல், இருக்கும் இடமும் தெரியாமல் தவிக்கின்றனர். காணாமல்போனவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான அலுவலகம் நம்பிக்கையூட்டும் வகையில் செயல்படவில்லை. போரின் இறுதிக்கட்டத்தின்போது அநியாயமாகக் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இன்னும் முழுமையாக இழப்பீடும், நீதியும் வழங்கப்படவில்லை. இலங்கை தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இந்த விவகாரத்தில்கூட அற்பமான அரசியல் லாபம் தேடுவதுதான் தொடர்கிறது.

போராளிகளுக்கு எதிரான போர் முடிந்த காலத்தின் முற்பகுதி, ஆட்சியாளர்கள் தங்களுடைய சாகசங்கள் குறித்துப் பெருமை பாராட்டிக்கொண்டதிலேயே கழிந்தது. அடுத்த பாதி, போர்க் குற்றங்களுக்காக சர்வதேசச் சட்டங்களின்படி தங்களுடைய ராணுவத்தினர் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்று தடுப்பதிலேயே கழிந்துவிட்டது. 2015-ல் புதிய அரசு பதவியேற்றது. ஜனநாயக நிர்வாகம், அரசமைப்புச் சீர்திருத்தம் ஆகிய வாக்குறுதிகள் தரப்பட்டன. ஆனால், வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படும் பாதை நோக்கி நகர்ந்தபாடில்லை. போர் முடிந்து பத்தாண்டுகள் ஆன பிறகும்கூட போரின்போது அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டவர்கள் சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படவில்லை; காணாமல்போனவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற நிலையில், சமூகங்கள் இடையேயான இணக்கம் உண்டாவது சிரமம். அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே எல்லாக் கட்சிகளும் குறியாக இருப்பதால் நல்ல நிர்வாகம், அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சி, அரசியல் சட்டப்படியான தீர்வு ஆகியவை தொலைதூரக் கனவுகள் ஆகிக்கொண்டிருக்கின்றன.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம் சமூகங்கள் இடையான பிணைப்பின் மீதும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்த அரசு தன்னுடையது என்ற நம்பிக்கையின் மீதும்தான் கட்டப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி தனித்து உருவாவது அல்ல; நடந்த தவறுகளுக்கு மனதாரப் பொறுப்பேற்பதன் வாயிலாகவே இலங்கையில் தமிழர்கள் பிரச்சினைக்கு அரசு தீர்வுகாண முடியும்.

Share:

Author: theneeweb