கரையில் மோதும் நினைவலைகள்- இருட்டில் விழுந்த அடி –நடேசன்

கடந்த வருடம் (2018 ) மே மாதத்தில் எனது தலையில் பெரிய அடி விழுந்தது. யார் அடித்தார்கள் எனத் தெரியாத கலக்கத்துடன், அடித்த இடத்தை தடவியபடி சுற்றிப் பார்த்தால் எதுவும் தெரியவில்லை. மனக்குழப்பம். நிலை தடுமாறிய உணர்வு .

மிகவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாக இருந்த எனது மனைவி சியாமளாவை, அதிகமாக அறிமுகமற்ற புற்று நோய் ஒன்று தாக்கியது . பெரும்பாலான வியாதிகள் கடிதம் எழுதி, பின்பு தொலைபேசியில் பேசிவிட்டு வந்து கதவைத் தட்டும் பண்பானவர்கள் போன்றன . சங்கூதி அறிவித்தலோடு வருபவையான இதயவலி, நீரிழிவு , பாரிசவாதம் என்பவற்றைப் பார்த்துப் பழகியதால் அமைதியாக வாழ்ந்த எமக்கு திடீரென்ற குண்டுத் தாக்குதல் நிலை குலையவைத்தது .

மனிதர்களுக்கு நோய் எப்பவும் எங்கும் வரலாம். இப்படியான தருணங்கள் பலருக்கு ஏற்படும். அதில் என்ன புதுமை என்று நீங்கள் நினைக்கலாம். இதைப்பற்றி எழுதுவதற்கோ பேசுவதற்கு என்ன அவசியம் இருக்கிறது?

அவுஸ்திரேலியா போன்ற முன்னேற்றமடைந்த ஒரு நாட்டில் மருத்துவ வசதிகள் உள்ளன. நல்ல வைத்தியசாலைகளில் திறமையான வைத்தியர்கள் உள்ளார்கள். இதற்கப்பால் எனது சியாமளாவும் வைத்தியர் என்பதால் நிலைமையை கையாள்வது இலகுவாக இருக்கும் என நீங்கள் நினைக்கலாம்.

ஏன் நான்கூட அப்படி நினைத்தேன்.

ஆனால் நினைப்புகளுக்கு எதிராகப் பல விடயங்கள் நடந்தன என்பதே நான் சொல்ல வந்த விடயம். எமது வாழ்க்கைக் கப்பலில் மோதிய பனிப்பாறையை அடையாளம் காட்டும் சிவப்புக் கொடியே இந்தக்கட்டுரை

காலை ஆறுமணியிலிருந்து ஏழுமணிவரை கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் எமது லாபிரடோர் சிண்டியுடன் குறைந்தது 4 கிலோமீட்டர் நடப்பவர் சியாமளா. நான் எட்டு மணியளவில் படுக்கையை விட்டு எழும்பும் வழக்கமுள்ளவன். காலையில் கோப்பியைத் தரும்போது சோம்பேறி என்ற மந்திரமொலிக்கும்.

பல முறை சொல்வேன்: மிகவும் துரிதமாக இயங்கும் முயல் கூட வேட்டையில் இரையாகாத போதும் அதிக பட்சம் ஐந்து வருடங்கள் மட்டுமே உயிர் வாழும் ஆனால், முதலை , ஆமை என்பன 300 வருடங்கள் வாழ்வதற்குக் காரணம் அவை தங்கள் சக்தியை விரயம் செய்வதல்ல. என்னால் வேலைக்கு ஐந்து நிமிடத்தில் செல்லமுடியும் என்பதால் அவசரமில்லை. மாலையில் சிண்டியுடன் நடப்பேன் . நடுநிசி தாண்டும்வரை படித்தபடியோ எழுதியபடியோ இருப்பவன் .

மனிதர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்கிருக்கிறது..

மே மாதத்தில்23ம் நாள் காலை சாண்டியுடன் நடந்து விட்டு வந்து இடது இடுப்பருகே வலி என்றபோது ஏதாவது சுளுத்கென நினைத்து நான் போகும் சீனாக்காரியிடம் மசாஜ்ஜூக்கு அவரைக் கொண்டு சென்றேன்

ஒரு கிழமை தொடர்ந்து வலி என்றபோது அடுத்த மாதத்தில் பிறந்தநாள் வருவதை அறிந்து மென்சிவப்பான கையுள் அடங்கும் கைத்தடியைப் பரிசாகக் கொடுத்தேன். கைத்தடியுடன் வேலைக்குச் சென்றபோது அங்கு இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண் சியாமளாவிடம் நோயாளியாக வந்தவர், தனது டாக்டருக்கு வைத்தியம் செய்யும் நன்நோக்கத்தில் வேறு ஒரு பிலிப்பைன்ஸ் பெண்ணிடம் மசாஜ் செய்ய அழைத்துச் சென்றார். அவளது மசாஜ்ஜின் பக்கவிளைவு இரத்தம் கண்டியதுபோல் கறுப்பாக காலிலும் தொடையிலும் பல இடங்களில் காணக்கூடியதாக இருந்தது .

வலி தொடர்ந்ததால், வேறு வழியில்லாமல் எக்ஸ்ரே எடுத்தபோது தொடையெலும்பில் கட்டியிருப்பதாகச் சொன்னார்கள். அதன் பின்பாக MRI செய்தபோது ஒரு ரூபாய் குத்தியளவு கோறையாக அரிக்கப்பட்டிருக்கிறது என உறுதிப்படுத்தினார்கள் . அதன் பின்பு அது என்னவென்று பார்ப்பதற்கு பயப்சி(Biopsy) எடுத்தார்கள் .

இந்தப் பரிசோதனைகளின் முடிவாகத் தெரிந்தது – எலும்பு மச்சையில் (Bone Marrow)இருந்து உருவாகும் வெண்கலத்தின் முன்னோடியான பிளாஸ்மா கலத்தால்( Plasmacytes) வருவது அந்த புற்றுநோய் . அதன் பெயர் பிளாஸ்மாசைட்டோமா ( Plasmacytoma) இது உடலில் பல பாகங்களிலிருந்தால் அதை மல்விப்பிள் மயலோமா ( Multiple Myeloma) என்பார்கள் .

இக்காலப்பகுதியில், ஏற்கனவே திட்டமிட்ட ஒரு விடயத்தில் ஈடுபட்டிருந்தேன். மட்டக்களப்பில் புதிய அவசர சிகிச்சைப் பிரிவைக் கட்டுவதற்கு உழைத்த ஆஸ்திரேலிய டாக்டர் டேவிட் யங்கை சந்திப்பதற்குச் சென்றேன் . அவரோடு பேசி அந்த வைத்தியசாலைக்கு என்னாலான பணத்தைக் கொடுத்துவிட்டு, “ஒரு எக்ஸ்ரேயை பார்க்க முடியுமா?? ” என்றேன். உடனே அவர் பார்த்துவிட்டு “இன்றே அழைத்து வாருங்கள்” என கூறியதும், மாலையே சியாமளாவை அவரிடம் அழைத்துச்சென்று பரிசோதித்தோம். அவர் தனது நண்பரான எலும்பு புற்று நோய் அறுவை சிகிச்சை நிபுணரைத் தொடர்பு கொண்டு சிபார்சு செய்தார்.

இரண்டு கிழமைகளில் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடாகியது . தொடை எலும்பின் அரைப்பகுதியை வெட்டி அங்கு ரைட்ரேனியத்தால் செய்த செயற்கை எலும்பை இடுப்பில் பொருத்தும் இடுப்பு மாற்றீடு செய்வது எனச் சொன்னார்கள் .

முதல் நாள் சேர்ஜரியின்போது எலும்பை வெட்டி எடுத்துவிட்டார்கள். ஆனால், புதிய ரைட்ரேனியத்தை காலில் பொருத்த முடியவில்லை. அதற்குக் காரணம் சியாமளாவின் கால் எலும்பு சிறியது. அதற்குப் பொருத்தமான ரைட்ரேனியம் அவர்களிடம் இல்லை .
அடுத்த நாள் மீண்டும் ஒபரேசன் செய்வதாக முடிவு செய்யப்பட்டது .

நாய்களுக்கு ஒபரேசன் செய்வதற்கு முன்பே அதை அளவெடுத்து வைத்துக்கொண்டே நான் செய்வேன் . மெல்பனில் பிரபல சேர்ஜனால் கால் எலும்பின் விட்டத்தை உறுதிப்படுத்த முடியவில்லையா? என்பதே எனது மனதிலோடிய கேள்வி . அடுத்தநாள் மீண்டும் ஒபரேசன் செய்து பொருத்தினார்கள் . இப்படி இரண்டு நாட்கள் சத்திர சிகிச்சை நடந்தது.

இரண்டு கிழமையில் உடலின் மற்றைய பகுதிகளில் புற்றுநோய் பரவி இருக்கிறதா என்பதை ஆராய்வதற்கும் எக்ஸ்ரே எடுத்துவிட்டு, மீண்டும் இங்குள்ள புற்றுநோய்பிரிவான மக்கலம் இன்ஸ்ரிரியூட் என்ற மிகவும் பிரபலமான புற்று நோய் வைத்தியசாலைக்குச் சென்றோம்.

“இதுவரை எத்தனையோ நோயாளிகளது புற்று நோயை நான் ஆரம்பத்தில் கண்டு பிடித்ததால் அவர்கள் இன்னமும் உயிர் வாழ்கிறார்கள் எனச் சொல்வார்கள் ” என்று சியாமளா சக்கர நாற்காலியிலிருந்தவாறு, அதை நகர்த்திய எனது நண்பன் காந்தனுக்கு சொல்லியபடியிருந்தார் .

எனது மனதில் நான் படித்த அலெக்சாண்டர் சொல்சனிட்ஸினின் கான்சர் வாட் நாவலின் உரையாடல்கள் மனதில் வந்து போனது . வெட்டி எறிய முடியாதபோது புற்றுநோயின் பகுதிகளை ரேடியேஷனால் கருக்குவதே அக்காலத்தில் இருந்து வந்த சிகிச்சைமுறை. புற்று நோய் என்பது மரண தண்டனையாக இருந்த காலமது. இப்பொழுது குறி வைத்துச் சுடுவதுபோல் புற்று நோய் கலங்களை மருந்துகளால் கொல்லமுடியும். நாய் , பூனைகளிலே தோன்றும் பலவிதமான புற்றுநோய்களைக் குணமாக்க முடிகிறது . பலதரப்பட்ட புற்று நோய்களுக்கு நிரந்தரமாகத் தீர்வு காணமுடிகிறது.

மற்றவர்களுக்கு வரும்போது, அதைப்பற்றி பேசி ஆலோசனைகளைச் சொல்லமுடிகிறது. ஆனால், எமக்கு நடக்கும்போது முன் மூளை(Frontal lobe) வேலை செய்ய மறுத்துவிடுகிறது . லிம்பிக் சிஸ்ரம்(Limbic System) முந்திரிக் கொட்டையாகிறது

அந்தப் புற்றுநோய் வைத்தியசாலையில் எமக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருந்த விசேட நிபுணருக்கும் பதிலாக அவரது உதவி வைத்தியரும் நர்சும் இருந்தார்கள்

அவர்கள் இந்த நோய் மல்ரிப்பிள் மயலோமா என்ற நோயின் விதை போன்றது. இதை கீமோதிரப்பியால் குணப்படுத்தமுடியும் என்றும், அப்படியில்லாதபோது போன் மறோ(Bone Marrow) மாற்று செய்ய முடியும் என்றும், அதற்கு மூன்று கிழமைகள் வைத்தியசாலையில் இருக்கவேண்டும் எனவும், அப்பொழுது நோயெதிர்ப்பு சக்தியற்று தொற்று நோய் வரலாம். அத்துடன் இரத்தத்தை வெளியே எடுப்பதால் சோகை பீடித்து நலிந்திருப்பீர்கள் என்றும், ஆனாலும் இரத்தத்தில் இருக்கும் புற்றுநோய்க் கலங்களை எமது சிகிச்சையால் இல்லாமலாக்க முடியும் எனவும் சொன்னார்கள். சியாமளாவின் முகத்தில் சோகம் புகையாக மூடியிருந்தது. இப்பொழுதே இரத்தம் வெளியெடுத்ததுபோன்றிருந்தது. ஏற்கனவே இரண்டு சேர்ஜரியால் இரத்தத்தை இழந்து சோகையாக இருந்தார்.

நான் மிருக வைத்தியர். அடிப்படையான விடயங்கள் புரிந்தாலும், சிகிச்சை பற்றிய எந்த அறிவும் கிடையாது. ஆனால், சக்தியற்று இரத்தக் குறைபாடுடன் இருக்கும் மிருகங்களில் சேர்ஜரியை பிற்போடுவோம் . அந்த லாஜிக்கைப் பாவித்துச் சொன்னேன்: ” இடுப்பில் செய்த சேர்ஜரி குணமாக குறைந்தது ஆறு கிழமைகள் செல்லும். இந்த நிலையில் இன்னமும் ஒரு இரத்த சோதனையைச் செய்து விட்டு ஆறு கிழமைகள் பின்பு செய்தாலென்ன? ”

அப்பொழுது அந்த டாக்டரும் நர்சும் , சங்கிலியைப் பிடித்து இழுத்ததும் தரித்து நிற்கும் இரவு நேர பசஞ்ஜர் ரயிலில் பிரயாணம் செய்தவர்கள் முழிப்பதுபோல் தோற்றமளித்தார்கள் . எனது கேள்வியை அவர்கள் அவ்வாறு எதிர்பார்க்கவில்லை. அது எங்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் எம்மைக் காப்பாற்ற விசேட நிபுணர் வந்தார். அவரிடம் எனது ஆலோசனையை வைத்ததும் அவர் ஏற்றுக்கொண்டார். எங்களுக்கு இப்பொழுது மூன்று கிழமை இடைவெளி கிடைத்தது.

அந்த இடைவெளியை இப்பொழுது நினைத்துப்பார்த்தால் அது சொர்க்கத்தின் வாசல். நண்பர்கள் உறவினர்கள் மூலம் கடல் கடந்து, கண்டங்கள் தாண்டி பல இடங்களில் ஆலோசனைகளைப் பெறமுடிந்தது . முக்கியமாக வேறு ஒரு பெண் இரத்தவியல் நிபுணரிடம் தொடர்பு கொண்டு எமது மருத்துவ அறிக்கைகளை அனுப்பினோம். அதைப்பார்த்துவிட்டு “அவசரப்படத் தேவையில்லை. நான் இரண்டு கிழமையில் வியட்நாம் சென்று வருகிறேன் அதன்பின உங்களை சந்திக்கிறேன் ; ” என்றார் .
இறுதியில் ஆலோசனையை பெறமுடிந்தது. அதில் அவர் சொன்ன விடயங்கள் முக்கியமானவை.

“புற்று நோய் கலங்கள் இரத்தத்திலிருந்தால் மட்டுமே கீமோ திரப்பியால் அவற்றை அழிக்க முடியும். அவை திருடர்கள் போல் எலும்பில் உறங்கு நிலையிலிருந்தால் எதுவும் செய்ய முடியாது. கீமோதிரப்பி செய்வது வீணான சிகிச்சையாகும்.

இரண்டாவதாக அந்தப் புற்று நோய் கலங்கள் சுரக்கும் ஒருவகை புரதம் இரத்தத்தில் உள்ளது. அது குறைந்தால் வேறு பாகங்களிலில் இருப்பதற்குச் சாத்தியமில்லை. அந்தப் புரதம் இரத்தத்தில் கூடுகிறதா என்பதை ஆறுமாதத்தில் பார்ப்போம் ” என்றார் அவர்.

அப்பொழுது அந்த வைத்தியருக்கு நான் நன்றி சொன்னன். அவர் உடனே, “ஏன் நன்றி செல்கிறீர்கள்? ” என்றார்.

“ எதுவும் செய்யாமல் இருபதும் எங்களுக்கு முக்கியமானது.” என்றேன்

எனது வார்த்தைகளின் அர்த்தம் புரிந்ததால் சிரித்து விட்டு, மக்கலம் இன்ஸ்ரிரியூட்டிற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஆறுமாதம் பொறுத்துப்பார்போம்” எனக் கூறினார்

ஆறுமாதத்தில் அந்தப்புரதம் அரைவாசியாக இரத்தத்தில் குறைந்திருந்தது. தற்பொழுது ஒரு வருடத்தில் முற்றாக அற்றுப் போனது.

1971 ஆம் ஆண்டில் என்னில் சியாமளாவுக்கு சுரந்த காதலினளவு அல்லாது விட்டாலும் 2018 இல் குறிப்பிடத்தக்க அளவு சுரந்திருக்கும்.

பலரிடம் சொல்லும்போது நடேசன் இல்லாதவிடத்தில் என்னை கீமோதிரப்பியால் வாட்டியிருப்பார்கள் என்று சொல்வதைக்கேட்டு மனைவி மெச்சும் கணவன் என்று நினைப்பேன்.

இந்தக்கட்டுரையின் முக்கிய நோக்கம் தேவையற்றவகையில் பல மருத்துவ சிகிச்சைகள் நடக்கின்றன. அத்துடன் பல மருத்துவ தவறுகள் மறைக்கப்படுகின்றன. என்பதை சுட்டிக்காட்டுவதற்கேயாகும்.

Limbic System–எமது உணர்ச்சிகளிக்கு பொறுப்பானது
Frontal lobe- சீர்தூக்கி சிந்திப்பதற்கு பொறுப்பான

Share:

Author: theneeweb