ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறார்களின் தகவல்களை திரட்டுவதில் சட்ட சிக்கல்?

ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் போது உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட சிறார்களின் தகவல்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் இதுவரை உரிய முறையில் திரட்டப்படவில்லை.

ஈஸ்டர் ஞாயிறு தினத்தின் போது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்திருந்ததுடன், 500 ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

இந்த சம்பவத்தில் பெருமளவிலான சிறார்களும் பாதிக்கப்பட்டதாக அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இலங்கையில் சிறார்கள் தொடர்பிலான தகவல்களை திரட்டும் பொறுப்பு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வசமிடம் உள்ளது, இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்று சுமார் 56 நாட்கள் கடந்துள்ள போதிலும், உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட சிறார்களின் முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

தாக்குதல் நடத்தப்பட்ட நீர்கொழும்பு – கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட சிறார்களின் தகவல்கள் மாத்திரமே இதுவரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் திரட்டப்பட்டுள்ளது.

கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் 23 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் அவர்களில் 18 சிறுமிகளும், 5 சிறுவர்களும் அடங்குவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு சிறுமி காணாமல் போயுள்ளதாக புகார் ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் 61 சிறார்கள் காயமடைந்துள்ளனர்.

இவர்களில் 30 சிறார்களுக்கு சிறு அளவிலான காயங்களும், 31 சிறார்களுக்கு கடும் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கட்டுவாபிட்டிய தாக்குதல் சம்பவத்தில் 19 சிறார்கள் தாயை இழந்துள்ளதுடன், 4 சிறார்கள் தந்தையை இழந்துள்ளனர்.

அத்துடன், தந்தை மற்றும் தாயை இழந்த 3 சிறார்கள் கட்டுவாபிட்டிய பகுதியில் உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3 சிறார்களுக்கு சட்டத்தின் பிரகாரமான பாதுகாவளர் ஒருவர் அவசியமாக காணப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

42 குடும்பங்களைச் சேர்ந்த 78 சிறார்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கும் தேவை காணப்படுவதாக அதிகார சபை குறிப்பிடுகின்றது.

மேலும், 16 சிறார்களுக்கு கல்விக்கு உதவிகளை வழங்கும் தேவை காணப்படுவதுடன், மூன்று குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு வாழ்வாதார தேவையும் அத்தியாவசியம் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டுகின்றது.

இந்நிலையில் ஏனைய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த சிறார்களின் தகவல்கள் ஏன் திரட்டப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைச் சட்டம் 1998 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி வர்த்தமானி ஊடாக வெளியிடப்பட்டது.

சிறுவர்களின் பாதுகாப்பு, சிறுவர்களை துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாத்தல், துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட சிறார்களுக்கான சிகிச்சை உள்ளிட்ட சிறார்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் சிறார்களுக்கான சட்டம் வலுவாக உள்ள நிலையில், பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த சிறார்கள் தொடர்பான தகவல்களை திரட்டுவதில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஏன் தாமதமாக செயற்படுகின்றது என பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் முக்கிய அதிகாரியொருவருடன் இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ் பேசியது.

குறிப்பாக தேசிய பாதுகாப்பு அதிகார சபைக்கு பல சட்டத்தின் பிரகாரம் பொறுப்புக்கள் காணப்படுகின்ற போதிலும், பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த சிறார்களின் தகவல்களை திரட்டுவதற்கு முடியாத நிலைமை காணப்படுவதாக தெரிவித்தார்.

பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்படும் அல்லது உயிரிழக்கும் சிறார்களின் தகவல்களை திரட்ட முடியாமைக்கான காரணம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்டத்தின் ஒரு சரத்தில் மாத்திரமே வன்முறைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஆயுதப் போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர் தொடர்பில் மனிதாபிமான நடவடிக்கைகள் எடுப்பதற்கும், அத்தகைய பிள்ளைகளின் மன மற்றும் உடல்ரீதியான நலன் உட்பட அவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் மீண்டும் சமுதாய நீரோட்டத்தில் ஒன்றிணைதல் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை விதந்துரைத்தல்”

1998 ஆம் ஆண்டு 50 ஆம் இலக்க, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைச் சட்டத்தில் இந்த விடயம் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயுதப் போராட்டம் என்றால், இரண்டு தரப்புக்கு இடையில் இடம்பெறும் மோதல் என்ற பொருளை வழங்குவதாக அதிகார சபையின் முக்கிய அதிகாரியொருவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல், இரு தரப்புக்கான மோதல் கிடையாது என கூறிய அவர், அது ஒரு தரப்பு மாத்திரம் தலையீடு செய்து, தாக்குதல் நடத்தியதாகவே கருதப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்த சட்டத்தில் காணப்படுகின்ற சரத்துக்களின் பிரகாரம், பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் போது உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட சிறார்கள் தொடர்பான தகவல்களை திரட்டுவதில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பாரிய பிரச்சினைகளை முகம்கொடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்டம் உருவாக்கப்பட்டு, 20 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தற்போதைய நிலைமைக்கு ஏற்ற வகையில் அதனை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இலங்கையிலுள்ள சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைச் சட்டத்திற்குள் முக்கிய மூன்று விடயங்கள் தற்போதைய நிலைமைக்கு உள்வாங்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

01. இயற்கை அனர்த்தங்களின் போது உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட சிறார்களின் தகவல்களை திரட்டுதல் மற்றும் உதவிகளை வழங்குதல்.

02. பயங்கரவாதத் தாக்குதலின் போது உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட சிறார்களின் தகவல்களை திரட்டுதல் மற்றும் உதவிகளை வழங்குதல்.

03. இணையத்தின் மூலம் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுகின்ற சிறுவர்களை பாதுகாக்கும் வகையிலும், பாதிக்கப்பட்ட சிறார்களின் தகவல்களை திரட்டுதல் மற்றும் உதவிகளை வழங்கும் வகையில் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.

இந்த விஷயம் தொடர்பில் பிபிசி தமிழ், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.அபயரத்னவிடம் வினவியது.

தாக்குதல் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த சிறார்களின் தகவல்களை தாம் தொடர்ச்சியாக திரட்டி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் சில வாரங்களுக்குள் தாம் அந்த தகவல்களை திரட்டி ஊடகங்களுக்கு வெளியிட நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சட்டத்தின் சரத்துக்களினால் தமக்கு பெரியளவில் பாதிப்புக்கள் கிடையாது என கூறிய அவர், தமது அதிகாரிகளின் குறைப்பாடுகளுகே இந்த தகவல்களை திரட்டுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணம் எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.அபயரத்ன குறிப்பிட்டார்.

Share:

Author: theneeweb