அதிகாரப்போட்டியின் விளைவுகள் – பஸீர் சேகு தாவூத்

நிறைவேற்று அதிகாரம் நாட்டை ஆட்சி செய்யத் தொடங்கிய ஆரம்பகாலம் தொட்டு ஏற்பட்ட தமிழ் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பேரினவாத நெருக்கடி காலப்போக்கில் தீவிரமடைந்து யுத்தமாகப் பரிமாணமடைந்தது. மூன்று தசாப்த கால யுத்தத்தின் அழிவுகளை இன, மத பேதமற்று அனைத்து மக்களும் சந்தித்தனர்.தமிழ் மக்கள் திட்டமிட்டு மிகப் பெரும் பேரழிவுக்கு உள்ளாக்கப்பட்டனர். பல வெளிநாடுகளின் தலையீட்டுக்கு இந்த யுத்தம் வழிசமைத்திருந்தது.

நிறைவேற்று அதிகாரத்தில் ஜனாதிபதிக்கிருந்த அதிகாரத்தில் குறைப்பைச் செய்து பிரதமருக்கு கணிசமான அதிகாரத்தை வழங்கிய 19 ஆவது அரசமைப்புத் திருத்தம் இலங்கை அரசியலில் சீரான அதிகாரப் பிரயோகப் பாதையைக் கரடுமுரடாக மாற்றியது. ஜனாதிபதி ஒரு கட்சியைச் சேர்ந்தவராக இருந்துகொண்டு நாட்டின் நிர்வாக ஒழுங்கு ஓட்டத்தை தனது அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கான ஓடுபாதைக்கு இழுக்கிறார். பிரதமர் 19 ஆவது திருத்தம் மூலம் தான் மேலதிக அதிகாரத்தை பெற்றுக்கொண்டும், நாட்டின் அதிக அமைச்சுகளைத் தனது கட்சி வசம் வைத்துக்கொண்டும் நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் கயிறுழுப்பைச் செய்கிறார். இந்நிலமையினால் நாட்டின் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட நிர்வாகம் முடக்குவாதம் பீடித்து அசைவற்றுக் கிடக்கிறது. இந்த இரு உயர் பீடங்களினதும் முரண்பாட்டின் விளைவுகளில் பிரதானமான ஒன்றுதான் உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைத் தாக்குதலை முன்கூட்டியே முகர்ந்து தடுக்கமுடியாமல் போனமையாகும்.

19 ஆவது அரசமைப்பு திருத்தத்தின் பின்னரும் தற்கொலைத் தாக்குதலின் பின்னரும் இலங்கையின் அரசியலும், பொருளாதாரமும் பாரிய கிடங்குக்குள் வீழ்ந்து தலைகீழான மாற்றத்தைக் கண்டுள்ளது.

ஏற்பட்டுத்தப்பட்டுள்ள புதிய சூழலினால் 1980 களில் தமிழ் சிறுபான்மைக்கு நேர்ந்த கதியைப் போல ஒரு கதி முஸ்லிம் சிறுபான்மைக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.இதனால் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு எவ்வித உத்தரவாமும் இல்லாமலாகியுள்ளது.மாத்திரமல்ல இப்பதட்டமும் நெருக்கடியும் அழிவுகளும் மேலும் பல வருடங்கள் நீடிக்கும் வாய்ப்புமுள்ளது.தமிழ் மக்களும் அவர்களது அரசியல் தலைமைகளும் நெருக்கடி காலத்துக்குள் கையாண்ட உத்திகளை முஸ்லிம் தலைமைகள் அனுபவமாகப் பார்க்கவும், புதிய வியூகங்களை வகுக்கவும் முன்வரவேண்டும். ஆனால் தமிழர்கள் எதிர்கொண்டது- எதிர்கொள்வது இனப்பிரச்சினை இப்போது முஸ்லிம்கள் எதிர்கொள்வது மதப்பிரச்சினையாகும் என்கின்ற தெளிவைப் பெறுதல் இங்கு முக்கியமாகிறது. அன்று தமிழர்களை உலுக்கியவர்கள் பேரினவாதிகள் இன்று முஸ்லிம்களை உலுக்குபவர்கள் பெருமதவாதிகள் ஆகும்.

ஒரு தேசமாக தம்மை உருவகித்து வந்த கிழக்கு முஸ்லிம்கள் நினையாப் பிரகாரமாக ஏப்பிரல் 21 க்கு பிற்பாடு அரசியல் கணிப்பில் கிழக்கிலுள்ள ஊர்களின் பேர்வழிகளாக கீழிறங்கியுள்ளார்கள். கிழக்குக்கு வெளியே அரசியல் கணிப்பில் திடகாத்திரமான ஊர்களால் அடையாளப்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் திடீரென கொத்துக் கொத்தான குடும்பங்களாக குறுகிப் போயுள்ளனர்.

ஞானசேரர் விடுதலையானதன் பின் நடாத்திய ஊடக சந்திப்புகளினாலும் இரத்தின தேரர் தொடங்கியிருக்கும் சாகும் வரையான உண்ணா நோன்பின் பின்னரும் நிலமை பாரதூரமாக மாறியிருக்கிறது.இவ்வாறான ஒரு நிலவரத்தின் வடிவத்தை தமிழர்கள் அன்று சந்திக்கவில்லை.

மூன்று முஸ்லிம் அரசியல் முக்கியஸ்தர்கள் தமது உச்ச நிலைப் பதவிகளை துறக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஒட்டி பிந்திய கலவர நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.இவ்வாறான புதிய கோரிக்கைகள் எதிர்காலத்தில் மேலும் வைக்கப்படாது என்பதற்கில்லை.

பேரின மற்றும் பெருமதவாதிகளின் இலக்கு சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் பதவிகளைக் கவிழ்ப்பதுமட்டும்தானா என்றால்
இல்லை; கடந்த கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக இலங்கை நாடாளுமன்ற மற்றும் நிறைவேற்றதிகார அரசியலில் முஸ்லிம் சிறுபான்மைத் தனித்துவ அடையாள அரசியலுக்கு இருக்கும் பேரம் பேசும் அரசியலைத் தகர்ப்பது இவர்களின் முக்கிய இலக்காகும். முஸ்லிம்களின் தனிக்கட்சிகள் எதுவும் அரசின் பங்காளியாக இனிமேல் வரக்கூடாது, அப்படி வருவதால் சிங்களப் பெரிய கட்சிகள் அமைக்கும் அரசுகள் இச்சிறிய கட்சிகளின் விரலசைப்புக்கு ஆடுகின்றன.இது நடக்க இனி இடமளிக்கக் கூடாது.தனி முஸ்லிம் அரசியல்வாதிகள் பெரிய சிங்களக் கட்சியின் உறுப்பினராக இருந்து அமைச்சுப் பதவி வகிக்கலாம்,இவர்கள் பேரம் பேச முடியாது.இவர்கள் பெரிய அரசியல் கட்சிகள் குந்து என்றால் குந்துவார்கள்- எழும்பு என்றால் எழும்புவார்கள் என்று நம்புகிறார்கள்.இச்சக்திகளின் உடனடி இலக்கு றிஷார்ட்டும் அகில இலங்கை மக்கள் காங்கிரசுமாக இருந்தாலும், அடுத்த இலக்காக றவூப் ஹக்கீமும் முஸ்லிம் காங்கிரசுமாக இருக்காது என்று சொல்ல முடியாது.முஸ்லிம் காங்கிரசின் உச்சபீட உறுப்பினரும் கம்பஹா மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஷாபி ரஹீம் அதி சக்தி வாய்ந்த தொழில் நுட்பக் கருவிகளுடன் குண்டு வெடிப்பின் பின் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறே முஸ்லிம் காங்கிரசை பிரதிநிதித்துவம் செய்யும் கோட்டை மாநகரசபை உறுப்பினர் உஸ்மான் தவ்ஹீத் ஜமாஅத்துடன் தொடர்புடைவர் என்று கைது செய்யப்பட்டுள்ளார்.இவற்றை வைத்து முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராகக் கிளர்ச்சிகளும் இராஜினாமாக் கூக்குரலகளும் எழவும்கூடும்.

பேரின அரசியல், முஸ்லிம்களின் அடையாள அரசியலுக்கு எதிராகப் பேசுகிற, செயல்படுகிற சூழ்நிலையினால் முஸ்லிம்களுக்குள் ஏற்பட்டிருக்கிற கொந்தளிப்பு மன நிலையை தமது அரசியல் முதலீடாக்கும் வகையில் கருத்து தெரிவிப்பதை முஸ்லிம் அடையாள அரசியல் செய்வோர் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் நிலமை பேரினவாதிகளுக்கு வாய்ப்பாகிவிடும். சாதாரண சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிட முயலும் பேரினவாதம் தனது இலக்கை அடைவதற்கு இலகு வழி திறந்துவிடும். இப்போது நாம் செய்யவேண்டியது இந்த வழியை மூடியபடியே வைத்திருக்கும் அரசியலே ஆகும். முஸ்லிம்களைப் பயங்காட்டிப் பணியவைத்து சிறுபான்மையினரின் நிம்மதியான வாழ்வைச் சிதைக்க முயலும் பெருமதவாதம் பிடித்து தொங்குவதற்கு தேடுகிற கொப்பை கீழே விடாதவாறு உயர்த்திப் பிடித்துக்கொண்டிருப்பதே இன்றைய எமது தேவையாகும். இதற்கான பலத்தை இரண்டு முஸ்லிம் தனித்துவக் கட்சிகளும் தமது இரு கரங்களையும் இறுக்கமாகக் கோர்த்தால் மட்டுமே பெற முடியும். பதவிகளாலல்ல உத்திகளால் பலமடைய வேண்டும்.

இவ்விரு கட்சிகளும் தமது ஆதரவாளர்களிடையே உள்ள வாய்ச்சொல் வீர்ர்கள் சண்டித்தனம் பேசுவதால் விளையவுள்ள சமூகம் சரணடையும் நிலையை தவிர்க்கவேண்டும்.

இன்று ஏற்பட்டுள்ள ஆபத்துக்களால் முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாமலும் இம்மக்களின் அரசியலுறுதி குலையாமலும் பார்த்துக்கொள்வதற்கு முஸ்லிம் தலைமகள் ஒன்றித்து வேலை செய்யவேண்டும்.

ஆகவே, இரண்டு முஸ்லிம் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும் ஆளுநர்கள் ஹிஸ்புல்லாஹ்வும் ஆசாத் சாலியும் உடனிடியாக ஒன்றாகக் கூடிப் பேசி அவசரமாக இணக்க முடிவுக்கு வரவேண்டும்.இனியும் ஏற்படும் தாமதம் மீளமுடியாத சிக்கலுக்குள் சமூகத்தை தள்ளவும்கூடும்.

நமது மக்கள் தந்த அவர்களது பேச்சாளர்கள் என்ற பிரதிநிதித்துவ பதவி தவிர நீங்கள் உருவாக்கிய ஜனாதிபதியும் அரசாங்கமும் தந்த பதவிகளை ஒன்றாகத் தூக்கி வீசிவிட்டு ஆளும் தரப்பு பின்வரிசை ஆசனங்களில் இருகட்சி உறுப்பினர்களும் அமரலாம். ஆளுநர்கள் ஹிஸ்புல்லாஹ் தனது முன்னைய தேசியப்பட்டியல் ஆசனத்தையும் ஆசாத் சாலி உயர் தானிகர் பதவியையும் ஜனாதிபதியிடம் கேட்டுப் பெறலாம்.

இச்சந்தர்ப்பத்தில் அரசு கவிழ்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படக்கூடாது. இன்னொரு பழியைப் பழுவாகச் சுமக்க நமது சமூகத்தால் இயலாது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எக்கட்சி வேட்பாளரை ஆதரிப்போம் என்ற முடிவை தேர்தல் அண்மிக்கும் வேளையே எடுப்போம் என்று இரு கட்சிகளும் இப்போதே பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்.முஸ்லிம் சமூகம் தவித்தாலும் தவிடுபொடியானாலும் தவிர்க்க முடியாமல் தங்களுக்கே வாக்களிப்பார்கள் என்று ஒரு கட்சி வைத்திருக்கும் நம்பிக்கையை தகர்க்கவும் வேண்டும் மறு கட்சி இவர்கள் அவர்களோடுதான் என்று வைத்திருக்கும் நம்பிக்கையை தளர்த்திவிடவும் வேண்டும்.பெருமதவாத சக்திகளின் எதிர்ப்பிரச்சாரம் சாதாரண சிங்கள பௌத்த மக்களைச் சென்றடைந்துவிடுமாயின், பெரிய கட்சிகள் தமக்கு கிடைக்கும் சிறு கட்சிகளின் முஸ்லிம் வாக்குகளை விடவும் தமது சிங்கள வாக்குகள் அதிகமாக குறைவடையும் என்று நம்பினால் அக்கட்சிகள் சிறு முஸ்லிம் கட்சிகளோடு கூட்டமைக்க அஞ்சவும்கூடும்.

நெருக்கடியான இக்காலத்தில் இணைந்து முடிவுகளை எடுப்பதில் பாதுகாப்பு கிடைக்கலாம்.அல்லது இழப்புகளைக் குறைக்கலாம்.

 

Share:

Author: theneeweb