குற்றவாளிகள் தீவிரவாதிகளா அல்லது பொலிஸாரா?

 

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள் பொறுப்பதிகாரி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் இன்று சாட்சி வழங்கினார்கள்.

இதன்போது கருத்து தெரிவித்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி, தான் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பதவியேற்ற போது  அப்பகுதியில் மிகவும் அமைதியான சூழ்நிலை நிலவியதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஸஹ்ரான் ஹஷீம் மற்றும் அவருடைய சகோதரன் அப்பொழுது பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று இருந்ததாக தகவல்கள் கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்

தன்னுடைய காலத்தில் அவர்கள் தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என அவர் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கும் போது தெரிவித்துள்ளார்.

எவ்வாறு இருப்பினும் ஸஹ்ரான் இருக்கும் இடம் தொடர்பில் கண்டுபிடிக்க முடியாமல்  இருந்ததாக தெரிவித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஸஹ்ரான் வருகை தந்தால் நிச்சயமாக மக்கள் அவர்களுக்கு அறிவிப்பதாக தெரிவித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது பாராளுமன்ற தெரிவுக் குழுவினர், காத்தான்குடி அமைப்பின் செயலாளர் சாட்சி வழங்கும் போது பொலிஸாருக்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டு இருப்பினும் அவர்கள் ஸஹ்ரான் சார்பில் கடமையாற்றி இருந்ததாகவும் குற்றம் சுமத்தி இருந்ததாக கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கு பதிலளித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவருக்கு எவ்வித முறைப்பாடுகளும் முன்வைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தனக்கு முன்னிருந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் 13 பேர் கைதுசெய்யப்பட்டு இருந்ததாகவும் ஒரு வருடத்திற்கு முன்னர் அவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் பிணை வழங்கப்பட்டிருந்ததாகவும் எவ்வாறாயினும் ஒவ்வொரு மாதமும் இறுதி வாரத்தில் அவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து கையொப்பமிட்டு செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வன்முறை செயலில் ஈடுபட்டமை மற்றும் பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஸஹ்ரானுடைய தந்தை மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டு இருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காணியொன்றில் உரிமையாளர் அற்ற  மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றிய எரிவதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது அது வெடிப்பு சம்பவம் ஒன்று என கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அதை உறுதி செய்வதற்கான  இரசாயன பகுப்பாய்வு அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னர் குறிப்பிட்ட பிணையில் விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் ஸஹ்ரானுக்கு உதவி வழங்கியமை மற்றும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிணை வழங்கப்பட்ட பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு ஒரு நாள் மாத்திரம் வருகைதந்து இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவார்களாயின்  அவர்கள் தொடர்பில் அவதானமாக இருப்பது பொலிஸாரின் கடமை அல்லவா என கேள்வி எழுப்பிய சரத் பொன்சேகா, பிணை வழங்கப்பட்ட பின்னர் பொலிஸ் நிலையத்தில் வந்து கையொப்பம் இடுவதன் அர்த்தம் என்ன? யார் குற்றவாளி தீவிரவாதிகளா? பொலிஸாரா? அல்லது மக்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,  குறித்த நபர்கள் காத்தான்குடி எல்லைக்குள் எவ்வித குற்ற செயல்களிலும் ஈடுபடவில்லை எனவும் அவர்கள் நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளிலேயே  இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்

எவ்வாறாயினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் இவ்வாறான அவதானமான சூழ்நிலை குறித்து  எந்த ஒரு மேல் அதிகாரியும் தனக்கு அறிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb