நடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை- விமர்சன உரை: சாந்தி சிவக்குமார்

நடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை

பண்பாட்டையும், விழுமியங்களையும் நெகிழ்த்திக் கொள்ளவில்லை என்றால் அவை பெரும் சுமையாகி போகும் ” என்பதை உணர்த்தும் நாவல் : சாந்தி சிவக்குமார்

( மெல்பனில் கடந்த 08 ஆம் திகதி  நடைபெற்ற நடேசனின் நூல்கள் பற்றிய அறிமுக – விமர்சன அரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை)

 

         நடேசன் அவர்களுடைய “அசோகனின் வைத்தியசாலை நாவல்”, இரண்டு சிறப்புகளை உடையது. நான் முதன்மையாக கருதுவது புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து கடந்த கால வாழ்க்கையையும் ஏக்கங்களையும் மட்டுமே பிரதிபலிக்கிற கதைகளாக இல்லாமல் நிகழ்காலத்தில், அதுவும் புலம்பெயர்ந்த மண்ணை களமாக வைத்து அவர் எழுதியுள்ளது வரவேற்க வேண்டிய முக்கியமான நகர்வு. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டதுமாகும்.

சமீபத்தில் ஜே.கே. எழுதிய   “விளமீன்” சிறுகதையைப் படித்தேன். தன் மகனுடன் அவுஸ்திரேலியாவில் வாழும் ஒரு தாயின் கதை. அந்த கதையின் தாற்பரியம், அதோட தாக்கம் என்று பல புரிதல்களுக்கு முன் எனக்கு ஒரு குழந்தையை வாரி அணைத்துக் கொண்ட உணர்வு. ஏன் என்று யோசித்த பொழுது சமீபத்தில் பலவிதமான வாசிப்பனுபவங்கள், விளிம்பு நிலை மக்களின் பாடுகள், பெண்கள் முன்னேற்றம், கல்வி, கவிதைகள் இப்படி பல அனுபவங்கள், கண் திறப்புகள் இருந்தாலும்,  இந்தக் கதையில் நான் இப்பொழுது வாழும் வாழ்க்கையையும், சூழலையும் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்ததே அந்த உணர்விற்கான காரணம். இப்படிப்பட்ட கதைகள் வரத்  தொடங்கியுள்ளதை வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அதே தளத்தில் ஒரு பெரிய நாவலை நடேசன் கொடுத்திருப்பது நான் முன் சொன்ன படி ஒரு பெரும் நகர்வு. பாராட்டுக்குரியதுமாகும்.

நகரத்தில் அமைந்திருக்கும் ஒரு மிருக வைத்தியசாலையில், மருத்துவராக பணி புரிந்த ஐந்து ஆண்டுகால அனுபவத்தையும் தான் அவதானித்ததையும் கற்பனையையும்  சேர்த்து ஒரு சுவாரசியமான நாவலாக கொடுத்துள்ளார். சில இடங்களில் செய்திகளை வாசிப்பது போல் இருந்தாலும் Melbourne ground என்பதால்  நடேசன் அடித்து ஆடியுள்ளார். புதிதாக  மெல்பேர்ன் வந்திருக்கும் ஒருவர் இந்த நாவலைப் படித்தால் அவுஸ்திரேலியாவின் பல அடிப்படை நிகழ்வுகளை புரிந்து கொள்ளமுடியும்.

பல இன மக்கள் ஒன்று கூடி வாழ்வதும், அவர்களின் பண்பாடு, மெல்பேர்னின் வரலாறு, சீதோஷன நிலை என பல விடயங்களை புரிந்து கொள்ள முடியும்.

மெல்பேர்ன் நகரத்தின் வரலாற்றை ஒரு அத்தியாயத்தின் தொடக்கத்தில், கதாநாயகன் வீடு வாங்க முடிவு செய்யும் தருணத்தில், அழகாக விளக்குகிறார். பிரித்தானிய காலனியாக இருந்த காலத்தில் கானிக்கு சொந்தக்காரர்கள் மட்டுமே வாக்காளர்களாக இருக்கலாம் என்ற நியதி விக்டோரியாவில் இருந்த காரணத்தினால் பிற்காலத்தில் வந்த குடியேற்றவாசிகளுக்கும் அதே மனநிலை தொடர்கிறது.

சிட்னி பெருநகரம், குற்றவாளிகளின் குடியேற்றத்தால் உருவாக்கப்பட்டது. ஆனால்,  மெல்பேர்ன் அப்படியானவர்களின் குடியேற்றத்தால் உருவாகிய நகரமல்ல, மிகவும் வித்தியாசமான சரித்திரத்தை தன்னுள் கொண்டது. அவுஸ்திரேலியாவின் மற்ற இடங்களை ஆங்கிலேய காலனியர்கள்,  மனிதர்களாகவே கருதவில்லை எனவே எந்த மனிதர்களும் இல்லாத நிலப்பரப்பு என்ற கருத்தியலை தங்களது மன நிறைவு காணும் கொள்கைப் பிரகடனமாக வைத்து குடியேறியபோது, ஜான் பர்மன் எனும் ஆரம்ப குடியேற்றவாசி  ஆதிவாசிகளிடம் இருந்து பண்டமாற்றாக மெல்பேர்னை 1835 வாங்கியதாக ஒப்பந்த பத்திரம் உள்ளது.

து ஆங்கிலேய கவர்னரால் பின்னால் ரத்துச் செய்யப்பட்டாலும் ஆஸ்திரேலிய சரித்திரத்தில், முதலாவதாக இந்த நிலம் ஆதிவாசிகளுக்கு சொந்தம் என ஒரு ஆங்கிலேயரால் அங்கீகரிக்கப்பட்ட சரித்திரம் உண்டு. 1851 இல் Bendigo, Ballarat முதலான இடங்களில் தங்கம் கிடைத்ததால் தொழிலாள வர்க்கத்தை சேர்ந்த ஆங்கிலேயர்கள் கப்பலில் வந்து குடியேறியதால் உருவான இந்த மெல்பேர்ன் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் மற்ற ஐரோப்பியர்கள் முக்கியமாக இத்தாலியர்கள், கிரேக்க தேசத்தவர்கள் குடியேறினார்கள். ஆசியர்களில் சீனர்கள் மட்டும்தான் தங்கம் தோண்ட ஹாங்காங்கில் இருந்து வந்தார்கள். தங்கத்தை தேடி வந்தவர்களால் உருவான இந்த மெல்பேர்னில் தற்போது 140 உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள.

சில வருடங்கள் வரையும் ஞாயிற்றுக்கிழமைகளில் Football Match நடத்த கிறிஸ்தவ தேவாலயங்கள் எதிர்த்தன. அவர்களை கருத்தில் எடுத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் காலை வழிபாடுகள் முடிந்ததும் Football என்ற “மதத்தில்” மக்கள் ஒருங்கிணைவதற்கு வசதியாக என நண்பகலுக்கு மேல் விளையாட்டு தொடங்கும். ஃபுட்பால் இங்கு வேறு மதத்தவர்களை மட்டுமல்ல பல நாடுகளிலிருந்து வந்தவர்களையும் இணைக்கிறது. முதல் பரம்பரையினர் ஃபுட்பாலை புரிந்து கொள்ள சிறிது தடுமாறினாலும் இரண்டாவது தலைமுறையினரை வசீகரித்து உள்வாங்கி விடுகிறது

யூக்கலிப்டஸ் மரங்கள் பெண் தெய்வங்கள்.

இப்படி பல விஷயங்களை, அந்த இடத்திற்குத் தகுந்தாற்போல் கதை முழுக்க நடேசன்கொடுத்துள்ளார்.

முதன்மை சிறப்பிற்கான காரணம்  மெல்பேர்ன் என்றால் இரண்டாவது சிறப்பு, மிருகங்களை கதாபாத்திரமாக மட்டும் சித்திரிக்காமல் அவற்றின் குணாதிசயங்களை ஒரு படிமமாக வைத்து கதையின் மாந்தர்க்கு இணையாக கதை முழுவதும் கொண்டுவந்துள்ளது புதிய யுத்தி.  இதற்கு முன் ஜெயமோகனின் “யானை டாக்டர்” விலங்கியல் மருத்துவரை பற்றிய கதையாக நான் படித்த முதல் படைப்பு. ஓரளவு யானைகளைப் பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய கதையுமாகும்.

பிரபஞ்சனின் “மனுஷி”,  கி.ரா. வின்  “குடும்பத்தில் ஒரு நபர்”  போன்ற சிறுகதைகள் மாடுகள் எப்படி குடும்பத்தில் ஒரு அங்கமாக விளங்கியது என்பதை பேசினாலும் விஞ்ஞான வளர்ச்சியில் தமிழ் சமூகம் விலங்குகளை மறந்து வெகுதூரம் வந்து விட்ட சூழலில் இது மிகவும் முக்கியமான நாவல்.

அந்த மருத்துவமனையிலேயே செல்லப்பிராணியாக வசிக்கும் ஒரு பூனைக்கு பெயர் Collingwood. இது பேசும் பூனை. இந்தப் பூனை இந்த நாவலின் ஒரு முக்கியமான கதாபாத்திரமாகும். அந்த வைத்தியசாலையின் செயல்களை உள்வாங்கி, நாவலின் கதாநாயகன் சிவா சுந்தரம்பிள்ளையின் மனச்சாட்சியாக உலா வருகிறது.

நடேசனின் நக்கலும் நையாண்டியுமான பக்கத்தை கொலிங்வுட்  மூலம் தெரிந்து கொள்ளலாம் (வடிவேலு மைண்ட் வாய்ஸ்). சிவா சுந்தரம்பிள்ளையும்  கொலிங்வுட்டுக்கும் நடக்கும் உரையாடல்கள் அவரின் மன ஓட்டங்களாக மட்டும் இல்லாமல்,  கதையின் அறமாகவும் உருப்பெறுகிறது. தலைமை மருத்துவரின் அறம், உடன் வேலை செய்யும் செவிலியர்களின் அறம், நிர்வாகக் குழுவினரின் அறம், இந்த மருத்துவமனையை நிர்வகிக்கும் மேலாளரின் அறம் என இந்த நாவலை அறத்தின் அடிப்படையிலேயே கட்டமைத்திருக்கிறார்.

விலங்குகளைப் பற்றி பல சுவாரசியமான விஷயங்களையும் வரலாற்றில் அவற்றின் பங்கையும் வெகு இயல்பாக சொல்கிறார். உதாரணத்திற்கு நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணி வெளியே ஓடிவிட்டாலோ, காணாமல் போய்விட்டாலோ அதனை ஒரு வாரத்திற்கு மேல் மருத்துவமனையில் பராமரிக்க வேண்டியதில்லை, அது கருணைக் கொலை செய்யப்படும் என்பதும், மிருகங்கள் எந்தச்  சூழ்நிலைகளிலெல்லாம் கருணைக் கொலை செய்யப்படுகின்றன என்பதும் மிக அதிர்சியான ஒரு விஷயமாக இருந்தது.

அதே போல் தானியங்களை உற்பத்தி செய்துவிட்டு அது தனது குடும்பம் உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து உபரியானதை சேமித்து, எதிர்காலத்துக்காக வைத்தபோது, அதை நாடி வந்த எலிகளை உணவாக உன்ன தேடி வந்த பூனைகள் அப்படியே வீடுகளில் தங்கிக் கொண்டு பெண்களின் செல்லப்பிராணிகளாக மாறின என பூனை செல்லப்பிராணியான கதையை சொல்லியிருக்கிறார். இதேபோல் ராட்லிவர், ஜெர்மன் ஷெப்பர்ட் போன்ற நாய்களின் வரலாற்றையும்  கதையோட்டத்தோடு இயல்பாக சொல்கிறார்.

மற்ற இனத்தவரை காட்டிலும் பெரும்பான்மை தமிழ் சமூகம் அண்மையில்தான் புலம்பெயர்ந்த சூழலில் வாழ நேர்ந்து காலூன்ற துவங்கியுள்ளது. இந்த கால கட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பல கலாச்சார முரண்களையும் அதனை கையாள்வதற்கான பரிந்துரைகளையும் அளித்துள்ளார். தங்களின் பண்பாட்டையும், விழுமியங்களையும் நெகிழ்த்திக் கொள்ளவில்லை என்றால் அவை பெரும் சுமையாகி போகும் என்ற உண்மையை “கலாச்சார மூட்டைகளைத் தோளில் சுமந்து இடம்பெயர்கிறோம்” போன்ற வரிகள் மூலம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

என்னை கவர்ந்த மற்றுமொரு விஷயம் இன்னமும் நம் சமூகம் பேசத் தயங்கும் பாலியல் தொடர்பான விஷயங்களை, மருத்துவர் என்பதால், மிக எளிமையாக விளக்கியுள்ளார். புதிய இடத்தில் புதிய வாழ்க்கையை புது விதமாக அணுக வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார்.

மேலும் மதம் சார்ந்த தன்னுடைய பார்வைகளையும் கேள்விகளையும் தயங்காமல் பதிவிட்டிருக்கிறார். உதாரணத்திற்கு “சாமானிய மனிதர்களில் இருந்து மதகுருவாக வந்தவர்கள் காமத்தில் மட்டுமல்ல மற்றைய குணங்களிலும் சாதாரணமானவர் போல் தான் நடப்பார்கள். ஆனால்,  சமூகம் அவர்களிடம் சமூக கோட்பாட்டின் கடிவாளத்தை கொடுத்து நீங்கள் கண்ணியமானவர்களாக நடக்கவேண்டும் என எதிர்பார்க்கிறது. இந்த எதிர்பார்ப்பு வெறும் கற்பனையால் ஆனது என காலம் காலமாக சகல மதபீடங்களும் நிரூபித்த வண்ணம் இருக்கின்றன.

கத்தோலிக்க போப் ஆண்டவருக்கோ, முல்லாவுக்கோ ஒரு கூட்டத்தின் தனித் தன்மையைப் பேணுவது அவர்கள் அதிகாரத்திற்கும் பிழைப்பிற்கும் தேவையாகிறது போன்ற வரிகள் இக்காலத்தில் மறுக்கமுடியாத உண்மையாகும்.

விஞ்ஞான பூர்வமாக யோசித்து மருத்துவம் செய்பவராக இருப்பினும் தத்துவ விசாரணைகளும், எண்ணங்களும் சிவா சுந்தரம் பிள்ளையின் நிழலாகத் தொடர்ந்து வருகிறது. அதில் எனக்குப் பிடித்த உண்மையான தத்துவம் “வாழ்க்கையில் எவரும் தனித்து நின்று சாதிப்பதில்லை. சுற்றியிருக்கும் பலரது அர்ப்பணிப்புகள் மீதுதான் சாதனைகள், வெற்றிகள் எங்கும் உருவாக்கப்படுகின்றன. சாம்ராஜ்யங்கள் முதல் தனிமனிதரின் சிறு வெற்றிகள், சாதனைகள் என எதைச் சொன்னாலும் தனியாக நின்று ஒருவர் சமூகத்தில் செய்யவில்லை.

“தவறுகள் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. விதைத்த பயிர் போல் அவை அறுவடைக்கு வந்தே தீரும் அவற்றை அலட்சியம் செய்வது நன்மை பயக்காது.“

“ தவறு நடந்தால் மன்னிப்பு கேட்ட பின்புதான் நல்லிணக்கம் ஏற்படும்” இது ஏதோ ஒரு சாதாரண வரி போல் தெரியலாம். ஆனால்,  எனக்கு நம் ஆஸ்திரேலிய மண்ணில் முன்னாள் பிரதமர் திரு கெவின் ரட் அவர்கள் கேட்ட மன்னிப்பும் அன்று பல ஆஸ்திரேலியர்களின் மனதில் இருந்த  நெகிழ்ச்சியும் கண்முன்னே வந்து சென்றது. அன்று கேட்ட மன்னிப்பும், பாதிக்கப்பட்ட அபாரிஜின மக்களுக்கு பெரும் அங்கீகாரமாக மாறியதும் வரலாறு.

எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்கள் சொல்லியது போல் தமிழில் எழுதப்பட்ட ஒரு நாவலில் ஒரு அந்நிய நாட்டின் பண்பாட்டையும், சமூகவியலையும் இத்தனை நுட்பமாக விவரிக்கப்படுவது இதுவே முதல்முறை.  அதோடல்லாமல் விலங்கியல் மருத்துவம், மதம், கடவுள்  ஆகியவற்றைப் பற்றிய மெல்லிய விமர்சனம், மனிதர்களின் உளவியல் சிக்கல் என இந்த நாவல் பல இழைகளினூடாக பயணிக்கிறது.

நான் மேலும் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

புனிதம் என்று நமக்கு கற்பிக்கப்பட்டுள்ள பல விஷயங்களை பெரிய புரட்சி இல்லாமல் போகிற போக்கில் இந்த நாவலில் நடேசன் அவர்கள் கட்டுடைத்துள்ளார். அது இக்காலத்திற்கு தேவையான ஒன்றாகவும் நான் பார்க்கிறேன்.

இரண்டாவதாக இந்த நாவல் முழுக்க எதிர்மறையாக இல்லாமல்,  சிறு சிறு தோல்விகளும், குறைகளும், பிரச்சினைகளும் வாழ்க்கையில் இருந்தாலும் பொதுவாக ஒரு நேர்மறை எண்ணத்தோடு கொண்டு சென்றிருப்பது எனக்கு மிக பிடித்த விஷயம்.

“இலக்கியம், அறிவுரை முடிவுகளை தரக் கூடாது என்பதால் அவைகள் முடிவுகள் அல்ல கேள்விகள் மட்டுமே” என்று  நடேசன் அவர்கள், தனது  முன்னுரையில் கூறியிருப்பார். அதுபோலவே இந்த வைத்தியசாலையும் பல கேள்விகளை நம்முன் வைக்கிறது. அவரவர்கான விடையை அவரவர்களே தேட வேண்டும்.

Share:

Author: theneeweb