அழிக்கப்படும் இயற்கை வளங்கள். பாதுகாப்பது யார்? . – கருணாகரன்

 

எங்களுடைய கிணற்றில் மே, ஜூன் மாதங்களில் எப்படியும் பத்தடிக்கு மேல் நீரிருக்கும். நிலமட்டத்திலிருந்து ஆறு அல்லது ஏழு அடிக்குள் நீர் மட்டமிருக்கும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பன்னிரண்டு அடிக்குக் கீழ் நீர்மட்டம் தாழ்ந்திருக்கிறது. கிணற்றில் உள்ள நீரின் அளவு இப்போது நான்கு அடியாகக் குறைந்துள்ளது. இதற்கு மழை வீழ்ச்சி குறைவென்பதோ வரட்சியோ காரணமல்ல. நிச்சயமாக, முட்டாள்தனமான அபிவிருத்திட்டமும் நீர்ச் சேகரிப்புப் பழகத்தைக் கைவிட்டமையுமே காரணம்.

இரண்டு ஆண்டுகளும் தாரளமாகவே மழை பெய்தது. அதிலும் கடந்த ஆண்டு வன்னியில் வெள்ளப்பெருக்கே ஏற்பட்டிருந்தது. வெள்ளப்பெருக்கிற்கு நட்ட ஈடு வழங்கப்பட்டிருந்ததையும் மறந்திருக்க மாட்டீர்கள். அப்படியிருக்கும்போது எப்படி நீர் மட்டம் தாழ முடியும்?

முதலில் எங்கள் ஊரிலிருந்த குளத்தை கடந்த பத்தாண்டுகளுக்குள் காலி பண்ணினார்கள். இது எப்படி நடந்ததென்றால், ஒவ்வொரு கோடைகாலத்திலும் குளத்தின் மேற்பகுதியில் சட்டவிரோதமாக மெல்ல மெல்ல  குடியிருப்புகளைச் சிலர் அமைத்தனர். அப்படியே இந்தக் குடியிருப்புகள் விரிவடைந்து முழுக்குளத்தையும் தின்றது. குளத்தின் தாழ்வைச் சீராக்குவதற்கு வெளியிலிருந்து மண்ணைக் கொண்டு  வந்து நிரப்பினார்கள். இதுக்குத் தோதாகக் குளத்தின் அணைக்கட்டை உடைத்தனர். இவையெல்லாம் பகிரங்கமாகவே நடந்தன. இதைத் தடுத்திருக்க வேண்டிய கிராம முன்னேற்றச் சங்கம் என்ற RDS வெறுமனே பார்த்துக் கொண்டேயிருந்தது. மட்டுமல்ல, கிராமத்துக்குப் பொறுப்பான கிராம அலுவலரும் இதைக் கண்டு கொள்ளவில்லை. இதிலே வேடிக்கை என்னவென்றால் இந்தக் குற்றத்தைச் செய்தவர்களுக்கு ஆதரவாக பின்னாளில் குடியிருப்புக்கான சான்றுக்கடிதத்தை கிராம அபிவிருத்திச் சங்கத்தினரும் கிராம அலுவலருமே கொடுத்துப் பதிவுகளை மேற்கொண்டனர். இப்போது இந்தச் சட்ட விரோதக் குடியிருப்பாளர்கள் சட்ட ரீதியான ஆவணத்தைக் கையில் வைத்திருக்கிறார்கள். ஆனால் குளம் மட்டும் காணாமல் போய்விட்டது. இதனால் பெய்கின்ற நீரும் குளத்தை நோக்கி ஓடிவரும் நீரும் குடியிருப்புகளை வெள்ளத்தில் மூழ்கடித்தபடி கடலுக்கு ஓடுகிறது. ஊரில் ஒரு சொட்டு நீரைத் தேக்குவதற்கு வழியில்லை.  .

மறுபக்கத்தில் அபிவிருத்தி என்ற பேரிலே எங்கள் வீட்டுக்கு அண்மையாக இருந்த பாலத்தைப் புனரமைத்தார்கள். அப்பொழுது அதன் கீழ் ஓடிக் கொண்டிருந்த வாய்க்காலை அளவுக்கதிகமாக ஆழப்படுத்தினார்கள். இதுதான் இப்பொழுது நீர் மட்டம் தாழக் காரணம். “இது தவறான நடவடிக்கை. முட்டாள்தனமான வேலை” என்று அப்போது நான் உள்பட அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் எல்லோரும் சொன்னோம்.

“வாய்க்காலை அளவுக்கதிகமாக அகலமாக்கி, ஆழப்படுத்தினால் பெய்யும் மழை நீரெல்லாம் அப்படியே கடலுக்கு ஓடிவிடும். பாய்கிற நீரின் வேகமும் அதிகரிக்கும். அப்பொழுது மண்ணரிப்பும் பிற சேதங்களும் அதிகமாகும். நீரோட்டத்தின் வேகம் கூடி மண்ணரிப்பு ஏற்பட்டால், வாய்க்காலேரங்களில் பாதுகாப்பாக நிற்கிற மரங்கள் எல்லாம் பாறி விழுந்துவிடும். எனவே வெள்ளப்பெருக்கு ஏற்படாதவாறு, நீர் முழுவதும் ஓடாத வகையில் வாய்க்காலைப் புனரமையுங்கள். பெப்ரபரி, மார்ச்  வரையில் வாய்க்காலில் மழை நீர் பாயக்கூடியதாக இருந்தால் அக்கம் பக்கத்திலுள்ள சூழலெல்லாம்  பசுமையாக இருக்கும். நிலமும் ஈரலிப்பாக இருக்கும். கிணறுகளிலும் நீர் குறையாது” என.

இதையெல்லாம் கேட்டுக்கொள்வதற்கு அங்கே வேலை செய்து கொண்டிருந்தவர்கள் தயாரில்லை. அவர்களுக்கு அதிகாரிகளின் பணிப்புரையும் திட்டமிடலிற் கூறப்பட்ட விடயங்களுமே முக்கியமானது. அதையே அவர்கள் பின் பற்றினார்கள்.

இதனால் இதைப்பற்றி சம்மந்தப்பட்ட தொழில் நுட்ப உத்தியோகத்தரிடமும் பொறியியளாளரிடமும் தெரியப்படுத்தினோம். அவர்கள் பதிலளிக்கவில்லை. பதிலாக வாய்க்கால் மூன்றடிக்கு மேல் ஆழப்படுத்தப்பட்டது. அவர்களைப் பொறுத்தவரையில் பெய்கிற மழை எங்கும் தங்கு தடையின்றி ஓடிவிட வேண்டும். பாலத்தில் எந்தச் சேதமும் ஏற்படக் கூடாது. அவ்வளவுதான்.

இதற்குப் பிறகு ஒவ்வோராண்டும் ஜனவரியின் இறுதிப்பகுதியிலேயே வாய்க்கால் வரண்டு, புழுதியெழும்புகிறது. கிணறுகள் மே, ஜூனிலேயே காயத் தொடங்குகின்றன. இப்போது யார் என்ன செய்ய முடியும்? இனி இதை மீளமைப்புச் செய்து பழைய நிலைக்குக் கொண்டு வருவது எப்படி? அதெல்லாம் சாத்தியமாகுமா?

ஆகவே இனிக் காய்ந்துபோன கிணறுகளோடுதான் நாம் கோடையை எதிர்கொள்ள வேண்டும். வாழ்வை எதிர்கொள்ள வேணும். தென்னைகள் உள்பட வான்பயிர்கள் எல்லாமே வரட்சிக்குப் பலியாகின்றன. மரங்கள் வாடினால் சூழலே கெட்டுவிடும். அவற்றினால் எந்தப் பயனையும் பெற முடியாது. வெக்கை பெருத்து நோயும் பிணியுமே விளையும்.

இதைப்பற்றி யாரிடமும் பேசினால், “கிணறுகளில் நீரில்லை என்றால் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீருக்கு விண்ணப்பியுங்கள். நகர நீர் விநியோகத்திட்டம், கிராமிய நீர் விநியோகத்திட்டம் என்று தேவையான திட்டங்களின் மூலம் நீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்று வலு சுலபமாகப் பதிலளிக்கிறார்கள்.

இது நியாயமான தீர்வாகுமா?

நிலத்தடி நீர்ச் சேகரிப்பைப் பற்றிச் சிந்திக்காமல், குழாய் நீர் விநியோகத்தைச் சிபாரிசு செய்யுமளவுக்கே இன்றைய அபிவிருத்தி அறிவுசார் செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அல்லது குழாய்க்கிணற்றை அடிக்கிறார்கள். இந்த ஆழ்துளைக்கிணறுகள் 100 தொடக்கம் 200 அடிவரையான ஆழத்திலிருந்து நீரை எடுக்கின்றன. இப்படி ஆழத்திலிருந்து நீரை எடுக்கத் தொடங்கினால் வழமையான கிணறுகளின் நீர் மட்டம் தாழும். எல்லாக்கிணறுகளும் வற்றி விடும். அப்படியென்றால் எல்லோரும் குழாய்க்கிணற்றையே தீர்வாகக் கொள்ள வேண்டி வரும். குழாய்க்கிணறுகள் மிக ஆபத்தானவை என்று நீரியல்துறை நிபுணர்கள் தொடர்ச்சியாக எச்சரிக்கை செய்து வருகிறார்கள். புலிகளின் காலத்தில் குழாய்க்கிணறுகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. குழாய்க்கிணறுகள் மிக ஆழத்திலிருந்து நீரை எடுப்பதால் கடல் மட்டத்திற்குக் கீழேயே அவை நீரை உறிஞ்ச முற்படுகின்றன. இது காலப்போக்கில் கடல் நீரை நிலத்தடி நீர் வழியாக உள்ளே கொண்டு வந்து விடும். இப்போது பல ஊர்களில் நல்ல நீர் கெட்டு அங்கெல்லாம் உவர் நீர் வந்திருப்பதாகப் பலரும் சொல்கிறார்கள். இதற்குக் காரணம் குழாய்க்கிணறுகளும் முறையற்ற மணல் அகழ்வும்தான் என்று பலரும் உணர்வதில்லை.

ஆகவே பொதுவாக நீர்முகாமைத்துவம் என்பது இல்லாதாகி விட்டது. நிலத்தடி நீர்ச்சேகரிப்பு பெரும்பாலும் கைவிடப்படுகின்ற ஒன்றாகி வருகிறது. ஊரிலுள்ள சிறுகுளங்கள், நீர்நிலைகள் எல்லாவற்றையும் பலரும் மெல்ல மெல்ல மூடி வருகிறார்கள். முன்னர் இவையெல்லாம் கோடையில் சனங்களால் அகழப்படும். தூர்வாரப்படும். எங்களுரில் அப்போது சிரமதானமாக இதைச் செய்தோம். ஊரிலுள்ள இளைஞர்களும் பெண்களும் முதியவர்களும் கூடித் தூர் வாரினோம். பிறகு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உலர் உதவிப் பொருட்களின் உதவியோடு சகாய வேலை என்ற அடிப்படையில் தூர் வாரப்பட்டது. கோடையில் தூர் வாரிய குளங்களில் மாரியில் நீர் நிறைந்து தளம்பும்.

தூர் வாரப்பட்ட நீர்நிலைகளில் கோடையில் கூட நீர் வற்றாதிருக்கும். இதில் கால்நடைகளுக்குப் போதிய நீரிருந்தது. சுற்றயலில் உள்ள மரங்களெல்லாம் செழித்திருக்கும். சூழலே குளிர்மையாக இருக்கும். குளிர்மை உடலுக்கும் மனசுக்கும் புத்துணர்ச்சியைத் தந்து கொண்டிருக்கும்.

இப்படியொரு நீர்ச்சேகரிப்புப் பண்பாடு எங்கள் மூத்தோரிடமிருந்தது. நீரைச் சேகரித்து, நிலத்தைப் பாதுகாத்தனார்கள். சூழலைப் பேணினார்கள். அவர்கள் அதிகம் படித்ததில்லை. சுற்றுச் சூழலைப்பற்றி வாய்கிழியப் பேசிக்கொண்டிருந்ததில்லை. ஆனால், எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்தனர். அறிவியல் வாழ்வை நடைமுறையில் கொண்டிருந்தனர். ஆனால், நாமோ அதிகமாக அறிவியலைப்பற்றிப் பேசுகிறோம். சுற்றுச் சூழலைப்பற்றி ஓயாமல் கதைத்துக் கொண்டிருக்கிறோம். அறிவியலுக்கும் சூழலியலுக்கும் மாறாக நடைமுறையில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஏனிந்த முரண்? ஏனிந்த வீழ்ச்சி. ஏனிந்தத் தோல்வியான நிலை?

மிகச் சாதாரணமாகச் செய்ய வேண்டிய, காலாதிகாலமாகவே மரபு ரீதியாகப் பேணப்பட்டு வந்த அடிப்படைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டிய அவசியமென்ன? இதிட்டமிடலில் து எந்த வகையில் அடங்கும்?

அபிவிருத்தி என்பது சூழலைச் சிதைத்து மேற்கொள்ளப்படுவதல்ல. அது சூழலைப் பேணிக் கொண்டு மேற்கொள்ளப்படுவதாகும். அபிவிருத்தியின் எண்ணக் கருவே சூழலின் அடித்தளத்திலிருந்து மேற்கொள்ளப்படும் ஒன்றாகும். இதைப் புரிந்து கொண்டு பெரும்பாலான திட்டங்களும் திட்டமிடல்களும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. இதனால்தான் இன்று சூழல் முற்றாகவே சிதைக்கப்பட்டுள்ளது. அதாவது சூழலைச் சிதைப்பதே அபிவிருத்தி என்றாகி விட்டது.

ஆனால், அபிவிருத்திக்கான கருதுகோளும் நிபந்தனையும் சூழலைப் பேணுவதற்கே முன்னுரிமை அளிக்கிறது. இது பேச்சளவில் அல்லது எழுத்தளவில் மட்டும்தான். நடைமுறையில் இந்த ஒழுக்கம் பேணப்படுவதாக இல்லை. இதற்கான சட்டப்பாதுகாப்போ ஒழுக்க விதிகளோ இல்லாமல் போய்விட்டது.

இது ஏன்? இதற்கான பொறுப்பை யார் ஏற்பது? யார் சீர்ப்படுத்துவது?

இதற்கு எங்கும் பதில் கிடையாது.

சூழலைப் பேணி வாழ்வதே சரியான வாழ்க்கையாகும். அதுவே நெறிமுறையான வாழ்க்கை. சூழலுக்கே முன்னுரிமை என்ற எண்ணக்கரு நமது முன்னோரிடமிருந்தது. அதனால்தான் அவர்கள் மரங்களைப் பாதுகாத்தனர். மரங்களை வழிபடுவதற்காக அவற்றின் கீழ் தெய்வங்களை கூடக் குடியிருத்தினர். மரங்களின் கீழேயே அதிகமான கோயில்களிருந்தன.

மரங்கள் நிறைந்திருந்தால் மழை வீழ்ச்சியும் கூடுதலாக இருக்கும். சூழல் கனிவு கொண்டிருக்கும். மரங்கள் நின்றால் அதிலே பறவைகளும் காய்கனிகளும் மலர்களுமாக மனதுக்கினிய சூழலே அமைந்திருக்கும்.

குளங்களையும் நீர்நிலைகளையும் அகழ்ந்து, அகலப்படுத்தி அவற்றை ஆதாரமாக வைத்து ஆடுகளையும் மாடுகளையும் வளர்த்தனர் முன்னோர். இதற்காக மேய்ச்சல் நிலங்களைப் பராமரித்தனர். இப்போதோ மேய்ச்சல் நிலங்கள் மூடி அடைக்கப்பட்டு வேறு தேவைகளுக்காக மாற்றப்படுகின்றன. வன்னியில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு மேய்ச்சற்தரை மூடப்பட்டு விட்டதாக கால்நடை அபிவிருத்தித்திணைக்களத்தைச் சேர்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையெல்லாம் பிறத்தியார் செய்யவில்லை. நாமே செய்திருக்கிறோம்.

இது ஏன்?

வன்னியின் அடையாளம் மரங்களும் குளங்களும் ஆறுகளுமே. வன்னியின் வளங்கள் இவைதான். ஆனால், இன்று இவற்றில் பாதிக்கு மேல் இல்லாது போய் விட்டது. 1950 களுக்கு முன்பிருந்த வன்னி வேறு. இன்றுள்ள வன்னி வேறு. குடியேற்றத்திட்டங்கள், யுத்தம், அத்துமீறிய காணி அபகரிப்புகள் எனப் பலவற்றினால் வன்னிக் காடுகளில் பாதிக்குமேல் அழிக்கப்பட்டு விட்டன. காடுகளைப் பேணிப்பாதுகாப்பதற்கென வனப்பாதுகாப்புத்திணைக்களம் இருந்தாலும் அதையும் மீறியே காரியங்கள் நடக்கின்றன.

காடுகளில் சட்டவிரோத மரம் வெட்டுதல் தொடர்ந்து நடக்கிறது. வன்னியிலுள்ள மரக்காலைகள் எல்லாவற்றுக்கும் சட்டவிரோத மரம் வருகிறது. சனங்களும் தங்களுக்குக்கிட்டவாக உள்ள காடுகளை அழித்துப் பயிர் செய்கிறார்கள். காணிகளை அபகரிக்கிறார்கள். மரங்களை வெட்டி தளபாடங்கள் செய்கிறார்கள். போதாக்குறைக்குக் காடுகளை அழித்து உருவாக்கப்பட்டுள்ளன இராணுவத்தளங்கள்.

இப்படித்தான் மணல் அகழ்வும். இன்னொரு புறத்தில் வயல் நிலங்களையும் குளங்களையும் மூடி வீடுகளைக் கட்டுகிறார்கள். கடைத்தொகுதிகளை அமைக்கிறார்கள். இதெல்லாம் தவறு. இதற்கெல்லாம் அனுமதி இல்லை என்பது சட்டவிதி.

ஆனால், இதை மீறியே எல்லாம் நடக்கின்றன. கமநலசேவைகள் திணைக்களம், பிரதேச சபை போன்றவற்றை எப்படியோ சமாளித்துக் கொண்டு தங்களுடைய காரியங்களைச் சாதித்து விடுகின்றனர் ஒவ்வொருவரும்.

இதையெல்லாம் உணர்ந்து நடப்பது யார்?

நம்மைக் காக்கும் காத்தற் கடவுள்கள் எங்கே?

அது எங்குமேயில்லை. நாமே நம்மைக் காக்கும் கடவுளர்கள் என்றான நிலையை உருவாக்க வேண்டும். நாமே நம்மை அழிக்கும் அசுரர்கள் என்ற நிலையிலிருந்து மீள்வோம்.

இதில் எப்படி இருக்கப்போகிறோம்?

 

Share:

Author: theneeweb