தற்போது முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் அதிகமதிகமாக தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றன


சுமைரா அன்வர் அவர்களுடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- ரிம்ஸா முஹம்மத்
01. உங்களைது பூர்வீகம், ஆரம்பக் கல்வி, பல்கலைக்கழக வாழ்வு பற்றிக் கூறுங்கள்?
வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள மல்லவப்பிட்டி என்னும் கிராமமே எனது பிறப்பிடமும் வாழிடமுமாகும். எனது தந்தை மர்ஹும் ஏ.எம். அன்வர் பரகஹதெனிய கதுருஅங்கவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். எனது தாய் மர்ஹுமா சுஹுதா அன்வர் தெலியாகொன்னையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். எனது பெற்றோர் ஆசிரியர்கள். எனக்கு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர்.
சுமைரா அன்வர்

ஆரம்பக் கல்வி முதல் உயர் தரம் வரை குருநாகல், தெலியாகொன்னை, ஹிஸ்புல்லா மத்திய கல்லூரியிலேயே கல்வி கற்கும் பேறு எனக்குக் கிடைத்தது. ஆரம்ப காலத்தில் கல்லூரியில் சிறந்த பேச்சாளராக மிளிர்ந்த போதும் பின்னர் எழுத்துத் துறையிலேயே ஆர்வம் கூடியது. நான் க.பொ.த. உயர்தர கலைப்பிரிவு மாணவியாக இருக்கும் போது கலாபூஷணம் பீ.எம். புன்னியாமீன் அவர்களின் சிந்தனை வட்ட வெளியீடான ”அரும்புகள்” கவிதைத் தொகுப்பின் பங்காளியாகும் வாய்ப்பெனக்குக் கிடைத்தது. அத்தோடு இதேகால கட்டத்தில் பல போட்டிகளில் மாவட்ட/ தேசிய மட்டத்தில் வெற்றி பெற்றேன்.

* 1989 இல் முஸ்லிம் கலாசார அலுவல்கள் அமைச்சு நடாத்திய மீலாத் கட்டுரைப் போட்டியில் தேசிய ரீதியல் மூன்றாமிடம்
* 1990 ஆம் ஆண்டு வடமேல் மாகாண கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாகாணத்துக்கு புகழீட்டித் தந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழாவில் பாராட்டும் சான்றிதழும்
* 1990 இல் பல்லேகலயில் நடைபெற்ற கிராமோதயம் நிகழ்ச்சித் திட்டத்தையொட்டி பாடசாலை மாணவரிடையே நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் மாகாணத்தில் முதலாமிடம்/ தேசிய ரீதியில் இரண்டாமிடம்
* 1991 இல் நடைபெற்ற கிராமோதய கட்டுரைப் போட்டியில் மாகாணத்தில் முதலிடம்
* 1991 ‘மஹாபொல’ நிதியத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவு கட்டுரைப் போட்டி சிரேஷ்டப் பிரிவில் முதலாமிடம்
* 1991 உயர் கல்வி அமைச்சின் வடமேல் மாகாணம் (மாகாண கல்விப் பணிமனை) நடாத்திய தமிழ் மொழித் தினப் போட்டி கவிதை (தனி) – நான்காம் பிரிவு போட்டியில் மாகாணத்தில் முதலிடமும் இதே பிரிவில் கட்டுரைப் போட்டியில் இரண்டாமிடமும்
* 1991 இல் ஈரான் தூதரகத்தின் கலாசாரப் பிரிவு ஏற்பாடு செய்த கட்டுரைப் போட்டியில் பங்கு பற்றியமைக்கான சான்றிதழ்
* 1991 தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்த கட்டுரைப் போட்டியில் சிறப்பு சான்றிதழ்
என உயர்தர கலைப் பிரிவு மாணவியாக இருந்த போதே ஆக்கத் துறையில் நிறைய ஈடுபடும் வாய்ப்புக் கிடைத்தது. உயர் தரத்தில் பாடசாலையின் சாதனை பெறுபேறாக 3 ஏ, பீ பெற்று பேராதனைப் பல்கலைக்கழகம் நுழைந்தேன்.
1992 – 1993 கல்வியாண்டில் பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பிரிவில் இணைந்த எனக்கு எங்கள் தமிழ் ஆசான் கலாநிதி துரை மனோகரன் அவர்களின் உற்சாகம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. ‘கவிஞர் சுமைரா’ என்று ஆசான் அழைக்கும் போது மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். ‘சங்கப் பலகையில்’ காட்சிப்படுத்தப்படும் எனது கவிதைகள் எனக்குள் இன்னும் எழுச்சியை ஏற்படுத்தின. மேலும் எங்கள் பேராசான் கலாநிதி எம்.ஏ. நுஃமான் அவர்களின் முன்னிலையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ‘கவிதை பற்றி கதைக்கலாம் வாருங்கள்’ என்ற கள நிகழ்வு எனக்கு மிகவும் பயனுள்ள அனுபவமாகியது.
மேலும் இக்காலப் பகுதியில் மீண்டும் சிந்தனைவட்ட வெளியீடான ‘பாலங்கள்’ கவிதைத் தொகுப்பில் எனது கவிதைகளும் இடம்பெற்றன. அத்தோடு பேராசிரியர் கைலாசபதி நினைவாக பல்கலைக்கழக மாணவரிடையே நடாத்தப்பட்ட திறனாய்வுக் கட்டுரைப் போட்டியில் ஈழத்து மூத்த படைப்பாளர் மதிப்பு மிகு டொமினிக் ஜீவா ஐயா அவர்களின் ‘தண்ணீரும் கண்ணீரும்’ நூல் பற்றிய எனது திறனாய்வுக் கட்டுரை (பேராதனைப் பல்கலைக்கழகம்) இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.
பல்கலைக்கழக ‘முஸ்லிம் மஜ்லிஸ்’ நிகழ்ச்சி, இளங்கதிர் சஞ்சிகை என் இலக்கியப் பணிக்கு களந்தந்தன. மேலும் தமிழ் பாட வேளையும், நூலகமும் உதவின. கல்வித் தகைமை எனும் போது குறிப்பாக கலைமாணி, பட்டப்பின் படிப்பு டிப்ளோமா, தொடர்பு சாதனத் துறை டிப்ளோமா ஆகியவற்றைப் பூரணப்படுத்தியுள்ளேன்.
02. கல்வித் துறையில் குறிப்பாக ஆசிரியப் பணியில் ஈடுபட்டமைக்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றனவா?
1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆந் திகதி நான் கல்வி கற்ற எனது கல்லூரிக்கே ஆசிரிய (முதல்) நியமனம் பெற்றேன். எனது பெற்றோருக்கும் எனது சகோதரிக்கும் எனக்கும் முதல் நியமனம் இதே பாடசாலை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
வானொலி அறிவிப்பாளராக அல்லது பத்திரிகையாளராக வரவேண்டுமென்பதே எனது ஆசை. ஆனால், எனது பெற்றோரைப் போல் நானும் ஆசிரியப் பணியில் இணைய வேண்டுமென்பது அல்லாஹ்வின் நாட்டம் போலும். போட்டிப் பரீட்சைக்கு முகங்கொடுத்து, சித்தியடைந்து, நேர்முகத் தேர்வில் அதிகூடிய புள்ளி பெற்று ஆசிரியத்தில் இணைந்து 21 வருட சேவையைப் பூர்த்தி செய்து தற்போது (2018) ஓய்வும் பெற்றுவிட்டேன். இறை நாட்டமும் எனது வீட்டுச் சூழலும் என்னை ஆசிரியப் பணியில் இணைத்துவிட்டது. நான் 11 ஆம் ஆண்டில் கற்கும் போது எனது தமிழ் மொழிப்பாட ஆசானுக்கு மாற்றல் வந்தது. அப்போது அவர் 10 ஆம் ஆண்டு வகுப்புத் தலைவியை அழைத்து அவர் கரத்தை என் கரம் மீது வைத்து நான் சென்ற பின் சுமைராவிடம் தமிழ் படியுங்கள் என்றார்கள். ஆசிரியர் அன்றே என்னை இனங்கண்டார்கள் போலும். இன்று இசைக்கும் எமது கல்லூரி கீதத்தை இயற்றுவதில் எனக்கும் பங்காற்றக் கிடைத்ததை பெறும் பேறாக நினைக்கிறேன்.
03. உங்களது எழுத்துலக ஆரம்பம் பற்றிக் கூறுங்கள்?
நான் எட்டாந் தரத்தில் கற்கும் போது தமிழ் பாடவேளையில் எனது பேரன்புக்குரிய புவணேஸ்வரி நாகலிங்கம் ஆசிரியை (சுழிப்புரம் யாழ்ப்பாணம்) பறவையொன்றைப் பற்றிய கவிதையை வாசித்து பின் அதுபோல் எம்மிடமும் எழுதுமாறு கூறினார். அடுத்த நாள் கவிதையோடு வந்தவள் நான் மட்டுமே. அன்று ஆசிரியை என்னை மிகவும் பாராட்டியமை எனது எழுத்தார்வத்தைத் தூண்டியது. தொடர்ந்து எனது பெற்றோரும் எனது உயர்தர வகுப்பாசிரியை திருமதி நசீரா அஸீஸ் அவர்களும் எனை உற்சாகப்படுத்தினர். எனது முதலாவது ஆக்கம் 1986 ஆம் ஆண்டு தினகரன் வாரமஞ்சரி ‘சிறுவருலகம்’ பகுதியில் ‘யார் ஏழைகள்?’ என்ற தலைப்பில் வெளிவந்தது.
 
04. படைப்பிலக்கியத் துறையில் சுமார் எத்தனை வருட காலம் பணியாற்றி வருகின்றீர்கள்? 
1986 ஆம் ஆண்டிலிருந்து இலிருந்து இன்று வரை கிட்டத்தட்ட 33 வருடங்களாக இலக்கியத்தில் ஈடுபட்டு வருகின்றேன்.
05. உங்கள் எழுத்து முயற்சிகளுக்கு காரணமாக இருந்தவர்கள் பற்றி?
முதல் காரணம் அல்லாஹ்வின் அருள்தான். ஏனென்றால் அருமையான ஆசிரியப் பெற்றோரை எனக்கு அருட்கொடையாய்த் தந்தான். எனது தந்தை சிறந்த வாசகன். தாயாரோ வானொலி நாடகங்களில் (1971 / 1972) பங்கேற்றவர். அத்தோடு மொழிப்பாட ஆசிரியர். இலக்கிய ரசனை மிகுந்தவர். போட்டிகளுக்கு தயார்படுத்துவது, நூல்களை, பத்திரிகைகளை வாசிக்கத் தூண்டியது, சிறந்த வீட்டுச் சூழலை அமைத்துத் தந்தமையும் எனதன்பு மாமா ‘தெங்குச் சோலையான்’ மர்ஹும் அ.லெ.மு. ராஸிக், நவமணி பத்திரிகையின் ஆசிரியர் மதிப்பு மிகு என்.எம். அமீன் அவர்கள், கலாபூஷணம் மர்ஹும் பி.எம். புன்னியாமீன் அவர்கள், திருமணத்தின் பின் என் எழுத்துப் பணிகளுக்கு பக்க பலமாக விளங்கும் என் அன்புக் கணவர் ஏ.ஜே.எம். ரமீம், என் ஆக்கங்களை வாசிக்கக்கேட்டு கருத்துக்கூறி உற்சாகப்படுத்தும் அருமை மகன் எம்.ஆர்.எம். உஸ்மான் மற்றும் என் சகோதரர்களும் நண்பிகளும் என்னை எழுதத் தூண்டியவர்கள்.
06. இதுவரை நீங்கள் எழுதி வெளியிட்ட படைப்புக்கள் எவை?
01. எண்ணச் சிதறல்கள் (கவிதைத் தொகுதி) – 2003 சிந்தனை வட்டம்
02. விடியலில் ஓர் அஸ்தமனம் (நாவல்) – 2009 புரவலர் புத்தகப் பூங்கா
03. வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் (நாவல்) – 2011 சிந்தனை வட்டம்
07. கவிதை எழுதும் ஆற்றலை எப்படி வளர்த்துக் கொண்டீர்கள்?
நிறைய வாசிப்பேன். அதுபோல் ஒவ்வோரு நிகழ்வையும் உன்னிப்பாய்க் கவனிப்பேன். உள்வாங்கிய விடயங்களை எழுத்தில் பதித்துக் கொள்வேன். மீண்டும் மீண்டும் வாசித்து செப்பனிடுவேன். பல கவிதைகள் எதுவித மாறுதலுமில்லாமல் இயல்பாய் அமைந்துவிடும். பேராதனைப் பல்கலைக்கழக சங்கப் பலகை என்னைப் புடம்போட்டது. வானொலி மங்கையர் மஞ்சரி, தினகரன் கவிதைப் பகுதி என்பனவும் என் கவியாற்றலை வளர்க்க களந்தந்தன.
08. உங்களது முதலாவது நூல் வெளியீடான ‘எண்ணச் சிதறல்கள்’ கவிதைத் தொகுதியின் பேசு பொருட்கள் எவை?
பொதுவாக தற்கால மனித மனங்களின் போக்கும் செயற்பாடுகளும் எனது கண்ணோட்டத்தில் பேசப்படுகிறது. பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் (பெண் பார்க்கும் படலம்), மலையக மக்களின் துயரம் (மலையக மைந்தர்களே, பார்வதி கொழுந்து பறிக்கிறாள்), தனி மனித உணர்வோடு அதிகம் தாக்கம் செலுத்தும் தாய், தந்தை, நட்பு (மேதினியின் புனிதம் அம்மா, தந்தையே ஆலமரமாக, நட்பு (பூ)) என்பன பற்றிப் பேசப்படுகிறது.
09. நீங்கள் இதுவரை எழுதிய கவிதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கவிதை எது? ஏன்?
எனது கவிதைகள் எல்லாமே எனக்கு பிடிக்கும்தான். எனினும் ‘நவீனம்’ என்ற கவிதையை மிகவும் விரும்புகிறேன். ஏனெனில் அக் கவிதை இன்றைய நவீன யுகத்தை அச்சொட்டாக வெளிப்படுத்துகிறது. இதில் சில வரிகளை இங்கே தருகிறேன்.
இரும்பு மனிதன்
இயந்திர வாழ்க்கை
கணனிப் பாஷை
செய்மதி உறவு
இருபதாம் நூற்றாண்டின்
நவீன யுகம்..
………….
சுவாசச் சேமிப்பில்
நச்சுக் காற்றுலவும்
உணவாய்க் கிடைப்பதுவும்
இரசாயனக் கூட்டேதான்..
 
10. சிறுகதைக்கும், நாவலுக்கும் இடையில் எவ்வகையான வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?
சிறுகதை வாமனம் (குறுகிய வடிவம்) என்றால் நாவல் விசுவரூபம் எனலாம். இன்னும் எளிமையாகச் சொல்வதானால் சிறுகதை குறுந்தூர ஓட்டம். நாவல் நெடுந்தூர ஓட்டம். சிறுகதை எழுதுவது மிகவும் அவதானமான விடயம். கத்தியின் மேல் நடப்பது போன்றது. குறைவான பாத்திரம், மொழிச் செம்மை என்பன சிறப்பாக அமைய வேண்டும். பாத்திர வார்ப்பு இயல்பாக இருக்க வேண்டும். மொழியோ உயிர்ப்புள்ளதாக இருக்க வேண்டும். மொத்தத்தில் கட்டிறுக்கத் தன்மையுடன் விளங்க வேண்டும். எனவே, ஆரம்பம் முதல் முடிவு வரை (இறுதி வரை) இலக்கைவிட்டு நகராத போக்கு சிறுகதைக்கு வேண்டும். பிரசார வாடை அடிக்காமலும் கதைப் பின்னலில் தொய்வில்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் இந்த ‘இறுக்கம்’ நாவலில் இல்லை. நாவலுக்கென்று தனித்துவங்களிருந்தாலும் மிகவும் ‘சுதந்திரமான’ மன இறுக்கமற்ற உணர்வுடன் நாவல் படைக்கலாம். சிறுகதை போல் தனியொரு விடயமன்றி நாவலின் போக்கில் நிறைய விடயங்களை வெளிப்படுத்தலாம்.
11. இதுவரை வாசித்த படைப்புக்களில் உங்களை மிகவும் கவர்ந்த படைப்பு எது? உங்களைக் கவர்ந்த எழுத்தாளர் யார்?
இதுவரை ஏறாளமான படைப்புக்களை வாசித்துள்ளேன். அவை யாவுமே ஏதோவோர் விதத்தில் என்னைக் கவர்ந்துள்ளன. குறிப்பாக இந்த எழுத்தாளருடைய படைப்புத்தான் என்னைக் கவர்ந்ததென வரையறுக்க முடியாது.
12. சமகால இலக்கியங்கள் மீதான உங்களது பார்வை எப்படி இருக்கிறது?
சமகால இலக்கியங்களைப் பார்த்து நான் பிரமித்துப் போகிறேன். யதார்த்தம், துணிவு, சிந்தனைத் தெளிவு நிறைந்தவையாக அவை விளங்குகின்றன.
 
13. உங்களுடைய நாவல்களுக்கான கருவை எப்படிப் பெற்றுக்கொள்கிறீர்கள்?
எனது நாவலுக்கான கருவை எமது சமூக சூழலிலிருந்தே பெற்றுக் கொள்கிறேன். எனது ஆசிரியப் பணியும் அதனோடு தொடர்புடைய தொடர்பாடல்களும் கூட இதற்குப் பலம் சேர்க்கின்றது.
14. இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டுவரும் தற்கால முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய உங்களது கருத்து என்ன?
தற்போது முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் அதிகமதிகமாக தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். கல்வித் தகைமை அதிகரித்தமையும் தொழிநுட்பப் பாவனை விரிவடைந்தமையும்  பக்கபலமான அனுசரணை கிடைக்கின்றமையும் ஊடகங்கள் வாய்ப்பின் வாசலைத் திறந்திருக்கின்றமையும் இவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. இதனால் தயக்கம் நீங்கி துணிவுடன் தமது கருத்தை ஆழமாகப் பதிக்கின்றனர். மேலும் வசதி வாய்ப்புள்ளவர்கள் தமது சொந்த செலவில் படைப்புக்களை நூலுருப்படுத்தி மிகவும் வெற்றிகரமாக வெளியீட்டு நிகழ்வுகளை நடாத்துவது சாதாரண நிகழ்வாகிவிட்டது. முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் தமத அபரிமிதமான திறமையால் தனி முத்திரை பதித்து வருகின்றமை பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.
15. படைப்புகளுக்காக முன்வைக்கப்படும் விமர்சனங்களை எப்படிப் பார்க்கின்றீர்கள்?
விமர்சனம் என்பது படைப்பாளனுக்கு ஊட்டச்சத்து போன்றது. சிறந்த விமர்சனம் படைப்பாளனை மென்மேலும் மெருகேற்றுகிறது. நியாயமான, நடுநிலைமையான விமர்சனங்களை நானும் வரவேற்கிறேன். ஆனால் எமது படைப்பெல்லாம் எமது ஷஷசொந்த அனுபவம்’ என்ற கண்ணோட்டத்தில் விமர்சிக்கப்படும்போது அசௌகரியமாக இருக்கிறது.
16. எழுத்து என்பது தவம் என்கிறார்கள். அது உண்மையா?
ஆமாம். எழுத்து என்பது தவம்தான். பவித்திரமும் பக்குவமும் இருந்தாலேயே ‘படைப்பு’ புத்துயிர்ப்புடன் விளங்கும். எண்ணம், நோக்கு, இலக்கு எல்லாம் உயரியதாகவும் விழுமியங்களுக்கு உரமூட்டுவனவாகவும் இருக்க வேண்டும். ‘எழுத்தாளன் சமூக வைத்தியன்’. அவனது எழுத்து சமூகத்துக்கு ‘மருந்தாகவும்’ உடல், உள வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான நல்ல சிந்தனைக்கும் வழி வகுப்பதாகவும் இருக்க வேண்டும்.
17. ஒரு ஆசிரியராக இளம் தலைமுறையினரின் எழுத்துக்களை எப்படிப் பார்க்கின்றீர்கள்?
இன்றைய இளந்தலைமுறையினர் அதிநவீன தொழிநுட்ப வலைப்பின்னலின் ஆகர்ஷிப்பில் மூழ்கித் திளைக்கின்றனர். அதனால் அவர்கள் எழுத்துத் துறையில் பிரவேசிப்பதற்கான வாய்ப்பு பல்கிப் பெருகியுள்ளது. இச்சாதகமான நிலையை பலர் சிறப்பாகப் பயன்படுத்தி தம்மை வளர்த்துக் கொள்கின்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மிகவும் ஷஷஅவசரப்படும்’ சிலர் தரமான இலக்கியங்களை வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுமில்லை. மொழியாற்றலை விருத்தி செய்வதுமில்லை. தமது படைப்புக்களை மீள் வாசிப்பு செய்வதுமில்லை. ஊடகங்களில் தமதாக்கம் வெளிவருவதில் மட்டுமே குறியாக இருப்பதால் தமது வளர்ச்சியைத் தாமே தடுத்தும் விடுகின்றனர்.
18. இறுதியாக வெளிவந்த உங்கள் ‘வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும்’ என்ற நாவல் பற்றி என்ன சொல்வீர்கள்?
எனது இரண்டாவது நாவல் ‘வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும்’. இந் நாவலினூடாக கணவன் – மனைவி ஆகியோருக்கிடையிலான கருத்து முரண்பாடுகளினூடாக சமூக அவலங்கள் பலவற்றை என்னாலியலுமான அளவு முன் வைத்துள்ளேன். குடும்பத்தில் (மூத்த) மகன் எதிர்நோக்கும் துயரங்கள், சீதனப் பிரச்சினை, தொழில் புரியும் பெண் எதிர் நோக்கும் சிக்கல், நட்பின் தாக்கம்.. என பல விடயங்களினூடாக வாழ்க்கைப் போராட்டத்தைப் பேசியுள்ளேன்.
19. இதுவரை கால இலக்கிய வாழ்வில் நீங்கள் சந்தித்த கசப்பான சம்பவம் ஏதும் உண்டா?
நிறையவே உண்டு. எனினும் அவற்றை நான் படிப்பினையாக எடுத்துக் கொண்டு எனது வாழ்க்கைப் பயணத்தில் எனக்குக் கிடைத்த புதிய சமிக்ஞையாக எண்ணுகிறேன். எடுத்துக் காட்டாக ஒரு சிறிய சம்பவத்தைக் கூறுகிறேன். ஒருமுறை எனது புத்தக வெளியீட்டின் போது அழைப்பிதழில் இருவரது பெயர்கள் விடுபட்டுப் போனது. இந்த விடயம் அழைப்பிதழ் பகிர்ந்த பின்னரே என் கவனத்திற்கு வந்தது. உடனே நான் உரியவர்களிடம் நிதானமாக எடுத்துரைத்து மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டேன். அவர்கள் படித்தவர்கள்தான். ஆனாலும் கடைசிவரை நான் திட்டமிட்டுச் செய்த பெருங்குற்றமாகவே இதனைக் கருதினர். இந்தச் சம்பவம் எனக்கு ஒரு எச்சரிக்கையாகிவிட்டது. எந்த விடயத்தையும் ஒன்றுக்குப் பத்தாக சரிபார்க்கப் பழகிக் கொண்டேன்.
 
20. உங்களுடைய அடுத்தகட்ட இலக்கிய முயற்சிகள் யாவை?
சிறுவர் இலக்கியத்தின் மீது எனக்கு அதீத ஆர்வமிருக்கிறது. சிறுவர்களுக்காக நிறைய கதைகளையும் பாடல்களையும் எழுதியுள்ளேன். வடமேல் மாகாண கலை இலக்கியப் போட்டியில் முதல் பரிசை வென்ற சிறுவர் பாடல் தொகுதியும் கதைகளும் நூலுருப்படுத்தி சின்னஞ் சிறார்களுக்கு சமர்ப்பிக்க வேண்டுமென்பது என் நீண்ட நாளைய அவா. அத்தோடு என் சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுத்துப் பிரதியாக இருக்கும் நாவலையும் நூலுருப்படுத்த ஆவலாயுள்ளேன். சிறுவர் பாடலை ஒலிநாடாவாக வெளியிடும் ஆசையுமுள்ளது. இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் சிறந்த அனுசரணை கிடைத்தால் இப் படைப்புக்கள் யாவும் வெளிவரும். அதற்கான வாய்ப்பு கிடைக்குமென்று எதிர்பார்க்கிறேன்.
 
 
21. இதுவரை உங்களுக்குக் கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?
பாராட்டுக்கள் என்னும் போது ஹிஸ்புல்லாஹ் மத்திய கல்லூரி – பாடசாலை கீதத்தை இயற்றுவதில் பங்களித்தமைக்காக அதிபர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டேன். இக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மல்லவப்பிட்டியில் அமைந்துள்ள அல்ஹம்றா பாடசாலையின் பாடசாலை கீதத்தை இயற்றுவதிலும் பங்காற்றக் கிடைத்தை மகிச்சியாக எண்ணுகிறேன்.
2009 – கல்வித் திணைக்கம் ஏற்பாடு செய்த ஷஷமதர் ஸ்ரீலங்கா’ நிகழ்ச்சித் திட்டத்திற்காக மாணவர் பங்குபற்றிய நாடகத்துக்கான நாடகப் பிரதியாக்கத்திற்கான பாராட்டுச் சான்றிதழ் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டது.
ஏராளமான போட்டிகளில் பரிசு பெறும் பேறு எனக்கு கிடைத்துள்ளது. சிலதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
சிறுவர் இலக்கியத்திற்கான பரிசு:-
* 2004, 2005, 2008 வடமேல் மாகாண கலை இலக்கியப் போட்டிகளில் முதலாமிடம்.
* 2008 கலாசார அலுவல்கள், தேசிய மரபுரிமை அமைச்சினால் அரச ஊழியர்களுக்கிடையில் நடாத்தப் பட்ட ஆக்கத் திறன் போட்டியில் சிறுவர் கதைகள் ஆறுதல் பரிசு.
சிறுகதைக்கான பரிசு:-
* 2007 வடமேல் மாகாண கலை இலக்கியப் போட்டியில் முதலாமிடம்.
* 2008 தேசிய இலக்கியப் பெரு விழாவின் பொருட்டு நடைபெற்ற போட்டியில் மாகாணத்தில் முதலாமிடம் ஃ தேசிய ரீதியில் இரண்டாமிடம்.
கவிதை:-
* 1993, 2003, 2007, 2008 – வடமேல் மாகாண கலை இலக்கியப் போட்டியில் மாகாண ரீதியில் முதலாமிடம்.
* 2008 தேசிய கலை இலக்கியப் போட்டியில் இரண்டாமிடம்.
கட்டுரை:-
* 1990, 1997, 2003, 2007, 2008 வடமேல் மாகாண கலை இலக்கியப் போட்டியில் முதலிடம்.
* 2007 கலாசார அலவல்கள் திணைக்களம் நடாத்திய போட்டியில் தேசிய ரீதியில் – முதலாமிடம்.
பாடலாக்கம்:-
* 2008, 2009 – வடமேல் மாகாண இலக்கியப் போட்டியில் – மாவட்டத்தில் முதலாமிடம், மாகாணத்தில் இரண்டாமிடம்.
அச்சுப் புத்தகம்:-
* 2004 – வடமேல் மாகாண இலக்கிய போட்டியில் – சிறந்த கவிதை நூல் (எண்ணச் சிதறல்கள்)
* 2010 – வடமேல் மாகாண இலக்கிய போட்டியில் – சிறந்த நாவல் (விடியலில் ஓர் அஸ்தமனம்)
22. இறுதியாக என்ன சொல்லப் போகிறீர்கள்?
கலை இலக்கியத்துறையில் ஈடுபடக் கிடைப்பது உண்மையில் பெரும் பாக்கியமே. யாருடைய மனதையும் நோவிக்காது சமூகத்துக்கு பயனுள்ள செய்தியை முன் வைப்பதனூடாக எனது இலக்கியப் பணியை அர்த்தமுள்ளதாகவும் அமைதியாகவும் முன்னெடுத்துச் செல்லவே விரும்புகிறேன். இந்நேரத்தில் இதுவரை எனக்குக் களந்தந்து கொண்டிருக்கும் சகல ஊடகங்களுக்கும் நான் ஏற்கனவே பெயர் குறிப்பிட்டுள்ள ‘இலக்கிய ஆளுமைகளுக்கும்’ எனது முதலாவது நாவலை இலவசமாக வெளியீடு செய்து பேருபகாரம் புரிந்த கௌரவ, புரவலர் ஹாஷிம் உமர் அவர்களுக்கும் மதிப்பு மிகு கலைஞர் கலைச் செல்வன் அவர்களுக்கும்; பேரன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய ஜெயந்திலா மெடம் (வடமேல் மாகாண கல்வித் திணைக்களம்) அவர்களுக்கும், இந்த அருமையான நேர்காணல் மூலம் எனக்கு கவிதாயினி, பன்னூலாசிரியை சகோதரி ரிம்ஸா முஹம்மத்துக்கும் என் இதயபூர்வமான நன்றியைத தெரிவித்துக்கொள்கிறேன்!!!
நேர்கண்டவர்:- ரிம்ஸா முஹம்மத்
Share:

Author: theneeweb