மாவனல்லை சம்பவம்; 07 சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல்

மாவனல்லைப் பகுதியில் புத்தர் சிலைகள் சிதைக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 07 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் 16ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

07 சந்தேகநபர்களும் கடந்த 26ம் திகதி கைது செய்யப்பட்டதுடன், மேலும் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

மாவனல்லை, தெல்கஹகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் ​சேர்ந்த அண்ணன் தம்பி ஆகிய இருவரே இவ்வாறு பொலிஸாரால் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களாவர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மாவனல்லைச் சம்பவம் மாத்திரமல்லாது, கம்பளை, பொல்கஹவெல உள்ளிட்ட பிரதேசங்களிலும் புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அனைவரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், தேடப்பட்டுவரும் சந்தேகநபர்கள் 26 மற்றும் 29 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Author: theneeweb