இலட்சத்தீவை நோக்கிச் சென்றுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள்!!

இலங்கையிலிருந்து 15 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் படகு ஒன்றின் மூலம் இலட்சத்தீவை நோக்கிச் சென்றுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக, கேரளாவின் கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளதாக மாநில காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து கடந்த 23 ஆம் திகதி கிடைத்த புலனாய்வு அறிக்கையை அடுத்து, இந்தியாவில் இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில கரையோர காவல் நிலையங்கள் மற்றும் கரையோர மாவட்டங்களில் காவல்துறை தலைவர்களுக்கு இதுபற்றிய முன்னெச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற எச்சரிக்கைகள் வழக்கமானதே என்ற போதும், இம்முறை தீவிரவாதிகளின் எண்ணிக்கை தொடர்பான தகவலும் இடம்பெற்றுள்ளதால், சந்தேகத்துக்குரிய கப்பல்கள், படகுகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று சிரெஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தப்பி சென்றதாக கூறப்படும் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் கடற்படையினருக்கு எந்த தகவலும் உத்தியோபூர்வமாக கிடைக்கவில்லை என கடற்படையின் ஊடக பேச்சாளர் லெப்டினல் கொமன்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள கடற்படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தகவல் உண்மையாயின் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb