சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீச்சு

மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் மீது அமெரிக்க எல்லைக் கண்காணிப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி விரட்டியடித்தனர். 25 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் அண்டை நாடான மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மெக்ஸிகோவில் நிலவி வரும் மோசமான பொருளாதார நிலையால், அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். இதுதவிர வேறு நாடுகளில் இருந்து அகதியாக வருபவர்களும் மெக்ஸிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைவதும் அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்க எல்லையில் சுவர் கட்டுவது, ஊடுருவலைத் தடுக்க பாதுகாப்பை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அமெரிக்கா-மெக்ஸிகோ எல்லைப் பகுதியான சான் டியாகோ பகுதி வழியாக கடந்த 31-ஆம் தேதி நள்ளிரவில் 150 பேர் அடங்கிய குழு, அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றனர். அவர்கள் எல்லையில் இருந்த சுவரையும், முள்வேலியையும் தாண்டி அமெரிக்க எல்லைக்குள் புகுந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த அமெரிக்க எல்லைக் கண்காணிப்புப் படையினர் அவர்களை நோக்கி கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதையடுத்து, அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் சிதறி ஓடினர். இதில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளும் இருந்தனர் என்று கூறப்படுகிறது.

எனினும், அடுத்த சில மணி நேரத்திலேயே இளைஞர்கள் சிலர் மீண்டும் கூடி, எல்லை தாண்ட முயற்சி செய்தனர். இதையடுத்து அமெரிக்க எல்லைக் கண்காணிப்புப் படை வீரர்கள் மீண்டும் கண்ணீர் புகைக் குண்டுகளுடன், கண் எரிச்சலை உண்டாகும் குண்டுகளையும் வீசினர். இதனையடுத்து, பலர் அப்பகுதியில் இருந்து தப்ப முடியாமல், கீழே விழுந்தனர். இதில் 45 பேரை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர்.

அவர்களை அந்த இடத்தில் வைத்தே விசாரணை நடத்தி அமெரிக்க வீரர்கள், அவர்கள் வந்த வழியாகவே அழைத்துச் சென்று மீண்டும் மெக்ஸிகோவுக்குள் அனுப்பி வைத்தனர். மீண்டும் எல்லை தாண்ட முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்கள் மீது அந்நாட்டு எல்லைக் கண்காணிப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு கடந்த நவம்பர் மாதமும், இதேபோல சட்டவிரோதமாக நுழைய முயன்றவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

Share:

Author: theneeweb