ஆபிரிக்காவின் நுழைவாயில் ( அங்கம் – 03) பல்லின சமூகவாழ்வுக்கு இணக்கமான தேசமாக மொரோக்கோ திகழ்கிறது

 

 

                                                              தேவா – ஜேர்மனி

 

பல சின்னக் கிராமங்களுக்கிடையில் பாடசாலைகள்,  வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியோடு  நாட்டின பல பாகங்களிலும் இயங்குகின்றன. மாணவர்கள் பல கி.மீ. தூரத்திலிருக்கும் பாடசாலைக்கு சமூகமளிக்க சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளதால், சிறுவர்களின் கல்வி மேம்பாடு கூடிவருகிறது. பல வித்தியாசமான மொழிகள் இங்கு பேச்சுவழக்கில் இருந்தாலும், பேர்பர்  மொழிதான் பிரதான இடம் வகிக்கிறது. பாடசாலை மொழி  இதுவாயிருந்தாலும்,  அரேபியமொழிக்கும் முக்கிய இடம் தரப்பட்டுள்ளது.

காலனியாதிக்கத்தின் வேரின் விளைவால் பிரான்சு, ஆங்கில மொழிகளை தொழில் மற்றும் வியாபாரத் தேவைகளுக்காக சொந்த செலவில் கற்றுக்கொள்ளலாமாம். எழுதப்படிக்கத்  தெரியாதவர்களின் சதவீதம் மிகக்கூடியஅளவில் இருப்பதாலும், கல்வி பெற்றோர்களிடத்து எட்டாமல் இருந்ததாலும்  தம் பிள்ளைகளுக்கு கல்விச் செல்வத்தை தந்துவிட அவர்கள் முயல்வதில் அதிசயம் ஒன்றுமில்லை.

மொரோக்கோவின் பழமையான  பிரபலமான நகரான மரகேசை, (Marrekesh)   நெருங்கும்போது  கொங்கிரீட்  கட்டிடங்கள் பெருத்துக்கொண்டே போகின்றன. பெருமளவு பிரயாணிகளைக்  கவரும் பெரிய நகர் இது. மிக பழமையான மசூதி  நகருக்கு மத்தியில் இருக்கிறது. மிகப் பிரபலமான சந்தை   ஜெம்மா எல் பானா ( Djemaa el.Fina ) ஆகும். உலகின் பிரசித்தமான பிரயாண இடங்களில் இதுவும் ஒன்று. இங்கே பிரயாணிகளிடமிருந்து பணம் கறக்கும் உத்திகள் சுறுசுறுப்பாய் மேற்கொள்ளப்படுகின்றன.

பாம்பாட்டிகள், குரங்காட்டிகள், இசைக்கலைஞர்கள், உணவகங்கள், சிறிய, பெரிய கடைகள் அங்கு வருபவர்களை சந்தைக்குள் இழுத்து மூழ்கவைக்கிறது. மாலைநேர சந்தைகள் பயணிகளை மிகவும் கவர்கின்றன.

விசேடமாக  ஆட்டு, மாட்டுதோல்கள் பதனிட்டு சாயம்போடும் தொழிற்சாலைகள் கவனத்தை ஈர்க்கின்றன. உடல்பாதுகாப்புக் கவசங்களில்லாமல் தொழிலாளர்களின் உழைப்பு உறிஞ்சப்படுவது புரியும்.

மொரோக்கோவிலே ,  கசுபா (Kashba) குடியிருப்புக்கள் பிரசித்தமானவை.  முழுக்கிராமத்து மக்களுமே சேர்ந்து குன்றுகளுக்கு மேலும், பள்ளத்தாக்குகளின் அடியிலும் களிமண்ணாலான பெரும்  குடியிருப்புகளில் வாழ்கின்றனர்.  சமூக வாழ்வுக்கு  சிறுவயதிலிருந்தே மக்கள் பழக்கப்பட்டுவிடுவதற்கு  இவ்வாறான  கசுபாக்கள்  பெரும்பங்கு வகிக்கின்றன.

இரண்டாம் உலகப்போருக்கு முன்னதாக, யூதர்கள்  ஐரோப்பாவிலிருந்து தப்பிஓடி,  சகாரா பாலைவனத்துக்கு  நெருக்கமாக தமது  கசுபா  குடியிருப்புக்களை  அமைத்து அங்கு ஒளிந்து வாழ்ந்திருந்து, பின்னர்  இஸ்ரேலுக்கு  குடிபெயர்ந்தார்களாம்.

இன்னும் நாடோடி சமூகம் தனிப்பட, மற்றும் சமூகங்களோடு  ஒட்டாமல் தம்மை வேறுபடுத்தி, வெள்ளைநிற கூடாரங்களில் இடம்பெயர்ந்தவாறே வாழ்கிறார்கள்.

பல்லின சமூகவாழ்வுக்கு இணக்கமான தேசமாக  மொரோக்கோ  திகழ்கிறது.

தொழுகை அழைப்பொலியின் பின்னர்,  மசூதிக்கு நீள அங்கி அணிந்து ஆண்கள் செல்கிறார்கள்.  இது கலாச்சாரம் சார்ந்தது. சிலர்  நீலநிறத்திலும், மிகச்சிலர் கறுப்புநிறத்திலும்,  அரிதாக சிலர் தூய வெள்ளைநிறத்திலும், சிலர்  சிவப்புநிறத்திலும், சிலர் லேசான மஞ்சள்நிறத்திலும், சிலர் பிரவுண் நிறத்திலும்  வழிபாட்டுக்குச்  செல்கின்றனர்.

பெண்களும்  மாநிலம்தோறும் வித்தியாசமான நீண்ட உடைகளில் கடுமையாக  உழைக்கின்றனர்.  நகர இளம்பெண்கள் மற்றைய நாடுகளிலுள்ளவாறே  இங்கும் முக்காட்டுடனும்,  மேக்கப்போடும், கார் செலுத்துவதுடன்,  வங்கிகளிலும் வியாபாரத்தலங்களிலும் தொழில்புரிகிறார்கள். மதம் பின்னால் இதை உள்வாங்கியிருக்கவேண்டும். தம் இனத்தை பெருமையோடு வெளிப்படுத்த இவ்வாறான நீண்ட அங்கிகளை பொதுவெளியில்  ஆண்களும்  பெண்களும் அணிந்திருப்பதை மொரோக்கோ பூராவுமே அவதானிக்கலாம்.

கறுப்பு  ஆபிரிக்கமக்கள் தொகை இங்கு கூடியிருப்பதன் காரணம்:  இவர்கள் பல நூற்றாண்டு காலத்துக்கு முன்னிருந்தே மாலி, சூடான் நாடுகளிலிருந்து அடிமைகளாய் இங்கு இறக்குமதி செய்யப்பட்டவர்களின் வாரிசுகள் என கூறப்படுகிறது.  ஸ்பானியாவுக்குள்ளால்,  அமெரிக்காவரை அடிமை வியாபாரம் நடைபெற்றது . அரேபியர் அந்த வியாபார சந்தையை செயல்படவைத்ததில்  பெரும்பங்கு  வகித்தனர்.

 

மொரோக்கோவின்  மத்தியபிரதேசத்தின்; 4000 மீ.உயர அற்லஸ் மலைத்தொடர்கள்.  அவைகளுக்குமேல் படிந்திருக்கும் பனியும், பெரும் பள்ளத்தாக்குகளும்  அவைகளுக்கு   அடியில்  ஓடும் ஆறும், நீர்வீழ்ச்சிகளும்,  நீல – வெள்ளை நிறநகர்களும்  நாட்டின் பெரும்சொத்துக்கள்.

மலைகளின் சரிவுகளை  சுவர்களாக்கி பெரிய குடியிருப்புகளை கட்டி குழந்தைகள், பெரியவர்கள் யாவரும் ஒரு பெரும் வளவுக்குள் வாழ்வது புராதன நகரான மரகேசை நோக்கி பயணிக்கும்போது பிரமிக்கச்  செய்யும் காட்சிகள்.

வட – கிழக்கை  அண்மிக்கும்போது வைக்கோலும், களிமண்ணும் கலந்து உருவாக்கப்பட்ட  குடியிருப்புகள் காணாமல் போகின்றன. பதிலாக அரபு நாட்டு வேலைப்பாடுகள் கொண்ட மாடிவீடுகள் தொடர்கின்றன. அரபியர்களின் தாக்கம்  இந்த பிரதேசங்களில் நீண்டகாலமாய் உள்ளதாம். புதிது புதிதாக உல்லாசவிடுதிகளும், பெரியவீடுகளும் கட்டப்பட்டுவருகின்றன.

திருமணங்கள் இன்னும் பெற்றோரால் நிச்சயிக்கப்படுவதும், பின்னர் அது முறிவானால், தாமே தம் துணைகளை தேடிக்கொள்வதையும் அறிந்துகொள்ளக்கூடியதாயிருந்தது.  ஆனால்,  முதல்துணையை தம் பிள்ளைகளுக்குத்  தேடித்தருவது இன்னும் பெற்றோர்களின் கையிலேயே தங்கிவிட்டது.

குன்றுகளும், காடுசார்ந்த பகுதிகளிலும் , பேர்பர்  குரங்குகள் சிலசமயங்களில் போக்குவரத்து வீதிகளில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கின்றன.

பாலைவனத்துக்கு நடுவிலே , குவார்சாட்  என்னும் பாலைவன நகரில் கோலிவுட் ஸ்டோடியங்கள்  பிரமாண்டமாயும், பிரபலமாயும் பிரயாணிகளை கவருவன.  பிரபல திரைப்படங்களான லாரன்ஸ்  ஒஃப் அரேபியா,  கிளியோபாட்ரா தொடக்கம்,  மிசன் இம்பொசிபில் போன்ற பலப்பல சினிமாக்களும்  இங்கு  உருவாகியிருக்கின்றன.

தொன்மையான யேசு படங்கள் எடுக்க மிக முயற்சி தேவை இல்லை. சினிமாவுக்கான  ஆதிமக்கள்கூட்டத்தை தேடிஅலைய வேண்டியதில்லை. இங்கே  வாழும் மக்களின்.  மூக்குக்கண்ணாடியை  மட்டும் கழற்றிவிட்டால் போதும். பழம் நூற்றாண்டுக்குப்  போய்விடலாம்.

சவூதிமன்னர் இந்தநாட்டுக்கு வரும் பயணிகளை ஊக்குவிக்க பெரியவிடுதிகளை நிர்மாணிக்கவேண்டியும், அதனால் பெறும்  வருமானத்தை சொந்தநாட்டு மக்களின் நலனுக்கு பயன்படுத்தும்படியும்  ஐந்து கோடி ஈரோக்களை மொரோக்கோவுக்கு நன்கொடை தந்ததாகவும் தகவல் இருக்கிறது.

அந்தப்  பணத்தில் மிக ஆடம்பரமான, அரேபிய கலை வெளிப்பாடோடு செல்வந்தர்களுக்காக பிரமாண்ட  விடுதி  அசுரோ  என்னும் வட கிழக்கு நகரில்  உருவாகியுள்ளது. முகப்பு வாயிலிலே  பெரிய கலை அழகோடு செம்பு தேநீர்கேத்தல்கள்  உங்களை  வரவேற்கும்.   ஒவ்வொரு அறையும் வெவ்வேறுவித  அழகான  பாணி. வேலைப்பாடு கொண்டவை.  இவைகளை அறைகள் எனச் சொல்வது சரியாகாது.

கலையலங்கார மண்டபங்கள் எனலாம். வெளிப்பக்கத்தில் எல்லோரும் கூடியிருந்து அளவளாவ பெரியமண்டபங்கள் அமைந்துள்ளன.  விதம் விதமான நிறங்களில் சிறப்பான சோபாக்கள். திரைச்சீலைகள் வர்ண ஆடைகள் அணிந்திருந்தன. ஆச்சரியப்படவைக்கும் சுவர் அலங்காரங்கள். கழிப்பறைகள் கூட அலங்காரம்  கொண்டிருக்கிறது.

சமையல் அறை பெரிதாக, நீண்டதாக ஒரே சமயத்தில்  ஐம்பது பேர் நின்று வேலை செய்யக்கூடியதாகவும் எவ்வித சித்திர வேலைப்பாடுகளுமின்றி சிக்கனமாகவும்  இருக்கிறது. சமையல்காரருக்கு கலைஞானம் தேவையில்லை.  சமையல்ஞானம் போதும் என கட்டிட நிபுணர்களின் சிந்தனைஞானமாக  இருந்திருக்கலாம்.

பார்களுக்கென்று மேல்மாடியில் பல்கனிகள்,  சங்கீதமேடை.  நடன  மண்டபத்திலே நாலாபக்கங்களும்  கண்ணாடிகள்.  விரிகிறது. வசீகரமான முன்முற்றங்கள்.  பின்முற்றத்திலே  நீச்சல்குளம்,  சிறுவர்களுக்கான விளையாட்டிடம்.  பக்கத்து  முற்றத்திலே உணவுவிடுதிகள், கடைகள் அடுக்கடுக்காக  உல்லாசபயணிகளுக்கு வசதியாக கட்டப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாடியின் பல்கனியிலிருந்தும் இயற்கையழகை ரசிக்கலாம். மலைக்குன்றுகள், பச்சை புல்வெளிகள், குட்டி ஊர்கள், செம்மறி ஆடுகள் தூரத்தே தெரியும்.  விடுமுறை செல்வந்தர்களுக்காக  சூரியன் மலைகளுக்கு பின்னால் உதிக்கிறான். மறைகிறான்.  இங்கு வரும் பெரும் வசதிக்காரர்கள், விசேடமாக பெண்கள் வெளியே போகவேண்டியதில்லை.  இது ஒரு சின்ன ஊர்.

ஆனால் , இந்த பெரும் மாளிகைவிடுதி வெறுமையாய் இருக்கிறது. இப்படியான ஒருபெரும்விடுதி   முக்கால்வீதம் கட்டிமுடித்தாயிற்று. விருந்தினர் இன்றுவரை வரவில்லை.  கட்டிடத்தின் சில சுவர்களிலே கட்டிடம் உருவாகிக்கொண்டிருக்கும்போதே  மழைநீர் ஊறி  பூஞ்சனம் பிடித்திருப்பதால்  பணக்காரர்கள் வரவு விடுதி மீண்டும் திருத்தப்படும்வரை நிறுத்தப்பட்டுள்ளது.   இந்த ஆடம்பர விடுதிக்கு முன்னால் கழுதைவண்டிகள் போகின்றன.  மாலைகளில் பெண்கள் காட்டுப்பகுதியிலிருந்து கழுதைகளுக்கான,  ஆடுகளுக்கான பற்றைகள்,  இலைகளை சேகரித்து, கழுதைகளின்  மேலே ஏற்றி வீடு சேர்வதை மாடிசெல்வந்தர் காண முடியாது.

ஆக,  மொரோக்கோ தேசம்  சில அடிகளை முன்வைத்து ஐரோப்பாவோடு சேர்ந்து  முன்னேற  முயல்கிறது.  ஆனால் அது ஆமையின் வேகத்திலும். ஆடம்பர மோகத்திலும் இழுபடுகிறது.

Share:

Author: theneeweb