பூனைகளுக்கு மணி கட்டுவது யார்? – கருணாகரன்

மணல் கொள்ளையைப் பற்றிக் கடந்த வாரம் எழுதியிருந்தேன் அல்லவா. அதைப்படித்த பலரும் “இந்த அளவுக்கு இந்தக் கொள்ளை நடக்கிறதா?” என்று ஆச்சரியப்பட்டார்கள். “இதைத் தடுப்பதற்கு என்ன வழி?” என்று சிலர் (அப்பாவித்தனமாக ஆனால் அக்கறையோடு) கேட்டனர். இன்னொரு சாரார் “இது பெரிய ஆபத்தாச்சே!” என்று துக்கம் தொனிக்க வியந்தனர். இதில் சிலர் புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

“உங்கட கண்ணுக்கு முன்னால தினமும் இரவு பகலாக நூற்றுக்கணக்கான டிப்பர்கள் மணலோடும் கிறவலோடும் போய்க்கொண்டிருக்கின்றன எண்டால் அதெல்லாம் என்ன? அந்த மணல் எங்கேயிருந்து வருது? எப்படி எடுக்கப்படுது? இதற்கான அனுமதி உண்டா? அப்படியென்றால் எந்தளவுக்கு அனுமதி? எண்டு யாருமே சிந்தித்திருக்கிறீங்களா?” என்று கேட்டேன். “இப்படித்தான் கிறவலும் கல்லும் கூட”.

“யுத்தத்துக்குப் பிறகு பெரிய அளவில் அபிவிருத்தியும் புனரமைப்பும் நடக்க வேண்டியிருக்கு. அதுக்கு மணல் தேவை. கிறவல் வேணும். கல்லுந்தான். இதுக்கெல்லாம் எங்க போறது? இதையும் வெளிநாட்டில இருந்து இறக்குமதி செய்ய வேணுமா?” என்று கேட்கிறார் ஒருத்தர்.

“யுத்தத்தினால் அழிந்து போனதையெல்லாம் மீளக் கட்டுவதற்கு நிச்சயமாக இந்தப் பொருட்களெல்லாம் தேவைதான். அதுக்காக முறையான திட்டமில்லாமல், கண்டபாட்டுக்கு இவற்றை அகழலாமா? இது இயற்கையை, சூழலைக் கடுமையாகப் பாதிக்குமே!” என்றேன்.

“முறையான அனுமதி இல்லாமல் நடந்தால் தப்புத்தான். அரச நிர்வாகத்தின் தவறுகளைச் சரி செய்யதால் இதைச் சீர்ப்படுத்தலாம்” என்கிறார் அவர்.

நான் விழிகளை உயர்த்தினேன். நடக்கிற காரியமா இது? அதுவும் இந்தச் சூழலில்?

“அரச நிர்வாகம் பல வழிகளிலும் சீர்கெட்டிருக்கு. அரசாங்க அதிபர்களுக்கு ஆட்டுக்கறியும் விஸ்கிப்போத்தல்களும் தானமாக வழங்கப்படுது. கூடவே கட்டிட ஒப்பந்தங்கள், மணல் அகழ்வு, கிறவல் அகழ்வு எல்லாத்துக்கும் பத்து வீதம் வாங்கப்படுது என்கிறார்கள். இது சனங்களின் தகவல். இப்பிடிச் சனங்களுக்குப் பகிரங்கமாகத் தெரிஞ்ச விசயம், நம்முடைய அரசியல் தலைவர்களுக்குத் தெரியேல்ல. பேப்பர்காரருக்குத் தெரியேல்ல எண்டது விசித்திரந்தான். பத்து வீதம் எல்லாற்றை வாயையும் அடைச்சிட்டுது போல. சில அரசியல்வாதிகள் அரச நிர்வாக அதிகாரிகளிடம் தனிப்பட்ட சலுகைகளைப் பெற்றதாலும் இந்த மாதிரிச் சந்தர்ப்பத்தில் வாயைத் திறக்க முடியாமலிருக்கிறார்கள். நக்குண்டார் நாவிழந்தார் என்பது சரிதான். இதாலதான்  சட்டவிரோதமாக இந்தக் கொள்ளையெல்லாம் நடந்து கொண்டிருக்கு. பொறுப்பான கனியவளங்கள் திணைக்களம் தொடக்கம் வீதிச் சோதனையிலீடுபடும் பொலிஸ் வரையில் இதைச் சரியாகக் கண்காணித்தால் உடனடியாகவே இதைக் கட்டுப்படுத்தலாம். ஆனால், அது சாத்தியப்படக்கூடிய நிலை இல்லை” என்றேன்.

“அப்படியென்றால் இதை ஆர் தடுக்கிறது?” என்று கேட்டார் நண்பர். அவருக்கு ஒன்றுமே புரியவில்லைப் போலும்.

“நாங்கள்தான் தடுக்க வேணும். அதாவது மக்களாகிய நாங்கள். ஆனால் அது எளிய விசயமில்லை. சட்டவிரோதமாக மணல், கிறவல் அகழ்வு நடக்குது எண்டு பொலிசுக்கோ கனியவளங்கள் திணைக்களத்துக்கோ தகவல் கொடுத்தாலும் அவர்கள் உரிய நடவடிக்கையை, உரிய நேரத்தில் எடுப்பதில்லை. பதிலாகக் கண்டும் காணாமலும் இதை விட்டு விடுகிறார்கள். சில இடங்களில் சனங்கள் வீதிக்குக் குறுக்கே தடைகளைப் போட்டிருக்கினம். ஆனால், அதையும் மீறி டிப்பர்கள் ஓடிக் கொண்டுதானிருக்கு. இடையில் சில நல்ல அதிகாரிகளோ உத்தியோகத்தர்களோ விசுவாசமாகத் தடுத்தால் பெரிய இடங்களில இருந்தும் மேலிடங்களில இருந்தும் உத்தரவு வரும். தடையை  வேண்டாம் எண்டு. சனங்கள் தடுக்க முற்பட்டால் சனங்களைத் தாக்குவதற்கென்றே அடாவடிக்குழுக்களை மண் கொள்ளையர்கள் வைத்திருக்கிறார்கள். இதில் டிப்பர்கள் மட்டுமில்லை. உள்ளுரில் உள்ள ட்ரக்ரர்காரர்களும் அடங்கும்” என்றேன். “இது ஒன்றும் ரகசியமான விசயமும் இல்லை”

“அப்ப என்னதான் செய்யிறது?” நண்பருக்குக் குழப்பம்.

“இந்தப் பிழையான விசயத்துக்கு ஒரு பக்கத்தில சனங்கள் எதிர்ப்புக் காட்டுகினம். இன்னொரு பக்கத்தில இதை இன்னொரு தரப்புச் சனங்கள் ஊக்கப்படுத்துகள். தங்களுக்குத் தேவையான மணலோ கிறவலோ கிடைத்தால் போதும் எண்டு இவை நினைக்கினம். இப்பிடியிருக்கும்போது மணல் அகழ்வும் கிறவல் எடுப்பும் சரியாக நடக்கிதா? இதனால் பாதிப்புகள் ஏற்படாதா? எண்ட கேள்வி எப்படி எழும். இதால இன்னொரு பக்கத்தில சனங்களும் ஒரு வகையில் பொறுப்பே?” என்றேன்.

நண்பர் பதிலே சொல்லவில்லை. ஆச்சரியத்தில் உறைந்து போயிருந்தார்.

“ஆகவேதான் இதை வாய்ப்பாக எடுத்துக் கொண்டு பொறுப்பான தரப்புகள் பொறுப்பற்று நடக்கின்றன. உழைக்க வேண்டிய நேரத்தில் உழைப்போம் எண்டு ஆளாளுக்கு ஊழல் செய்யிறார்கள். ஊழலுக்கு சனங்களும் ஒரு காரணம். தங்கட காரியம் நடக்க வேணும் எண்டதுக்காக கீழாலயும் மேலாலயும் எதையாவது குடுத்துச் சரிக்கட்டுவம் எண்டு நினைச்சுச் செய்யிற வேலை சமூகத்தையும் கெடுத்து  நாட்டையும் அழிக்குது” என்றேன்.

நண்பருக்கும் இதெல்லாம் தெரியும். ஏன் உங்களுக்கும் கூட இதைப்பற்றி நிறையத் தெரியும்.

ஆனால் இந்த (கள்ள) பூனைகளுக்கு யார் மணி கட்டுவது?

இதுதான் தீராத பிரச்சினை.

மண் பற்று, தேச விடுதலை, சூழல் பாதுகாப்பு பற்றியெல்லாம் வாய் கிழியப் பேசுகிறார்கள் எல்லோரும். ஆனால் இவற்றைக் குறித்து எங்குமே பேசியதாகவோ அக்கறைப்பட்டதாகவோ தெரியவில்லை. குறிப்பாக ஊடகங்களும் அரசியல்வாதிகளும் கட்சிகளும்.

இவர்கள் நினைத்தால் – முன்வந்தால் – நிச்சயமாக இந்த மணல் கொள்ளையைத் தடுக்க முடியும். சட்ட விரோதக் கிறவல் அகழ்வைக் கட்டுப்படுத்தலாம். ஊடகங்கள் ஆதாரங்களோடும் விவரங்களோடும் இந்தக் கொள்ளையை பகிரங்கப்படுத்த முடியும். அதற்காக துணிச்சலோடு களமிறங்க வேண்டும். தகவல் ஆதாரங்களைத் திரட்ட வேண்டும்.

சனங்கள் அநீதிக்கு எதிராகவே எப்போதுமிருக்கிறார்கள். ஆகவே இதற்கு நிச்சயமாகச் சனங்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும்.

ஊடகங்களுக்கு ஆதரவாகவும் அனுசரணையாகவும் சமூகமிருப்பது அவசியம். அரசியல் தலைவர்களும் கட்சிகளும் இதற்கு ஆதரவாகச் செயற்பட வேணும். அது அவர்களுடைய கடமை. சமூகத்தையும் சூழலையும் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு அவர்களுக்கே உண்டு. அதற்கான அதிகாரமும் ஆளணி வசதிகளும் அவர்களிடமிருக்கின்றன.

ஆனால், வேலியே பயிரை மேய்கிறமாதிரி இருப்பவர்களை எப்படி இதற்குப் பொறுப்பாக்க முடியும்? என்பது சனங்களின் கேள்வி.  காவலாளியே கள்வனாக மண் கொள்ளையிலும் கிறவல் அகழ்விலும் ஈடுபடுகிறார்கள் என்றால் யாரிடம் முறையிடுவது? யாரிடம் நீதியைக் கேட்பது?

கிடைக்கின்ற தகவல்களின்படி அரசியல்வாதிகள், நிர்வாக அதிகாரிகள், காவல்துறைத் தரப்புகளின் டிப்பர்களே கூடுதலாகச் சட்டவிரோத அகழ்வுகளில் ஈடுபடுகின்றன என்பது உண்மையே. வன்னியில் பகிரங்கமாகவே இதைச் செய்வதாகச் சனங்கள் பேசுகின்றனர்.

இப்படியிருந்தால் எப்படி இதைக் கட்டுப்படுத்துவது? தடுப்பது?

ஒரு மாற்று ஏற்பாடாக, தனியாருக்கு இந்த அகழ்வுகளுக்கான உரிமங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக பொது அமைப்புகள், கூட்டுறவுச் சங்கங்கள் போன்றவற்றுக்கு இதை வழங்கலாம். அல்லது பகிரங்கமாக ஏலம் போடலாம். கண்காணிப்புக்குச் சமூக மட்டத்திலான குழுவினரை  நியமிக்கலாம். இதனால் ஓரளவுக்கு இந்தச் சட்டவிரோத அகழ்வுகளைக் கட்டுப்படுத்தலாம்.

ஏனெனில் சங்கங்களையும் அமைப்புகளையும் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் உண்டு. விசாரணை செய்வதற்கான அதிகாரமும் அரசுக்குண்டு. இதனால் ஊழலையும் பெருமளவில் கட்டுப்படுத்தலாம்.

ஆனால், இதை யாரும் செய்யப்போவதில்லை. சம்மந்தப்பட்ட அதிகாரத்தரப்புகளுக்கு லாபம் தருகின்ற ஒரு விசயத்தை அவர்கள் இலகுவில் விட்டு விட மாட்டார்கள்.

ஆகவே சனங்கள்தான் இதைக் கையில் எடுக்க வேணும். இதற்கான மாற்றத்தை. ஏனெனில் சனங்கள்தான் இதனால் முதலில் பாதிக்கப்படுவதும். கூடுதலாகப் பாதிக்கப்படுவதுமாகும்.

மணல் அகழப்படும் இடங்களில் சென்று பாருங்கள். அங்கே யார் இருக்கிறார்கள். எப்படியான நிலையில் அவர்களுடைய வாழ்க்கை இருக்கிறது என்பதை. கிறவல் குழிகளுக்கு அண்மையாகவும் கற்குவாறிகளுக்குப் பக்கத்திலும் இருப்பவர்கள் எல்லாம் ஏழைகள், பின்தங்கியோரே. எனவே முழுப் பாதிப்பும் இவர்களுக்கே ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் துயரமான உண்மை என்னவென்றால், இவர்களை வைத்தே இந்த சட்டவிரோதச் சங்கதிகளைச் செய்கின்றன ஊழற் பூதங்கள். சில்லறைக்கு இவர்களில் சிலரை தங்களுக்கு ஏற்றமாதிரி மாற்றி, இவர்களை வைத்தே வேவு பார்ப்பது, மணல் அகழ்வது, வேட்டையாடுவது என.

வன்னிச் சனங்கள் சூழலைப் பாதுகாத்து வாழ்ந்தவர்கள். சூழலோடு இணைந்து வாழ்ந்தவர்கள். அப்படியான வாழ்க்கையைக் கொண்டிருந்த சனங்கள் இன்று சூழலை அழித்து வாழும் வாழ்க்கைக்குள் சிக்குப்பட்டிருக்கிறார்கள். மண்ணை நம்பி வாழ்ந்த வாழ்க்கை மாறி, மண்ணை விற்று வாழ்கிற ஒரு வாழ்க்கையில் சிக்கியிருக்கிறார்கள். காட்டைப் பாதுகாத்து வாழ்வதை விட  காட்டை அழித்து வாழ்வது சுலபமானது என்று ஆகி விட்டது.

இதை அவர்கள் புரிந்து கொண்டாலும் வேறு வழியில்லை என்ற நிலையிலிருக்கிறார்கள். ஆனால், நிச்சயமாக இவர்களை இதிலிருந்து மீட்டே ஆக வேண்டும். அழிவுப் பாதையிலும் அழிவுப் பண்பாட்டிலும் எவரையும் நாம் விட்டு விடுவது நல்லதல்ல.

இதைக்குறித்து யார் அகவிழி திறப்பது? நிச்சயமாக இந்தப் பேராபத்துக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேணும். இல்லையென்றால் அழிவு நிச்சயம். அது முள்ளிவாய்க்கால் பேரழிவையும் விட மோசமானதாகவே இருக்கப்போகிறது. ஆமாம், இதுவொரு சூழியற் படுகொலையே!

Share:

Author: theneeweb