ஆட்சியாளர்களின் அலட்சியத்தின் விளைவுதான் தண்ணீர் பிரச்சினை: நீரியல் நிபுணர் எஸ்.ஜனகராஜன் பேட்டி

தலைநகர் சென்னை தொடங்கி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளையும் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலைகுலைய வைத்திருக்கிறது. பல மணி நேரம் காத்திருந்து தண்ணீர் லாரிகளின் பின்னால் குடங்களோடு ஓடுகிறார்கள் மக்கள்.  ‘நிறுவனத்தை நடத்தத் தண்ணீர் இல்லை; வீட்டில் இருந்தபடி பணியாற்றுங்கள்’ என்று ஊழியர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்புகின்றன தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள். “ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிக்கிறோம்; துவைக்கத் தண்ணீர் இல்லாததால் ஒரு வாரத் துணிகள் தேங்கிக் கிடக்கின்றன” என்று தினமும் ஒருவராவது சொல்லக் கேட்கிறோம்.

வழக்கம்போல இயற்கையைக் குற்றஞ்சாட்டுகின்றனர் அரசும் ஆட்சியாளர்களும். நீரியல் நிபுணரும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (எம்ஐடிஎஸ்) ஓய்வுபெற்ற பேராசிரியருமான எஸ்.ஜனகராஜனோ, “இது மனிதர்கள் நிகழ்த்தும் பேரிடர்” என்கிறார். மழை பெய்யாமல் இருப்பதல்ல; பெய்த மழைநீரைச் சேகரிக்கத் தவறுவதும் முறையான நீர் மேலாண்மை இல்லாததுமே இந்தக் கடும் பற்றாக்குறைக்குக் காரணம் என்கிறார். அவருடனான உரையாடலிலிருந்து சில பகுதிகள்…

சென்னையை மையமாகக் கொண்டு நம்முடைய விவாதத்தைத் தொடங்குவோம். தமிழ்நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கும் அசாதாரண தண்ணீர்த் தட்டுப்பாட்டுச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?  பத்தாண்டுகளில் இல்லாத சூழல் என்று இதைச் சொல்கிறார்கள். இதை எதிர்கொள்வதற்கான தீர்வு என்ன?

நூறாண்டு காணாத வெள்ளம், பத்தாண்டு காணாத வறட்சி இப்படியெல்லாம் கடந்த காலங்களோடு ஒப்பிட்டு இன்றைய சூழலுக்கு ஒரு நியாயப்பாட்டை நாம் தேடிக்கொண்டே போகலாம். நான் இந்த வறட்சி என்ற வாதத்தையே முதலில் நிராகரிக்கிறேன். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் இந்த மூன்று மாவட்டங்களையே எடுத்துக்கொள்வோம். எல்லாம் நீர் மிகுந்த பகுதிகள். கடந்த ஆண்டு சுமார் 800 மிமீ மழை பெய்தது. இதை நாம் எப்படி வறட்சி என்று சொல்ல முடியும்? பெங்களூருவின் வழமையான மழைப்பொழிவு எவ்வளவு தெரியுமா? ஆண்டுக்கு 860 மிமீதான்.

அவர்கள் அதை வறட்சி என்று சொல்வதில்லை. ஆனால், நாம் இதை வறட்சி என்கிறோம். இது சரியா? நீங்கள் எனக்குக் கணக்குச் சொல்லுங்கள். பெய்த மழை என்ன ஆனது? பெருநகர விரிவாக்கத்துக்குப் பிறகு, கிட்டத்தட்ட எட்டாயிரத்துச் சொச்சம் சதுர கிமீக்கு விரிந்திருக்கிறது சென்னை. அந்தப் பகுதியையும் சேர்த்தால் 1,350 மிமீ மழை பெய்திருக்கிறது. அதாவது, 330 டிஎம்சி – ஒரு டிஎம்சி என்பது ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீர்.

இதில் பாதி வழிந்தோடிவிடுவதாகவே வைத்துக்கொள்வோம். மீதியை நாம் நீர்நிலைகளில் சேமித்திருக்கலாம் – நல்ல திட்டங்கள் நம்மிடம் இருந்தால். சொல்லுங்கள், அந்தத் தண்ணீர் எங்கே போனது? சென்னையின் ஒரு மாத நீர்த் தேவையே ஒரு டிஎம்சிதான். இவ்வளவு தண்ணீரை வீணடித்துவிட்டு நாம் வறட்சி என்று சொல்வதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா?

ஆமாம், எனக்கு நினைவிருக்கிறது. சென்னை பெருமழை வெள்ளம் ஏற்பட்டபோது, இன்னும் பத்தாண்டுகளுக்கு சென்னையில் தண்ணீர்த் தட்டுப்பாடு இருக்காது என்றெல்லாம் பேசப்பட்டது. முரண்பாடாக நாம் தொடர்ந்து தண்ணீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்கிறோம்…

உண்மைதான். அந்த மழைநீரை முறையாகச் சேகரித்திருந்தால் நான்கைந்து ஆண்டுகள் நமக்குப் பற்றாக்குறை இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், அந்த மழைநீரை நாம் எங்கே சேகரித்தோம்? 2015 மழையின்போது மட்டும் நாம் 300 டிஎம்சி தண்ணீரைக் கடலில் கலக்க விட்டோம்.

உள்ளபடியாகவே இவ்வளவு தண்ணீரையும் சேமிப்பதற்கு நம்மிடம் இன்னமும்கூடப் போதிய நீர்நிலைகள் இருக்கின்றனவா? ஏனென்றால், கடந்த காலங்களில் ஏராளமான நீர்நிலைகளை நாம் ஆக்கிரமித்துவிட்டோம் இல்லையா?ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளின் கதை பெரும் கொடுமை. ஆனால், இன்னும் மிச்சம் இருக்கும் நீர்நிலைகளைத் திட்டமிட்டுப் பராமரித்தாலே நம்மால் கணிசமான அளவுக்குத் தண்ணீரைச் சேமிக்க முடியும் என்பதே உண்மை. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டுமே 3,600 ஏரிகள் உள்ளன; விரிவுபடுத்தப்பட்ட சென்னை பெருநகர எல்லையில் உள்ள அரக்கோணத்தையும் சேர்த்துக்கொண்டால் 4,100 ஏரிகள். பிரச்சினை என்னவென்றால், இவற்றில் எத்தனை ஏரிகளைத் தூர்வாரி, ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, மதகுகள், கரைகளை எல்லாம் முறைப்படுத்தித் தயார் நிலையில் வைத்திருக்கிறோம்?

ஆனால், நீர்நிலைகளைத் தூர்வாருவதாக வருடந்தோறும் அரசாங்க அமைப்புகள் சொல்கின்றனவே?

தூர்வாருவதற்காகப் பெரும் பணம் செலவழிக்கிறோம் என்பது உண்மை. ஆனால், முறையாகத் தூர்வாரப்படுகிறதா என்பது கேள்விக்குறிதான். எனக்குத் தெரிய கடந்த 30 ஆண்டுகளில் ஏரிகளைத் தூர்வார மட்டும் ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் செலவழிக்கப்பட்டிருக்கிறது. உலக வங்கி நிதி, ஆசிய வளர்ச்சி வங்கி நிதி, ஜப்பானிய வளர்ச்சி முகமை (Japanese Development Agency), ஐரோப்பியப் பொருளாதார சமூகம் (European Economic Community) ஆகிய சர்வதேச அமைப்புகளின் நிதிகள், இவை தவிர நம்முடைய சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதிகள், அரசாங்கத்தின் நிதிகள்… இவ்வளவு பணமும் ஏரிகளுக்குள் சென்றிருக்கிறது.

ஆனால், ஏரிகளின் நிலை என்ன? ஏரிகள் நல்ல நிலையில் இருந்தால் ஏன் நாம் குவாரிகளில் தண்ணீர் எடுக்கிறோம்? இதற்கான பதில் எளிமையானது. குவாரி பள்ளமாக இருக்கிறது; ஏரியோ மைதானம்போல் இருக்கிறது. மழைநீரைச் சேகரிப்பதற்கு ஏரிகளைவிடச் சிறந்த அமைப்பு இருக்க முடியாது. ஆனால், மைதானங்களைப் போல ஏரிகள் இருந்தால் அவற்றில் எப்படித் தண்ணீர் நிற்கும்? ஏரிகள் ஒரு உதாரணம்தான். உண்மையாகவே தூர்வாரும் பணியை நாம் முறையாகச் செய்தால், மழை நாட்களில் ஏன் ஆறுகள், குளங்களில் கரையை உடைத்துத் தண்ணீரை வெளியேறவிடுகிறோம்?

பணிகள் முறையாக நடப்பதில்லை என்று சொல்கிறீர்களா?

திட்டமிடலே முறையாக நடப்பதில்லை என்று சொல்கிறேன். இவ்வளவு பெரிய தண்ணீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்கிறோம். சென்னையில் ஒவ்வொரு நாளும் மக்கள் 4-5 மணி நேரம் தண்ணீர் எடுத்துவரச் செலவழிப்பதையும் மாத வருமானத்தில் 20%-30% வரை தண்ணீருக்காகச் செலவழிப்பதையும் பார்க்கிறோம். தமிழகம் முழுவதுமே நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது.

சரி, இந்த அனுபவங்களிலிருந்து என்ன பாடம் கற்கிறோம்? ஒரு கேள்வி கேட்கிறேன், அடுத்த ஒரு மாதத்தில் நல்ல மழை பெய்து தண்ணீர் பெருக்கெடுக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதைச் சேகரிக்கவும் சேமித்துவைக்கவும் நாம் தயாராக இருக்கிறோமா? எந்த நிலையில் நம்முடைய நீர்நிலைகள் இருக்கின்றன? இதுதான் இப்போது நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்வி. தற்காலிகத் தீர்வுகளைத்தான் நாம் தேடுகிறோம்.

ஆனால், தற்காலிகத் தீர்வுகளும் அவசியம்தான் இல்லையா? உடனடி நீர்த்தேவைக்கு என்னதான் செய்வது?

தற்காலிகமாகப் பிரச்சினைகளைச் சமாளிப்பதில் உள்ள நியாயம் புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால், சமாளிப்பதையே தீர்வு என்று நம்பிவிட்டால் அது ஆபத்து! இப்போது சென்னையின் தண்ணீர்த் தேவையைச் சமாளிக்கப் பக்கத்து மாவட்டங்களின் கிராமங்களிலிருந்து தண்ணீரைக் கொண்டுவருகிறீர்கள். இந்த ஒரு முறையோடு இந்த சமாளிப்பை நிறுத்திக்கொண்டால் நல்லது. ஆனால், இது ஒரு தீர்வு என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் என்னவாகும்? சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனமே ஒரு நாளைக்கு 9,000 லோடு லாரி நீரைக் கொண்டுவருகிறது.

இது தவிர ஐடி நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், உணவகங்கள், மருத்துவமனைகள், பெரிய தொழிற்சாலைகள், பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் யாவரும் டேங்கர் லாரிகளிலிருந்துதான் தண்ணீர் பெறுகிறார்கள். இவ்வளவு தண்ணீரையும் நீங்கள் கிராமங்களிலிருந்து எடுத்தால், அந்தக் கிராமங்களின் நீராதாரம் என்னவாகும்? விவசாயம் என்பதே அங்கு எதிர்காலத்தில் அழிந்துபோகும். தவிர, அங்கேயும் நீராதாரம் வற்றிப்போகும்.

அப்படியென்றால், நீர் சேமிப்பு நீங்கலாக இது போன்ற பற்றாக்குறை காலத்தில் வேறு என்ன தீர்வை நீங்கள் சொல்வீர்கள்?

நீண்ட தொடர் நடவடிக்கைகள் தேவைப்படும் பிரச்சினைக்கு உடனடித் தீர்வுகளைக் கேட்கிறீர்கள். இருந்தாலும் சொல்கிறேன், ஏன் உங்கள் கண்களுக்கு மறுசுழற்சி முறை என்ற ஒன்று புலப்படவே இல்லை? மெட்ரோ வாட்டர் நாளொன்றுக்கு 650 மில்லியன் லிட்டர் தண்ணீரை உருவாக்கினால், அதன் மூலம் உருவாகும் கழிவுநீர் நாளொன்றுக்கு 1,000 மில்லியன் லிட்டர்.

இந்தக் கழிவுநீரை நாம் மறுசுழற்சி செய்வதில்லை. இனிமேலாவது மறுசுழற்சியைத் தீவிரப்படுத்த வேண்டும். மறுசுழற்சி மூலம் கழிவுநீரைக் குடிநீராகக்கூட ஆக்க முடியும். வெளிநாடுகளில் செய்கிறார்கள். மத்திய கிழக்கின் பல நாடுகளில் இதைத்தான் செய்கிறார்கள். இஸ்ரேல் மிகச் சிறந்த உதாரணம். நாம் கழிவுநீரை ஒரு வளமாகப் பார்ப்பதில்லை.

கழிவுநீர் மறுசுழற்சியை ஒரு தீவிரமான கொள்கை முடிவாக்க வேண்டும். ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில் 120 வீடுகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடுகளில் ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் லிட்டர் நீர் பயன்படுத்துகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதை மறுசுழற்சி செய்ய வேண்டும் என்பதை அரசு நிர்ப்பந்தித்தால், கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் லிட்டர் தண்ணீர் மிச்சமாகும்.

ஆனால், நம் மக்களிடம் மறுசுழற்சி முறை தொடர்பாக ஒரு அசூயை இருக்கிறது அல்லவா?

அரசாங்கம்தான் அதைப் போக்க வேண்டும். கடல் நீரை உப்புத்தன்மை நீக்கிக் குடிநீராகக் கொடுக்கிறோமே, கடல் நீரில் கலக்காத கழிவுகளா? இந்தச் சிந்தனையை அரசாங்கம்தான் முதலில் மக்களுக்குக் கொடுக்க வேண்டும். முதலில் குறைந்தபட்சம் கழிப்பறைகளில் பயன்படுத்துவது, துணி துவைப்பது போன்ற காரியங்களுக்குப் பயன்படுத்தினாலே எவ்வளவு தண்ணீர் தேவையைக் குறைக்க முடியும் தெரியுமா? ஒரு கட்டிடம் கட்டும்போதே மழைநீர் சேகரிப்புத் தொட்டி, கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டி இரண்டும் கட்டாயம் என்று சூழலை உருவாக்கினால், நாம் இவ்வளவு கஷ்டப்பட வேண்டியதே இல்லை.

நீங்கள் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பாகப் பேசியதால் கேட்கிறேன், 940 கிமீ நீளக் கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டுக்கு இத்திட்டம் ஒரு நல்ல மாற்றாக இருக்க முடியும் என்று பலர் சொல்கிறார்கள். ஆனால், ஏன் இத்திட்டம் முழு வேகத்தில் நடக்கவில்லை?

ஏதாவது பிரச்சினை என்றாலே, பெரிய பெரிய திட்டங்களைப் பற்றிப் பேசுவது நம்மூரின் சாபக்கேடுகளில் ஒன்று. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஒரு மாற்றுத்திட்டம்தான். ஆனால், வேறு வழியே இல்லாத நகரங்களுக்கானது அது. நாம் என்ன பாலைவனத்திலா இருக்கிறோம்? சென்னையில் மட்டும் சராசரியாக 1,350 மிமீ மழை பெய்கிறது. இப்படி ஒரு இடத்தில் கடல்நீரைக் குடிநீராக மாற்றுவது தேவையற்றது.

நல்ல தண்ணீர்தான் மழையாகப் பெய்து கடலில் கலக்கிறது. மழைநீரைக் கடலில் கலக்க விட்டுவிட்டு, பிறகு அதை எடுத்து நல்ல தண்ணீராக மாற்றிக்கொடுப்பது வீண் வேலை அல்லவா? கடல்நீரிலிருந்து ஒரே ஒரு லிட்டர் நல்ல தண்ணீர் உருவாக்க எவ்வளவு கடல்நீர் தேவைப்படும் தெரியுமா? குறைந்தபட்சம்

30-40 லிட்டர். அதைச் சுத்தப்படுத்தி நல்ல தண்ணீர் எடுத்துவிட்டால், மீதமுள்ள நீரில் உப்புத்தன்மை அதிகரித்துவிடும். அப்படி அதிகரித்த உப்புத்தன்மை கொண்ட நீரைக் கடலுக்கு ஒரு கிமீ உள்ளே கொண்டுசென்று விட வேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கிறது. ஆனால், அதையெல்லாம் பின்பற்றுவார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

கரைக்கு அருகிலேயே விட்டுவிடுவார்கள். இப்படியே தினமும் செய்துகொண்டே இருந்தால் என்னவாகும்? கடல் இறந்துவிடும். அதாவது, கடல் வாழ் உயிரினங்களுக்குத் தேவையான பிராணவாயு கிடைக்காது. அவற்றுக்கு உப்பு நீரை உறிஞ்சி, நல்ல தண்ணீரை எடுத்துக்கொண்டு உப்பைக் கடலில் மீண்டும் விடுவதற்கான சக்தி இருக்கிறது. ஆனால், கடலின் உப்புத்தன்மை அதிகரித்தால் அவற்றால் அதைச் செய்ய முடியாது.

விளைவாக, அவற்றால் உயிர்வாழ முடியாது. இதனால், கடற்கரைச் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும். பொருளாதாரரீதியாகப் பார்த்தாலும் கடல்நீரைச் சுத்தப்படுத்துவதைவிடக் கழிவுநீரைச் சுத்தப்படுத்துவதே சிறந்த தேர்வு. ஆயிரம் லிட்டர் கடல்நீரைச் சுத்தப்படுத்த ரூ.46 செலவாகும் என்றால், அதே அளவு கழிவுநீரைச் சுத்தப்படுத்த ரூ.28தான் செலவாகும். மேலும், கழிவுநீரைச் சுத்தமாக்கி நல்ல நீரை எடுத்த பிறகு எஞ்சும் கழிவுப் பொருளிலிருந்து இயற்கை உரம் (bio manure) தயாரிக்கலாம்.

மழைநீரைச் சேகரிப்பது, ஏரிகளைப் பராமரிப்பது போன்ற திட்டங்கள் ஏன் உங்களுக்குத் திட்டமாகவே தெரியவில்லை? உங்களுக்குத் தெரியுமா? ஜப்பான் போன்ற நாடுகளில் போதிய நிலம் இல்லாத சூழலில், நிலத்துக்குக் கீழே இன்றைக்கு நீர்த்தேக்கங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். நமக்கு ஏரிகள் எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்? சென்னைக்குள் மட்டும் 70 கோயில் குளங்கள் இருக்கின்றன.

இவையெல்லாம் எவ்வளவு பெரிய வாய்ப்புகள்? வெள்ளநீர் வடிகால் தொட்டிகளில் சேரும் தண்ணீரை அடையாற்றிலும் கூவத்திலும் விடுவதற்குப் பதிலாகப் புழல் ஏரிக்கும் சின்னச் சின்ன குளங்கள் குட்டைகளுக்கும் திருப்பிவிடலாம்; சின்ன குளம் குட்டைகளில் விடலாம். இவைபற்றியெல்லாம் ஏன் நாம் யோசிக்க மறுக்கிறோம்? இந்தப் பார்வைக் கோளாறுதான் முதலில் மாற வேண்டும் என்று சொல்கிறேன். வெள்ளம் – வறட்சி இரண்டையுமே நாம் தனித்தனியாக, தற்காலிகப் பிரச்சினைகளாக அணுகுகிறோம். எப்படியாவது அப்போதைக்கு நிலைமையைச் சமாளித்தால் போதும் என்று நினைக்கிறோம். இந்த அணுகுமுறை தவறு.

சரி, என்னதான் தீர்வு?

முதலில் பார்வை மாற்றம் வேண்டும். வெள்ளம் – வறட்சி இரண்டையுமே நாம் தனித்தனியாக, தற்காலிகப் பிரச்சினைகளாக அணுகுகிறோம். எப்படியாவது அப்போதைக்கு நிலைமையைச் சமாளித்தால் போதும் என்று நினைக்கிறோம். இந்த அணுகுமுறை தவறு. மழை கொட்டினால் சாலைகளில் வெள்ளம் வருகிறது. மழை குறையும் நாட்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இரண்டும் ஒரே பிரச்சினையின் இரு முனைகள்தான்.

வெள்ளம் வரும்போது ஏரிகளில் நீங்கள் தண்ணீரைச் சேகரித்தால், வறட்சிக் காலத்தில் அந்தத் தண்ணீரை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். எனவே, வெள்ளத்தையும் வறட்சியையும் ஒருசேரப் பார்ப்பதுதான் இதற்கான நிரந்தரத் தீர்வு. இரண்டையும் தனித் தனியாக அணுகிக்கொண்டிருந்தால் நாம் தொடர்ந்து திண்டாடிக்கொண்டுதான் இருப்போம்.

சரி, நீங்கள் சொல்லுங்கள். தமிழ்நாட்டின் நீர்க்கொள்கை எப்படி இருக்க வேண்டும்?

அரசு இங்கே நீர் அளிப்பவராக மட்டும் கருதி நடந்துகொள்கிறது. மாறாக, நீரைப் பாதுகாப்பவராகவும் அது நடந்துகொள்ள வேண்டும். நீராதாரங்களைப் பாதுகாப்பதுதான் அரசின் முதல் பணியாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, நீர் சேகரிப்பு, பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஒவ்வொரு நிலையிலும் உருவாக்க வேண்டும். தண்ணீர்ப் பயன்பாட்டைச் சிக்கனமாக மேற்கொள்வது மட்டும் ஒரு குடிமகனின் கடமை அல்ல; பயன்படுத்துவதற்கு இணையாக நீரைச் சேகரிப்பதும் தன் கடமை என்று ஒவ்வொருவருக்கும் உணர்த்த வேண்டும்.

நிலத்தடி நீரை மழைநீரைக் கொண்டு பெருக்குவதற்கு கூடுதல் கவனம் கொடுக்க வேண்டும். நிலத்தடி நீரைப் பெருக்க நிறைய வழிகள் இருக்கின்றன. எளிமையாக இருப்பதாலேயே நாம் இவற்றையெல்லாம் மிகச் சாதாரணமாக நினைக்கிறோம். ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு வீட்டில் நிலத்தடி நீர்த் தொட்டியை (சம்ப்) பெரிதாகக் கட்டி, அதில் மழைநீரைக் சேகரிப்பதாக வைத்துக்கொள்வோம். சம்ப் நிரம்பியவுடன் ரீசார்ஜ் போரில் தண்ணீரை விட்டால் நிலத்தடிக்கு உள்ளே போகும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் பல மடங்கு மேலே ஏறும். வீடுகளில் மட்டுமல்ல, அரசு, தனியார் அலுவலகங்கள், பூங்காக்கள் என்று வாய்ப்புள்ள ஒவ்வொரு இடத்திலும் இதைச் சிந்தித்துப்பாருங்கள்.

எவ்வளவு மாற்றத்தைக் கொண்டுவர முடியும்? நிலத்துக்குத் திரும்ப நீரைக் கொடுக்காமல் நாம் நிலத்தடி நீரை எடுத்துக்கொண்டே இருந்தால், தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் ஏற்பட்ட ‘பூஜ்ய நாள் அபாயம்’ நமக்கும் வந்துவிடும். எனவே, எந்த அளவு நிலத்தடி நீரை எடுக்கிறோமோ அதே அளவு நிலத்துக்கு நீரைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற பிரக்ஞையை உருவாக்க வேண்டும்.

அதேபோல, சிக்கனப் பயன்பாடு. இவ்வளவு தட்டுப்பாடு உள்ள ஊரில் ஷவர் குளியல் வேண்டுமா என்று ஒரு பொறுப்புள்ள குடிமகன் யோசிக்க வேண்டுமா, வேண்டாமா? அந்தப் பொறுப்புணர்வைச் சிறு வயதிலிருந்தே நாம் வளர்த்தெடுக்க வேண்டும். நாங்கள் இதை ‘தண்ணீர்க் கல்வி’ என்று சொல்வோம். குழந்தைகளுக்குத் தண்ணீர்க் கல்வியையும் சேர்த்துப் புகட்ட வேண்டும்; சொல்லப்போனால், நம் சமூகத்துக்கே இன்று தண்ணீர்க் கல்வி தேவைப்படுகிறது.

இந்தப் பிரச்சினையில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் பார்வையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒரு விஷயம் சொல்லட்டுமா? தண்ணீர்ப் பிரச்சினை என்பது உலகளாவிய பிரச்சினை. இந்தியாவைப் பொறுத்த அளவில் நாடு முழுக்கவுமே பல மாநிலங்களில் மோசமான நிலை இருக்கிறது. சில மாநிலங்கள் சிறப்பான மேலாண்மையைக் கற்றுக்கொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு ராஜஸ்தான். ஏனென்றால், அவர்களது மழை அளவு ஆண்டுக்கு வெறும் 600 மிமீதான். ஆக, மழைநீர் சேகரிப்புத் திட்டத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால், ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகவே இதைக் கருத வேண்டும். தண்ணீர் பிரச்சினை என்று வரும்போது, ஆட்சியாளர்களின் அலட்சியம்தான் அதற்கான அடிப்படைக் காரணமாகிறது.

ஆட்சியாளர்கள் என்றால், அரசியல்வாதிகள் மட்டும் என்று சுருக்கிவிட முடியாது. அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? ‘வீராணத்திலிருந்து தண்ணீர் கொண்டுவரலாம்’ என்ற யோசனையை அரசுக்கு யார் கொடுக்கிறார்கள்? அதிகாரிகளும் தொலைநோக்குடன் சிந்தித்துத் தீர்வு காண வேண்டும். அரசியல்வாதிகள் – அதிகாரிகள் இரண்டு தரப்பினருமே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், இன்னமும் நமக்கு வாய்ப்பிருக்கிறது. இப்போதும் விழித்துக்கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் நாம் கொடுக்கக்கூடிய விலை மிக மோசமானதாக இருக்கும்.

தொடர்புக்கு: gopalakrishnan.sn@thehindutamil.co.in

Share:

Author: theneeweb