வாட்ஸ் அப் ‘பக்’ (விஷப் பூச்சி) உங்களை கடிக்காம பார்த்துக்குங்க!

 

சமீபத்தில் மணிப்பூரைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவருக்கு $5000 பண அன்பளிப்புடன் ஃபேஸ்புக்கின் ஹால் ஆஃப் ஃபேம்’ லும் இடமளித்துக் கெளரவித்திருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனம். எதற்காக என்றால்? அந்த இளைஞர் ஃபேஸ்புக் குழுமங்களில் ஒன்றான வாட்ஸ் அப் செயலியில் சாட் செய்து கொண்டிருந்த போது, திடீரென அந்த செயலியில் இருந்து, நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் நபருடன் விடியோ சாட் செய்ய உங்களுக்கு ஆசையா? அப்படியெனில் விடியோ ஆப்சனைக் க்ளிக் செய்யுங்கள். என்று நோட்டிஃபிகேஷன் வந்துள்ளது. இது ஹேக்கர்கள் செய்யும் வேலை. நிச்சயமாக ஃபேஸ்புக் அப்படியொரு நோட்டிஃபிகேஷன் அனுப்பியிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அதன் பிரைவஸி ஆப்ஷன் அடிப்படையில் அப்படிச் செய்ய இயலாது. சாட்டில் ஈடுபட்டிருக்கும் இருவரும் விரும்பினால், அனுமதி கேட்டுக் கொண்டு தான் விடியோ சாட் ஆப்ஷன் ஓப்பன் ஆகும். ஆனால், மணிப்புரி இளைஞர் விஷயத்தில் அப்படியில்லாமல், எதிர்ப்பக்கத்தில் இருக்கும் நபருக்கே தெரியாமல் விடியோ சாட் விண்டோ ஓப்பன் ஆகியிருக்கிறது.

 

இது முற்றிலும் ஆபத்தானது. இதைப் பற்றி ஃபேஸ்புக் அறிந்திருக்க வாய்ப்பில்லை எனக்கருதி, நடந்து கொண்டிருக்கும் தவறைச் சுட்டிக் காட்டி அவர், ஃபேஸ்புக்  Bug Bounty Program குக்கு மெயில் அனுப்பினார். ஹேக்கர்கள் மூலமாக இப்படியான திருட்டு வேலைகள் அத்துமீறி நடப்பதை உணர்ந்து கொண்ட ஃபேஸ்புக் நிறுவனம், தவறைச் சுட்டிக்காட்டியதற்கு வெகுமானமாக மணிப்புரி இளைஞருக்கு $5000 பரிசுத்தொகை அனுப்பியதுடன் அவருக்கு ஃபேஸ்புக் ‘ஹால் ஆஃப் ஃபேமிலும்’ இடமளித்துக் கெளரவித்திருக்கிறது. தற்போது ஃபேஸ்புக் ஹால் ஆஃப் ஃபேம் லிஸ்ட்டில் 16 ஆவது இடத்தில் இருக்கிறார் மணிப்புரி இளைஞர் சோனல் செளஹாய்ஜம். அந்த லிஸ்டில் இந்த வருடம் இதுவரையிலும் இடம்பெற்றிருக்க்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கை 94.

அநியாயமாகத்தான் இருக்கிறது இல்லையா? இளைஞருக்கு பரிசு கிடைத்ததைச் சொல்லவில்லை. ஹேக்கர்களின் திருட்டு வேலையைச் சொல்கிறேன். நம்மூரில் ஸ்மார்ட் ஃபோன்களை எங்கெல்லாம் பயன்படுத்தலாம், எங்கெல்லாம் கூடாது என்ற விவஸ்தையே கிடையாது பலருக்கு. சிலர் டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டு கூட மொபைலில் பப்ஜி ஆடிக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் விதம் விதமாக தனக்குத்தானே செல்ஃபீ எடுக்கும் ஆவலில் அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்துக் கொள்வார்கள். இன்னும் சிலர் த்ரில்லுக்காக அனானிமஸ்களுடன் சாட் செய்கிறோம் என்று தமாஸ் செய்து கொண்டிருப்பார்கள். எப்படிப் பார்த்தாலும் கேமராவுடன் கூடிய இந்த ஸ்மார்ட் ஃபோன்களினால் ஆபத்துக்கள் தான் கூடிக் கொண்டிருக்கின்றனவே தவிர அவற்றால் பெரிதாக சாதனைகள் எதையும் இளைய தலைமுறை நிகழ்த்தியிருப்பதாகத் தெரியவில்லை.

சரி, அதை விடுங்கள். இனிமேல் சமூக ஊடகச் செயலிகளைப் பயன்படுத்தும் போது ஏதாவது நோட்டிஃபிகேஷன்கள் வந்தால், அதை அலட்சியப் படுத்தி ஸ்வைப் செய்யாமல் அது எதற்கு அனுமதி கேட்கிறது என்று ஒரு நொடி கண் கொடுத்துப்பாருங்கள். அந்த நோட்டிஃபிகேஷன் உங்களை ஆபத்தில் சிக்கிக் கொள்ளாமல் காப்பதற்காகவும் இருக்கலாம். எனவே ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துபவர்கள் அது குறித்த குறைந்த பட்ச பாதுகாப்பு அறிவுடனாவது அதைப் பயன்படுத்தத் தொடங்குங்கள். இல்லா விட்டால் பழைய செங்கக்கட்டி மோட்டரோலாவும், நோக்கியாவும் மட்டும் போதும் என பழமைக்கு மாறி விடுங்கள்.

Share:

Author: theneeweb