ஜனாதிபதி தேர்தல் – கருணாகரன்

2020 இலங்கையின் தேர்தல்கள் ஆண்டாகவே இருக்கப்போகிறது. ஜனாதிபதித் தேர்தல், மாகாணசபைகளின் தேர்தல், இவற்றைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல் என ஒன்றுக்குப் பின் ஒன்றாக அடுத்தடுத்து மூன்று தேர்தல்களுக்கு இடமுண்டு.

மாகாணசபைகளுக்கான தேர்தலை இந்த (2019) ஆண்டே நடத்தியிருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளும் இதையே வலியுறுத்தி  வருகின்றன. மேல்மாகாணசபைக்கான தேர்தலை நடத்தவேண்டும் எனக்கோரி நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. அரசாங்கம் அறிவிக்கும் பட்சத்தில் தேர்தல்களை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவும் அடிக்கடி சொல்லி வருகிறார்.

ஆனால் தேர்தல்களை நடத்துவதற்கு அரச தரப்புத்தான் பின்னடித்துக் கொண்டிருக்கிறது. தமக்குச் சாதகமான கிரகநிலை இன்னும் அமையவில்லை என்பதே இந்தப் பின்னடிப்புக்குக் காரணம். அதாவது, தமக்கேற்ற அரசியல் சாதக நிலைகள் இன்னும் எட்டப்படவில்லை என்பதேயாகும்.

உரிய காலத்தில் தேர்தலை நடத்தாமல் தவிர்ப்பது மக்கள் விரோத நடவடிக்கையே. ஜனநாயக மறுப்பே. 2015 இல் “ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்“ என்ற பிரகடனத்தோடு ஆட்சியேறிய தரப்புகள் கடந்த நான்காண்டுகளிலும் மேற்கொண்டு வரும் ஜனநாயக மறுப்புகள் கொஞ்சமல்ல. அதில் ஒன்றே தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடிப்பதாகும். இது அப்பட்டமான ஜனநாயக மீறல் எனப் பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். தமது நலனுக்காக மக்களின் உரிமையைத் துஷ்பிரயோகம் செய்வதை எப்படிச் சொல்வது?

2020 இல் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் என்னவெல்லாம் நடக்கும் என ஏராளமான ஆய்வுகளும் கணிப்புகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதைக் குறித்து கடந்த ஓராண்டாக ஏராளம் எதிர்வு கூறுதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோர் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடலாம் என்ற நிலை சில வாரங்களுக்கு முன்பு காணப்பட்டது. இப்பொழுது இந்தக் காட்சி மாறி, பொதுவேட்பாளராக பாட்டலி சம்பிக்க ரணவக்கவை நிறுத்துவதற்கு ஒரு தரப்பு முயற்சிப்பதாகத் தெரிகிறது. இதற்கு ரணில் விக்கிரமசிங்கவும் பச்சைக்கொடியைக் காட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிரணி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஸ முன்னிறுத்தப்படும்போது அதை எதிர்கொள்வதற்கு பாட்டலி சம்பிக்க ரணவக்கவே பொருத்தமான தெரிவு என ரணில் தரப்பினர் கருதுகின்றனர். இதன்மூலம் ரணில் விக்கிரமசிங்க தன்னை நோக்கி வரும் நெருக்கடியைத் தவிர்க்க முற்படுகிறார்.

வழமையைப்போல ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடும் சாத்தியங்கள் இல்லை. அப்படியென்றால் அதற்குப் பதிலாக கருஜெயசூரிய அல்லது சஜித் பிரேமதாச அல்லது நவின் திசநாயக்க ஆகியோரில் ஒருவரே ஐ.தே.க சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும். அப்படி நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றியீட்டினால் கட்சியின் தலைமைப்பொறுப்பும் வெற்றி பெறுகின்றவரிடம் சென்று விடும். இது ரணிலைப் பலவீனப்படுத்தும்.

இதை உணர்ந்த ரணில் விக்கிரமசிங்க, இவ்வாறான ஒரு சூழல் உருவாகி விடாதிருக்கவே சம்பிக்க ரணவக்கவை நிறுத்துவதற்கு முயற்சிக்கின்றார் போலுள்ளது. அதாவது கட்சிக்கு வெளியே ஒருவரை நிறுத்துவதன் மூலம் தன்னைத் தவிர வேறு யாரும் கட்சியில் தலையிட முடியாத, செல்வாக்குச் செலுத்த முடியாத நிலையை உருவாக்குவது.

கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் இதே உத்தியையே ரணில் மேற்கொண்டிருந்தார். இதன் மூலம் கட்சித் தலைமையைத் தொடர்ந்தும் தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறார் ரணில்.

தேர்தல்கள் சிலவேளை எதிர்பாராத விதமாகக் காலை வாரிவிடும். அப்படிக் காலை வாரி விட்டால் எதிர்பார்க்கப்படும் பிரதமர், ஜனாதிபதி பதவிகள் கிட்டாமல் போகலாம். அதற்காகக் கட்சித்தலைமைப் பதவியை இழக்க முடியாது என்பதே ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாடு.

கட்சியின் தலைமைப் பொறுப்பை தன்னுடைய கையில் வைத்திருக்கும் வரையில் தானே எதையும் தீர்மானிக்கும் வல்லோன் என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறார் ரணில். இதனால்தான் அவர் நெருக்கடியான சூழலில் பெரும் பந்தயங்களில் – போட்டிகளில் – தன்னுடைய தலையை வைத்துக் களமாட முயற்சிப்பதில்லை. அதற்கு வேறு ஆட்களைத் தெரிவு செய்து நிறுத்தித்தன்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த அடிப்படையிலேயே பாட்டலி சம்பிக்க ரணவக்கவை பொதுவேட்பாளராக நிறுத்துவதைப்பற்றிய கூட்டமொன்று கடந்த மாதம் கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்திருக்கிறது. அதில் தமிழ், முஸ்லிம், மலையக, சிங்களக் கட்சிகள் பலவும் அழைக்கப்பட்டிருக்கின்றன. யாரையெல்லாம் அழைக்க முடியுமோ அவர்களெல்லாம் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். வெற்றிக்கான பெரிய வட்டத்தை உருவாக்கும் முயற்சி இது. இறுதி முடிவு எட்டப்படாத கூட்டம் என்றாலும் ஒரு முன்னறிவிப்பையும் அதற்கான சேதியையும் அந்தக் கூட்டம் விடுத்திருக்கிறது.

பாட்டலி சம்பிக்க ரணவக்க ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படும்போது அது கோத்தபாயவுக்கு எதிரான கடும் போட்டியாகவே இருக்கும். ஏனெனில் இருவருமே ஒரே சிந்தனைப் பாரம்பரியத்தைக் கொண்ட வேட்பாளர்கள். இருவரும் கடும்போக்காளர்கள். இருவரும் சிங்களத் தேசியவாதிகள். இருவரும் துணிச்சலான முடிவுகளை எடுப்பதிலும் அவற்றைச் செயற்படுத்துவதிலும் வல்லவர்கள். இருவரும் ஒரே வாக்காளர்களை நம்பியிருப்பவர்கள். இருவரும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராகச் சிந்திக்கின்றவர்கள் என்ற அடையாளத்தைக் கொண்டவர்கள். அல்லது சிறுபான்மைச் சமூகத்தின் நம்பிக்கை வட்டத்திற்கு வெளியே உள்ளவர்கள்.

இப்படி இருவரும் களமிறங்கும்போது இதில் யார் வென்றாலும் அது சிங்கத் தேசியவாதத்தை ஊக்கப்படுத்தும் வெற்றியாகவே அமையும். சிங்களத் தேசியவாதம் என்பது சிங்கள இனவாதமாகவே நடைமுறையில் உள்ளது. எனவே சிங்கள இனவாதம் தலைதூக்கக் கூடிய நிலையே அதிகமாகக் காணப்படுகிறது. இனவாத அரசியலை மையப்படுத்தியே இலங்கையின் ஆட்சியமைப்பும் ஆட்சி முறையும் உள்ளன. அவற்றில் சிறு உடைப்பை நடத்துவற்கும் யாரும் தயாரில்லை. இந்த நிலையில் சிங்களத் தேசியவாதத்தை முன்னிறுத்துவோர் அதிகாரத்துக்கு வந்தால் அது மேலும் இனவாதத்தையே பலமாக்கும்.

இன்று உலகின் பல பாகங்களிலும் வலதுசாரிய அரசியல் மேலோங்கி வருகிறது. அமெரிக்காவின் ட்ரம் தொடக்கம் இந்தியாவின் மோடி வரையில் வலதுசாரிய அரசியலின் மேலோங்குதலைக் காணலாம். இதன் பின்னணியின் இன, மத, நிற, மொழி வாதங்களே உள்ளன. அமெரிக்காவில் வெளியாருக்கு இடமில்லை என்பதன் பின்னாலுள்ள நிறவாதம் இந்தியாவில் மதவாதமாகக் கட்டமைந்திருக்கிறது. இது கோத்தபாய – சம்பிக்க ரணவக்க தரப்புக்கும் ஊக்கமளிப்பதாகவே இருக்கும்.

அதாவது அமெரிக்கா, இந்தியா போன்றவற்றைப் பின்பற்றி இலங்கையும் வெளிப்படையான வலதுசாரிய அரசியலில் – இனவாத அரசியலில் – செயற்படும். இதில் ஜனநாயகத்தை நாம் எதிர்பார்க்க முடியாது.

மட்டுமல்ல, இந்த இருவரில் எவரைத் தெரிவு செய்வது என்ற இக்கட்டான நிலை சிறுபான்மைத் தேசிய இனங்களான தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்படும்.

இந்த நிலைக்கெல்லாம் காரணம் தற்போதுள்ள ஆட்சியாளர்களேயாகும். வரலாற்றில் என்றுமே இல்லாத அளவுக்கு இந்த ஆட்சியாளருக்கு 2015 இல் மிகப் பெரியதொரு வாய்ப்புக் கிடைத்தது. அது வரலாற்றில் கிடைக்காததொரு கொடை. அபூர்வமான தருணம்.

ஐ.தே.க, சுக இரண்டும் ஒருங்கிணைந்து கூட்டரசாங்கத்தை உருவாக்கியிருந்தன. இதற்கு அனுசரணையாகவும் ஆதரவாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் செயற்பட்டது. கூட்டரசில் மலையக் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் இணைந்திருந்தன. ஆக நாட்டிலுள்ள அனைத்துச் சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்புகள் எல்லா முரண்பாடுகளுக்கும் அப்பால் தேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணவேண்டும் என்ற நோக்கில் ஒருங்கிணைந்திருந்தன. இந்த ஒருங்கிணைவு அரசியல் அதிகாரத்தின்படி மிகப்பலமாகவும் இருந்தது.

இந்த ஒருங்கிணைவின் மூலமாக நாட்டில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணக் கூடியதாக இருந்தது. புதிய மாற்றங்களையும் வேண்டிய மறுசீரமைப்புகளையும் செய்யக் கூடியதாகவும் இருந்தது.

இதெல்லாம் நடக்கும் என்றுதான் சனங்களும் நம்பியிருந்தனர். ஆனால் எல்லாமே தலைகீழாகின. இரண்டாண்டுகளில் ஒருங்கிணைவு என்பது சனங்களையும் தேசத்தையும் மையப்படுத்தியது என்பதற்குப் பதிலாக அந்தந்தக் கட்சிகளின் நலன், தலைமைகளின் விருப்பு – வெறுப்புச்  சம்மந்தப்பட்டது என்ற வகையில் அமைந்தது.

இதனால் ஒவ்வொரு தரப்பிற்கிடையிலும் முரண்பாடுகள் தோன்றின. கால நீட்சியில் இந்த முரண்பாடுகள் வலுத்தன. இப்பொழுது இழுபறி நிலையில் அரசாங்கமும் ஆட்சியும் மாறியிருக்கிறது. இதனால் ஒரு சிறிய விசயத்தைக் கூடச் செயற்படுத்த முடியாதிருக்கிறது.

நாடு 2015 இல் இருந்த நிலையையும் விடக் கீழிறங்கி விட்டது. இதை யாருமே மறுக்க முடியாது. பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.  பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இல்லாத நிலையில் பொதுமக்கள் கலங்கிப்போயிருக்கிறார்கள். அமைதியோ சமாதானமோ அரசியல் தீர்வோ இப்போதைக்கு வரப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. எதிர்நிலைச் சக்திகள், ஜனநாயகத்துக்கு எதிரான தரப்புகள் மீளெழுச்சியடைந்து கொண்டிருக்கின்றன. இனவாதத் தரப்புகளே அதிகாரத்துக்கு வரக்கூடிய ஏதுநிலைகள் உருவாகியுள்ளது. இதெல்லாம் இலங்கை என்ற இச்சிறுதீவுக்கு ஏற்புடையதா?

இப்படியென்றால் முப்பதாண்டுகால யுத்தம், ஐம்பது ஆண்டுகால அரசியல் நெருக்கடி ஆகியவற்றிலிருந்து இலங்கைச் சமூகங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன? வரலாற்றிலிருந்தும் தன் வாழ்விலிருந்தும் எதையும் படித்துக் கொள்ளாத சமூகம் முன்னோக்கி நகர முடியாது.

ஜனாதிபதித் தேர்தல் மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து வரும் மாகாணசபைகளின் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என எது வந்தாலும் அவற்றினால் எந்தப் பெரிய மாற்றங்களும் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் தெரியவில்லை.

சனங்களை விசுவாசிக்காத வரையில் இலங்கையில் மாற்றங்கள் நிகழ வாய்ப்பே இல்லை. சனங்களை விசுவாசிக்காத அரசியல் கட்சிகளையும் அரசியல் தலைவர்களையும் மக்கள் நிராகரிப்பதே ஒரே வழி. இதற்கு மாற்றுச் சிந்தனை தேவை. மாறறு அணிகளை, மாற்று அரசியலாளர்களைத் தெரிவு செய்வதற்கான மன நிலை வேணும். அதுவே ஈடேற்றத்துக்கான ஒரே மார்க்கம். ஒரே வழி.

Share:

Author: theneeweb