மண் கொள்ளை – கருணாகரன்


முன்னரும் பல தடவை எழுதியதுதான் இது. ஆனாலும் என்ன செய்வது? எதையும் திரும்பத் திரும்பச் சொல்லவேண்டிய நிலையில்தானே நம்முடைய சூழல் இருக்கு. இப்படியிருப்பதென்பது வளர்ச்சியடையாத, வளர்ச்சியை நோக்கிப் பயணிக்க விரும்பாத கீழ் நோக்கிய சமூகமொன்றின் வருத்தத்திற்குரிய அடையாளமாகும். வளர்ந்த சமூகங்களும் வளர்ச்சியை நோக்கிய சமூகங்களும் கொம்பிலே சுற்றிக்கொள்ளும் கொடியைப்போல எதையும் சட்டெனப் பிடித்துக் கொள்ளும். புரிந்து கொள்ளும். சரிகளையும் தவறுகளையும் அதனதன் அடிப்படைகளில் அடையாளம் கண்டு, அதற்குத் தகுந்தாற் போல நடந்து கொள்ளும். தவறுகளைக் களையும். சரிகளை மேலும் வலுப்படுத்தும்.

நமக்கு சரிகளும் புரியாது. தவறுகளும் தெரியாது. அப்படிப் புரிந்தாலும் அதைக் களைய வேண்டும் என்ற சிந்தனை வரவே வராது. அந்தளவுக்குத் தடித்த தோல் நமது. உறைந்து கெட்டியாகிவிட்ட மூளை நம்முடையது. அப்படித்தான் அபூர்வமாக நற்சிந்தனை கெட்டியாக ஏதும் வந்தாலும் அதைச் செயலாக்கும் துணிச்சல் வரவே வராது. எல்லோரும் பேசாமலிருக்கும்போது நமக்கெதுக்கு வீண் வம்பு என்று ஒதுங்கிக் கொள்வோம். அந்தளவுக்குத்தான் உள்ளது நம்முடைய சமூகப் பொறுப்புணர்வும் இயற்கை வளங்கள் மீதான கவனங்களும்.

இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால், மண் கொள்ளையைப் பற்றியும் சட்ட விரோத மணல் அகழ்வைப்பற்றியும் எத்தனையோ தடவை எவ்வளவோ செய்திகள் வந்திருக்கின்றன. சனங்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் பலதும் நடந்திருக்கின்றன. மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம், பிரதேச அபிவிருத்திக் கூட்டம் உள்ளிட்ட பல முக்கியமான சந்தர்ப்பங்களிலும் இதைப்பற்றிப் பேசப்பட்டிருக்கிறது. ஏராளமான கட்டுரைகள், முகநூல் பதிவுகள் என ஏகப்பட்ட எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருக்கின்றன. சூழியலாளர்கள், புவியியலாளர்கள் போன்றவர்களும் இவற்றின் அபாயங்களைக் குறித்துப் பேசியிருக்கிறார்கள்.

ஆனாலும் இந்த மண் கொள்ளையும் சட்ட விரோத மணல் அகழ்வும் தடுக்கப்பட்ட மாதிரியும் இல்லை. குறைந்த மாதிரியும் இல்லை. பதிலாக இன்னுமின்னும் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதனாலேயே.

நம் எல்லோருடைய கண்ணுக்கு முன்னாலும் இந்த மண் கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. இதையிட்டு எந்தக் கவலையும் நமக்கு இன்னும் ஏற்படாதிருப்பது ஏன்?

கிளிநொச்சி மாவட்ட நீதி மன்றுக்கு முன்னால் மணல் மணலாகக் குவிக்கப்பட்டிக்கிறது. அவ்வளவும் சட்ட விரோதமாக அகழப்பட்ட மண். (கள்ள மண்). காவல்துறையில் சிக்கிய வண்டிகள் மட்டும் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அவற்றின் மணலே இது. சிக்காமல் தண்ணிகாட்டி விட்டுத்தப்பிச் செல்கின்றவை இதை விடப் பல மடங்கு அதிகம். அவற்றுக்குக் கணக்கில்லை.

ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பிறகு படையினரின் சோதனை நடவடிக்கைகளில் கூட இந்த மணல் அகழ்வுகள் குறையவில்லை. ஏன், ஊரடங்கு வேளையிலேயே மணல் ஏற்றிச் செல்லும் டிப்பர்களுக்குத் தடையிருக்கவில்லை. கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டதைப்போல இரவு பகலாக ஓடிக் கொண்டிருந்தன மணல் டிப்பர்கள். இன்றைய கடவுள்கள் என்பது அதிகாரம் பெற்ற அரசியல்வாதிகளே. அதிலும் பஞ்சமா பாதகங்களுக்கு அஞ்சாத அரசியல்வாதிகள். அவர்களுடைய ஆசீர்வாதம் கிடைத்தால் பிறகென்ன? சில இடங்களில் கடவுள்களின் (மேற்படி அரசியல்வாதிகளின்) டிப்பர்களே ஓடுகின்றன.

அப்படியென்றால் இது மிகப் பெரிய மாஃபியா பிஸினஸாகத்தானே இருக்க வேணும்!

சந்தேகமேயில்லை. அப்படித்தான். அதனால்தான் எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் அதையெல்லாம் மிஞ்சி, மீறி இந்த மண் கொள்ளை தொடர்ந்து நடக்கிறது.

“மண் கொள்ளை” என்பது சாதாரணமான ஒன்றல்ல. ஊரிலே பெரிய அநீதி ஏதாவது நடந்தால் அதைத்தாங்க முடியாத நிலையில் எங்களுடைய பாட்டி சொல்வார் “பெரிய மண்கொள்ளை நடக்குது. இதையெல்லாம் கேட்கிறதுக்கு ஆட்களே இல்லையா?” என்று.

அந்தளவுக்கு “மண்கொள்ளை” மிகவும் மோசமான ஒரு விசயம். அநீதியின் தாக்குவிசையைச் சுட்டுவதற்கான ஒரு குறியீட்டுச் சொல்.

இங்கே இப்போது நடப்பது நிஜமாகவே பெரிய மண் கொள்ளை – மணல் அகழ்வு.

வன்னியில் இது இரண்டு விதமாக நடக்கிறது. ஒன்று, ஆற்றுமணலை அகழ்வது. யாழ்ப்பாணத்தில் இந்த மணலைப் “பாலியாற்று மண்” என்று சொல்வார்கள். அல்லது ”கண்டாவளை மண்” என்று. உண்மையில் பாலியாற்றிலும் கண்டாவளையிலுள்ள கனகராயன் ஆற்றிலும் அந்தளவுக்கு இப்பொழுது மணல் இல்லை. ஆற்றின் கழிமுகத்துக்கு முன்பாக உள்ள ஆற்றின் வழிகளில் மணலை அகழ்ந்து விடுகிறார்கள். ஆறுகளை வழிமறித்துத் தோண்டி (அகழ்ந்து) எடுக்கிற வேலைதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.

எந்த முட்டாளும் செய்யத் துணியாத காரியம் இது. இதைப் பார்த்துக் கொண்டோ பார்க்க விரும்பாமலோ கனிய வளங்கள் திணைக்களம் இருக்கிறது. இதுதான் பெருங்கவலை. ஆனால், இன்னொரு புறத்தில் அவர்களையும் குறை சொல்லிப்பயனில்லை. அரசியல் கைகளை மீறி கனிய வளங்கள் திணைக்களம் துணியக் கூடிய அளவுக்கு இலங்கையில் ஜனநாயகமும் பொதுச்சேவையின் மாண்பும் தளைக்கவில்லை. எனவேதான் ஆறுகள் தாராளமாகத் தோண்டப்படுகின்றன. இது ஆறுகளைக் கொல்லும் முயற்சி. எதிர்காலத்தில் குளங்களை இல்லாதொழிக்கும் காரியம்.

ஆற்றில் மணல் எடுப்பதென்பது, ஆற்றுப்படுக்கைகளில் தேங்கிக் கிடக்கும் மணலை அள்ளியெடுப்பதாகும். ஆற்றுக்குச் சேதாரம் ஏற்படாத வகையில் பக்குவமாக இதைச் செய்வார்கள். இப்படி எடுக்கப்படுவதே தரமான மணலாகவும் இருக்கும். இப்படித் தோலோடு சேர்த்து தசையையும் உரிக்கிற காரியமல்ல.

வலிந்து அகழப்பட்ட மண், கட்டுமானங்களுக்குத் தகுதியானதல்ல. இதைப்பற்றி கட்டுமானங்களுக்குப் பொறுப்பாக இருக்கும் பொறியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் கூட எதுவும் சொல்தில்லை. ஏதோ இந்த மணலாவது கிடைக்கிறதே. இதை வைத்துச் செய்ய வேண்டியதைச் செய்து கொள்வோம் என்று  வாழாதிருந்து விடுகிறார்கள். வேலை முடிந்தால் சரி என்ற மனநிலையின் விளைவிது. எப்படி வேலை நடக்க வேண்டும் என்ற சிந்தனை ஒழிந்து விட்டது.

மணல் அகழ்வது, ஒப்பந்த வேலைகளைச் செய்வது போன்றவற்றில் அநேனகமாக அரசியல் செல்வாக்குடையவர்களே ஈடுபடுகிறார்கள். இவர்கள் தமக்குச் சாதமாக எல்லா விதிரேகைகளையும் மாற்றியமைத்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் வேறு யாருமேயில்லை. எங்களால் அதிகாரமளிக்கப்பட்டவர்களே. சனங்கள் வழங்கிய ஆதரவின் மூலமாக அரசியல் அதிகாரத்துக்கு வந்தபிறகு தங்களுடைய நலன், கட்சி நலன், தமக்குச் சார்பானவர்களின் நலன்கள் என்ற அடிப்படையிலேயே சிந்திக்கிறார்கள். அப்படிச் சிந்திக்கும்போது வாக்களித்த சனங்கள் மறந்து விடப்படுகிறார்கள்.

இரண்டாவது மணல் அகழ்வு நிலத்தைத் தோண்டி எடுக்கப்படுவதாகும். மணற்காடு, கௌதாரிமுனை, இயக்கச்சி, அல்லிப்பளை, கிளாலி, முல்லைத்தீவு செல்வபுரம், அளம்பில் போன்ற இடங்களில் நடப்பது இதுதான். இதில் முக்கியமானது கொதாரிமுனையில் நடக்கிற மணல் அகழ்வு. தனியார் காணிகளிலும் பொது இடங்களிலும் என இரண்டு மையங்களில் இந்த மணல் அகழ்வு நடப்பதுண்டு. தங்களுடைய காணிகளில் குவிந்து கிடக்கும் மணலை விற்பதில் என்ன தவறு? என்று அங்குள்ள சிலர் கேட்கிறார்கள். இயற்கை வளங்கள் என்பது அவை உள்ள காணி உரித்தாளருக்கு மட்டும் உரியதல்ல. அது மணல் மட்டுமல்ல, மரங்கள், மலைகள், மரபுரிமைகள் எனப் பலதுக்கும் பொருந்தும்.

கௌதாரிமுனை வடக்கிலே உள்ள இயற்கை வளமும் வனப்பும் பொருந்திய இடங்களில் முக்கியமான ஒன்று. முக்கியமாகச் சுற்றுலாத்துறைக்குரியது. ஒரு பக்கம் பெரிய பெரிய மணல் மேடுகள். அத்தனையும் வெண்குன்றுகள். மிக அழகியவை. இன்னொரு பக்கத்தில் கடல். கூடவே அழகிய பனங்கூடல்கள். இன்னொரு சிறப்பு இங்குள்ள மண்ணித்லைச் சிவன்கோயில். இது சோழர்காலத்தில் கட்டப்பட்டது. இன்று அதனுடைய சிதைவுகள் மட்டுமே உண்டு. புலிகளுக்கும் படையினருக்குமிடையில் நடந்த மோதல்களினாலும் அதற்கு முன்னரிருந்த  கால நீட்சியினாலும் கட்டுமானங்கள் சிதைவுக்குள்ளாகி விட்டது.

இப்படியெல்லாம் கவனத்திற்குரிய ஓரிடத்திலிருந்து மணலை அகழ்வதற்கு எப்படித்தான் ஒருவருக்கு மனம் வரும்? இங்கே மணலை அகழக் கூடாது என்று சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் உத்தரவிட்டிருந்தார். இப்பொழுது அவர் அதிகாரத்தில் இல்லை என்றவுடன் மறபடியும் வேதாளங்கள் முருங்கையில் ஏறியுள்ளன.

இதுவேதான் கிளாலி, அல்லிப்பளை, இயக்கச்சி, முகாவில் போன்ற இடங்களிலும் நடக்கிறது. கிளாலி, அல்லிப்பளை, இயக்கச்சி, முகாவில் போன்ற இடங்கள் இரண்டு பக்கத்திலும் கடலால் சூழப்பட்ட ஒடுங்கிய நிலப்பரப்பில் உள்ள சிறிய பிரதேசங்கள். கடல் மட்டத்திலிருந்து ஒன்றிரண்டு மீற்றர் மட்டுமே உயரமானவை. சில இன்னும் பள்ளமாக உள்ளவை. இங்கே தூய – அழகிய வெண்மணல் உண்டு. இந்த மண்ணைத்தான் அகழ்ந்தெடுக்கிறார்கள். இப்படி மண் அகழ்ந்தெடுக்கும்போது அந்த இடங்கள்  கடல் மட்டத்திலும் பார்க்கக் குறைந்து விடக் கூடிய நிலையே உண்டு.  அப்படிக் கடல் மட்டத்தையும் விட நிலம் தாழ்ந்து பதிந்தால் அங்கே உப்புநீர்தான் வெளிப்படும். மாரிகாலத்தில் கடல் நீர் உள்ளே வரக்கூடிய அபாயமும் உண்டு.

இதைப்பற்றி யார்தான் கவலைப்படுகிறார்கள். நின்றால் பால். செத்தால் இறைச்சி என்ற கணக்கில்தான் அவரவர் காரியம் பார்க்கின்றனர். இதற்கப்பால் நீண்ட தூர நோக்கில் சிந்திப்போரும் செயற்படுவோரும் குறைவு. எல்லாவற்றுக்கும் மேலாகக் கள்வர்களையே காவலாளிகளாக தெரிவு செய்த, தெரிவு செய்யும் எல்லோருக்கும் இது சமர்ப்பணம்.

Share:

Author: theneeweb