போதிய உடன்பாடின்மை இரணைமடு விவகாரத்தில் இழுபறியை ஏற்படுத்தியுள்ளது.

மீளாய்வுக்கூட்டத்தில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு.

(நாச்சியாதீவு பர்வீன்)
இரணைமடு நீர்த்தேக்கத்தை சூழவுள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குழாய் வழியான குடிநீர் விநியோகத் திட்டத்தை எதிர்ப்பதன் பின்னணியில்  அரசியல்வாதிகள் சிலருக்கிடையிலான போதிய உடனபாடின்மை  இழுபறி நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
 தற்பொழுது நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள நீர் விநியோகத் திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டம்  வியாழக்கிழமை (03) அமைச்சின் கேப்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதற்கு தலைமை தாங்கிய  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல்இ நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப்  ஹக்கீம் இதனை கூறினார்.
 இக்கூட்டத்தில்  இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன,செயலாளர் பிரியந்த மாயாதுன்ன அமைச்சின் உயர் அதிகாரிகள் பல்வேறு பிரதேசங்களுக்கும் பொறுப்பான தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதிப் பொது முகாமையாளர்கள், உதவிப் பொது முகாமையாளர்கள்,ஆகியோர் கலந்துகொண்டனர். நாடெங்கிலும் முன்னெடுக்கப்படும் 20 பாரிய குழாய் நீர் வழங்கல் திட்டங்கள் மற்றும்  கழிவு  நீர் சுத்திகரிப்பு செயற்றிட்டங்கள் என்பன பற்றி இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
பிரஸ்தாப மீளாய்வுக்கூட்டத்தில் அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறியதாவது
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பாதிப்புகளை நேரில் கண்டறிவதற்காக நாங்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு சென்றிருந்த போது இரணைமடு நீர்த்தேக்கத்தை நேரில் பார்வையிட்டேன். இப்பாரிய நீர்தேக்கத்திலிருந்து பெறப்படும்  நீரின் மூலம், அப்பிரதேச விவசாயிகளுக்கு பாதிப்பற்ற விதத்தில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்லாது, யாழ் குடாநாட்டின் குடிநீர் தேவையையும் நிவர்த்தி செய்ய முடியும்.
இராஜாங்கனை நீர்த்தேக்கம் போன்றவை அமைந்துள்ள பிரதேங்களில் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்பு இன்மையினாலேயே நிலைமை சிக்கலடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளையில்,  இரணைமடு நீர்த்தேக்கத்தை சூழவூள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் விநியோகத் திட்டத்தை  விவசாயிகள் எதிர்ப்பதன் பின்னணியில் அரசியல்வாதிகளுக்கிடையிலான முரண்பாடுகள் இழுபறி நிலை ஏற்படுத்தியுள்ளது.
இரணைமடு நீர்த்தேக்கத்திற்கு பதிலாக,வேறு நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை பெறுவது பற்றியும் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.எவ்வாறாயினும், இரணைமடு நீர் தேக்கத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் நீர்விநியோக திட்டத்தை கைவிட்டுவிட முடியாது.விவசாயிகள்மற்றும் பொதுமக்கள் மத்தியில் இது பற்றிய தெளிவை ஏற்படுத்துவதோடு, அரசியல் ரீதியாகவும் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும்.
சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கும் யாழ்ப்பாண குடாநாடு, கற்பிட்டி ஆகிய பிரதேசங்களுக்கு கடல் நீரை சுத்திகரித்து தூய குடிநீராக வழங்கும் செயல்திட்டத்தை பற்றி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். அம்பாறை மாவட்டதில் பொத்துவில் பிரதேசத்திற்கும் கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக வழங்குவது பற்றி ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன ஆனால் பொத்துவிலை பொறுத்தவகையில் ஹெட ஓயா திட்டத்தின் மூலம் நீரை பெற்றுக்கொள்வதே உகந்ததாகும் என்றார்.
மீளாய்வு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது வடமாகாணத்திற்கு பொறுப்பான நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதிப்பொதுமுகாமையாளர் பாரதிதாசன் விளக்கிக்கூறினார். கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்ட மக்களின்  குடிநீர் தேவையை நிவர்த்திக்கக்கூடிய மாற்றுத்தீர்வுகளையும் அவர் முன்வைத்தார். குழாய் வழியாக நீரை வழங்குவதற்கு,இயந்திர பயன்பாட்டுக்கு செலவு கூடிய நீர் மின்சாரத்திற்கு பதிலாக சூரிய சக்தியைக்கொண்டு பெறப்படும் மின்சாரத்தை பயன்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதன் போது முன்னர் அங்கு பணியாற்றிய பிரதி பொதுமுகாமையாளர் உமர் லெப்பையும் கருத்து தெரிவித்தார்.
அமைச்சர் ஹக்கீம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பான மேலதிகாரிகளிடம் தனித்தனியாக விளக்கங்களை கோரினார். எஞ்சிய காலப்பகுதிக்குள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு, முன்னெடுக்கப்படுகின்ற செயற்றிட்டங்களை துரிதப்படுத்தி நிறைவு செய்ய வேண்டும் எனவும் அவர் பணிப்புரை விடுத்தார்.

 

 

 

Share:

Author: theneeweb