யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் சர்ச்சைகளும் – . கருணாகரன்

வடக்கு மாகாணசபையின் ஆட்சிக் காலம் முடிந்த பிறகு புதிதாக முளைத்திருக்கும் ஒரு பிரச்சினை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளராகப் பதவி வகிக்கும் வைத்தியக் கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி, யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளமையினால் எழுந்திருக்கிறது. யாழ்ப்பாணப் போதானா மருத்துவமனைப் பணிப்பாளராகச் சத்தியமூர்த்தி பதவி வகிப்பதில் எந்தப் பிரச்சினையுமில்லை. அதற்கான தகுதியும் திறனும் ஆற்றலும் அவருக்குண்டு. ஆனால், அவர் சமநேரத்தில் மாகாண நிர்வாகத்தின் கீழுள்ள யாழ் பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளராக மத்திய அரசின் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருப்பதே சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது என்கின்றனர் இந்த நியமனத்தை எதிர்ப்போர்.

வைத்தியக் கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி
வைத்தியக் கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி

அவர்களுடைய வாதம், இந்த நியமனத்தை ஆளுநரே செய்ய வேண்டும் என்பதாகும். இது மத்திய அரசுக்குரிய அதிகாரமல்ல. மாகாண அதிகாரத்துக்குட்பட்டது. மாகாணசபை 2016 ஜனவரி 12 இல்  இயற்றிய நியதிச்சட்டத்தின்படி இந்தப் பதவிக்குரியவரை நியமனம் செய்யும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கே உண்டு என்று வாதிடுகிறார் வடக்கு மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான சின்னத்துரை தவராஜா.

இதே நிலைப்பாட்டை முன்னிறுத்தியே வடக்கு மாகாணசபையின் சபைமுதல்வர் சீ.வி.கே சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதை மீறுமிடத்து மாகாணசபைக்கான அதிகாரத்தை மீறுவதாக, அதைச் செயலிழக்கச் செய்வதாகவே அமையும் எனவும் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனால் இந்த விவகாரம் ஒரு பதவி நிலைக்கான நியமனப்பிரச்சினை என்பதைக் கடந்து மத்திய அரசுக்கும் மாகாண சபைக்குமிடையிலான அதிகார வரம்புகள் பற்றிய அரசியல் விவகாரமாகியுள்ளது. கூடவே பொறுப்புக் கூறல் விடயத்தில் கேள்விக்குரியதாகவும் மாறியுள்ளது. அதாவது இந்தப் பதவிக்குரிய நியமனத்தைச் செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்குரியதா? மாகாணசபைக்குரியதா? என்பதாக. மாகாண அதிகாரத்தை மத்திக்கு வழங்குதாக அமைந்து விடுமே என்ற அச்சமாக.

தவராஜா கீழ்வருமாறு குறிப்பிடுகிறார் “13வது திருத்தச்சட்டத்தில் மாகாணங்களுக்குகொடுக்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைவாக வடக்குமாகாணசபையினால் நிறைவேற்றப்பட்ட நியதிச்சட்டத்தின் பிரிவு 5(1)ல் பிராந்தியசுகாதாரசேவைகள் பணிப்பாளர் பதவி என்பது மாகாணசபைக்குரிய விடயமாக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்நியதிச்சட்டம் அமுலுக்கு வந்த திகதியிலிருந்து மத்தியின் சுகாதார சேவைகள் சட்டம் வடமாகாணத்தில் செல்லுபடியாகாது எனவும் அந்நியதிச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஆதலினால், இந்நியதிச்சட்டம் அமுலுக்குவந்த 23.02.2016 ஆம் திகதியிலிருந்து மத்தியின் சுகாதாரசேவைகள் சட்டமோ அல்லது அதன் தத்துவத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட சுற்றறிக்கைகள், வழிகாட்டல்கள், உபவிதிகள் எதுவுமோ இச்சேவையினைக் கட்டுப்படுத்தாது” என.

ஆனால், இந்த நியதிச்சட்டத்தின் பகுதி 1 – மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தை ஸ்தாபித்தல், அதன் யாப்பு மற்றும் பொறுப்புகள் என்ற தலைப்பின் கீழான பிரிவு 2(2) இல் குறிப்பிடுவதற்கிணங்க மேற்படி பதவிநிலையானது “அனைத்து இலங்கை சேவை (All Island Serviceயினைச் சார்ந்த உத்தியோகத்தர்களைத் தவிர” என வரையறுத்து, மாகாண அதிகாரத்துக்கு அப்பாலானது என்று தவிர்க்கிறது. ஆனால், ஏனைய சுகாதார உத்தியோகத்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாகாணசபைக்குரியதே. இதேவேளை அனைத்து இலங்கை சேவைக்குரிய உத்தியோகத்தர்களை நியமிக்கும் அதிகாரம் மத்திக்குரியது எனக் கூறுகிறது.

சின்னத்துரை தவராஜா.

இது குறித்து தவராஜாவே மேலும் கூறுகையில், “மாகாணசபைகள் ஏற்படுத்தப்பட்டபின் மாகாணசபைகளுக்கு தங்களது விடயப்பரப்புகளுக்குரிய மாகாணசேவைகளை (Provincial Sevices) ஆரம்பிப்பதற்குத் தத்துவம் இருந்தும், உயர்பதவி வகிப்பவர்கள் முழுநாட்டிலும் சேவையாற்றக்கூடிய அனுபவங்களைபெற்றவர்களாக இருக்க வேண்டுமென்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே அனைத்து இலங்கை சேவையினைச் (All Island Service)  சேர்ந்த நிர்வாகச்சேவை, கணக்காளர் சேவை, இயந்திரவியலாளர் சேவை, விஞ்ஞான சேவை, கல்வி நிர்வாகசேவை, திட்டமிடல் சேவை, விவசாய சேவை, கால்நடைவளர்ப்புசேவை, மருத்துவசேவை போன்ற சேவையினச் சேர்ந்தவர்களை மத்தியினால் மாகாணங்களுக்கு விடுவிப்பதற்கான இணக்கப்பாடுகாணப்பட்டது.

அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களை மாகாணங்களில் பதவியில் நியமிப்பது என்பது ஆளுனரையும், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவையும் சார்ந்தது. அவர்கள் மத்தியில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் என்ற முறையிலும் வெவ்வேறு மாகாணங்களுக்குப் பணியில் அமர்த்தப்படக்கூடியவர்கள் என்ற முறையிலும் அவர்கள்மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது, ஆரம்பகட்டவிசாரணைகள் தவிர்ந்த ஏனையவை மத்திய பொதுச்சேவை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் என்ற நடைமுறையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இன்று மருத்துவசேவையினைத் தவிர்ந்த மேலே குறிப்பிட்ட ஏனைய சேவையினைச் சேர்ந்த சகல உத்தியோகத்தர்களினதும் இடநியமனம் (Placement) மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினாலே கையாளப்படுகின்றது. அவர்களை மாகாணசபைக்கு விடுவிப்பது மட்டுமே மத்தியின் செயற்பாடாகும். மருத்துவசேவையினச் சேர்ந்தவர்களை மட்டும் இதுவரை மத்தியானது மாகாணத்திற்கு விடுவிப்பதோடு சேர்த்து இடநியமனத்தினையும் (Placementசெய்து வந்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அழுத்தத்தின் காரணமாகவே இவ்வாறான நடைமுறை பின்பற்றப்பட்டு வந்துள்ளது. இது அரசியல் அமைப்பிற்கும் மாகாணசபைசட்டமூலத்திற்கும் முரண்பாடான செயலாகும். இவ்வாறான இடநியமனங்கள் (Placement) அரசியல் அமைப்பிற்கும் மாகாணசபைகள் சட்டத்திற்கும் முரண்பாடாக இருத்தலாகாது என்பதற்காக, அதனைச் சட்டரீதியாக சீராக்குவதற்காக ஆளுநர்கள் அவ்வாறு இடநியமனம் பெற்றவர்களுக்கு மீளவும் நியமனங்களை வழங்குவது நடைமுறையாக இருந்து வந்துள்ளது” என்கிறார்.

ஆனால் அவ்வாறில்லை என்பதே உண்மை.

தவராஜா குறிப்பிடுவதைப்போலவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் நியதிச் சட்டம் இலக்கம் 1/2015 இல் குறிப்பிட்டுள்ளதைப்போலவும் 2016 பெப்ரவரி 08 இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அறிவுறுத்தல்கள் இருந்த போதும் அது பிரயோகமாகவில்லை என்பது கவனத்திற்குரியது.

மத்திய சுகாதார அமைச்சினால் இடமாற்றம் செய்யப்படுவோரையும் நியமனம் செய்யப்படுவோரையும் மாகாணத்தில் ஆளுநர் மீளவும் நியமனம் வழங்குவது நடைமுறையில் இல்லை. தற்போது பதவி நிலையில் உள்ள கிளிநொச்சி, வவுனியா, மன்னார் உள்ளிட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எவரும் கூட இப்படி ஆளுநரினால் மீள் நியமனம் செய்யப்பட்டதில்லை. சுகாதார சேவைகள் பணிப்பாளர் மட்டுமல்ல, சாதாரண மருத்துவர்களே அப்படி மீள் நியமனம் செய்யப்படுவதில்லை. மத்தியினால் இடநியமனம் (Placementசெய்யப்படுவோர் குறிப்பிட்ட இடத்தில் தமது பதவியைப் பொறுப்பேற்கும் தகவலை மாகாண சுகாதாரப் பணிப்பாளருக்கும் செயலாளருக்கும் மட்டுமே தெரியப்படுத்துகின்றனர். அதுவும் வெறும் தகவலாக மட்டும். தங்களுடைய இடநியமனக்கடிதத்தின் பிரதியை மாகாணப் பணிப்பாளருக்கும் செயலாளருக்கும் வழங்குகின்றனர். இதிலே இன்னும் ஊன்றிக் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், அவ்வாறு மத்தியினால் நியமிக்கப்படும் மருத்துவர்களும் அதிகாரிகளும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில்  இடநியமனம் (Placement செய்யப்பட்டே அனுப்பப்படுகிறார்கள். அவர்களை சம்மந்தப்பட்ட இடத்திலேயே உள்ளக இடமாற்றங்களைச் செய்யும் அதிகாரம் குறித்த நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கோ பணிப்பாளருக்கோ  செயலாளருக்கோ நடைமுறையில் இல்லை என்ற நிலையே உள்ளது. உதாரணமாக ஒரு மருத்துவமனைக்கு அனுப்பப்படும் மருத்துவர், வெளிநோயாளர் பிரிவுக்கா அல்லது நோயாளர் விடுதிக்கா என்பதையே மத்திய சுகதார அமைச்சே குறிப்பிட்டு அனுப்புகிறது. அவ்வாறு குறிப்பிட்டு அனுப்பப்படும் மருத்துவர் குறித்த பிரிவின் சேவைக்குரியவரே. அவர் நிலைமைகளின் தாற்பரியத்தைப் புரிந்து கொண்டு விரும்பினாலொழிய அவரை மருத்துவனையின் பொறுப்பதிகாரியோ மாகாணப்பணிப்பாளரோ செயலாளரோ வேறு பணிப் பிரிவுகளுக்குக் கட்டளையிட முடியாது. இங்கே அழுத்தமாகக் கவனிக்கப்பட வேண்டியது சட்டமூலத்தையும் விட நடைமுறை வலுவானதாக உள்ளது என்பதையே.

இதை தவராஜா இன்னொரு கட்டத்தில் ஏற்றுக்கொள்கிறார். “மாகாணசபை முறைமை அமுலுக்கு  வந்ததிலிருந்து, அதிகாரப்பகிர்வு வேண்டிநின்ற வடக்குகிழக்கு மாகாணங்களில், ஒரு குறுகியகாலம் இணைந்த வடக்குகிழக்கின் ஆட்சி நடந்த காலத்தைத்தவிர, அரசியல் தலைமைப்பீடத்தின்கீழ் மாகாணசபைகள் செயற்படாததன் விளைவாக இதனைத் தட்டிக்கேட்க எவரும் முன்வரவில்லை. இதனைச்சீர் செய்திருக்க வேண்டிய பொறுப்பு கடந்த ஐந்து  வருடங்களாக ஆட்சியிலிருந்த வடமாகாணசபையைச் சாரும். அவர்கள் இப்பிரச்சினையைச் சரியாகக் கையாண்டு நெறிப்படுத்தி இருந்தால் இன்று இவ்வாறானதோர் தெளிவற்ற சூழல் ஏற்பட்டிருக்காது” என.

இது ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மையாகும்.

அவர் மேலும் இன்னொன்றையும் சொல்கிறார் “வடமாகாணசபையின் நியதிச்சட்டத்தைஉருவாக்கியபின் அந்நியதிச்சட்ட ஏற்பாடுகளுக்கமைவாக மாகாணசுகாதாரசேவைகள் சேவைக்குறிப்பொன்றை ஏற்படுத்தி மாகாணபொதுச்சேவை ஆணைக்குழுவின் ஊடாக ஆளுநரின் சம்மதத்திற்குச் சமர்ப்பிக்கவேண்டுமென பலமுறை நான் மாகாணசபையிலும், சுகாதாரசேவை ஆலோசனைக்கூட்டங்களிலும் கூறிவந்திருக்கின்றேன். அவையாவும் செவிடன் காதில் ஊதியசங்கின் கதையாகிற்று. எனது கூற்றினை விளங்கிக்கொள்ள முடியாதவர்களாக சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளர், எமது நியதிச்சட்டத்தின்கீழ் புதிய சுற்றறிக்கைகள், வழிகாட்டல்கள், உபவிதிகள் என்பன ஏற்படுத்தப்படல் வேண்டுமா, அல்லது ஏற்கனவே மத்திய சுகாதார சேவைகள் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட சுற்றறிக்கைகள், வழிகாட்டல்கள், உபவிதிகள் என்பனவற்றை மாகாணசபையில் நடைமுறைப்படுத்தலாமா என சட்டமா அதிபர் திணைக்களத்திடம் அபிப்பிராயம் கோரியிருந்தார்” என்று.

ஆக மாகாணசபையானது, தனக்குரிய அதிகாரத்தை முறையாகப் பிரயோகப்படுத்துவதில் சிரத்தையற்றிருந்திருக்கிறது. அல்லது பலவீனமாகவே இருந்துள்ளது. இதனால் மத்தியே அதிகாரச் செல்வாக்கைச் செலுத்தும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நடைமுறையானது மாகாணசபைக்கான அதிகார வரம்பைக் குறைப்பதாக – 13 திருத்தத்தைப் பலவீனப்படுத்துவதாக இருந்தாலும் – இதுவே இதுவரையிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. அப்படியென்றால் இந்தத் தவறுக்கான பொறுப்பினை மாகாணசபையின் ஆட்சிப்பொறுப்பிலிருந்தோரே ஏற்க வேண்டும். மேலும் இந்தத் தவறு தொடராமல் தடுக்கப்பட வேண்டுமானால் அதற்கு சட்டவரம்பை மட்டும் கவனப்படுத்திப் பேசிக்கொண்டிருக்காமல், அதை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும்.

குறிப்பாக மருத்துவ சேவையே கட்டுக்கடங்காத விவகாரமாக – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அழுத்தத்தின் காரணத்தினால் – உள்ளதென்றும் கூறப்படுகிறது. அப்படியென்றால் மாகாணசபையின் அதிகாரத்தை மீறக்கூடிய நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலுவானதாக உள்ளதா? மத்திய அரசாங்கமே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படும் நிலையே காணப்படும் நிலையில் இதை எப்படி மாகாணசபை கையாளப்போகிறது? இதேவேளை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிபந்தனைகள் மட்டுமல்ல, இந்த விசயம் குறித்து நம்முடைய சூழலில் உள்ள யதார்த்த நிலையும் பிரச்சினையாகவே இருக்கிறது. வடக்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளுக்கான மருத்துவர்களும் மருத்துவ நிர்வாக அதிகாரிகளும் போதாத நிலையே காணப்படுகின்றன. வடக்கைச் சேர்ந்தவர்கள் மருத்துவர்களாக ஆண்டுதோறும் படித்து வெளியேறினாலும் அவர்கள் அனைவரும் நாட்டில் சேவையாற்றுவர் என்றில்லை. ஏற்கனவே உள்ளவர்களிலும் பாதிப்பேருக்கு மேலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். அல்லது வடக்குக் கிழக்குக்கு வெளியே – கொழும்பு, கண்டி போன்ற இடங்களில் வேலை செய்கின்றனர். இந்த நிலையில் வடக்கில் தென்பகுதியைச் சேர்ந்தவர்களே பணிக்கு வரவேண்டியுள்ளது. தற்போது நயினாதீவு, அம்பன், புங்குடுதீவு போன்ற பின்தங்கிய இடங்களிலெல்லாம் தென்பகுதியைச் சேர்ந்த மருத்துவர்களே பணியாற்றுகின்றனர். இதன்படி மருத்துவர் மற்றும் மருத்துவத் தாதியர் போன்ற தேவைகளுக்கு மத்தியை எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலையே உள்ளது.

இதைக் கடந்த 15.06.2019 அன்று சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவினால் கூட்டப்பட்ட வடக்கு மாகாண மருத்துவ அதிகாரிகளுடனான கலந்துரையாடலின்போது அமைச்சரும் சுட்டிக்காட்டியிருக்கிறார். “வடக்கிலே உள்ள மருத்துவர்களைக் கொண்டே அங்குள்ள தேவைகளை நிறைவேற்றும் வரையில் மத்தியிலிருந்தே ஆளணியை நிரப்ப வேண்டியிருக்கிறது. அப்படி ஆளணி நிரப்பலைச் செய்யும்போது மத்தியே தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்க வேண்டியுள்ளது. பிள்ளை சுயமாக நடந்து திரியக்கூடிய நிலை வரும்வரையில் பெற்றோரின் உதவி தேவைப்படுமல்லவா. அதைப்போலவே மாகாணசபை சுயமாகச் செயற்படக் கூடிய, தன்னுடைய தேவைகளை தானே பூர்த்தி செய்யக்கூடிய நிலை வரும் வரையில் மத்தி உதவியாக இருக்கும். இந்த நோக்கில்தான் நாம் செயற்படுகிறோமே தவிர, மாகாணசபையின் அதிகாரங்களுக்குக் குறுக்கே நிற்பது எங்கள் நோக்கமில்லை” என.

அவர் மேலும் ஒரு விடயத்தையும் சுட்டிக்காட்டினார். “யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிக்கு நாம் பொருத்தமான  ஒருவரையே (சத்தியமூர்த்தியை) நியமித்திருக்கிறோம். அவர் தன்னுடைய பணிகளைச் செய்ய முடியாத நிலை அங்கே உருவாக்கப்பட்டுள்ளது. இதைச் சீர்ப்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்குண்டு. அங்கே நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மருத்துவக்கலாநிதி தேவநேசன், அங்கிருந்து வேறு இடத்துக்கு நியமிக்கப்பட வேண்டும். இதைக்குறித்து ஆளுநருக்கும் அங்குள்ள அரசியல் தலைமையினருக்கும் விளக்கியுள்ளேன்” என்று.

அமைச்சர் இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த தேவநேசன் எழுந்து தனது ஆட்சேபனைத் தெரிவித்தார். “தவறான தகவல்களின் அடிப்படையிலேயே என்னுடைய பதவிநிலையை நீங்கள் மறுக்கிறீர்கள். இது தவறு” என.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், “பல்வேறு தரப்பினரின் முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவுக்கு நாம் வந்தோம். அத்துடன் தகுதிகாண் அடிப்படையிலேயே நாம் பொருத்தமானவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படியே சத்தியமூர்த்தி நியமனம் செய்யப்பட்டார். தங்களுக்குரிய தகுதியின் அடிப்படையில் தங்களுக்கான இடநியமனம் செய்யப்படும்” என்றார்.

எனினும் அமைச்சரின் இந்தப் பதிலை தேவநேசன் ஏற்றுக்கொள்ளும் நிலையிலிருக்கவில்லை. இதனை ஆட்சேபிக்கும் வகையில் திரும்பவும் தன்னுடைய தரப்பு நியாயத்தை வலியுறுத்த முற்பட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் அமைச்சின் அதிகாரிகள் தேவநேசன் மீதான முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே மத்திய சுகாதார அமைச்சு இந்த முடிவுக்கு வந்திருக்கிறது என்றும் நிலைமையைச் சுமுகமாக்கி மக்களுக்கான சேவையைத் தொடர்வது அவசியமெனவும் குறிப்பிட்டனர். இதன்படி தேவநேசன் ஊர்காவற்றுறை மருத்துவமனைப் பொறுப்பதிகாரியாக கடமையைப் பொறுப்பேற்கும்படி கேட்கப்பட்டார். அதைத் தேவநேசன் மறுத்தார். இதனையடுத்து பொருத்தமான இடமொன்றைத் தெரிவு செய்யுங்கள். அங்கே உங்களுக்கான இடநியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி இந்தப் பதவிக்குரியவர்களை மத்திய சுகாதார அமைச்சே நியமிக்கும் என்பது நடைமுறைகள் மூலம் நிரூபணமாகிறது. மத்தி – மாகாண நிர்வாக அதிகார வரன்முறையில் இதைப்பற்றிய அழுத்தமான தெளிவுறுத்தல் இடப்படவில்லை என்பது மயக்கமே தவிர, இந்த நியமனமானது மாகாணத்துக்குரியதல்ல என்பதை நடைமுறையும் நிரூபிக்கிறது. இதைப்பற்றி இதுவரையில் மாகாணசபையினர் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதில்லை. மாற்று ஏற்பாடுகளை – மாகாண சுகாதார அமைச்சோ, ஆளுநரோ செய்ததுமில்லை. ஆக முல்லைத்தீவு மாவட்ட பிராந்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக மட்டும் மாகாண சுகாதார அமைச்சுத் தலையீடு செய்துள்ளது. இதைத் தவராஜா  தன்னுடைய வாதத்துக்குச் சாட்சியமாக்குகிறார். ஆனால், அப்போது முல்லைத்தீவுக்கான பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட மருத்துவர் திலீபன் மேலும் சர்ச்சைப்பட விரும்பாமல் ஒதுங்கிக் கொண்டதால் குறித்த சந்தர்ப்பத்தில் மாகாணசபை இன்னொருவரை நியமனம் செய்தது. இதைக்குறித்த சர்ச்சைகளோ எதிர்ப்புகளோ எழாத காரணத்தினால் இது அப்படியே அமைதியாயிற்று.

இந்தப்பத்தியாளரின் கருத்தும் நிலைப்பாடும் மாகாணத்துக்கான அதிகாரத்தை மத்தி எடுக்கக்கூடாது என்பதுடன் மாகாணமும் அதை விட்டுக்கொடுக்கக்கூடாது என்பதே. ஆனால், அதற்கான அக – புறச் சூழல்களை நாம் மதிப்பிட்டு உருவாக்கிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அதனால் பாதிக்கப்படுவது மக்களாகவே இருக்கும். ஏற்கனவே பல்வேறு திட்டங்களும் நடவடிக்கைகளும் இதேபோன்ற இழுபறிகளால் சிக்கலடைந்தது வரலாறு. அவற்றின் இழப்பு மக்களையே பாதிக்கிறது. அந்த வகையில்தான் இந்த விடயமும் அணுகப்படுகிறதே தவிர, மாகாண அதிகாரத்தை மத்தியிடம் இழக்கும் வகையில் அல்ல. தனிப்பட்ட ரீதியில் யாருக்கும் ஆதரவானதோ எதிரானதோ கிடையாது. ஆனால், ஒன்றை நிச்சயமாக இந்தச் சந்தர்ப்பத்தில் சொல்ல வேண்டும். அது சத்தியமூர்த்தியின் இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்வதில் பலருக்கும் உள்ள மனச்சங்கடமே இவையெல்லாவற்றுக்குமான புள்ளியாகும். இந்த மனச்சங்கடத்தின் உள்ளே மறைந்து கிடக்கும் அரசியலும் நஞ்சும் சாதாரணமானதல்ல. அது வரலாற்றையும் வளர்ச்சியையும் பின்னிழுக்கும் விசமாகும்.

இதேவேளை நெருக்கடிகளின் மத்தியிலேயே (புயலின் மத்தியிலேயே படகோட்டும்) வாழ்ந்துபணியாற்றியஅனுபவங்களைக்கொண்டவரலாற்றைக்கொண்டசத்தியமூர்த்திக்குஇதுஇன்னொருஅனுபவத்தைத்தரக்கூடும். அவர்பிராந்தியசுகாதாரசேவைகள்பணிப்பாளராகப்பொறுப்பேற்றகையோடுதீவுப்பகுதிகளிலும்வடமராட்சிகிழக்குப்போன்றபின்தங்கியபகுதிகளிலும்மேற்கொண்டநடவடிக்கைகள்அவருடையதனித்தமுத்திரையாகும்.

வரலாற்றுநாயகர்கள்எப்போதும்புதியதிசைகளையேகாட்டுவர். புதியபாதைகளைஉருவாக்குவர். எத்தகையசவால்களாயினும்.

Share:

Author: theneeweb