அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக தமிழீழ விடுதலை இயக்கம்

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழீழ விடுதலை இயக்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.

அதன் செயலாளர் சிறிகாந்தா நேற்று வவுனியாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனை அறிவித்துள்ளார்.

தங்களுடைய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த பிரேரணையை ஆதரிக்க வேண்டும் என்ற முடிவினை நீண்ட கருத்து பரிமாற்றங்களுக்கு பிறகும், விவாதங்களுக்குப் பிறகும் தங்களுடைய தலைமைக்குழு எடுத்து இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

ஐ.எஸ்.ஐஎஸ் தீவிரவாத அடிப்படை இயக்கத்தின் தாக்குதல்களின் விளைவாக ஒட்டுமொத்த இலங்கை நாடும் ஒரு அசாதாரணமான சூழ்நிலைக்குள்ளாக்கி தொடர்ந்து சிக்கி கொண்டு இருக்கின்றது.

இந்த நிலையிலேயே அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீது அவநம்பிக்கையை தெரிவித்து நாடாமன்றத்தில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.

ஐ.எஸ்.ஐஎஸ் பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கைகளோடு அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது அந்த தாக்குதல்களோடு ஏதாவது ஒரு விதத்திலே சம்பந்தப்பட்டிருக்கின்ற நபர்களோடு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகள் இருந்தன என்ற அடிப்படையிலேயே இந்த பாரதூரமான முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன.

இது சாதாரணமான விடயமல்ல.

இந்தநிலையிலேயே குறித்த பிரேரணைக்கு ஆதரவளிக்க தமது கட்சி தீர்மானித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb