வல்லாதிக்கச் சக்திகளின் புயலில் (சூறாவளியில்) சிக்கியிருகக்கும் இலங்கை

–          கருணாகரன்

 

இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோதி கடந்த வாரம் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். பதவியேற்றுப் பத்து நாட்களுக்குள் இந்த விஜயம் நடந்திருக்கிறது. இந்த வகையில் இது கவனத்திற்குரிய ஒன்று. அதாவது பதவியேற்ற கையோடு இந்தியாவுக்கு அண்மையிலுள்ள மாலைதீவு, இலங்கை ஆகிய இரண்டு நாடுகளுக்கும் மோதி விஜயம் செய்ய வேண்டிய அவசியமென்ன? என்பதிலிருந்தே மோதியின் விஜயத்தின் கனபரிமாணத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

புதிய அரசியல், பொருளாதார, பாதுகாப்பு விஸ்தரிப்புப் போட்டியில் இந்தியாவைச் சுற்றி சீனா விரித்துள்ள வியூகத்தைத் தகர்க்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கேற்பட்டுள்ள பெரும் சவாலாகும். இந்தச் சவால் வரவரக் கூடிக்கொண்டே வருகிறது. முப்பது ஆண்டுகளுக்குள் சீனா இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் வலுப்பெற்றுள்ளது. இதை முறியடிப்பதற்கு இந்தியாவும் பல விதமான முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. இதற்காக அது பொருந்தாக் கூட்டாளிகளான மேற்குலகத்தோடு கூட்டு வைக்க வேண்டியேற்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் உள்நாட்டை ஸ்திரப்படுத்தி வளர்த்தெடுப்பதற்கு எவ்வளவு சிரத்தை எடுக்க வேண்டுமோ அந்தளவுக்கு வெளிச்சூழலின் பாதுகாப்பும் ஸ்திரத்தன்மையும் சாதக நிலையும் அவசியமாகும். சீனாவின் அபரிதமான வளர்ச்சியும் அது மேற்கொண்டு வரும் விரைவு விஸ்தரிப்பு வாதமும் இந்தியாவுக்குத் தொடர் நெருக்கடியாகவே உள்ளது. இதனை முறியடிப்பதற்கே இந்தியா மேற்குலகத்தோடு நெருங்கிச் செயற்படுகிறது. சீனாவை எதிர்கொள்வதாயின் அதற்குப் பலமான ஒரு கூட்டணி தேவை என்ற அடிப்படையிலான உறவே மேற்குடன் இந்தியாவுக்கு. ஆனாலும் இந்தியாவின் இந்த வியூகங்களைக் கடந்தும் சில நிகழ்ச்சிகள் நடந்து விடுகின்றன. சில சந்தர்ப்பங்களில் சீனா எதிர்பாராத விதமாக ஊடுருவல்களைச் செய்து தன்னை நிறுத்திக் கொள்கிறது.

இந்த வகையில் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா ஜமீன் சீனாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி, மாலைதீவுக்கும் சீனாவுக்குமிடையில் பாதுகாப்பு, அரசியல், பொருளாதாரம் போன்ற விடயங்களில் நட்புப்பாலத்தை உருவாக்கியிருந்தார்.

இதற்காக மாலைதீவுக்கு சீனா ஏராளம் உதவிகளை வாரிக் கொட்டியிருந்தது.

இது இந்தியாவுக்குப் பொறுத்துக் கொள்ளவே முடியாத பெரும் தலையிடியை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில்தான் கடந்த 2018 செப்ரெம்பரில் மாலைதீவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்று சொல்வதை விடவும் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது என்று சொல்வதே சரியானது. இதற்குப் பின்னணியாக இந்தியாவும் மேற்குலகமும் திறமையாகச் செயற்பட்டன. சீனாவுக்கும் மாலைதீவுக்குமிடையிலான உறவின் நெருக்கத்தைக் குறைப்பதற்கோ அல்லது உடைப்பதற்கோ அங்கே ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று சிந்தித்ததன் விளைவே இது.

புதிதாக அதிகாரத்துக்கு வந்த இப்ராஹிம் மொஹமட், எதிர்பார்க்கப்பட்ட மாதிரியே உடனடியாக மாலைதீவின் பயண வழியை மாற்றினார். பதவியேற்ற கையோடு இந்தியாவுக்குப் பயணமானார். சரியாகச் சொன்னால், இப்ராஹிம் மொஹமட்டை இந்தியப் பிரதமர் மோதி அழைத்திருந்தார். அழைக்கப்பட்ட இப்ராஹிம் மொஹமட், இந்தியப்பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார். இது வழமைக்கு மாறான ஒரு ஏற்பாடு என்று அரசியல் நோக்கர்களால் கூறப்படுகிறது. ஆகவே ஏறக்குறைய இது இனிப்பூட்டி அணைத்துக் கொள்ளும் முயற்சியே.

அப்படி இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்க வைக்கப்பட்ட இப்ராஹிம் மொஹமட்டுடன் பல விடயங்கள் குறித்தும் இந்தியத்தரப்புப் பேசியது. குறிப்பாக சீனாவின் நடவடிக்கைகளையும் நடமாட்டத்தையும் மட்டுப்படுத்துவதே இந்த உரையாடல்களில் முக்கியமான விசயம். இதற்குச் சம்மதித்திருந்தார் இப்ராஹிம் மொஹமட்.

எனினும் அப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருந்த நாடாளுமன்றத் தேர்தல் இந்தத் தொடர் நிகழ்வுக்கான ஏற்பாட்டில் சிறிய தாமதங்களை உண்டாக்கியது. தேர்தலில் எதிர்பார்த்ததுக்கும் அதிகமாகப் பெருவெற்றியீட்டிய மோதி, உடனடியாகவே சீனாவின் வியூகத்தை உடைக்கும் நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார். இதற்காகவே இந்த அவசரப்பயணம்.

இதன்போது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட அடிப்படையில் மாலைதீவில் புதிய பிரதமர் இப்ராஹிம் மொஹமட்டுடன் பாதுகாப்பு, வர்த்தகம், கலாச்சாரப்பரிவர்த்தனை உள்ளிட்ட ஆறு உடன்படிக்கைகளைச் செய்திருக்கிறார் மோதி. இதில் விசேடமானது, மாலைதீவுக் கடற்பிராந்தியத்தில் கண்காணிப்புக்கான ராடர் கருவிகளைப் பொருத்துவதும் இந்தப் பிராந்தியக் கடல் வழியே பயணிக்கும் சீனக்கப்பல்களைக் கண்காணிப்பதுமாகும்.

ஓரளவுக்கு வெற்றிகரமாக மாலைதீவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் அல்லது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு வந்த இந்தியப் பிரதமர், அடுத்ததாக இலங்கை மீதான கவனத்தைச் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். மாலைதீவைப் போன்றே இலங்கையிலும் மிக ஆழமாகக் காலை ஊன்றியுள்ளது சீனா. இதை மட்டுப்படுத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கு. இதற்கான வியூகத்தை அமைப்பதற்கே மோதி மேற்கொண்ட நான்கு மணிநேரப் பயணமாகும்.  

இந்த நான்கு மணி நேரத்தில் அவர் சாதித்தது அல்லது பெற்றுக் கொண்டது அதிகம் என்று அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது. இதற்கமையவே இந்த நான்கு மணித்தியாலத்திற்குள் புயல் வேகத்தில் பல சந்திப்புகளை நடத்தியுள்ளார் மோதி. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ஸ, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் எனப் பல தரப்பையும் சந்தித்த மோதி, விரிவாகப் பேசுவதற்கு ஒவ்வொரு தரப்பையும் தனித்தனியாக புதுடெல்லிக்கு அழைத்திருக்கிறார்.

மிகப் பலவீனமடைந்து நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் இலங்கை அரசியற் சூழலைச் சரியாகக் கணித்து, தமது குதிரைகளைக் களமிறக்கியிருக்கிறார் மோதி. மோதியுடனான நெருக்கத்தையும் உறவையும் ஆர்வத்தோடு வரவேற்க வேண்டிய சூழல் தற்போது ஒவ்வொரு அரசியல் தரப்புக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதனால்தான் மோதிக்கும் தமக்குமிடையிலான சந்திப்புகளை ஒவ்வொரு தரப்பும் முக்கியத்துவப்படுத்தி வெளிப்படுத்தியிருக்கின்றன. இது மோதிக்கு – இந்தியாவுக்குப் பெரிய வெற்றியே.

இனி அடுத்த கட்டமாக ஒவ்வொரு தரப்பும் புதுடெல்லிக்குப் புறப்படப்போகின்றன. முதற்கட்டமாக இரண்டொரு தினங்களில் தமது அணி புது டெல்லிக்குப் பயணமாகிறது என்று அறிவித்திருக்கிறது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. தொடர்ந்து ஏனைய தரப்புகளும் மோதியின் காலடிக்குச் செல்லும். இதன் மூலம் இலங்கைக்கான தலைமைச் செயலகம் தற்போது புதுடெல்லி என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது இந்தியா.

ஏறக்குறைய இது ஏற்கனவே மாலைதீவின் புதிய பிரதமர் இப்ராஹிம் மொஹமட்டுக்கு ஏற்பட்ட நிலை எனலாம். அல்லது இப்ராஹிம் மொஹமட்டைக் கையாண்டதைப்போல இந்தியா (மோதி) இலங்கையர்களைக் கையாள முற்படலாம்.

ஆக ஒரு வேறுபாடு. மாலைதீவு சார்பாக தனியே இப்ராஹிம் மொஹமட்டுடன் மட்டும்தான் மோதி பேசினார். இலங்கையில் இது சற்று வேறுபட்டு, ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்று விரிந்த வட்டமாக உள்ளது.

இதற்கும் காரணமுண்டு.

அடுத்து வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையில் எந்தத் தரப்பைத் தாம் ஆதரிப்பது? யாரை அதிகாரத்துக்குக் கொண்டு வரவேண்டும்? அதற்கான சூழலை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதையிட்ட நிகழ்ச்சித் திட்டத்தின்படியே இந்தச் சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதுடெல்லிச் சந்திப்புகளிலும் இந்த விடயம் பேசப்படுவதற்கான சாத்தியங்களே அதிகமுண்டு.

தற்செயலாக தமது நோக்கம் தவறினால் அதற்குப் பதிலாக அதிகாரத்துக்கு வரக்கூடிய தரப்போடும் சமநிலையில் உறவைப் பேணுவது என்ற தந்திரோபாய அடிப்படையிலேயே இலங்கையில் எல்லாத் தரப்புகளுடனும் கைகுலுக்கியிருக்கிறார் மோதி. இதன் மூலம் இந்தியா ஜனநாயக அடிப்படையில் அனைத்துத் தரப்பினரையும் மதிக்கிறது. அனைவருடனும் இணைந்து பயணிக்க விரும்புகிறது. யாரையும் புறக்கணித்து எதிர்நிலைக்குத் தள்ளி விட விரும்பவில்லை என்ற சேதியையும் கூறியிருக்கிறார் மோதி.

இலங்கையின் அரசியல் தலைமைகளாலும் இதைப்புறக்கணிக்க முடியவில்லை. இந்தியாவின் – மோதியின் – உள்நோக்கத்தையும் அதற்கான செயற்பாட்டுத் துணிதலையும் புரிந்து கொண்டாலும் அவற்றினால் இதைத் தவிர்க்க முடியவில்லை. உள்நாட்டில் சரிந்திருக்கும் அரசியல் செல்வாக்கினை இவ்வாறான சந்தர்ப்பங்களின் மூலமாகக் கட்டியெழுப்புவதற்கு மோதியின் ஆதரவும் உதவியும் உதவும் என இவை நம்புகின்றன. இது மிகமோசமானதொரு நிலையே. மக்கள் மயப்பட்ட தமது அரசியற் பெறுமதிகளை அடிப்படையாக வைத்துத் தங்களுடைய அரசியல் செல்வாக்கினை உயர்த்திக் கொள்வதற்குப் பதிலாக வெளிச்சக்திகளின் தயவிலும் ஆதரவிலும் தங்கிருப்பது தவறானது.

ஆனால் இதை நாம் எப்படித்தான் எதிர்த்தாலும் இந்தச் சக்திகள் இப்போதைக்கு இதிலிருந்து விடுபடாது. பதிலாக தாமும் பலியாகி மக்களையும் பலியாக்குவதற்கே துணிகின்றன.

இலங்கை விவகாரங்களைப் பேசி, அவற்றுக்குத்தீர்வு காண்பதற்காக எந்தத் தரப்பையும் டெல்லிக்கு அழைக்கவில்லை மோதி என்பது தெளிவு. இந்தியாவின் நலன்களை உறுதிப்படுத்துவதே மோதியின் முதல் தெரிவாகும். இந்த அடிப்படையில்தான் அவர் தன்னுடைய பதவியேற்பின்போது இந்தியாவைச் சுற்றியுள்ள அயல்நாடுகளின் தலைவர்களை அழைத்திருந்தார். அயல் நாடுகளுடன் நல்லுறவை, நட்புறவைப் பேணி இந்தியாவைச் சுற்றி அரணைத்துக் கொள்வது. இதற்கான சாத்தியங்களை உருவாக்குவது. இதற்கான அக – புற நிலைகளை உருவாக்குவது. இதற்காக ஒவ்வொரு நாட்டிலுமுள்ள ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு, செல்வாக்குள்ள பிற தரப்புகள் எனப் பலவற்றோடும் உறவையும் தொடர்பையும் பேணுவது என இந்திய ஒரு புதிய அணுகுமுறைக்குள் நுழைந்துள்ளது. இதில் எந்தளவுக்கு வெற்றி கிட்டும். எல்லா நாடுகளும் இந்திய வியூகத்துக்குள் சிக்குமா? என்ற கேள்விகள் ஒரு புறமிருக்கட்டும். இந்தியாவின் இந்த முயற்சிகள் முக்கியமானவை. அதுவே கவனத்திற்குரியது.

ஆகவே, சீனாவை எப்படியும் வெளித்தள்ளி விடுவது என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதற்காக இந்தியா நிறைய முயற்சிக்கப்போகிறது. நிறையச் செலவழிக்கவும் போகிறது. சீனாவின் வியூகங்களை உடைக்க வேண்டும், அதனுடைய வேகத்தைக் கடக்க வேண்டுமானால் சீனா செலவழிப்பதை விட இந்தியா செலவழிக்க வேண்டும். சீனா முயற்சிப்பதை விட இந்தியா கடுமையாக முயற்சிக்க வேண்டும்.

கடந்த இருபது ஆண்டுகளில் இலங்கையிலும் இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளிலும் இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக்கொண்டு உதவிப்பணிகளை மேற்கொள்வதையும் முதலீடுகளைச் செய்வதையும் ஆராய்ந்து பார்த்தால் வியப்பளிக்கும் உண்மைகள் பலவற்றைக் கண்டு கொள்ளலாம். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது ஒன்றும் வெறுவார்த்தையல்ல. நலன்சார் அரசியலுக்கான குறியீட்டுச் சொல் அது.

அப்படியென்றால் இலங்கையில் அடுத்து வரவுள்ள ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் எல்லாம் இந்திய (மேற்குல) – சீனப் போட்டியாகத்தானிருக்கப்போகிறது என்று உங்களுக்குள்ளே கேள்வி எழலாம். நிச்சயமாக அப்படித்தான்.

வல்லாதிக்கச் சக்திகளின் புயலில் (சூறாவளியில்) சிக்கியிருக்கிறோம். சிறிய படகுகளின் வழியே இதைக் கடப்பதென்பது எளிதானதல்ல. ஆனாலும் பயணம் செய்யத்தானே வேணும். தப்பிக் கொள்ளத்தானே வேணும்.

இது இலங்கைக்கு மட்டுமான பிரச்சினையோ சவாலோ மட்டுமல்ல, இந்தியாவைச் சுற்றியுள்ள, இந்து சமுத்திரப்பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளுக்குமுள்ளதொரு சவாலே.

Share:

Author: theneeweb