தருமபுரம் பிரதேச வைத்தியசாலை – பொதுமக்களின் பிரச்சினைகளும் எதிர்பார்ப்பும் – கருணாகரன்

தமிழ் மக்களுக்கு அரசியற் பிரச்சினை மட்டும்தான் உண்டென்றில்லை. ஆயிரம் பிரச்சினைகளுண்டு. கல்வியில் பிரச்சினை. காணியில் பிரச்சினை. வீட்டுத்திட்டங்களில் பிரச்சினை. மரபுரிமைகளைப் பாதுகாப்பதில் பிரச்சினை. காணாமலாக்கப்பட்டோரைக் கண்டறிவதில் பிரச்சினை. கல்முனையில் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதில் பிரச்சினை. இப்படியே உள்ள ஏராளம் பிரச்சினைகளில் மருத்துவப் பிரச்சினையும் உண்டு. மருத்துவர்களை நியமிப்பதிலிருந்து மருத்துவமனைகளுக்கான வளங்களைப் பெறுவது, தேவையான ஆளணியைப் பெற்றுக்கொள்வது வரையில் பல பிரச்சினைகள். அதிலும் போரிலே பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் கதையைக் கேட்கவே வேண்டாம். பல நெருக்கடிகளும் பிரச்சினைகளும்.

2009 க்கு முன்பு கிளிநொச்சி  மாவட்டம் தொடர் யுத்தப் பிரதேசமாக இருந்தது. அதனால் யுத்தத்தின் அனைத்துத் துயரங்களையும் முழுமையாக அனுபவித்த ஒரு பிரதேசமிது. இங்கே மருத்துவச் சேவைகளுக்காக மாவட்ட பொது வைத்தியசாலையும் முழங்காவில் தள வைத்தியசாலையும் அக்கராயன், தருமபுரம், பூநகரி, பளை வுட்டக்கச்சி, உருத்திரபுரம், வேரவில் ஆகியன பிரதேச வைத்தியசாலைகளும் ள்ளன. இதை விட உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலையும், வன்னேரிக்குளம், வட்டக்கச்சி, கண்டாவளை, பிரமந்தனாறு போன்ற இடங்களில் சில சிறு வைத்திய நிலையங்களும் இயங்கி வருகின்றன. ஆனையிறவு மருத்துவமனை இந்த மருத்துவமனையே பிரமந்தனாறில் திறக்கப்பட்டுள்ளது. இன்னும் அங்கே மீள இயங்கவில்லை. ஆனையிறவு உப்பளம் சீராக இயங்கி, அந்தப் பகுதியில் சனங்கள் முறையாக மீளக்குடியேறினால்தான் ஆனையிறவு மருத்துவமனை மீள இயங்கக் கூடியதாக இருக்கும்.
கிளிநொச்சி மாவட்டத்தின் மொத்த சனத்தொகை 145,167பேராகும். குடும்பங்களின் எண்ணிக்கை 46,172. இவ்வளவு பேருக்கும் இந்த மருத்துவமனைகளிலேயே சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலதிக சிகிச்சைக்கு பெரும்பாலும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கே அம்புலன்ஸ்கள் ஓடுகின்றன. சீரியஸான நோயாளிகள் அங்கேதான் போகிறார்கள். மேலதிக சிகிச்சையைப் பெறுவதற்கும் அங்கேயே செல்ல வேண்டும். பெரியாஸ்பத்திரி என்று சனங்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையைச் சொல்வதற்கான காரணம், அது வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களுக்கான பொது மருத்துவமனையாக – மேல் மருத்துவமனையாக இருப்பதால்.
கிளிநொச்சியில் மாவட்ட மருத்துவமனைக்கு அடுத்ததாக அதிக நோயாளர்களைச் சந்திப்பது தருமபுரம் பிரதேச வைத்தியசாலையே. இது கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளது. கரைச்சிக்கு – கிளிநொச்சிக்கு – அடுத்து அதிக சனத்தொகை உள்ள பிரதேசம் தருமபுரமே. தருமபுரத்தை மையமாகக் கொண்ட விசுவமடு, கல்லாறு, உழவனூர், சுதந்திரபுரம், றெட்பானா, கண்டாவளை, புளியம்பொக்கணை, பெரியகுளம், கல்மடு, கல்மடு நகர், இராமநாதபுரம் கிழக்கு, உடையார்கட்டு, முரசுமோட்டை போன்ற பகுதிகள் உள்ளன. இதனால்  தருமபுரம் மருத்துவமனை, இங்கே வசிக்கும் மக்களுக்கு மட்டுமின்றி பரந்தன் தொடக்கம் உடையார்கட்டு, சுதந்திரபுரம் வரையுள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்களுடைய வைத்திய சேவைக்கான முதல் தெரிவாகவுள்ளது.
அதாவது, தருமபுரம் வைத்தியசாலை கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு மட்டுமன்றி முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப் பிரதேச மக்களுக்கும் சேவையாற்றிக் கொண்டிருக்கிறது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள  மாஞ்சோலை (முள்ளியவளை)  வைத்தியசாலையை விட தருமபுரம் வைத்தியசாலைக்கு செல்வது போக்குவரத்து மற்றும் ஏனைய விடயங்களை நோக்கும் போது எல்லைக் கிராம மக்களுக்கு இலகுவாக உள்ளதே இதற்குக்  காரணமாகும்.
எனவே, தனது சுகாதார சேவைப் பிரிவினுள் அடங்குகின்ற மக்கள் தொகையை விட மேலதிகமான மக்களுக்குச் சேவையாற்ற வேண்டிய நிலையில் தருமபுரம் வைத்தியசாலை உள்ளது. ஏறத்தாள 40000  பேருக்கான வைத்திய சேவையை வழங்க வேண்டியுள்ளது. வைத்தியசாலையின் தகவலின்படி நாளாந்தம் 150க்கு மேற்பட்ட வெளிநோயாளர்கள் வைத்தியசாலைக்கு வருகை தருகின்றனர். விடுதி வசதி போதாத நிலையிலும் விடுதியில் தங்கிச் சிகிச்சை பெறவேண்டியவர்களின் எண்ணிக்கை எப்போதும் மீறியே காணப்படுகிறது. இவ்வளவுக்கும் இங்கே எல்லாவற்றுக்குமாக இரண்டே இரண்டு மருத்துவர்களே கடமையாற்றுகின்றனர். வைத்தியசாலையின் பிரமாணப்படி இரண்டு மருத்துவர்களுக்கான இடமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இது சனத்தொகை குறைந்திருந்த காலத்தின் பதிவு. இப்போது சனத்தொகை பல மடங்கு அதிகரித்து விட்டது. நோயாளர் தொகையும் கூடி விட்டது. ஆகவே இவற்றைக் கவனத்திற்கொண்டு இந்த மருத்துவமனை தரமுயர்த்தப்பட்டிருக்க வேண்டும். அப்படித் தரமுயர்த்தப்படும்போது கூடுதலான மருத்துவர்களும் பிற பணிகளுக்கான உத்தியோகத்தர்களைக் கொண்ட ஆளணியும் பிற வசதிகளும் கூடியிருக்கும் என்று ஒரு அபிப்பிராயமுள்ளது. ஆனால், தரமுயர்த்துவதால் மட்டும் ஆளணி கூடுவதில்லை. அது தனியான ஒரு நிர்வாக நடவடிக்கை. மிகவும் சிரமமானது. அதுவும் தமிழர் புகுதிகளுக்கு மிகவும் சிரமமானது. இது இன்னும் நடக்கவில்லை. தருமபுரத்தையும் விட சனத்தொகை குறைந்த முழங்காவில் மருத்துவமனை தரமுயர்த்தப்பட்டுள்ள அளவுக்கு சனத்தொக கூடிய தருமபுரம் கவனிக்கப்படாதிருப்பதற்குக் காரணம் என்ன? கடந்த மாகாணசபையின் ஆட்சிக்காலத்தில்கூட  இந்த விசயம் கவனிக்கப்படாமல் விடப்பட்டது துரதிருஸ்டமானது. இவ்வளவுக்கும் இதனுடைய சுற்றயலில் வடமாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா நீண்டகாலமாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய  நிலையில், இந்த வைத்தியசாலையில் காணப்படும் வசதிகள் மற்றும் ஆளணி வளம் போன்றன கூடிய விரைவில் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியம். இதற்கும் வைத்தியசாலை தரமுயர்த்தப்படுவது அவசியம் என்கின்றன சில தரப்புகள். ஆனால் தரமுயர்த்தப்படுவதால் வசதிகள் கூடுவதில்லை.
இப்போது வைத்தியசாலைக்கான புதிய வெளிநோயாளர் பிரிவிற்கான கட்டிடம் மட்டுமே கட்டப்பட்டு அதுவும் இன்னும் திறக்கப்படாமல் ஏறத்தாள இரண்டு ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுகின்றது.  தற்போது பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளராகக் கடமையாற்றும் மருத்துவக் கலாநிதி சி. குமரவேளின் முயற்சினால் இதை விரைவில் திறந்து வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வைத்தியசாலைத் தகவல்கள் கூறுகின்றன. வைத்தியசாலைக்குத் தேவையான, நோயாளர் தங்கி சிகிச்சை பெறுவதற்கான நோயாளர் சிகிச்சை விடுதிகளைக் கட்டும் பணிகள் மிக அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நோயாளர் விடுதிகளின்றி வைத்தியசாலையை புதிய இடத்தில் செயற்படுத்த முடியாது என்பது இன்னொரு பிரச்சினை. இதனால் பழைய கட்டிடத்திலேயே வைத்தியசாலை இயங்கி வருகிறது. அப்படி இயங்குவதால் போதிய வசதிகளின்றி நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
வைத்தியசாலையில் இரண்டே இரண்டு வைத்திய அதிகாரிகளும் நான்கு தாதிய உத்தியோகத்தர்களும் கடமையாற்றுகின்றனர். வைத்தியசாலையில் சேவையைப் பெறுகின்ற நோயாளர்களின் எண்ணிக்கைக்கு இது போதாது. சேவைக்கான ஆளணி குறைந்து பயனாளர் அதிகரிக்கும்போது சேவையில் குறைபாடுகள் நேர்வதற்கான சந்தர்ப்பங்களே அதிகமுண்டு. ஆனாலும் மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட ஏனைய பணியாளர்களின் அர்ப்பணிப்பான சேவையினால் குறைபாடுகள் நேராமல், அதை நோயாளர்கள் உணராத வகையில் மருத்துவமனை இயங்கிக் கொண்டிருக்கிறது. இது சேவைப்பழுவையே கூட்டியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தும் நீடிக்க முடியாது. இந்த நிலையிலும் அண்மையில் நோயாளர் நலன் மற்றும் மருத்துவமனையின் வளர்ச்சி கருதி ஆஸ்பத்திரி அபிவிருத்திச் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைய மருத்துவ அதிகாரி சஞ்சயன், பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் குமரவேள் ஆகியோரின் முயற்சி இதைச்சாத்தியப்படுத்தியிருக்கிறது.
ஒப்பீட்டளவில் 45,483 வெளி நோயாளர்களுக்கு (நாளொன்றுக்குசராசரியாக 125 பேர்) சிகிச்சையளிப்பதற்கு பகல், இரவுக் கடமைகளுக்கு இரண்டு வைத்திய அதிகாரிகள் மட்டும் கடமையாற்றும் நிலையில் நோயாளர்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ளக்காத்திருக்கும் நேரம் அத்தோடு சிகிச்சையின் தரம் என்பன கேள்விக்குள்ளாகின்றன. இது கடந்த ஆண்டு விவரம். தற்போது முன்சொன்னவாறு நாளொன்றுக்கு 150 நோயாளிகள் வருகை தருகின்றனர்.

யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்றக் காலத்தில் தருமபுரம் பிரதேச வைத்தியசாலை அமைந்துள்ள பிரதேசமானது துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. இங்கே வைத்தியசாலைக்கான காணிப்பிரச்சினை சில ஆண்டுகள் மருத்துவமனையின் வளர்ச்சியைத் தடைப்படுத்தியது. அத்துமீறிக்குடியேறியவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதன் பின்னர் பல விதமான முயற்சிகளின் விளைவாக தற்போது பல அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆயினும் வைத்தியசாலைக்குரியவசதிகள் போதிய அளவில் மேம்படுத்தப்படவில்லை என்பது பிரச்சினையே. விபத்து அதிகமாக நடக்கும் பதிகளில் ஒன்றாகத் தருமபுரம் பிரதேசம் காணப்படுகிறது. ஆகவே அதனுடைய சுமை இந்த மருத்துவமனைக்கே உண்டு. இதைப்போல அதிகளவிலான பாம்புக்கடி, கசிப்புப் பாவனை போன்றவற்றினால் பாதிக்கப்படுவோருக்கான சிகிச்சையளித்தலையும் இந்த மருத்துவனையே செய்ய வேண்டியுள்ளது.

இந்தப் பிரதேசத்தில் வாழுகின்ற மக்களின் சமூக பொருளாதார நிலையும் பிரதேச வளர்ச்சியும் பிற இடங்களில் (தனியார் மருத்துவமனைகளில்) மருத்துவச் சேவையைப் பெறும் நிலையிலில்லை. ஆகவே அனைத்துச் சுமையும் இந்த மருத்துவமனைக்கே உண்டு. இந்த நிலையில் அடிப்படை வைத்திய வசதிகளோடு மட்டும் இந்த மருத்துவமனை இயங்க முடியாது. குறைந்த பட்சம் குழந்தைப்பேறுக்கான – மகப்பேற்று விடுதியாவது தேவையானது. இவ்வருடம் மகப்பேற்று விடுதிக்காகவும் சமையலறைக்காகவும் திட்டமிடப்பட்டுள்ளது. வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளவாறு நிதி விடுவிக்கப்;;பட்டால் அமைக்கப்படும். ஆனால் ஏற்கனவே Pளுனுபு நிதியில் பெரும் வெட்டு விழுந்துள்ளது.

எனினும் உச்ச சேவையை வழங்கும் இவ்வைத்தியசாலை பாராட்டுதற்குரியது. மிகக்குறைந்த வசதிகள் மற்றும் குறைந்த மனித வளத்துடன் மிகுந்த சிரமத்துடனேயே தனது சேவைகளை வழங்கிக்கொண்டிருக்கின்ற மருத்துவர்களும் தாதிய உத்தியோகத்தர்களும் கவனத்திற்குரியவர்கள்.  ஏறத்தாள ஒரு தள வைத்தியசாலைக்குரிய கடமைகளை பிரதேச வைத்தியசாலைக்குரிய வளங்களோடு  ஆற்றிக்கொண்டிருக்கின்றது.

சுகாதார அமைச்சினால் நாடெங்கிலும் உள்ள வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை கணனிமயப்படுத்தும் திட்டத்தின் கீழ் மாவட்ட ரீதியாக இரண்டு வைத்தியசாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆரம்பத்திட்டமானது தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த செயற்றிட்டத்திற்காக அக்கராயன் மற்றும் தருமபுரம் பிரதேச வைத்தியசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. எனினும் குறித்த கணனிமயப்படுத்தும் திட்டத்தை செயற்படுத்துவதற்கு போதிய வசதிகளோ வளங்களோ இல்லாத நிலையில் தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என்பதே கேள்விக்குறியே. இவ்வருடம் மகப்பேற்று விடுதிக்காகவும் சமையலறைக்காகவும் திட்டமிடப்பட்டுள்ளது. வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளவாறு நிதி விடுவிக்கப்;;பட்டால் அமைக்கப்படும். ஆனால் ஏற்கனவே Pளுனுபு நிதியில் பெரும் வெட்டு விழுந்துள்ளது. இது, தருவது போல் போக்குக்காட்டி பின்னர் கைவிடுவதற்கான அரசாங்கத்தின் தந்திரமோ என மக்கள் அங்கலாய்க்கின்றார்கள்.

குறித்த செயற்றிட்டம் உண்மையிலேயே செயலுருப்பெற வேண்டுமாயின் தருமபுரம் பிரதேச வைத்தியசாலையின் குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படவேண்டும். இவ்வைத்தியசாலை விரைவில் ஒரு தள வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டு பொது மக்களுக்கான வைத்திய சேவைகள் ஒழுங்காக வழங்கப்பட வேண்டுமென்பதே அப்பிரதேச மக்களின் நியாயமான எதிர்பார்ப்பாகும். ஆனாலும் தரமுயர்த்தப்பட்டால்;தான் வளம் பெறும் என்பது தவறு என்கின்றனர் மூத்த மருத்துவ அதிகாரிகள். இப்போது இதே தரத்தில் உள்ள தெற்கு வைத்தியசாலைகளில் கிளிநொச்சி பொது  வைத்தியசாலைக்கு நிகராக வளம் பெற்ற வைத்தியசாலைகள் உள்ளன என்று அவர்கள் இதைச் சுட்டிக்காட்டுகின்றனர். ஆக முக்கியமாக நிதியும் ஆளணியுமே தேவை. ஆளணி அதிகரிப்புக்கு கோரப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு அமைச்சு மிகவும் எதிர்ப்பாக உள்ளது. கடந்த முறை (2016) எமது மாவட்டக் கோரிக்கை வலுவானதாக இல்லாததால் அதிகரிப்புக் கணிசமான அளவு கிடைக்கவில்லை. யாழ் மற்றும் வவுனியா சரியான முறையில் வாதங்களை முன் வைத்திருந்ததால் அதிகரிப்பு கணிசமாக கிடைத்தது என்று தெரிவிக்கிறார் இன்னொரு மூத்த மருத்துவ அதிகாரி.

மேலும் எமது மாகாணத்தின் மிக உயர் அதிகாரிகள் சுகாதார அமைச்சின் நிர்வாகிகள் தமது முயற்சிகளால் வேறு மத்திய அமைச்சு மூலங்களில் இருந்து திரட்டி வரும் நிதியைப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. தமது திறைசேரி மூலம் தரட்டும் அனுமதிப்போம் எனக் கூறு வருகின்றார்கள்.  குறிப்பாக புனர்வாழ்வு அமைச்சிலிருந்து பெறப்பட்ட 20 மில்லியன் ரூபாய் அபிவிருத்திக்கான நிதியை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று மாகாணசபையின் பிரதம செயலாளர் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களை மனதில் கொள்ளாத தீர்மானம். இந்த நிதி இனி வேறு பிரதேசங்களுக்கு – தெற்குக்கே திரும்பிச் செல்லவுள்ளது. மத்தியிலிருந்து வரும் நிதியை பெறுவதா இல்லையா என்று தீர்மானிப்பது அரசியல்தரப்பின் தீர்மானமாக இருக்க வேண்டுமே தவிர, இப்படி அதிகாரிகள் தமது சுயவிருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் அமையக்கூடாது. மாகாணசபை இயங்கிய காலத்தில் சரியாக வழிகாட்டத் தவறியவர்கள் இப்போது அதிகாரத்தைப்பற்றிப் பேசுகிறார்கள் என்று விசனம் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையானது அபிவிருத்திக்கு தடையாக உள்ளது. மக்களுக்கு எதிரானதாக இருக்கிறது.

மேலும் முன்னர் இருந்த பிரதம செயலாளர் வருட நிதி ஒதுக்கீடுகளை வைப்பில் வைத்து அடுத்த வருட இறுதி வரை வேலைத்திட்டங்களை செய்வார். இதனால் நிதி திரும்பிப் போவது குறைவு. இப்போது 31.12ல் நிதி திருப்பப்படுகிறது. இதற்கு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் திரு தவராசாவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. 2013ல் அவர் மாகாண சபையில் அதைத்தவறெனவும் ஊழலெனவும் கூறியதை தற்போதைய பிரதம செயலாளர் காரணமாகக் கூறுகின்றார்.

ஆக மொத்தத்தில் பல்வேறு குறைபாடுகள், பிரச்சினைகள், சிக்கல்கள், தலையீடுகள், அக்கறையின்மைகள் போன்றவற்றில் சிக்குண்டிருக்கிறது இந்த விவகாரம். இதைத் தீர்த்து வைத்திருக்க வேண்டிய பெரும் பொறுப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குண்டு. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே மாகாணத்திலும் ஆட்சிப் பொறுப்பிலிருந்தது. தற்போது அரசாங்கத்திற்கு நெருக்கமாக உள்ளது. அது இதையெல்லாம் கவனத்திலெடுக்குமா?

Share:

Author: theneeweb