அகதிகளும் மனிதர்களே! – என்.எஸ். சுகுமார்

 ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 20-ஆம் தேதி உலக அகதிகள் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அகதிகள் படும் துயரம் குறித்தும், அவர்களது பிரச்னைகளைத் தீர்க்க உதவும் வகையிலும் கடந்த 2000-ஆம் ஆண்டு இந்த விழிப்புணர்வு தினத்தை ஐ.நா. சபை அறிவித்தது.

உறவுகளை இழந்த மனிதன் அநாதை. சொந்த நாட்டை இழந்தவரை அகதி எனக் கூறுவர்; அதாவது, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டில் தஞ்சம் அடைபவர் அகதியாகிறார். உலகளாவிய சூழலில் இரு நாடுகளுக்கிடையே ஏற்படும் போர்ச்சூழல், உள்நாட்டுப் போர், இயற்கைப் பேரிடர் போன்றவற்றால் தங்களது இருப்பிடங்கள், உடைமைகள், உற்றார்-உறவினர்களை இழந்து தங்களது வாழ்வையும், பாதுகாப்பையும் உறுதி செய்துகொள்ளும் வகையில், பிற நாடுகளில் தஞ்சம் அடைபவர்கள் அகதிகள் என அழைக்கப்படுகின்றனர்.

முந்தைய காலங்களில் இல்லாத வகையில், தற்போது அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இத்தகையோர் தங்களது இருப்பிடங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர். இனம், சமயம், தேசியம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் போர்ச்சூழல் ஏற்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, சர்வதேச அளவில் 7 கோடிக்கும் மேற்பட்டோர் அகதிகளாக உள்ளனர். அவர்களில் 50 சதவீதம் பேர் 18 வய

துக்கும் குறைவானவர்கள் என அகதிகளுக்கான ஐ.நா. ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நாளில் உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த போர்களாலும், அரசியல், சமூகச் சூழல்களால் அல்லல்படும் அகதிகளையும், உயிரிழந்த அப்பாவி மக்களையும்  நினைவுகூறும் வகையில், அஞ்சலி, பேரணி, கருத்தரங்குகள், கண்டன ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. இவ்வாறு நிகழ்ச்சிகளை நடத்துமாறு அகதிகளுக்கான ஐ.நா. ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வங்கதேசப் போர், ஆப்கானிஸ்தான் போர் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், திபெத், பர்மா, இலங்கைத் தமிழர்கள் ஆகியோர் இந்தியாவில் வசிக்கும் அகதிகளில் பெரும்பான்மையோர்.

உலகளவில் சிரியாவிலிருந்து பிற நாடுகளுக்கு அதிக அளவில் அகதிகளாகச் செல்வதாகக் கூறப்படுகிறது; அங்கிருந்து 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லெபனான், எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதேபோன்று துருக்கியிலிருந்து அதிக அளவில் பிற நாடுகளுக்கு அகதிகளாகச் செல்கின்றனர்.
பாலஸ்தீனத்தில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அகதிகளாகியுள்ளனர். இராக், ஆப்கானிஸ்தான் நாடுகளின் மீதான அமெரிக்காவின் ராணுவ அணுகுமுறை காரணமாக லட்சக்கணக்கானோர் அகதிகளாகியுள்ளனர்.  சூடான், சோமாலியா உள்ளிட்ட நாடுகளில் தொடரும் மோதல்களால் ஆப்பிரிக்க கண்டத்தின் பல பகுதிகளில் அகதிகள் அதிகரித்து வருகின்றனர். பல நாடுகளில் லட்சக்கணக்கானோர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

அதிகளவிலான அகதிகளுக்கு இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளே தஞ்சம் அளிக்கின்றன. அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறுவோர் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். அவர்கள் தப்பிச் செல்லும் போது, உற்றார் -உறவினர்களை இழந்து செல்வதும், அப்போது போர்ச்சூழலில் காயம், உயிரிழப்பைச் சந்திப்பதும் பரிதாபத்துக்குரியது.

கடல் மார்க்கத்தில் செல்வோர் சட்டவிரோதப் பயணம் மேற்கொண்டு தப்பிச்செல்ல முற்படுகின்றனர். அப்போது,  கடலில் தோணி கவிழ்ந்து உயிரிழப்பது, கடலின் மணல் திட்டுகளில் படகோட்டிகள் இறக்கி விட்டுச் செல்வதால் தவிப்பது, அகதிகளாக வருவோரை பிற நாடுகள் ஏற்க மறுப்பது, அவ்வாறு ஏற்கும் நிலையில் அங்கு முகாம்களில் படும் இன்னல்கள் எனப் பல்வேறு துயரத்துக்கு உள்ளாகின்றனர். அகதிகளாக தஞ்சமடையும் பலர், முகாம்களில் அடிப்படை வசதிகள் இன்றி வசிக்கின்றனர். கடலில் மூழ்கி உயிரிழந்தது, துயரத்துக்குள்ளானவர்களில் இலங்கைத் தமிழர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

அனைத்து நாடுகளும் மனிதாபிமானத்துடன் அகதிகளை நடத்த வேண்டும் என்று  என அகதிகளுக்கான ஐ.நா. ஆணையம் தெரிவித்துள்ளது. அகதிகளாக வந்தவர்களை வற்புறுத்தி, அவர்களின் சொந்த நாட்டுக்கே மீண்டும் திருப்பி அனுப்பக் கூடாது; குறிப்பாக, அங்கு ஆபத்தான சூழ்நிலை இருக்கும் நிலையில், திருப்பி அனுப்பக் கூடாது. சட்டப்பூர்வமாக குடியேறியுள்ள பிறநாட்டு மக்களைப் போன்று அகதிகளை நடத்த வேண்டும்; அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது மட்டுமின்றி, பிற வசதிகளையும் வழங்க வேண்டும் என ஐ.நா. ஆணையம் கூறியுள்ளது.

கல்வி, மருத்துவம், பணியாற்றும் உரிமை போன்றவற்றையும் அகதிகளுக்கு அளிக்க வேண்டும். அதேசமயம் எந்த நாட்டில் தஞ்சமடைகின்றனரோ, அந்த நாட்டு சட்டங்களுக்குட்பட்டு அகதிகள் நடந்துகொள்ள வேண்டும் என்றும் ஐ.நா. ஆணையம் கூறியுள்ளது. எனினும்,  பிரச்னைகள் ஏற்படும் என்பதால், பல நாடுகள் அகதிகளை ஏற்க மறுக்கின்றன. அதேசமயம் அகதிகளாக குடிபெயர்ந்த தங்களுக்கு அடைக்கலமும், ஆதரவும் அளித்த நாடுகளுக்கு விசுவாசமாக இருந்து, புகழ்பெற்றுத் தந்தவர்களும் உள்ளனர். பிரான்ஸ் முன்னாள் நட்சத்திர கால்பந்து ஆட்டக்காரர் ஜினடென் ஸிடேன், ஸ்வீடன் கால்பந்து நட்சத்திர ஆட்டக்காரர் ஸ்லாடென் இப்ராகிம் மோவிக் போன்றோரின் பெற்றோர், அடைக்கலம் தேடி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்டகால மோதல்களைத் தீர்க்க முடியாதது, புதிய மோதல்கள் உருவாவதைத் தடுக்க முடியாதது போன்றவை சர்வதேச சமூகத்தின் இயலாமையையே காட்டுகிறது. பல நாடுகளில் உள்நாட்டுப் போரைத் தூண்டிவிட்டு, அரசியல் தந்திரத்தால் குளிர் காயும் நாடுகளும் அகதிகள் உருவாக முக்கியக் காரணம்.

மக்கள் வாழும் தன்மை கொண்ட ஒரே அழகிய கோள் பூமி. இந்தக் கோளை சீரழித்து வரும் அனைத்து யுத்தங்களையும் ஒழித்து,  உலகம் முழுவதும்  அமைதி, சமாதானம், இன்பம் மலர்ந்து, அனைத்து அகதிகளின் வாழ்விலும் நல்லதோர் எதிர்காலத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். அரசியல் தீர்வுகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.

 

Share:

Author: theneeweb