வரலாற்றுத் தவறுகளே. மாபெரும் அரசியல் வீழ்ச்சியின் அஸ்திவாரம் – கருணாகரன்

 

ஏப்ரல் 21 – ஈஸ்டர் படுகொலைகள் தொடர்பாக   இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது இதுவரைஇரண்டாயிரத்து 289 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஆயிரத்து 1655 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 423 பேர்  விளக்கமறியலிலும் 211பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை விட அரசியல் உயர் மட்டத்தைச் சேர்ந்தவர்களிற் சிலரும் அடுத்த கட்டங்களில் விசாரணைகளுக்குட்படுத்தப்படலாம். சிலவேளை இவர்களிற் சிலர் கைதாகுவதற்கும் இடமுண்டு. நிலைமைகளும் இதைக் கோடிடுகின்றன. இதற்கமைவாகவே முஸ்லிம் அமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்கள் மீதான நெருக்கடிகளும் அழுத்தங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே பொலிஸ் மா அதிபர் பதவி விலகியிருக்கிறார். இப்போது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஆளுநர்கள், அமைச்சர்கள் எல்லோரும் தங்களுடைய பதவிகளை இராஜினாமாச் செய்திருக்கிறார்கள்.

இதற்கான பின்னணியை உருவாக்கும் நோக்கில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்குமாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதிவியிலிருந்து ஜனாதிபதி விலக்க வேண்டும் அல்லது அவர்கள் பதவிகளில்இருந்து விலக வேண்டும். அவர்களை குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரணைக்குட்படுத்த வேண்டும் எனக் கோரி கண்டியில்பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்திலீடுபட்டு வந்தார்.

தேரரின் போராட்டத்துக்கு ஹற்றன், பதுளை, கண்டி, மொரட்டுவ, வவுனியா, குருநாகல் என நாட்டின் பல பகுதிகளிலும் சிங்களத் தரப்பின் ஆதரவுப்போராட்டங்கள் நடந்தன. கண்டியில் மட்டும் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் தேரருக்கு ஆதரவாகத் திரண்டிருக்கிறார்கள். அடுத்த நாட்களில் நாடு முழுவதிலும் மக்கள் இந்த விவகாரத்தின்பால் ஈர்க்கப்படும் நிலை உருவாகியது.

இதற்கான சூழலை பௌத்த பீடங்கள் மிகச் செம்மையாக உருவாக்கியிருந்தன. முக்கியமாக  உண்ணாவிரத போராட்டத்தில்ஈடுபட்டிருக்கும் அதுரலிய ரத்ன தேரரின் கோரிக்கைக்கு குறித்த தீர்வினை வழங்குமாறு கோரி அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீடங்களின் மகாநாயக்கர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அவசரகடிதங்களை எழுதினர்.

இது தேரரின் கோரிக்கை நியாயமானது என்ற தோற்றப்பாட்டினை சிங்கள மக்களிடம் உருவாக்கியது. சிங்கள மக்கள் அடுத்த கட்டமாக நாடு தழுவிய ரீதியில் தேரருக்கு ஆதரவாகவும் முஸ்லிம் பிரமுகர்களுக்கு எதிராகவும் திரளக்கூடிய நிலை இதனால் ஏற்பட்டது. ஆகவே உடனடியாகத் தேரரின் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவருடைய போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் என்ற நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. நிலைமை மேலும் நெருக்கடியை நோக்கிச் செல்ல முன்பு எப்படியாவது சம்மந்தப்பட்டவர்களைப் பதவி விலக்க வேண்டும். அல்லது அவர்களாகவே பதவி துறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. இதில் முந்திக்கொண்டு தனது அதிகாரத்துக்குட்பட்ட ஆளுநர்களைப் பதவி விலகும் நிலைக்குக் கொண்டு வந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

இது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கடியை உண்டாக்கியது. அப்படியென்றால் தன்னுடைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் முஸ்லிம்களை என்ன செய்வது? குறிப்பாக றிஸாத் பதியுதீன் தொடர்பாக என்ன முடிவுக்கு வருவது என்று தெரியாத நிலை ஏற்பட்டது ரணிலுக்கு.

இதேவேளை ரத்னதேரருக்கு ஆதரவான சிங்கள மக்களின் நிலை மேலும் கொதிப்படைந்து சமூக நெருக்கடிகளை ஏற்படுத்த முன்பு தாமனைவரும் ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்று முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி ஆராய்ந்தனர். இதன்போது அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் கூட்டாகத் தமது பதவியைத் துறப்பது என்று முடிவெடுத்தனர். இந்த முடிவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சொன்னார் அமைச்சர் ஹக்கீம்.

இதைக் கேட்ட பிரதமர் தட்டாமல் முட்டாமல் “நாட்டின் நிலைமையைக் கருத்திற் கொண்டு பொருத்தமான முடிவை எடுங்கள்” என்றிருக்கிறார். இது ஒரு தந்திரமான பதிலே. போதாக்குறைக்கு “வேண்டுமானால் அரசாங்கத்தின் பின்வரிசையில் அமருங்கள்” என்றிருக்கிறார் பிரதமர்.

பதவி விலகுதாக முஸ்லிம் அமைச்சர்கள் எடுத்த முடிவைக் கைவிடுமாறு பிரதமர் தடுக்கவில்லை. குறைந்தது இந்த முடிவை மீள்பரிசீலனை செய்யுங்கள் என்றுகூடக் கூறவில்லை. இவ்வளவுக்கும் தற்போதைய அரசாங்கமானது இந்த முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் – தயவுடன்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கம் அதிகாரத்துக்கு வருவதற்கான பெரும் பங்களிப்பைச் செய்திருந்ததில் முக்கியமானது முஸ்லிம் தரப்பாகும்.

கடந்த ஒக்டோபரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ஸ இருவரும் கூட்டாக முன்னெடுத்த ஆட்சிக்கவிழ்ப்பைத் தடுத்து நிறுத்தியதில் பெரும் பங்கு இந்த முஸ்லிம்களுக்குண்டு.

இப்படியெல்லாமிருந்தும் இவை எதையும் பொருட்படுத்தாமல் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின், ஒரு தேரரின் கோரிக்கைக்கு, அவர் உருவாக்கிய நெருக்கடிக்கு, அவரை முன்னிறுத்தி சிங்கள பௌத்தவாதிகள் உண்டாக்கிய அழுத்தத்துக்குப் பணிந்திருக்கிறது அரசு. அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள் பிரதமரும் ஜனாதிபதியும்.

இதன் மூலம் இது யாருக்கான அரசு, இந்த அரசு யாருக்கு சேவகம் செய்கிறது? பிற சமூகங்களுக்கான இடமென்ன? பெறுமதியென்ன? என்பதெல்லாம் கேள்விக்குள்ளாகியிருக்கின்றன. உண்மையான நிலை என்ன என்பது மிகத் தெளிவாகி விட்டது.

ரத்தனதேரரின் கோரிக்கையைக்குறித்து, அது இந்த நாட்டிலே உண்டாக்கவுள்ள அரசியல், சமூக, வரலாற்று நெருக்கடிகளைக் குறித்து அரசாங்கம் மக்களுக்குத் தெளிவுபடுத்த முயற்சிக்கவில்லை. அரசாங்கம் மட்டுமல்ல, சிங்களச் சமூகத்தைச் சேர்ந்த சிந்திக்கக் கூடிய, பொறுப்புணர்வுள்ள எவரும் இதையிட்டு வாயே திறக்கவில்லை. பதிலாக இதற்கு வலுவூட்டும் விதமாகப் பௌத்த பீடங்களும் அரசியல் பிரமுகர்களில் சிலரும் நடந்து கொண்டதையே நாம் காணமுடிந்தது.

இது அரசியலமைப்பில் மட்டுமல்ல, ஆட்சியில், நடைமுறையில், உளப்பாங்கில் எல்லாவற்றிலும் சிங்கள பௌத்த முதன்மைக்கே இடம். அதில் நீதி உண்டா இல்லையா என்பதெல்லாம் ஒரு விசயமே இல்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. சிங்கள பௌத்தத்துக்காக எதையும், எத்தகைய நீதி மறுப்பையும் ஜனநாயக மீறலையும் செய்யலாம் என்பதே நடைமுறை என்பது இந்த நவீன யுகத்திலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதுவும் யுத்தம் முடிந்து பத்தாண்டுகளாகிய பிறகு. நிலைமாறு காலகட்டச் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில். யுத்தத்திற்குப் பிறகான பொறுப்புக்கூறல், பகை மறப்பு, நல்லிணக்கம், இன ஐக்கியம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டிய வேளையில்.

இவை எல்லாவற்றுக்கும் எதிர்நிலையிலேயே நாட்டின் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. யுத்தத்திற்குப் பிறகு செய்யப்பட்டிருக்க வேண்டிய நிலைமாறுகாலகட்ட நீதிச் செயற்பாடுகளையும் அரசியலையும் செய்யத் தவறியதன் விளைவுகளே இந்த நெருக்கடிகளும் இன்றைய அறுவடைகளும். இந்தத் தவறுகளால்தான் நாட்டிலே தொடர்ச்சியாக நெருக்கடிகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஈஸ்டர் குண்டுவெடிப்புகளுக்கு முன் 2018 ஒக்டோபரில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகளும் அதனால் உண்டான அரசியல் நெருக்கடிகளும் நிகழ்ந்ததும் இதில் ஒன்றே. தற்போது முஸ்லிம் சமூகத்தின் மீதான நெருக்கடி. அமைச்சர்களும் ஆளுநர்களும் பதவி துறந்துள்ளமை எல்லாம் இவற்றின் விளைவுகளே. பொருளாதார வீழ்ச்சியும் சமூக ஒருமைப்பாட்டில் சீர்குலைவும் கூட இவற்றின் விளைச்சலே. நாளை இதையும் விடப் பாராதூரமான பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகளே உண்டு.

எந்த வேலை நடக்க வேண்டுமோ அது நடக்காமல் விடப்படும்போது அதற்குப் பதிலாக பாதகமான வேலைகளே நடந்து விடுகின்றன. இலங்கை ஏற்கனவே இனவாதத்தினால் கட்டமைக்கப்பட்ட சமூகங்களையும் அரசியலையும் கொண்டது. இவ்வாறிருக்கும் நாட்டை மிகக் கவனமாகக் கையாள்வதே ஆட்சியாளர்களுக்குரியது. அரசியலாளர்களுக்கும் மக்களுக்கும் சிந்திக்கக்கூடியவர்களுக்குமான பொறுப்பாகும்.

ஆனால் அப்படியெல்லாம் நடக்கவேயில்லை.

குறிப்பாக நிலைமாறுகாலகட்ட நீதிச் செயற்பாடுகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை. அது ஒரு ஏமாற்று முயற்சியாகவே மேற்கொள்ளப்படுகிறது என்பதை இந்தப் பத்தியாளர் உள்பட மிகச் சிலர் ஆழமாகச் சுட்டிக்காட்டியிருந்தனர். தங்களுடைய கவலைகளை வெளிப்படுத்தி வந்தனர். அபாயச் சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால், அதெல்லாம் அனைத்துத் தரப்பினராலும் புறக்கணிக்கப்பட்டன. கண்டுகொள்ளாமல் விடப்பட்டன.

போதாதற்கு முற்றிலும் எதிரான முறையில் பன்மைத்துவத்துக்கும் சமூக சமத்துவத்துக்கும் எதிராக பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்கும் அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எந்த முட்டாளுமே செய்யத் துணியாத காரியம் இது. ஆனால், இதற்கே பலரும் துணிந்தனர். இதையே தற்போது பதவி துறந்த, துறக்கும் நிலையிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்தனர்.

இதெல்லாம் வரலாற்றுத்  தவறுகளே. மாபெரும் அரசியல் வீழ்ச்சியே. இதுவே இன்று தொடர் நெருக்கடிகளாக விளைந்து கொண்டிருக்கின்றன.

இப்படியொரு நிலை முன்னர் ஒருபோதுமே நிகழ்ந்ததில்லை.

சிங்களத் தரப்பிற்கும் முஸ்லிம்களுக்குமான முரண்கள் நூறாண்டு கடந்தது என்றாலும் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து அரசாங்கத்தைப் பலப்படுத்துவதில் முஸ்லிம் தரப்புப் பெரும் பங்காற்றி வந்திருக்கிறது. தற்போது கூட அதனுடைய பங்களிப்பு உச்சமானதே. இவ்வளவு நெருக்கடிகள் ஏற்பட்டுப் பதவிகளைத் துறந்தபோதும் அரசாங்கத்துடன் எந்த முஸ்லிம் கட்சியும் கோபித்துக்கொள்ளவில்லை. ஒரேயடியாக அரசாங்கத்தை விட்டு விலகவுமில்லை. தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இவர்களில் யாருமே துறக்கவுமில்லை. சரி தவறுகளுக்கு அப்பால், மிக உச்சமான நெருக்கடிகளை இன்று முஸ்லிம் சமூகமும் அதனுடைய அரசியலாளர்களும் எதிர்கொண்டிருக்கிறர்கள். இதை அவர்கள் கட்சி பேதமின்றி ஒருமுகங்கொண்டு எதிர்கொள்ள முற்பட்டிருப்பது முக்கியமானது. இது அவசியமான – சரியானதொரு நிலைப்பாடாகும். ஆனால், இதோடு எல்லாமே முடிந்து விடமாட்டாது. இன்னும் பல எதிர்பாராத நெருக்கடிகள் ஏற்படுவதற்கான சாத்தியங்களே காணப்படுகின்றன. அது தனியே முஸ்லிம்களை மட்டும் இலக்காகக் கொண்டதாக அமையாது. தமிழர்களின் மீதும் மலையக மக்களின் மீதும் கூட நிகழலாம். இதை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு நாட்டிலுள்ள அனைத்துச் சமூகத்தினருக்கும் உண்டு.

முக்கியமாக இந்தச் சூழலில் உணர்ச்சிகரமாக எந்த விடயத்தையும் அணுகுவதை விட அறிவுபூர்வமாக – நிதானமாக அணுகுவதே சரியானது.

ஏனெனில் “ஏற்பட்டுத்தப்பட்டுள்ள புதிய சூழலினால் 1980 களில் தமிழ் சிறுபான்மைக்கு நேர்ந்த கதியைப் போல ஒரு கதிமுஸ்லிம் சிறுபான்மைக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.இதனால் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு எவ்வித உத்தரவாதமும்இல்லாமலாகியுள்ளது.மாத்திரமல்ல இப்பதட்டமும் நெருக்கடியும் அழிவுகளும் மேலும் பல வருடங்கள் நீடிக்கும்வாய்ப்புமுள்ளது. ஆனால் தமிழர்கள் எதிர்கொண்டது- எதிர்கொள்வது இனப்பிரச்சினை இப்போது முஸ்லிம்கள் எதிர்கொள்வதுமதப்பிரச்சினையாகும் என்கின்ற தெளிவைப் பெறுதல் இங்கு முக்கியமாகிறது. அன்று தமிழர்களை உலுக்கியவர்கள்பேரினவாதிகள் இன்று முஸ்லிம்களை உலுக்குபவர்கள் பெருமதவாதிகள் ஆகும்” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம்களின் அரசியலில் நீண்டகால அனுபவத்தைக் கொண்டவருமான பஸீர் சேகுதாவூத் தெரிவித்திருப்பது கவனத்திற்குரியது.

ஆகவே எல்லாவற்றையும் மிக அவதானமாகக் கவனித்துச் செயற்பட வேண்டியதே இன்றைய – நாளைய இலங்கைக்குரியதாகும்.

Share:

Author: theneeweb