இலங்கையில் இன்னொரு பிரபாகரன் உருவாகலாம்: ஜனாதிபதி சிறீசேனா எச்சரிக்கை

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல் போக்கு தொடர்ந்து நீடித்தால், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போன்ற இன்னொரு தலைவர் உருவாகும் நிலை ஏற்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறீசேனா எச்சரித்தார்.

முல்லைத் தீவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்சியொன்றில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது: தற்போதைய சூழ்நிலையில் நாடு பிளவுபட்டிருப்பது என்பது உண்மைதான். அதனை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். மதத் தலைவர்களும் மற்றும் அரசியல்வாதிகளும் இன்று பிரிந்து நிற்கின்றனர். ஆனால், இதனை தொடர விடக்கூடாது. நாம் பிரிந்திருப்போமேயானால் அது நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும்.

எனவே, இலங்கையில் “முஸ்லிம் பிரபாகரன்’ உருவாவதற்கு நாமே வழி ஏற்படுத்திக் கொடுக்க கூடாது. அது, இன்னொரு உள்நாட்டுப் போரை உருவாக்கும். இந்த சூழலைக் கருத்தில் கொண்டு அனைத்து சமூக மக்களும் ஒன்றுபட்டு நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல சபதம் ஏற்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் பயங்கரவாதம் மீண்டும் தலையெடுப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தக் கூடாது என்றார் அவர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்றுவித்த வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கையில் தனி நாடு கேட்டு நீண்ட காலமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
ஆயிரக்கணக்கானோர் பலியாக காரணமாக இருந்த இந்த உள்நாட்டுப் போர் இலங்கை ராணுவம் கடந்த 2009-இல் பிரபாகரனை சுட்டுக் கொன்றதுடன் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்ததக்கது.

Share:

Author: theneeweb