நல்லாட்சியை ஸ்தாபிப்பதற்கு 18, 19வது திருத்தச் சட்டங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டும்

சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கும் எதிர்காலத்தில் நல்லாட்சியை நாட்டினுள் ஸ்தாபிப்பதற்கும் அரசியலமைப்பின் 18 மற்றும் 19வது திருத்தச் சட்டங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

18வது திருத்தச் சட்டத்தில் காணப்பட்ட மன்னர் ஆட்சி மற்றும் சர்வாதிகார தோற்றத்தின் காரணமாக புதிதாக 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றினாலும் அதனூடாக ஒரு அரசியல் தலைமையின் கீழ் பயணிக்க முடியாத நிலை தோன்றி இருப்பதனால் நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் நல்லாட்சி அரசின் கொள்கைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போனதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு இன்று (23) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்ட ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இன்றைய காலகட்டத்தில் நாட்டு மக்களின் எண்ணங்களை புரிந்துகொள்ளும் மக்கள்நேய ஆட்சியே நாட்டுக்கு தேவையாக இருப்பதாகவும் அரசியல் தலைமைகள் நாட்டை நேசிப்பவர்களாக இருக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

நாட்டின் அபிவிருத்திக்கு வலுவான சக்தியாக கருதப்படும் சுமார் 16 இலட்சம் அரச ஊழியர்கள் ஊழல் மற்றும் மோசடிகளை தவிர்த்து தங்களது கடமைகளை சரிவர ஆற்றுவார்களேயானால் பொதுமக்களின் தேவைகளை துரிதமாக தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜப்பான் நாட்டின் பிரதான சங்கநாயக்கர் வண.பானகல உபதிஸ்ஸ தேரர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சரான திருமதி. பேரியல் அஸ்ரப், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Share:

Author: theneeweb