சங்கிலி 400 – புதிய மயானங்களை நோக்கிய பயணம் – கருணாகரன்

யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த சங்கிலி மன்னரின் நானூறாவது ஆண்டு நிறைவையொட்டி வடக்கில் சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கென விசேடமாக இந்தியாவிலிருந்து புரோகிதர்களும்   வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். கூடவே பாரதீய ஜனதாக் கட்சி மற்றும் தமிழகத்தின் இந்து மக்கள் கட்சி உறுப்பினர்களும் வந்திருக்கின்றனர். வந்தவர்கள் சங்கிலி மன்னரைப்பற்றிய நிகழ்வுகளில் கலந்து கொண்டதுடன் முள்ளிவாய்க்காலுக்குச் சென்று, அங்கு போரிலே கொல்லப்பட்ட மக்களுக்கான அஞ்சலியையும் செலுத்தியுள்ளனர்.

வடக்கிலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா என ஐந்து மாவட்டங்களிலும் சங்கிலி மன்னருக்கான பிதுர்க்கடன் தீர்க்கும்  நிகழ்வுகள் நடந்துள்ளன. அத்தனை நிகழ்வுகளும் சைவக் கோயில்களிலேயே நடத்தப்பட்டிருக்கின்றன. சங்கிலி மன்னர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கான பிதுர்க்கடன்களை சைவக்கோயில்களில்தானே செய்ய வேண்டும் என யாரும் சொல்லக்கூடும். கூடவே வரலாற்றையும் வரலாற்றுச் சுவடுகளையும் மீளுருச் செய்ய வேண்டிய சூழலில் இவ்வாறான நிகழ்வுகள் அவசியம் எனவும்.

மேலோட்டமாகப் பார்த்தால் இந்த நிகழ்வு தமிழரின் வரலாற்றுச் சிறப்புக்குத் தேவையான அடையாளம் போலத் தெரியும். யாழ்ப்பாணத்தின் கீர்த்திக்கு வலுச்சேர்ப்பதாகவும் தோன்றும். வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு மன்னருக்கு இதைச் செய்வது அவசியம் என்ற எண்ணமும் கூட ஏற்படக்கூடும். அப்படியான நோக்கில்தான் ஊடகங்களில் செய்திகளும்  வெளியிடப்பட்டுள்ளன.

ஆனால் இதெல்லாம் மகிழக்கூடியவையோ வரவேற்கக் கூடியவையோ அல்ல. பெருமைப்படக்கூடிய சங்கதியுமில்லை. அமைதிக்கும் சமாதானத்துக்கும் கூட ஏற்றதுமல்ல. பகை மறப்பிற்கும் நல்லிணக்கத்துக்கும் உரியனவும் கிடையாது. ஆகப் பொதுவாக இந்தக் காலகட்டத்துக்கு ஏற்றதேயல்ல.

மாறாக இது எதிர்காலத்தில் மிகப் பாரதூரமான எதிர்விளைவுகளையே உண்டாக்கக் கூடியது.

இப்பொழுது இந்த நிகழ்வை அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில் ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுப்பதன் மூலம் ஏனைய சமூகத்தினரின் மனதில் கலவரத்தை உண்டாக்குவதாகவே அமையும். அது தமிழ்ச்சமூகத்தை மேலும் நெருக்கடிக்குள்ளாக்குவதாகவே மாறும். இலங்கையின் அரசியல் மற்றும் சமூக யதார்த்தத்தை விளங்கிக் கொண்ட எவரும் இந்த மாதிரித் தற்கொலை முயற்சியை மேற்கொள்ள மாட்டார்கள்.

சங்கிலி மன்னரைப்பற்றி மன்னார் மாவட்ட மக்களிடத்திலே  (குறிப்பாக கிறிஸ்தவ மக்களிடத்தில்) எதிர்மறையான மனப்பதிவே உண்டு. இதற்கு வலுவான உதாரணம், மன்னாரில் அரங்கிடப்படும் சங்கிலி மன்னர் பற்றிய நாடகம். அதில் சங்கிலி வில்லனாகவே சித்திரிக்கப்படுகிறார். அங்கே அரசகேசரி என்பவரே கதாநாயகன். யாழ்ப்பாணத்தை ஆண்ட எதிர்மன்னசிங்கனுக்குப்பிறகு, அவருடைய உறவினான அரசகேசரியே யாழ்ப்பாணத்தை ஆண்டதாகவும் அவர் கிறிஸ்தவத்துக்கு மாறியதால் அவரைக் கொன்று யாழ்ப்பாண ஆட்சியைக் கைப்பற்றிய சங்கிலி மன்னாரில் கிறிஸ்தவ மக்களைக் கொன்றதாகவும் சித்திரிக்கப்படுகிறார்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் சங்கிலி மன்னனே கதாநாயகன். போத்துக்கீசரை இறுதிவரை எதிர்த்து யாழ்ப்பாண ராஜ்ஜியத்தைக் காக்க முற்பட்ட மாவீரன் என்ற பிம்பமே யாழ்ப்பாணத்தின் பதிவு. நல்லூரில் உள்ள சங்கிலியன் சிலை, சங்கிலியன் தோப்பு என்ற அடையாளச் சின்னங்களும் இந்த அடிப்படையிலானவையே. மயில்வாகனப்புலவரின் “யாழ்ப்பாண வைபவமாலை, முதலியார் செ.இராசநாயகத்தின் “யாழ்ப்பாணச் சரித்திரம்”, ஆ.முத்துத்தம்பிப்பிள்ளையின் “யாழ்ப்பாணச் சரித்திரம்” ஆகிய நூல்களும் இந்த நோக்கை அடியொற்றியனவே. ஏன் விக்கிபீடியாவும்  இந்த அடிப்படையிலேயே தகவலைத் தருகிறது.

இப்படித் தமிழ்ப்பரப்பிலேயே வெவ்வேறான மனநிலைகள். அடுத்தடுத்த மாவட்டங்களிலேயே எதிரெதிர் வரலாற்றுப் புரிதல்களும் பதிவுகளுமாகவே  உள்ளன. இந்த நிலையில் சங்கிலி மன்னரின் நானூறாவது சிரார்த்த தினம் வடக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படுவதை ஏனைய சமூகங்கள் எப்படிப் பார்க்கப்போகின்றன என்பது முக்கியமானது. அதுவே நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் அவசியமானவை.

மன்னாரில் அறுநூறுக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்களை வெட்டிக் கொன்றவர் என்ற குற்றச்சாட்டும் பழிச்சொல்லும் சங்கிலியன் மீதுண்டு. இதனால் மன்னாரில் மட்டுமல்ல, ஏனைய இடங்களிலுள்ள கிறிஸ்தவர்களும் நிச்சயமாகச் சங்கிலி மன்னருக்கு எடுக்கப்படும் பிரமாண்டமான விழாக்களை எதிர்நிலையிலேயே எதிர்கொள்ள நேரிடும்.

சிங்களத்தரப்பு இதை இன்னொரு கோணத்தில் எச்சரிக்கையாகவே பார்க்கும். அச்சுறுத்தலாக. திடீரெனச் சங்கிலியின் வரலாற்று முக்கியத்துவம் வடக்கில் பேரெழுச்சிப்படுத்தப்படுவதை அது எதிர்மனநிலையிலேயே பார்க்க வாய்ப்புண்டு. அதுவும் இந்தியத் தூண்டுதலோடு இந்த வரலாற்று முன்னெடுப்பு நிகழ்வதையிட்டு அது நிச்சயமாக அச்சமடையும்.

தன்னுடைய வரலாற்றையும் விட தமிழ் வரலாறு நீட்சியானது. கீர்த்தி மிக்கது என்று சித்திரிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலையோ சூழலோ இன்னும் சிங்களத் தரப்பில் ஏற்படவில்லை. ஏற்கனவே வரலாறு குறித்துப் பலவிதமான உளச் சிக்கலுக்குள் சிக்கித் தவிக்கின்றன இலங்கைச் சமூகங்கள்.

சங்கிலியைப் பற்றிய முஸ்லிம் மக்களின் மனப்பதிவும் வரவேற்கக் கூடியதாக இல்லை.

இந்த நிலையில் இப்படித்திடீரென சங்கிலி மன்னருடைய நானூறாவது சிரார்த்ததினக் கொண்டாட்டங்கள் என்றால் அது ஏனைய சமூகங்களை நிச்சயமாகக் கலவரப்படுத்தியே தீரும். எழுத்தாளரும் இந்தியாவில் அகதியாக இருப்பவருமாகிய பத்திநாதன் குறிப்பிடுவதைப்போல, “ மதச்சுதந்திரத்தையும் வரலாற்றையும் அரசியல் காரணங்களுக்காக பொதுமைப்படுத்துவது பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதற்கான வரலாறு சமகாலத்தில் கண்முன்னே இருக்கிறது. ஆகவே அதற்கு எதிராக எதிர்குரல்கள் எழுவது தவிர்க்கமுடியாது. ஒற்றைத்தன்மையான சாதிய மதவாத, இனவாத ஈழ அரசியல் மீண்டும் சனங்களைப் பலியிடுவதைத்ததவிர வேறு எதையும் செய்துவிடாது.” என்பது உண்மையே.

இதனால் ஏட்டிக்குப் போட்டியான நிலைமைகளே ஏற்பட இடமுண்டு. அதுவும் இந்தியாவிலிருந்து சிவசேனாவும் பா.ஜ.கவும் இந்து மக்கள் கட்சி உறுப்பினர்களும் வந்து இதைச் செய்திருக்கிறார்கள் என்றால் பிறகு சொல்லவே வேண்டாம். அகண்ட இந்தியா என்ற எண்ணக்கருவும் அகண்ட இந்து சாம்ராஜ்ஜியம் என்ற நோக்கும் இதன் மூலம் மேலும் நிரூபணமாகும். ஏற்கனவே ஈழத்தமிழ்ச்சூழலில் சிவசேனையின் ஊடுருவலும் செல்வாக்கும் ஏனைய சமூகங்களுக்கு முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் பின்னணியில் இது மேலும் எரியும் நெருப்பில் எண்ணெயை வார்க்கும்.

“இந்தியாவுடன் தமிழ்ச்சமூகம் நெருங்கியிருக்கிறது. தமிழ் மக்களுக்கு இந்தியா எப்போதும் இணக்கமாக உள்ளது“ என்ற மாதிரியான அபிப்பிராயம் சிங்கள மக்களின் மனதில் நீண்டகாலமாகவே உள்ளது. ஆனால் இந்தியா தமிழ் மக்களுடன் இல்லை என்பது தனிக்கதை. இந்த உண்மையையும் இந்த யதார்த்தத்தையும் தமிழ்த்தரப்பும் உணர்த்தியதில்லை. இந்த நிலையில் தமிழ் மக்களுக்குச் சார்பாகவே இந்தியா செயற்படுகிறது என்ற மனப்பதிவுக்கு இந்தச் சங்கிலி மன்னரின் கொண்டாட்ட நிகழ்வுகள் சான்றாகி விடும். இது எந்த வகையிலும் தமிழர்களுடைய அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவப்போவதில்லை.

ஏற்கனவே மதமுன்னிலைகளால் நாடு ஏராளம் சிக்கல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாகியிருக்கிறது. பௌத்தத்துக்கும் சிங்களத்துக்குமே முன்னுரிமை என்ற அடிப்படையில் அரசியலமைப்பை உருவாக்க முற்பட்டதால் ஏற்பட்டிருக்கும் அச்ச நிலை இன்னும் தீரவில்லை. கடந்த ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதல்கள் இன்னொரு மத முன்னிலைப்படுத்தலின் விளைவு. இப்படி ஏராளம் பிரச்சினைகள் மத அடையாளங்களாலும் மத முன்னிலைகளாலும் உருவாகியிருக்கின்றன. இதெல்லாம் எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு மேலும் பெற்றோல் ஊற்றுவதைப்போலவேதான் அமையப்போகின்றன.

சங்கிலி பற்றிய நானூறாண்டுக்குப் பிந்திய நினைவெழுப்புதல்களுக்கான இன்றைய அவசியமென்ன? இதற்கான முக்கியத்துவமென்ன? சமகாலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேறு முக்கியமான விசயங்களை விடவும் இதற்கு என்ன முதன்மை உண்டு? இந்தக் கேள்விகளுக்கான பதிலை யாரிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது?

ஆனால், இதில் இந்தியாவின் ஊக்குவிப்பு பின்னணியாக இருந்திருக்கிறது என்பது வெளிப்படையானது. மத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் மேற்கொள்ளப்படும் தூண்டு விசைகளுக்கு இந்தியா பின்னணி வகிக்கிறது.

இது மீண்டும் இலங்கைச் சமூகங்களை முரண்பாட்டுக்குள்ளும் பகைமைக்குள்ளும் தள்ள முற்படுகிறது என்பதற்கான ஆதாரமாகும். இவ்வாறு முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதன் மூலம் இலங்கையைத் தொடர்ந்தும் பலவீனப்படுத்தி வைத்திருப்பதற்கே இந்தியா முயற்சிக்கிறது. வல்லரசுகளின் மூளை இப்படித்தான் எப்போதுமே சிந்திப்பதுண்டு. தமக்குச் சாதகமான களநிலையை தாம் விரும்புமிடத்தில் உருவாக்குவதற்கு இவ்வாறான எளிய பொறிமுறையை அவை கையாள்கின்றன. இதைப் புரிந்து கொள்ளாமல் நாம் இலகுவாக இந்தப் பொறியில் சிக்கிவிடுகிறோம். இப்போது நடந்து கொண்டிருப்பதும் இதுவே.

இப்படி வெளிச்சக்திகளைத் துணைக்கழைத்துக் கொண்டு கடந்த காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் ( ஈழப்போராட்டம்) எல்லாம் எப்படிப் போய் முடிந்தன என்பதை நாம் மறந்து விடுவது நல்லதல்ல. அவற்றிலிருந்து தகுந்த பாடங்களைப் படித்திருந்தால், இப்பொழுது மீண்டும் இவ்வாறு தடுமாற வேண்டி வந்திராது.

இலங்கையில் சிவசேனா, பா.ஜ.க போன்ற சக்திகளின் ஊடுருவல் அல்லது எழுச்சிகரமான நடவடிக்கைகள் ஒருபோதுமே நன்மையளிக்கப்போவன அல்ல. அவை மேலும் சிக்கலையே உண்டாக்கும். இது இலங்கைச் சமூகங்களை பிளவுண்டு மோத வைக்கும். குறிப்பாக கிறிஸ்தவ, முஸ்லிம் சமூகங்களை.

அப்படி இலங்கைச் சமூகங்கள் பிளவுண்டால், மேலும் முரண்பாட்டில் சிக்கினால், பகையில் வீழ்ந்தால் இலங்கைக்குப் பேரழிவே ஏற்படும். இலங்கைச் சமூகங்களுக்கு அது வீழ்ச்சியாகவே அமையும்.

இலங்கைச் சமூகங்கள் அரசியல் நோக்கில் கட்டமைக்கப்பட்ட அல்லது புனைவுருவாக்கம் செய்யப்படும் வரலாற்றுப் பெருமிதங்களுக்குள் சிக்கினால் அது இனவாத அடிப்படையையே மேலும் வளர்க்கும். வரலாற்று இருட்டடிப்புகளும் வரலாற்று மேலாதிக்கமும் அரசியலாக்கப்பட்டிருக்கும் சூழலில் இவற்றை மிகக் கவனமாகவே கையாள வேண்டும்.

ஆனால், அண்மைக்காலத்தில் ஏட்டிக்குப் போட்டியாக வரலாற்றுப் பெருமிதங்களை நிலைநிறுத்தும் போக்கே வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லாளன், பண்டாரவன்னியன், சங்கிலியன் ஆகியோருக்கு யாழ்ப்பாண நகரில் சிலைகள் வைக்கப்பட்டன. கடந்த ஆண்டு கிளிநொச்சியில் அக்கராயனுக்கு ஒரு சிலை வைக்கப்பட்டது. இப்பொழுது பல்லவராயன்கட்டில் இன்னொரு சிலை எப்படி எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையில் வவுனியாவிலும் முல்லைத்தீவிலும் பண்டாரவன்னியனுக்குச் சிலைகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. இன்னும் ஏராளமான சிலைகள் இப்படி ஏதேதோ மன்னர்களின் பேரில் வைக்கப்படலாம்.

இதைப்போல கிழக்கிலும் சிலைகள் எழலாம். அப்படியென்றால் முஸ்லிம் சமூகமும் தன்னுடைய வரலாற்றின் வேர்களைத் தேடிச் செல்ல முற்படும். இதன் வளர்ச்சி எங்கே போய் முடியும் என்று தெரியாது. ஆனால் இது ஏட்டிக்குப்போட்டியாக ஆயிரம் பிரச்சினைகளை – சமூகக் கொந்தளிப்புகளை நிச்சயமாக உண்டாக்கும் என்பதைத் துணிந்து கூற முடியும்.

எனவே இவற்றைக் குறித்து நாம் மிகவும் ஆழமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டியவர்களாக உள்ளோம்.

இப்போது நமக்குச் தேவையாக இருப்பது மன்னர்களுக்குச் சிலைகள்  வைப்பதோ அவர்களுடைய நினைவுகளைக் கொண்டாடுவதோ அல்ல. அவர்களுடைய சிரார்த்த தினத்தில் பிதுர்க்கடன் கழிப்பதுமல்ல. அல்லது புலிகளைத் தோற்கடித்த அடையாளங்களை வெற்றிச் சின்னங்களாகப் பிரகடனப்படுத்துவதுமல்ல. பதிலாகப் பகை மறப்பிற்கான வேலைகளைச் செய்வதே இன்றைய தேவையாகும். நல்லிணக்கத்துக்கான அக – புறச் சூழல்களை உருவாக்குவதே அவசியம். சமூகங்களை வெளிநோக்கித் தள்ளுவதல்ல. உள்நோக்கி நெருங்க வைப்பது தேவையான பணியாகும்.

இதைச் செய்வதற்கே ஆட்கள் தேவை. திட்டங்கள் வேண்டும். இதைச் செய்வதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். அயல் நாடுகளும் முன்வரலாம். நம் சிந்தனையாளர்கள், ஊடகங்கள், அரசியல் தரப்பினர் என அனைவரும்  முன்வரலாம்.

இல்லையென்றால் அடுத்த  தலைமுறையின் மடியிலும் நெருப்பே எரியும். தலையில் மயானம் விரியும்.

00

Share:

Author: theneeweb