பயங்கரவாதிகளுடன் தொடர்பு / அதிபர் , உப அதிபர் விளக்கமறியலில்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஹொரவபொத்தானை பிரதேசத்தின் அதிபர் உள்ளிட்ட 5 பேர் எதிர்வரும் 4ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கெபிதிகொல்லேவ நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 22ம் திகதி கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேகநபர்களுள் உப அதிபரொருவரும் காணப்படுகின்றார்.

இவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினரான அப்துல் மஜீத் மொஹமட் நியாஸ் என்ற நபருடன் நெருங்கிய தொடர்பினை பேணி வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை , மட்டக்களப்பு காத்தான்குடியில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் இதுவரை 63 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினர், காவல்துறையினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த ஒரு மாத காலத்தில் குறித்த 63 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டனர்.

வெவ்வேறு தினங்களில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என காத்தான்குடி காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Share:

Author: theneeweb