மாற்று சினிமாவின் பிதாமகன்!

இந்திய சினிமாவை உலக அரங்கில் எடுத்துச்சென்ற பெருமையும், வெகுஜன சினிமாவிலிருந்து விலகி மாற்று சினிமாவை அறிமுகப்படுத்திய பெருமையும் சத்யஜித் ரே, ரித்விக் கடக், மிருணாள் சென் என்கிற மூவரணியின் சாதனை. தனது 95-வயது வயதில் கொல்கத்தாவில் காலமாகியிருக்கும் மிருணாள் சென், சத்யஜித் ரே, ரித்விக் கடக் மூவரணி தொடங்கி வைத்த மாற்று சினிமா நெடுஞ்சாலையில் பயணித்தவர்கள்தான் தாபன் சின்ஹா, அடூர் கோபாலகிருஷ்ணன், ஜி. அரவிந்தன், ஷியாம் பெனகல், கிரீஷ் கர்னாட், கிரீஷ் காஸரவள்ளி, ஷாஜி என் கருண், புத்ததேவ் தாஸ்குப்தா, கெüதம் கோஷ், ரிதுபர்ண கோஷ் உள்ளிட்ட பலரும். சத்யஜித் ரே, ரித்விக் கடக் இருவரிலிருந்தும் சற்று மாறுபட்டவர் மிருணாள் சென். அதற்குக் காரணம், இவரது திரைப்படங்களில் காணப்பட்ட கொள்கை ரீதியிலான அரசியல் சித்தாந்தம்.

1955-இல் “ராத் போரே’ என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குநரானார் மிருணாள் சென். அந்தப் படம் சரியாக ஓடவில்லை. அவரது அடுத்த திரைப்படம் “நீல் ஆகாஷேர் நீச்சே’, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழான கொல்கத்தாவின் கடைசி காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டது. மிருணாள் சென்னின் மூன்றாவது திரைப்படமான “பைஷே ஷ்ரவணா’ அவருக்கு சர்வதேசப் புகழை தேடித்தந்தது.
இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அவரது திரைப்படமான “புவன் ஷோம்’, 1969-இல் வெளியானது. இந்தியாவின் அதிகாரவர்க்கத்தின் மீதான தாக்குதல்தான் “புவன் ஷோம்’ திரைப்படத்தின் அடித்தளம். புதிய இந்திய சினிமாவின் தொடக்கமாக “புவன் ஷோம்’ அமைந்தது என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள். மிருணாள் சென்னின் தலைசிறந்த படம் என்று பலராலும் கருதப்படும் “புவன் ஷோம்’, சிறந்த படத்துக்கான தேசிய விருதை மட்டுமல்லாமல், சிறந்த இயக்குநருக்கான விருதையும் பெற்றுத் தந்தது.

வங்காள நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையை மிருணாள் சென்னைப் போல துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியவர்கள் வேறு யாரும் கிடையாது. கொல்கத்தா நகரத்தை மையப்படுத்தி அவர் எடுத்த “இன்டர்வியூ’ (1971), “கொல்கத்தா-71′ (1972), “பதாதிக்’ (1973) ஆகிய மூன்றும் அங்கு வாழும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டும் திரைப்படங்கள்.
1970 காலகட்டத்தில் மேற்கு வங்கம் மிகப்பெரிய அரசியல் நெருக்கடிகளைச் சந்தித்தது. அன்றைய இளைஞர்களிடம் அந்த அரசியல் சூழலின் தாக்கம் காணப்பட்டதில் வியப்பில்லை. வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல், இளைஞர்களின் கனவுகள் நனவாகாத ஆத்திரம் இவையெல்லாம் “இன்டர்வியூ’, “கொல்கத்தா 71′, “பதாதிக்’ ஆகிய திரைப்படங்களில் பிரதிபலித்தன.

70-களின் பிற்பகுதியில் ஆத்திரக்கார இளைஞர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்த மிருணாள் சென்னின் திரைப்படங்கள் நடுத்தர வர்க்கத்தின் போலித்தனங்களையும் அவர்கள் எதிர்கொள்ளும் தர்மசங்கடங்களையும் வெளிப்படுத்துபவையாக அமைந்தன. அந்தத் திரைப்படங்களின் பெண் கதாபாத்திரங்கள், சமுதாயம் விதித்திருக்கும் சட்டதிட்டங்களையும், ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும் கேள்வி கேட்பவர்களாக மிருணாள் சென் சித்தரித்திருந்தார். “ஏக் தின் பிரதி தின்’ (1979), வேலைக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்ப முடியாமல் தவிக்கும் ஒரு பெண் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் சம்பவங்களையும் சூழ்நிலைகளையும் பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. அன்றைய நடுத்தர வர்க்கத்தின் மனநிலையையும் அன்றைய சமுதாயத்தில் வாழ்ந்த பெண்களின் நிலையையும் தத்ரூபமாக சித்தரித்தது “ஏக் தின் பிரதி தின்’. “காரிஜ்’ (1982), மிருணாள் சென் உருவாக்கிய இன்னொரு வித்தியாசமான திரைப்படம். அதேபோல, “ஆகாலேர் சந்தானே’ (1980) மிருணாள் சென்னின் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு திரைப்படம்.

2002-இல் வெளிவந்த “ஆமார் புவன்’தான் மிருணாள் சென்னின் கடைசி திரைப்படம். வங்காளத்தில் மட்டுமல்லாமல், ஹிந்தி, ஒடியா, தெலுங்கு என்று பல்வேறு மொழிகளில் திரைப்படங்களை இயக்கிய பெருமை மிருணாள் சென்னுக்கு உண்டு. 1985-இல் மிருணாள் சென் இயக்கிய “ஜெனிசிஸ்’ திரைப்படம் ஹிந்தி, பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது. வேறு எந்த வங்காள இயக்குநரும் மிருணாள் சென் அளவுக்கு ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்ட பல்வேறு கதைகளை திரைப்படமாக்கியிருக்க மாட்டார்கள். எல்லா சட்டதிட்டங்களையும் உடைத்துத் தனக்கென்று ஒரு திரை மொழியை உருவாக்கிக் கொண்ட பெருமை அவருக்கு மட்டுமே உண்டு.
28 திரைப்படங்கள், 4 ஆவணப் படங்கள் மட்டுமல்லாமல், வங்காளத்திலும் ஆங்கிலத்திலும் சினிமா தொடர்பான ஆறு புத்தகங்களையும் எழுதியிருக்கும் மிருணாள் சென், இந்திய அரசால் பத்மபூஷண் விருது வழங்கி கெüரவிக்கப்பட்டார். இந்திய திரைத் துறையின் மிக உயரிய தாதா சாகேப் பால்கே விருதும் பெற்றார்.

நேரிடையாக அரசியலில் களமிறங்காவிட்டாலும் அடிப்படையில் மிருணாள் சென் ஓர் இடதுசாரி சிந்தனாவாதி. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியில் சேரவோ, எந்தவிதப் பதவியை ஏற்றுக்கொள்ளவோ அவர் உடன்படவில்லை. அவரது இடதுசாரி சிந்தனைகள் திரைப்படங்களில் பிரதிபலித்தன.
மிருணாள் சென் வெறும் திரைப்பட இயக்குநர் மட்டுமல்ல, தான் ஏற்றுக்கொண்ட கொள்கையைத் தனது திரைப்படத்தின் மூலம் மட்டுமல்லாமல், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க முற்பட்டவர். இந்திய சினிமா உள்ளவரை மிருணாள் சென்னின் நினைவு வாழும்!

தினமணி தலையங்கம்

Share:

Author: theneeweb