பயங்கரவாதத் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம்தாக்கல்

இலங்கையில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல் குறித்த இறுதி விசாரணை அறிக்கையை ஜனாதிபதி சிறீசேனாவிடம் சிறப்பு விசாரணைக் குழு திங்கள்கிழமை சமர்ப்பித்தது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது, 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 11 இந்தியர்கள் உள்பட 258 பேர் உயிரிழந்தனர். சுமார் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பெண் உள்பட 9 பயங்கரவாதிகள், தங்களது உடலில் குண்டுகளை கட்டிக்கொண்டு இந்த தற்தொலைத் தாக்குதலை நிகழ்த்தினர்.
இந்த தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது. எனினும், உள்ளூர் பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மீது இலங்கை அரசு குற்றம்சாட்டியது. இந்த தாக்குதல் தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் வழி ஆசிரியர், பள்ளி முதல்வர் உள்பட 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து விசாரணை செய்வதற்கு, உச்சநீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கோடா தலைமையில் 3 பேர் அடங்கிய குழுவை கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி  ஜனாதிபதி சிறீசேனா நியமித்தார். இந்தக் குழுவில் முன்னாள் அமைச்சக செயலர் ஜெயமன்னே, காவல் துறை முன்னாள் தலைவர் என்.கே. இளங்ககூன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இதற்கு முன்னர், தாக்குதல் குறித்த இடைக்கால விசாரணை அறிக்கையை அதிபர் சிறீசேனாவிடம் இரண்டு முறை இந்த குழு சமர்ப்பித்திருந்தது. இந்நிலையில், தாக்குதல் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சிறீசேனாவிடம் திங்கள்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் குறித்து இதுவரை தகவல் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவிருப்பதாக உளவுத் தகவல்கள் கிடைத்தும், பாதுகாப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ள தவறியதற்காக, அந்நாட்டின் காவல் துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரவை பணியிடை நீக்கம் செய்தும், பாதுகாப்புத் துறை தலைவர் ஹேமசிறீ பெர்னாண்டோவை பணிநீக்கம் செய்தும் அதிபர் சிறீசேனா உத்தரவிட்டார். அதையடுத்து அவர்கள் இருவரும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 30 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டு போர் கடந்த 2009-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். அதன் பின்னர் நிகழ்த்தப்பட்ட கோரமான பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும்.

Share:

Author: theneeweb