வெள்ள அனர்த்தங்கள்: என்ன செய்யவேண்டும்?

பகுதி: 2

–          கருணாகரன்—

இடர் அல்லது அனர்த்தத்துக்கு வலுவான சக்தி உண்டு. அது பேதங்களைக் கடந்து மனிதாபிமானத்தை மேலுயர்த்தும். மனித மாண்பை வெளிப்படுத்தும். இதன்போது உருவாகும் அன்பையும் கருணையையும் புரிந்துணர்வையும் புதிய உறவுகளையும் கவனத்திற் கொண்டு, முரண்பாடுகளைக் களைவதற்கான வழிகளை உருவாக்குவதே அரசியல் பணி. அதுவே அரசியல் கடமையாகும். ஆனால், அது நடப்பதில்லை. அப்படி நடக்காமல் விட்டால் பரவாயில்லை.  இது இப்போது எதிர்மறையாக அல்லவா பிரயோகிக்கப்படுகிறது.

 

இது எப்படி என்று யாரும் கேட்கலாம்.

 

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்களை வழங்குவதற்கு வரும்போதும் அதில் தங்களுடைய அரசியல் அடையாளம் முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதை அரசியல் தரப்பினர் குறியாகக் கொண்டிருக்கின்றனர். இதனால்உருவாகும்போட்டியும்முரண்பாடுகளும்சனங்களையும்குழப்பத்துக்குள்ளாகுகின்றது. சனங்களைப்பராமரிக்கும்பணியிலிருக்கும்உத்தியோகத்தர்களையும்தொண்டர்களையும்குழப்புகிறது.

 

பலஇடங்களில்தொண்டர்களைப்போலஅரசியல்வாதிகளேவேசம்போட்டுக்கொண்டிருக்கிறார்கள்…

 

குறிப்பாக இது தமிழ் அரசியல் தரப்புகளிடையேதான் கூடுதலாகக் காணப்படுகிறது.

 

கிளிநொச்சி வெள்ள அனர்த்தத்துக்கான உதவிப் பணிகளின்போது என்ன நடந்தது என்பதை ஒவ்வொரு இடமாக ஆராய முற்படுவோர் இதனை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

 

இந்த நிலை தொடருமானால் எதிர்காலத்தில் மோசமானதொரு அவலக் கலாச்சாரத்தில் தமிழ்ச்சமூகம் தள்ளப்படும்.

 

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவது என்பது உயர்ந்த ஒரு மனிதாபிமானச் செயல். அதில் எப்படிக் கீழான அரசியல் ஆதாயத்தைத் தேட முடியும்? அப்படித் தேட முற்பட்டால் அது இழிவன்றி வேறென்ன? அரசியல் என்பது நெறிமுறையான, பண்பாடான, அறிவுபூர்வமான, பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்கான சிந்தனையையும் செயற்பாட்டையும் இணைத்த பொறிமுறையாகும். அப்படியென்றால், இதெல்லாம் என்ன வகையானவை?

 

பொதுவாகவே வலது கை கொடுப்பதை இடது கை அறியக் கூடாது என்று சொல்வார்கள். தமிழ் வாழ்க்கையும் தமிழ்ப்பண்பாடும் அத்தகைய செழுமையை உடையது. ஆனால், இங்கே நடந்ததும் நடந்துகொண்டிருப்பதும் என்ன?

 

கொடுப்பது சிறிய உதவி. எடுக்கும் படங்களும் அதைப் பிரபல்யப்படுத்தும் (வியாபாரமாக்கும் ) முயற்சிகளும் பெரிது. இது இழிவன்றி வேறென்ன?

 

இதைப்பற்றி இப்படி நிறையச் சொல்ல முடியும். அதற்கு இது நேரமில்லை.

 

“உதவி செய்ய வந்தவர்கள் தங்கள் நோக்கிலும் எதையாவது செய்யத்தான் முயற்சிப்பார்கள். அப்படியான காலம் வந்த பிறகு இதற்கு  மேல் எதையும் எதிர்பார்க்க முடியாது” என்று சொல்வோருடைய கருத்துகளையும் கவனத்திற் கொள்கிறோம். ஆனாலும் அதற்கும் ஒரு எல்லை உண்டு. இப்படி எல்லை மீறிக் கீழிறங்குவது அசிங்கம்.

 

இதைப்பற்றியெல்லாம் இன்னும் சில நாட்கள் கழித்து விரிவாகப் பேசுவோம். இப்பொழுது பேசினால் பாதிக்கப்பட்டோருக்கான உதவிகள் கிடைப்பதில் மண் அள்ளிப் போடுவதாக முடிந்து விடும் என்று முணுமுணுப்பார்கள்.

 

ஆகவே இதை தள்ளி வைத்து விட்டு, இன்னொரு கோணத்தில் இந்த வெள்ள அனர்த்தம் குறித்து நமது கவனத்தைச் செலுத்தலாம். அது கிளிநொச்சியில் தொடர்ச்சியாகவே ஏற்படும் வெள்ள அனர்த்தத்தைப் பற்றியதாகும்.

 

கிளிநொச்சியில் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்ட பிறகான 70 ஆண்டுகளில் மழை வீழ்ச்சி குறைந்த காலத்தைத் தவிர மற்ற எல்லா ஆண்டுகளிலும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருக்கிறது. நேற்று 31.12. 2019 கிளிநொச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வந்த பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் கூட முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கிளிநொச்சியிலிருந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு ஹற்றனுக்குச் சென்றவரே. இதை அவர் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தபோது அவர்களிடம் கூறினார்.

இந்த வெள்ள அனர்த்தம் வரவரக் கூடிக் கொண்டேயிருக்கிறதே தவிரக் குறையவில்லை. உண்மையில் சமூகமும் அபிவிருத்திச் சிந்தனைகளும் மேம்படும்போது அனர்த்தங்கள் குறைய வேண்டும். அதுதான் வளர்ச்சியாக இருக்கும். இங்கே இது எதிராக மாறியுள்ளது. வரவர அனர்த்தம் கூடிக் கொண்டு செல்கிறது.

 

இதற்குப் பல காரணங்கள் உண்டு.

1.   பெரிய குளங்களான இரணைமடு, கல்மடு, அக்கராயன், கனகாம்பிகை போன்றவற்றிலிருந்து வெளியேறும் மேலதிக நீர் பாயும் வடிநிலப் பகுதியை  ஆக்கிரமித்திருக்கும் அத்துமீறிய குடியேற்றங்கள். இந்தக் குடியேற்றங்கள் நீர் வடிந்தோடும் வழியை மறித்து விட்டன. இதனால் நீர் ஊருக்குள் வெள்ளமாகப் புகுந்து விளையாடுகிறது.

 

2.   நீரோடும் வழிகள், வாய்க்கால்கள் சீர் செய்யப்படாமல் காடும் புதரும் மேடுமாகக் கைவிடப்பட்டிருப்பது. போதாக்குறைக்கு அங்கு மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மணல் மற்றும் கிரவல் அகழ்வு. இதைக் கண்காணித்து சீர்ப்படுத்துவதற்கான பொறிமுறைகள் எதுவுமே இல்லை.

 

 

3.   நகர அபிவிருத்திக்கான திட்டமிடற்குழு மற்றும் காணிப்பயன்பாட்டுக்குழுக்கள் சரியாக – முறையாக – சுயாதீனமாகச் செயற்பட்டிருக்குமானால் பொதுக்காணிகள் அபகரிக்கப்படுவதும் நீரோடும் வழிகள் மறிக்கப்பட்டுத் தடுக்கப்படுவதும் தவிர்க்கப்பட்டிருக்கும். ஒழுங்கமைக்கப்பட்ட குடியிருப்புகளும் அவற்றுக்கேற்ற வடிகாலமைப்பும் உருவாக்கப்பட்டிருக்கும். ஆகவே இந்தக் குழுக்களின்  அறிவுறுத்தல்கள், ஆலோசனைகள் பெறப்படாமல் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் உருவாக்கிய நெருக்கடிகளே இந்த வெள்ள அனர்த்தத்திற்குப் பிரதான காரணம்.

 

4.   பொறுப்பு மிக்க அரச உத்தியோகத்தர்களான கிராம அலுவலர்கள், பிரதேச செயலர்கள், திட்டமிடல் அதிகாரிகள், அரச அதிபர் மற்றும் நீர்ப்பாசனத்திணைக்களம், கல்வித்திணைக்களம், பிரதேச சபையினர் போன்றவர்களின் அசமந்தப்போக்கும் பொறுப்பின்மையும் சனங்களின் விட்டேத்தித்தனமான செயற்பாடுகளுக்கு ஊக்கமாக அமைந்துள்ளன.

 

5.   வீதிப் புனரமைப்பு அல்லது நிர்மாணம், கட்டிடம் அமைத்தல், பயிர்செய்கை நிலத்தை அனுமதித்தல், குளங்கள் மற்றும் நீரேந்து பகுதிகளை உருவாக்குதல் போன்றவற்றில் போன்ற உட்கட்டுமான அபிவிருத்தியில் ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் நிகழாமை.

 

6.   எங்குமே உரிய முறையிலான வடிகாலமைப்பு இல்லாதிருப்பது.

 

7.   நகர, கிராம அபிவிருத்தித் திட்டங்களில் புவியியல் அமைப்பு, வெள்ள நிலைமை  குறித்த ஆய்வறிவு பிரயோகிக்கப்படாமை

 

8.   சிறியளவிலான நீர் நிலைகள், வயல் நிலங்கள், மேய்ச்சல் தரைகள் போன்றன மேடுறுத்தப்பட்டமை.

 

துபோன்ற பல காரணங்களே வெள்ள அனர்த்தம் தொடர்கதையாக – தொடர் நிலையாக ஆண்டுதோறும் ஏற்படுகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும் கண்டாவளை, பன்னங்கண்டி, பெரியபரந்தன், இரத்தினபுரம், ஆனந்தபுரம், மருதநகர், பரவிப்பாஞ்சான், சேத்துக்கண்டி, முரசுமோட்டை, தருமபுரம், கட்டைக்காடு, பெரிய குளம், புன்னைநீராவி, பிரமந்தனாறு, மயில்வாகனபுரம், கோரக்கன்கட்டு, தட்டுவன்கொட்டி, குமரபுரம், காஞ்சிபுரம், சிவபுரம் உள்ளிட்ட சில பிரதேசங்கள் பாதிக்கப்படுகின்றன. மாரி காலம் வரும்போது இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ளத்தைப் பற்றிய உளவியல் நெருக்கடிக்குள்ளாகின்றனர்.

 

இவர்களுடைய தொடர் நெருக்கடிக்கு ஆண்டு தோறும் வழங்கப்படுகின்ற தற்காலிக நிவாரணம் (உணவு மற்றும் அத்தியாவசியப் பயன்பாட்டுப் பொருள்கள்) போதாது. அது தீர்வும் அல்ல.

 

தற்போது நடந்த, நடந்து கொண்டிருக்கிற வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் உதவிக்கான உயர் மட்ட ஆலோசனைகளின்போது கூட இவற்றைக் குறித்து யாரும் சிந்தித்ததாக இல்லை. கிளிநொச்சிக் கச்சேரியில் பிரதமர் மற்றும் வெவ்வேறு அமைச்சர்கள் தலைமையில் பல கூட்டங்கள் நடக்கின்றன. ஒருதருமே நிரந்தரத்தீர்வைப்பற்றிப் பேசியதாக இல்லை. தொடர் வெள்ளத்துக்கான காரணத்தைப்பற்றி ஆராய முற்பட்டதும் இல்லை.

 

கிளிநொச்சி மக்கள் சிந்தனைக் களம் இதைக்குறித்து  தன்னுடைய சிந்தனைகளை முன்வைத்திருப்பதாக அறிய முடிகிறது. ஆனால் அதுவும் எவ்வளவு தூரம் கவனத்திற் கொள்ளப்படும் என்பது கேள்வியே.

 

ஆகவே ஆண்டுதோறும் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதும் அதற்கு நிவாரணம் கொடுப்பதும் அழுது புலம்புவதும் அனர்த்தத்தில் அரசியல் செய்வதும் தீர்வல்ல. இந்தப் பிரச்சினைக்கான காரணிகளைக் கண்டறிந்து நிரந்தப் பரிகாரம் தேடுவதே நிரந்தரத் தீர்வாகும்.

 

அதுவே உண்மையான நிவாரணமும் உண்மையான உதவியும் உண்மையான மீட்புப்பணியுமாகும். இதைச் செய்வதற்கு யார் தயார்? யார் முன்வருவது?

 

00

 

 

Share:

Author: theneeweb