சஹ்ரான் இப்போது இல்லை என்பதில் தான் மகிழ்ச்சியடைகிறேன்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா இன்று முன்னிலையாகி சாட்சி வழங்கினார்.

இதன்போது, வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று தாம் கருத்து வெளியிட்டமையை அவர் ஒப்புக் கொண்டார்.

முஸ்லிம்கள் வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதை விரும்பவில்லை.

எனவே முஸ்லிம்களே ஆயுதம் ஏந்தி அதற்கு எதிராக போராடுவார்கள் என்று தாம் கூறியதாக ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட தெரிவுக் குழுவின் உறுப்பினர் ஒருவர், பொறுப்புள்ள முஸ்லிம் அரசியல் தலைவர் ஒருவர் இவ்வாறு கருத்து வெளியிடலாமா? என்று கேட்டார்.

இதன்போது ஹிஸ்புல்லா பதில் எதனையும் கூறவில்லை.

அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் அரபு மொழியிலான பெயர் பலகைகள், மத்திய கிழக்கு நாடுகளின் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கானவை என்று கூறினார்.

அத்துடன் எல்லா அரசியல்வாதிகளைப் போலவே தாம் சஹ்ரானை சந்தித்ததாக குறிப்பிட்டார்.

2017ம் ஆண்டுக்கு முன்னர் சஹ்ரான் ஒரு மதத்தலைவராகவே பார்க்கப்பட்டதாகவும், எனினும் பின்னர் அவர் தன்னை விமர்சிக்க ஆரம்பித்து விட்டதாகவும் ஹிஸ்புல்லா கூறினார்.

அதேநேரம் முஸ்லிம்களை உற்சாகப்படுத்துவதற்காகவே தாம், உலகில் பெரும்பான்மையாக இருப்பது முஸ்லிம்களே என்ற கருத்தை வெளியிட்டதாகவும் அவர் தெரிவுக் குழுவின் முன்னால் குறிப்பிட்டார்.

இதேவேளை, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜெ.ஜே. ரத்னசிறி, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இன்று முன்னிலையாகி சாட்சி வழங்கினார்.

Share:

Author: theneeweb