15 இலட்சத்தில் அமைக்கப்பட்ட மலசல கூடத்துடன் பாடசாலை காணியை ஆக்கிரமித்துள்ள அரசியல்வாதி

15 இலட்சத்தில் அமைக்கப்பட்ட மலசல கூடத்துடன் பாடசாலை காணியை ஆக்கிரமித்துள்ள அரசியல்வாதி – கண்டுகொள்ளாத அதிகாரிகளும், அரசியல்வாதிகளும்

கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலத்தின் காணியினை சிறிலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார் அனைத்து அதிகார தரப்பினர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றும் இதுவரைக்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாடசாலை சமூகம் கவலை தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் புதிதாக தெரிவு செய்யப்ட்ட சிறிலங்கா சுதந்திர கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தின் காணியை ஆக்கிரமித்து வெதுப்பகம் ஒன்றை நடாத்தி வருகின்றார். எனவே குறித்து காணியை மீட்டு பாடசாலைக்கு வழங்குமாறு பாடசாலை நிர்வாகம் மற்றும் சமூகத்தினர் அரசியல் தரப்பினர்கள், அதிகாரிகள் என பலருக்கும் எழுத்தும் மூலம் அறிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் 15 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மலசல கூடத்தை கூட மாணவர்களால் பயன்படுத்து முடியாத நிலையில் அமைக்கப்பட்ட காலம் முதல் ஓரிரு வருடங்களாக இழுத்து மூடப்பட்டுள்ளது.இதனால் இப் பாடசாலையில் கல்வி கற்கும் விசேட தேவையுடைய பிள்ளைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். என பாடசாலை சமூகம் கவலை தெரிவித்துள்ளது.

குறித்த காணியில் பிரதே சபை உறுப்பினர் உட்பட மீள் குடியேற்றத்தின் ஆரம்பத்தில் ஐந்து பேர் வரை ஆக்கிரமித்து குடியிருந்த போது அவர்களுக்கு மாற்றுக் காணிகள் இரணைமடு பிரதி பொலீஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு முன்பாக எ9 பிரதான் வீதிக்கருக்கில் பெறுமதியான இடத்தில் வழங்கப்பட்டது. இதன்போது நான்கு குடியிருப்பாளர்கள் பாடசாலை காணியை விட்டு அங்கு சென்று வீட்டுத்திட்டங்களையும் பெற்று வாழ்ந்து வரும் நிலையில் குறித்த பிரதேச சபை உறுப்பினர் மாத்திரம் பாடசாலை காணியை தொடர்ந்தும் ஆக்கிரமித்துள்ளார்.

பாடசாலை நிர்வாகம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர், அரச அதிபர், பிரதேச செயலாளர், கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு பத்துக்கு மேற்பட்ட கடிதங்களை எழுதியும் அவர்கள் எவரும் எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

காணியை ஆக்கிரமித்துள்ள கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினரின் செயற்பாட்டால் பாடசாலை செயற்பாடுகளுக்கும், மாணவர்களின் கல்விசார் நடவடிக்கைகளுக்கும் பெரும் நெருக்கடியாக இருப்பதோடு, அதிகளவு மாணவர்களை கொண்டு கிளிநொச்சி ஒரு ஆரம்ப பாடசாலையாக காணப்படுகின்ற பாடசாலையினை அபிவிருத்தி செய்ய முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
எனவே உரிய அதிகாரிகள், அதிகாரத்தில் உள்ள அரசியல் வாதிகள் இனியாவது கவனத்தில் எடுத்து நடவடிக்கைகளை எடுத்து பாடசாலையின் அபிவிருத்திக்கு உதவுமாறு பாடசாலை சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது

Share:

Author: theneeweb