பெண்களும் கழுதைகளும் பொதி சுமப்பதற்காகவே பிறந்தவர்களா!? தேவா – ஜேர்மனி

ஆபிரிக்காவின் நுழைவாயில்

( அங்கம் – 02)

பெண்களும் கழுதைகளும் பொதி சுமப்பதற்காகவே பிறந்தவர்களா!?

                                                              தேவா – ஜேர்மனி

அத்திலாந்திக்கடல் 500 கி.மீ.மேலான கடற்கரைகளை மொரோக்கோவுக்கு வழங்கியிருக்கிறது. வடக்கிலிருந்து அசிலா நகரில் ஆரம்பமாகி லார்ச, முலே, புசுல்காம், ரபாட், கசாபிளாங்கா, சாபி, எசுரியா ஆகிய மேற்குக் கடற்கரை நகரங்களுக்கூடாக  தெற்குபகுதிக்கு போய்சேர்ந்தபோது அகாடிர்  (Agadir)  பெருநகரம்   எம்மை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. காரணம்  அங்கே ஒரு  ஜேர்மன் கொலனி மாதிரி ஒன்று உருவாகியிருக்கிறது புரியும்.  ஓரு சின்ன தேநீர்கடைக்காரர் கூட  ஜேர்மன்மொழியை  சரளமாகப்  பேசுகிறார். ஆடம்பர  ஹோட்டல்களிலிருந்து சிறியபடுக்கை  அறைவரை அகாடிர்  பெருநகர்  ஜெர்மனியர்கள்   கோட்டையாக  மொரோக்கோவின் தென்மேற்கில்   இருக்கிறது.

தற்போது  பதவியிலிருக்கும் 6 ஆவது மொகமட் அரசர்,  மொரோக்கோவின் பொருளாதார  நலனுக்காக பல  ஐரோப்பிய நிறுவனங்களோடும் தொடர்புகொண்டிருக்கிறார்  என்றும்,   பல்வேறு  முதலீடுகள்  அங்கு செய்யப்பட்டிருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.  10   வருடங்களுக்கு முன்னால் காணப்பட்ட  கரடுமுரடான  பாதைகள்  செப்பனிடப்பட்டுள்ளன. உல்லாசப் பிரயாணிகளுக்கான   ஆடம்பர   ஹோட்டல்களும் கட்டப்பட்டு,  மேலும்  கட்டப்படுகின்றன. விலையுயர்ந்த வாகனங்களுக்கிடையே,   கழுதை இழுக்கும்   பாரவண்டிகளும்   வேகவீதிகளில்  உருள்கின்றன.

உழவர்களின்,  மந்தைவளரப்போரின் சந்தை ஒவ்வொரு ஊரிலும் குறிப்பிட்ட கிழமை நாட்களில் கூடுகிறது.   உயிரோடும், உயிரில்லாமலும் ஒட்டகம்,  ஆடு,  மாடு,  செம்மறி, கோழி,  புறாக்கள்  விலைபேசப்படுகிறது.  பேரம்  பேசுவது தொன்மையானதொரு  பண்பாடு.   எந்த விடயத்திலும்  ஒரு உடன்பாட்டுக்கு வருவதற்கு  முன் பேசித்தீர்ப்பது பழம்குடியினரிடத்தில்  காணப்பட்டதே.

பெரும்தொழில்  நிறுவனங்களால் சகல பொருட்களுக்கும் விலை  நிர்ணயிக்கப்பட்டிருக்கும்  வாழ்வுக்கு  பழக்கப்பட்டோருக்கு, மொரோக்கோவின்  சந்தை  பொருளாதாரம் ஆரம்பத்தில் அந்நியமாய் படும்.  அதனால்  அந்நியர் ,மொரோக்கோ  இறந்தகாலத்தில்,  இன்னும் வாழ்கிறது என்கின்றனர்.   வாராந்த  சந்தையிலே  உழவர்கள்,  மந்தை வளர்ப்போர் தங்கள்  விலை நிர்ணயத்தை தாங்களே  தீர்மானிக்கிறார்கள்.  வியாபாரம் பொதுவாகவே  எல்லாரிடமும் பங்கீடு செய்யப்பட்டுள்ளது.   இது  உலகின் பலபாகங்களிலும்  செயல்பட்டாலும், ஆபிரிக்காவின் சந்தை சீரியஸ் இல்லாத   கலகலப்பான  வியாபாரக்களமாய்   திகழ்கிறது.

வட  ஆபிரிக்கர்களான மொரோக்கோ, அல்ஜீரிய, மௌரடானிய  மக்கள் அரேபியாவிலிருந்து   இங்கு வந்திருக்கவேண்டும் என நம்பப்படுகிறது. விக்கிபீடியா  மற்றும்,   சில வரலாற்றாசிரியர்களின்  விளக்கங்களை கவனித்தபின்,   மொரோக்கோ  தேசத்தை அடைந்தபோது,   அப்படியும் இருக்கலாம்,  என நம்பச்சொல்கிறது.   இந்த நாட்டு மக்களை அவதானிக்கும்போது   அரேபிய நிறமும்,  சாயலும் கொண்டிருக்கின்றனர். 98 சதவீதம் இசுலாம் மதத்தினர்.  பேர்பர   மொழி   இவர்களின்  தாய்மொழி.

பொது இடங்களில் ஆண், பெண்கள் தங்கள் தலையிலிருந்து பாதம்வரை மூடியபடி  நடமாடுகின்றனர். இளைஞர்கள்,   சிறுவர்களுக்கு உடைவிடயத்தில் சுதந்திரம்  உண்டு. வெப்ப வெள்ளத்திலிருந்தும், மணல் புயல்,  தூசு போன்றவற்றிலிருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ளவேண்டியும், மதவழிபாட்டுக்கு  போகும்போதும்,  உணவுக்கு  மரியாதை செலுத்தும்வகையிலும்,  இந்த  நீண்ட  அங்கிகளை அணிகிறார்கள.  தம் இனத்தை  வெளிக்காட்டும்  முறையில்  பலவிதமான  நிறங்களோடும், வேலைப்பாடுகளோடும்   இந்த ஆடைகள்  மாநிலங்களுக்கு   மாநிலம் வேறுபடுகிறது.

மாலை நேரங்களில் பிள்ளைகள்  பொது இடங்களில்  விளையாடுகையில், அம்மாக்கள்  வாங்குகளில்   அமர்ந்து, ஊர்க்கதை  பேசும்போது, அப்பாமார்கள்  தேநீர்கடையில்  நண்பர்களோடு  அரட்டை  பேசுகின்றனர்.

இரவுகளில்   கழுதைகளின்   ஓங்கிய  கனைப்பிலே  நாள்பூராவும்  மனிதருக்காக  உழைத்ததின் வலி புரிகிறது. கழுதைகளை  மேயவிடும்போது,  அவைகள்  ரொம்ப  தூரத்துக்கு போய்விடுவதை   தவிர்க்க   அவைகளின்  முன்கால்களை  கயிறினால்  பிணைத்துவிடுகிறார்கள். கட்டிவைத்த  இடத்திலே  நின்ற நிலையிலே,  சுட்டெரிக்கும்  வெய்யிலிலே  தலைகுனிந்தபடி அவைகள்  நிற்கின்றன.  அவை  எசமானர்களுக்கு  தம் வாழ்நாள்பூராவும் சேவகம்  செய்கின்றன.

கிராமங்களிலே  பெண்களும், கழுதைகளும்  பொதி சுமப்பதற்காகவே பிறந்திருக்கிறார்களோ  என கேள்வி எழுகிறது.  இந்தக் கழுதைகளின் கால்கட்டு  தெரியக்கூடியது. ஆனால் ,   காடுகளிலிருந்து  விறகுக் குச்சிகள்  இலைதழைகள் சேகரித்து முதுகிலே சுமக்கும் பெண்களின் கால்கட்டு காண முடியாதது.  பொதுவாகவே இவ்விலங்குகள் பெண்களுடைய வாகனங்களாக துணிதுவைக்கும் இடங்களிலும், கடைகளுக்கு முன்னாலும் சிலநகரங்களில்,  கிராமங்களில் டாக்சிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

கழுதைகளின் நூறுவீத பொறுமையை பெண்கள் கற்றார்களா ? அல்லது பெண்களிடமிருந்து கழுதைகள் கற்றனவா ? என்ற சந்தேகம் இவ்விருதரத்தாரின் அந்நியோந்நியத்தை கவனிக்கையில் சாதாரணமாகவே யோசிக்கவைக்கும்.

தென்கிழக்குவழியாக பயணம் தொடருகையில், சகோரா என்னும் சிறுஊரை சந்திக்கலாம்.  சகாரா பாலைவனத்தை முழுதாக ரசிக்க இங்கிருந்து ஆரம்பிக்கலாம். பாலைவன அழகை ரசிக்க  அலங்கரிக்கப்பட்ட பாலைவன கப்பல்கள்,  பாகன்களோடு பயணிகளை கவருவன.

பெரிய வனாந்தர மேடுகளில் ஒட்டக பாகன்கள் சவாரிக்கு வழிப்பயணிகளை மறித்து, தம் வாழ்க்கை செலவுக்கு பணம் தேடிக்கொள்கின்றனர். இந்தப்பிராணிகள் தகிக்கும் வெய்யிலில் உட்கார்ந்து எசமான் போடும் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கின்றன.  கழுதைகளும், ஒட்டகங்களும் மந்தை வளர்ப்போரின் நெருங்கிய உறவுகளும், அடிமைகளும் ஆக  இணைந்திருக்கின்றன.

பயணிகளிடம் பழைய ஜீன்ஸ் ,பிள்ளைகளுக்குரிய ஆடைகள், சப்பாத்துக்கள் ,  குளிராடைகள் இருந்தால், அவைகளை கொடுத்து,  மாற்றீடாக  இவர்களிடமிருந்து வெள்ளியாலான கைவினைப்பொருட்கள், பெறலாம்.   பேரம் பேசும் கலைத்திறன் கொண்டவர்கள்.   முதலில் ஒருபொருளுக்கு  ஐந்து  மடங்கு விலைகூறி,   பின்னர் தாங்கள் குறிவைத்திருக்கும் தொகைக்குள் கொண்டுவந்துவிடும் திறமைசாலிகள்.

சகோராவிலிருந்து மௌரடானிய தேச எல்லை 13 கி.மீ.தொலைவில் தொடங்குகிறது.  சகாரா பாலைவனத்தை ஊடறுத்துச்  செல்லும் பாதையிலே சாகச அனுபவம் தேடுவோரும்,  அகதிகளை சுமக்கும் வாகனங்களும், சரக்குவாகனங்களும் எல்லையற்ற நீண்ட  மணல் மலை திட்டுகளில் அரிதாக கடந்து செல்கின்றன.

பாலைவனப்பிரதேசத்திலும்,  மேற்குசகாராவை  கொண்டுள்ள மொரோக்கோ தேசத்திலே  ஒருமுதுகுள்ள ,  டொமேடர்,  ஒட்டகம் சாதாரணமாய்  பெருவீதிகளை கடக்கிறது.

ஆயிரமாம் ஆண்டுகளிலேயே மொரோக்கோவில் மந்தை வளர்ப்போர் வாழ்ந்திருந்தாக தகவல் சொல்கிறது. பின்னர்,  அரேபியர் இங்கு வந்து கையில் குர் ஆனோடும்,  ஆயுதமில்லாமலும்   இசுலாம்  மதப்பிரச்சாரம் செய்தார்களாம்.  ஒவ்வொரு ஊருக்கும்  ஒரு மசூதி என்றில்லாமல், ஒவ்வொரு  குடியிருப்புக்கும்  இரண்டு  தொழுகைத்தலங்களாவது உள்ளன.  மற்றைய நாடுகளின் சமய கோவில்களுக்கு நாம் சளைத்தோம்  இல்லை என்கிறமாதிரி.   மசூதிகள் பிரமாண்டமான  கட்டிடங்களாக இல்லையானாலும், பிரமிக்கவைக்கும் நுண்ணிய சித்திரவேலைப்பாடுகள் கொண்டவை.

மெடீனாக்கள்  எனச்  சொல்லப்படுவது  மொரோக்கோவின்  மிக தொன்மையான நகரங்கள். மிகக்குறுகிய வாயில்கள் கொண்ட  இருளான நகரவழிகளில் ,  பசார்கள்  விரிகின்றன. தோல்செருப்புகடையிலிருந்து சாப்பாட்டுக்கடை,  துணிக்கடை,  நகைக்கடை,  மருந்துகடை,  பழக்கடை, இறைச்சி,  மரக்கறிக்கடை , பலசரக்கு , பாத்திரக் கடைகள் கடை விரித்திருக்கின்றன.   மக்களும் அங்கு வாழ்கின்றனர். பொந்து போன்ற அவைகளிலிருந்து மீளுவதற்கு  சில கி.மீட்டர்கள் நடந்தே ஆகவேண்டும்.   வியாபார பொதிகள் தள்ளுவண்டிகளில்,  சிறிய  மோட்டார் சைக்கிள்களில் பசார்களுக்கு கொண்டுவரப்படுகின்றன. மிகுதியாக கழுதைகளும் இதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

விறகு அடுப்பில்,  மட்பாண்டத்தில் உணவு தயாரிப்பதை மொரோக்கோ மக்கள் அன்றிலிருந்து இன்றுவரை கைக்கொண்டிருக்கின்றனர்.  கூரான மூடியோடு  அமைந்த  தட்டையான மண்பாத்திரங்களில் தயாரிக்கப்படும் உணவு அங்கு மிகப் பிரபலமானது.

இறைச்சி, மீன்வகைகளை மிகச்சிறிய  அளவிலும், மரக்கறி பெருமளவிலும் நாளாந்த உணவாக கொள்ளப்படுகிறது.   குஸ்குஸ்  (  Cous Cous )  தானிய உணவு வெள்ளிக் கிழமைகளில் மாத்திரமே. பல வடிவங்கள் கொண்டிருக்கும் பாண் பிரதான உணவு.  பருவகாலத்தில் கனியும் பழங்கள், அறுவடை காய்கறிகள் மட்டுமே அந்தந்த காலங்களில் கிடைக்ககூடியது.

வருடத்துக்கு 2-3 தடவைகள் முழுக்கிராமமும் அல்லது சிற்றூர்களும் ஒன்றுசேர்ந்து தாம் தயாரித்த உணவை, ஆண்கள் தனியாக ஒரு தினத்திலேயும்,  பெண்கள் இன்னொரு தினத்திலேயும், பிள்ளைகள் இவ்விரு தினங்களிலும்  ஊரின் பொதுஇடத்துக்கு கொண்டுவந்து, யாவரும் பகிர்ந்துண்ணலை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

மொரோக்கோவில் மின்ஸ் தேநீர் விசேடமானது.  இது தயாரித்தலே ஒரு சடங்கு மாதிரி.  இத்தேநீருக்கு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பச்சை நிறத்தேயிலை முக்கியபங்கு வகிக்கிறது. சிறிய கேத்தலிலே சீன தேயிலையை போட்டு  கொதிநீரை ஊற்றி அதற்குள் புதிதாக கொய்த மின்ஸ் இலைகளை இட்டு மீண்டும் நன்றாக கொதிக்கவைத்துப் பின் சீனிக்கட்டிகளை போட்டு, ஒருசின்ன கிளாசில் ஊற்றி, சரியாக சாயம் இறங்கியிருக்கிறதா என கவனித்து மீண்டும் அதை கேத்தலுக்குள் விட்டு 2-3  தடவைகள் ஆற்றிய பின்னரே தேநீர் அருந்த வாய்ப்புண்டு.;

கிராமங்களிலே  சிற்றூர்களிலே பழம் காலத்திலிருந்தே களிமண்  , வைக்கோல் கலந்த மண்சுவர்களை சதுரமாகவோ, நீளமாகவோ சுற்றிவர முதலிலே கட்டி, அதனுள்ளே சிறிய, பெரிய அறைகளாக பிரித்து  பத்து  குடும்பங்களாவது வாழ்ந்தார்கள்.  இன்னமும் இந்தகூட்டுவாழ்வு முறை தொடர்கிறது. உள்நுழைய ஒரு மரத்தாலான கதவு. ஆடு,  செம்மறி,  கோழி,  வாத்து,  தாராக்களும் அங்கு மனிதரோடு சேர்ந்தே ஒட்டி வாழ்கின்றன. விலங்குகளுக்கு வானம் தெரிகிறது. இக்கூட்டுவாழ்வு குடியிருப்புகளை  வெளிப்பக்கமிருந்து கவனிக்கையில், அங்கு   மனிதர்கள் வாழ்கிறார்களா? என்ற   சந்தேகம் எழுகிறது.

மனிதரை காண்பது அரிது.  காலை,  பகல்  வேளைகளில்  எல்லாருமே வயல், தோட்டம் என சென்றுவிடுவர்.  பிள்ளைகள்  பாடசாலைக்குப் போய்விடுவர்.  அவர்களது வீடுகளில் மாலையிலும்  வெளிகதவு  மூடியே  இருக்கும்  என்பதால் மக்களை காண்பது அரிது. சேர்ந்து வாழ்தல் – எதிரிகளிடமிருந்து தம்மை காப்பாற்றிக் கொள்ளவும், மணல்புயல்காற்று காலத்தில்  குடியிருப்பு  சேதப்படாது பாதுகாத்து  கொள்ளவும், பெண்கள் ,பிள்ளைகளின் பாதுகாப்பு  கருதியும் இவ்வாறான குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

(தொடரும்)

Share:

Author: theneeweb