வீதி விபத்துகளில் கடந்த 10 வருடத்தில் 27 ஆயிரத்து 161 பேர் உயிரிழப்பு:நிமல் சிறிபாலடி சில்வா

 

கடந்த பத்துவருடங்களில் 27ஆயிரத்தி 161பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.இது முப்பதுவருட யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிகரானதாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று போக்குவரத்து விதி முறைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சாரதிகளின் கவனயீனமான நடவடிக்கை காரணமாக கடந்த பத்துவருடங்களில் 27ஆயிரத்தி 161பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த உயிரிழப்பானது கடந்த காலங்ககளில் நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின்போது உயிரிழந்தவர்களின் தொகைக்கு நிகரானது என்றே தெரிவிக்கப்படுகின்றது.

போதையுடன் வாகனங்களை ஓட்டுவதால் சாரதிகளைவிட பாதசாரிகளே அதிகம் விபத்துக்களில் உயிரிழந்திருக்கின்றனர். இதனை அடிப்படையாகக்கொண்டே போக்குவரத்து சட்டத்தை மீறுவோருக்கான தண்டப்பணத்தை 25ஆயிரம் ரூபாவரை அதிகரிக்க நடவிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நான் இந்த அமைச்சுக்கு பொறுப்பாக இருக்கும் போதே இந்த சட்டத்தை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டேன். என்றாலும் தற்போது அதனை நிறைவேற்றி இருப்பதையிட்டு போக்குவரத்து அமைச்சருக்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

அத்துடன் சாரதிகள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்திக்கொண்டு வாகனங்களை ஓட்டுகின்றனர்.அதனை கருத்திற்கொண்டே குறித்த சட்டத்தில் கையடக்க தொலை பேசி பாவனை தண்டனைக்குரிய குற்றமாக தெரிவித்திருப்பது காலத்துக்கு தேவையான சட்டமாகவே காண்கின்றேன்.அத்துடன் 2017இல் ரயில் பாதைகளில் செல்பி எடுக்கச்சென்றதில் 24 இளைஞர்கள்  உயிரிழந்திருக்கின்றனர். அதபோன்று புகையிர குறுக்கு வீதிகளில் வாகனங்கள் ரயிலில் மோதியதில் 86 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.ரயில் பாதுகாப்பு கடவைகளில் சமிக்ஞைகளை பொருட்படுத்தாமல் செயற்பட்டதால் 439 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் புகையிரத பாதையை குறுக்காக சென்றமையால் 196 விபத்துக்களும் புகையிரத பாதையில் பயணிப்பதன் மூலம் 231 விபத்துக்களும் இடம்பெற்றுள்ளன.அதனால் சாரதிகள் மாத்திரமல்ல பாதசாரிகளும் கவனயீமற்று செல்கின்றதாலே இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் வீதி விபத்துக்கு தண்டனையை அதிகரிப்பது மாத்திரமன்றி விபத்துக்களை குறைப்பதுதொடர்பாக வெளிநாடுகளுடன் இணைந்து இதனை ஒழுங்குறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதாவது சாரிதிகளுக்கு புள்ளிவழங்கும் முறை ஒன்றை ஏற்படுத்தி விபத்துக்கள் இடம்பெறும் பட்சத்தில் புள்ளிகளை குறைத்துஇ இறுதியில் அவரது சாரதி அனுமதி பத்திரத்தை நீக்கும் வேலைத்திட்டத்தை நான் ஆரம்பித்திருந்தேன்.

இந்த முறை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இருந்து வருகின்றது. இதற்கு பாதுகாப்பு துறையின் ஒத்துழைப்பும் தேவையாகும்.

மேலும் சாரதி அனுமதி பத்திரம் விநியோகிக்கும்போது முறையான கொள்கையில் வழங்குகின்றதா என்ற சந்தேகம் இருக்கின்றது. சாரதி அனுமதி பத்திரம் வழங்குவதை மோட்டார் வாகன பதிவு திணைக்களத்துக்கு மாத்திரம் வழங்காமல் வேறு நிறுவனங்களையும் இதில் இணைக்கவேண்டும்.

அதன் மூலம் அந்த திணைக்களத்தின் ஏகாதிபத்தியத்தை இல்லாமலாக்கலாம். இல்லாவிட்டால் லஞ்சம் பெற்றுக்கொண்டு சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் நிலைமைகள் ஏற்படுகின்றன. இதுதொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.

அதனால் சாரதி அனுமதி பத்திரத்தை வழங்கும் உரிமையை மோட்டார் வாகன பதிவு தினைணக்களத்துடன் போக்குவரத்து திணைக்களத்துக்கும் வழங்கவேண்டும் என்றார்.

Share:

Author: theneeweb