கறுப்புத் தோலின் மீது அசூசையையான தாக்கத்தை திணித்த காலனி ஆதிக்கநாடுகள்! – தேவா – ஜேர்மனி

ஆபிரிக்காவின் நுழைவாயில்

 ( அங்கம் – 01)

கறுப்புத் தோலின் மீது அசூசையையான  தாக்கத்தை  திணித்த  காலனி ஆதிக்கநாடுகள்!  

                                                              தேவா – ஜேர்மனி

 

 

எனக்கு வெகுகாலமாக ஆபிரிக்கா கண்டத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருந்து வந்தது.  ஐரோப்பாவில் வாழமுடிந்ததால், நம் நோக்கங்களை நிறைவேற்றக் கூடிய வாய்ப்பும் அமைந்துவிடுகிறது இல்லையா?

கடமைகள், பொறுப்புக்கள், சுமைகள் என் தோள்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நழுவியதன் காரணமாக எனக்கு மாதக்கணக்கில் பயணம் செய்ய காலமும் வழி கொடுத்தது. மேலும் கரவன்    ;(Mobile home)  மூலமாய் இதுவிடயம் சாத்தியமானதால் ஆபிரிக்காவையும்  ஐரோப்பாவையும் பிரிக்கும் மத்தியதரைக்கடல் அத்திலாந்து சமுத்திரம் மூலமாய் மொரோக்கோ;  தேசத்தை  இரண்டு நாட்களில் சென்று அடையக்கூடியதாகவும், பின் அங்கிருந்து பல பாகங்களுக்கும் சென்று பார்க்கும் வசதியும் எனக்கு கிடைத்தது.

விமானத்திலே போய் இறங்கி, விடுதியிலே தங்கி, ஒரு பயண வழிகாட்டியின் வழிநடத்தலோடு சுற்றுலாபயணிபோல அல்லாமல்,  சொந்தநாட்டுமக்களை சந்திக்கும், அவர்களுடைய நாளாந்த வாழ்வை, சிறிய அளவிலாவது நாட்டுஅரசியல் நிலைமையை புரிந்துகொள்ள முடிந்தது.

ஊருக்கு ஊர் நகர்ந்தோம். நெய்தல் நிலத்தில் தொடங்கி,  மருதம், குன்றம், பாலை என விரிந்தது எம் மொரோக்கோ பயணம். மொரோக்கோ தேசம் ஐரோப்பாவோடு அரசியல் ரீதியாகவும், வியாபார ரீதியாயும் பலநூற்றாண்டுகாலமாய் தொடர்பு கொண்டிருந்தது.  இன்னும் தொடர்பு கொண்டிருக்கின்றது. இந்தப்பெரியநாட்டின் வழியாக பலஅந்நிய நாடுகள் மதங்கள் , கலாச்சாரங்கள் ஆபிரிக்காவுக்குள் உள்புகுந்தன.  அதனாலேயே மொரோக்கோ ஆபிரிக்காவின் நுழைவாயில் எனப்படுகிறது.

ஆபிரிக்காவை இருண்ட கண்டம் என நம் பாடசாலை புத்தகங்களில் கற்ற ஞாபகம் உண்டு. ஏன் இருண்ட கண்டம்? இங்கு வெய்யில் எல்லாத் திசையிலும் கொளுத்துகிறது. பூமியின் மத்தியதரைக்கோடு ஆபிரிக்காவை ஊடறுத்துபோகிறது.  ஆதவனின் நேரடிப் பார்வையில் ஆபிரிக்ககண்டம் இருக்கிறது.

ஐரோப்பாவில்தான் சூரிய ஒளியே புகமுடியாத இருண்ட  ஊசியிலைக்காடுகள் உண்டு.  ஐரோப்பாவை ஏன் இருண்ட கண்டம் எனச்சொல்லக்கூடாது.  குளிர்காலங்களில்  இருளிலே  மூழ்கிவிடுவது ஐரோப்பா.   கறுப்புநிற இனத்தவர் வாழும்நாடு ஆபிரிக்கா என தனியாய் பிரித்து கறுப்புத் தோலின் மீது ஒரு அசூசையையான  தாக்கத்தை  திணித்தது காலனி ஆதிக்கநாடுகள்.

இவைகள் உருவாக்கிய கறுப்புத்தோல் கொள்கையின்மீது (அசுத்தம், வறுமை, இழிவானது, வெறுக்கப்பட வேண்டியது, மனிதவிலங்குகள்) இன்னும் பிடிவாதமாக  ஆசியர்களும் பற்றுக் கொண்டிருப்பதுதான் முரண்நகை. சாதிப்பற்றும், கறுப்புத்தோல்நிறத்தில்  இழிவுமனப்பான்மையும்  இந்திய-இலங்கையரில்  பலரிடத்திலும்  அப்பிக்கொண்டிருக்கிறது

ஆதிகால மனிதனின் பிறப்பிடம் ஆபிரிக்கா. இங்கிருந்துதான் மனிதர்கள் கண்டங்கள் பிளவாதிருந்த ஆதிகாலத்தில், மேற்கு,  வடக்கு, தெற்கு என நகர்ந்ததும். குளிர்  மற்றும்   பிரதேச  நிலைமைக்கு ஏற்றவாறு பிற்பட்டகாலங்களில்  இவர்களின் தோல்,  தலைமயிர் , கண்கள்  நிறங்கள் மாற்றமடைந்ததை  வரலாற்றாசிரியர்கள்   ஆதாரங்களோடு முன்மொழிந்திருப்பது  அறிந்ததே.

அய்யோ, மொரோக்கோ போகிறீர்களா? பயங்கரமான நாடாயிற்றே.  முஸ்லிம்  மக்கள்  பொல்லாதவர்களே,  களவு, கொள்ளை அடிப்பார்களே!

இப்படி பல பயமுறுத்தும் வார்த்தைகள், எங்கள் பயணத்துக்குமுன் பல கோணங்களிலிருந்தும் வெளிப்பட்டன. ஆனால்,  அங்கு ஏற்கனவே போய்வந்தவர்களின்  அனுபவங்களைக் கேட்டபோது, மேற்கூறப்பட்டவைகளுக்கு எதிர்மாறான பதில் கிடைத்தது.

நம்வழிப்பயணத்திலும்  நாம் சந்தித்த யாருமே இந்தநாட்டுமக்கள் மோசமானவர்கள் ஏமாற்றுபவர்கள், களவெடுப்பவர்கள் என்று சொல்லவில்லை.  மாறாக நற்சான்றிதழ்களே வழங்கினார்கள்.  எமது முழுப்பயணத்திலும்  மொரோக்கோ மக்களின் நேர்மையை புரிந்துகொள்ளமுடிந்தது.  வறுமை இவர்களை வருத்தினாலும்,  செம்மையாக வாழும் மக்களாகவும் எங்களுக்கும் தெரிந்தார்கள்.  ஒரு வேலையை செய்து தந்தபின், அதற்கான ஊதியத்தை கேட்டு பெறுகிறவர்களாக  இயல்பு கொண்டவர்களாகவும்   இருக்கிறார்கள்.

ஐரோப்பாவிலே ஒரு பொதுப்புத்தி இருக்கிறது.  அது பிரபல வலதுசார்பு  மீடியாக்களின் பிரசாரத்தால் உருவாக்கப்பட்டது. வெளிநாட்டவர், அதிலும் ஆபிரிக்கர்   வெறுக்கவேண்டியவர்களாய்,  ஐரோப்பாவுக்கு மட்டுமல்ல முழுஉலகத்துக்கும் வேண்டாதவர்களாய்  ஆக்கப்பட்டுள்ளார்கள். போதாததற்கு  முஸ்லிம்களுமாய்  இவர்கள்  இருந்துவிட்டால்,  கேட்கவே வேண்டாம்.   இன்று உலகை உலுக்கும் ஆயுதமாக பொதுநோக்கில் அவர்கள் உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள்.

 

காலனியாதிக்க நாடுகள் ஆபிரிக்கர் பற்றி கொடுத்த கேவலமான புனைவுகளுக்கு காரணம்:  தம் ஆதிக்க  அரசியலையும், ஆபிரிக்காவின் வளங்களை  சுரண்டியதையும், மனிதரை அடிமைகளாக ஏற்றுமதி செய்து தம்பொருளாதார  நலன்களை மேம்படுத்தியதையும் மறைப்பதற்காகவே. மேலும் வெள்ளை  நவீனகாலனியாதிக்க அரசியல்  ஆபிரிக்க இனத்தவரை கிரிமினல்களாய் , பாலியல்   வன்முறையாளர்களாய் அடையாளப்படுத்தியுள்ளது.

காலனியாதிக்க  நாடுகள் தமக்குள் நீள – அகலமாக அளந்து ஆபிரிக்காவை கூறுபடுத்தி பங்குபோட்டுக் கொண்டவர்கள்.  ஆபிரிக்கரை அடிமைகளாய் வேலைசெய்யும் விலங்குகளாய் நடத்தியவர்கள்.  ஆபிரிக்கரின் வளங்களை அவர்களைக்கொண்டே   சுரண்டியவர்கள்.  ஆபிரிக்க   பெண்களை மிக மோசமான பாலியல்  வன்முறை செய்தவர்கள்.   கிறித்துவத்தை ஆபிரிக்காவில் பலவந்தமாக திணித்தவர்கள்.  ஆக,  காலனியாதிக்க நாடுகளின் சொந்த  தீவிர இனப்பற்றுவாதம்  இப்போ ஆபிரிக்கரை இன்னும் கேவலப்படுத்துவதில்  மும்மரமாயிருக்கின்றன.

மீண்டும் நம் பயணத்துக்கு—

பிரான்சின்  தென்மூலையிலிருந்து, டங்சர்,   (Tanger) கரையோர குட்டிநகரத்திலிருந்து ஆபிரிக்காவின் மேற்கு கரையோரத்தை கப்பல்மூலம் அடைய 48 மணித்தியாலங்களுக்கு மேல் தேவைப்படுகின்றன. ஸ்பெயினின் அல்சீராவிலிருந்து  அல்லது  இங்கிலாந்துக்கு சொந்தமான குட்டிநாடான ஐிப்ரால்டரில் இருந்து கப்பல்வழிப்பயணம் 1-2 மணிநேரம்.

நம் பயணம் மத்தியகடல்தாண்டி,  அத்திலாந்திக் சமுத்திரத்தில்  புகும்போது, சமுத்திரத்தின் சீற்றம் பயப்படுத்துகிறது. அலைகளின் கொந்தளிப்புக்களுக்கு ஈடுகொடுத்தவாறு 300 க்கும் மேற்பட்ட வாகனங்களையும், 500-600 பேர்களையும், 8 மாடிகள் கொண்ட கப்பல் மொரோக்கோ நாட்டின் ,டாஞ்சர்மெட்  எனப்படும்  எல்லைக்கரையை அடைந்தபோது, மீண்டும் 3 ஆவது இரவு ஆரம்பித்துவிட்டது.

பிரான்சின் காலனியாய் இருந்ததின் அடையாளங்கள் மொரோக்கோவிற்குள் உள்ளிடும்போது நம் மூளைக்குள் உறைக்கின்றன. பிரான்சு மொழி அல்லது அரேபிய மொழி தெரியாவிட்டால் பெரிய குழப்பம். விசா படிவம் நிரப்பி, அதிலே தலைமை அதிகாரி முத்திரைகுத்தி, உள்நுழைய அனுமதி கிடைக்க கடைசி இரண்டு மணிநேரங்களாவது வேண்டும்.

எல்லைக் காவல்நிலையத்தில் அலுவல்கள் ஒருபக்கம் அமைதியாகவும், இன்னொருபக்கம்  அவசரமாகவும்  ஆகின்றன. இரகசியமான கையூட்டல்கள் இருட்டிலே நிறைவேறுகின்றன.  ஐரோப்பா முதலில் சந்திக்கிற ஆபிரிக்காவின் வாயில் கெடுபிடிகள்  உள்ளமாதிரி  தெரிகிறது! ஆனால் அது நிசமற்ற கண்ணுக்கு புலப்படாத தோற்றம்.

இந்தக் கெடுபிடிகளை வென்று வாகனத்தை செலுத்துகையில் முதலில் தெரிவது 6 மீட்டர் உயர் முள்வேலிகள்.  அதுவும் 2 வரிசைகளில்.  பிரமாண்ட  மின்விளக்குகள்   முள்வேலிகளுக்கு மேலால் பிரகாசிக்கின்றன.  தென்மேற்கு கிழக்கு ஆபிரிக்க மக்களை அகதிகளாக மொரோக்கோவுக்குள் வரவிடாமல் தடுக்கும் பெரும் கம்பிவேலிச்சுவர் அது.

ஐரோப்பிய மையத்தால் பெரும் செலவு செய்யப்பட்டு எழுப்பப்பட்டிருக்கிறது.  சேயுட்டா   என்னும் வட ஆபிரிக்காவின் மேல்மூலையொன்றில்   ஸ்பெயினுக்கு சொந்தமான குட்டிநாடொன்று இருக்கிறது.  மொரோக்காவுக்குள்   நுழைந்துவிட்டால் சேயுட்டாவுக்குள் புகுந்துவிடுவது  அவ்வளவு  கடினமானது  அல்ல.  அகதிகள் அங்கு நுழைந்துவிட்டால்   ஐரோப்பா  ஒன்றியத்துள் புகுந்தமாதிரித்தான்.

ஆகவே ஐரோப்பா ஆபிரிக்காவுக்குள்ளே கம்பிவேலி கட்டி ஆபிரிக்கரை அகதிகளாக்கி வைத்துள்ளது. வரண்டபூமியில் ஒன்றுமே விளைய முடியாததால் வாழ்ந்த நிலத்தை விட்டு கட்டாயம் வேறிடம் போகவேண்டிய நிர்ப்பந்தமும், வறுமையும், உள்நாட்டுப்போரின் துன்பங்களும் இவர்களை தம் சொந்த மண்ணுக்குள்ளே அகதிகளாக உழலவைத்திருக்கிறது.

ஐரோப்பாவிலிருந்து மோட்டார்உதிரிப்பாகங்கள் தொடங்கி, பாவனைக்குரிய சகலவிதமான மூட்டைகளோடும் வாகனங்கள் நகரும் எல்லையை கடக்கின்றன. நாமும் ஆபிரிக்காவிற்குள் நுழைந்தபோது, நீண்ட அந்த இரவைக்கழிக்க  வாகனதரிப்பிடம் எல்லையின் அருகிலேயே இருந்தது.

தரிப்பிடத்தோடு ஒட்டியிருந்த வேலிக்கம்பிக்கு மறுபக்கத்தில், சிலமீட்டர்களுக்குள் பல தலைகள் தெரிகின்றன. இவர்கள் தம் உயிரைக்கொடுத்தும் ஐரோப்பாவை அடைய முயல்வோர்கள். அந்த நடுநிசியிலும் வேலிக்கம்பிக்குள்ளால் நீண்டிருந்த கரங்களுக்குள் டெலிபோன் விற்பனைஅட்டைகள் முளைத்திருக்கின்றன.

பியர்  தாகம் கொண்டவர்களின் குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன! எல்லைக்காவலர்கள் இவர்களை துரத்தினாலும், ஓரிருநிமிடங்களில் மீண்டும் இவர்களின் தலைகள்,கைகள் கம்பிவேலிக்கிடையால் நுழைந்து வெளிவரம் துடிக்கின்றன. வாழ்தலுக்கான போராட்டத்தின் வலியை நேரடியாக பார்க்கும்போது மனதை பிசைகிறது.

சில வருடங்களுக்கு முன்னர்,  முட்கம்பிவேலியில் ஏறி மொரோக்கோவுக்குள் நுழையமுயன்று, தோல்வியடைந்து மோசமாக காயமடைந்தவர்கள் பற்றி சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டிருந்தன.  அண்ணாந்து  அந்த  பிரமாண்டமான  நீண்ட முள்வேலியை கவனிக்கும்போது,  அதிலே ஏறத் துணிந்தவரின் போராட்டமுயற்சியை நினைக்கும்போது முதுகுதண்டு சில்லிட்டது.

முள்வேலி போடப்படுமுன்னமேயே மொரோக்கோவுக்குள் வந்துவிட்டவர்கள் திரும்பிச்  சொந்த  இடங்களுக்குப் போகமுடியாத நிலைமையிலும்-ஐரோப்பாவை அடைய முயலும் கனவிலும், நெடுஞ்சாலை வீதிகளில் பிச்சைகேட்டும், வீதியோரங்களிலே சமைத்துச் சாப்பிட்டு, பிள்ளைகுட்டிகளோடும் வாழ்கிறார்கள்!

குளிர்காலத்துக்கு பயந்து வெப்பத்துக்கு ஏங்கி ஆபிரிக்காவை ஈர்க்கும் ஐரோப்பியர்களின் தேர்வில் மொரோக்கோ முதலிடம் பிடித்திருக்கிறது. பிரஞ்சுக்காரர்கள் மிகுதியாயும்,  மற்ற ஐரோப்பிய மக்கள் சிறிய அளவிலும். இங்கு தம் பனிக்காலத்தை ஓட்ட வசதியாய்,  மத்தியதரவர்க்கம்,  பல்கலைக்கழகமாணவர்கள் என வித்தியாசமான வாழ்வை தேடுவோர், ஓய்வுதியக்காரர், சாகசஅனுபவம் தேடுவோர் என்று கரவன்களிலும் (Mobilehome) கூடாரங்களிலுமாக   (Tent)   திறந்தவெளி விடுமுறைவசிப்புக்களில்   (Camping)  வாழ்கின்றனர்.  ஓரு சிறுவீதம் தம் பிறப்பிடங்களை துறந்து, இங்கேயே நிரந்தரமாக குடியேறியுள்ளனர். வெப்பத்தின் ஆவலும்,  சிக்கனமாய் வாழ முடியுமான வாய்ப்பு இருப்பதும் மொரோக்கோ மக்களின் இனிய சுபாவமும் சேர்ந்து மொரோக்கோவுக்கு பலரையும் மத்தியதரைக்கடலை,  அத்திலாந்திக் சமுத்திரத்தை தாண்டவைக்கிறது.

( தொடரும்)

Share:

Author: theneeweb