பிரிட்டன்: ஜூலை 23-இல் புதிய பிரதமர் பெயர் அறிவிப்பு

பிரெக்ஸிட் விவகாரத்தில் ராஜிநாமா செய்துள்ள தெரசா மே-வுக்கு பதிலாக, பிரிட்டனின் பிரதமர் பதவியை ஏற்கப் போவது யார் என்பதை வரும் ஜூலை மாதம் 23-ஆம் தேதி அறிவிக்கப்போவதாக ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரிட்டனின் அடுத்தப் பிரதமர் பதவிக்கான போட்டியில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் போரிஸ் ஜான்ஸன், மற்றும் தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெரிமி ஹன்ட் ஆகிய இருவரில் யார் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது அடுத்த மாதம் 23-ஆம் தேதி அறிவிக்கப்படும்.
இதற்கு அந்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் எந்த தேதியில் பிரதமராகப் பொறுப்பேற்பார் என்ற விவரம் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.
பிரிட்டனில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதற்கு பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, புதிய பிரதமராக தெரசா மே 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றார்.

எனினும், பிரெக்ஸிட்டுக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனுக்கும், பிரிட்டனுக்குமான வர்த்தக உறவு குறித்து அவர் அந்த அமைப்புடன் மேற்கொண்ட ஒப்பந்தம், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 3 முறை நிராகரிக்கப்பட்டது. இதனால், பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இதன் எதிரொலியாக, தனது பதவியை பிரதமர் தெரசா மே ராஜிநாமா செய்தார். அந்தப் பதவிக்கு இன்னொருவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, அவர் பிரதமராகத் தொடர்கிறார்.

இந்த நிலையில், அந்தப் பதவிக்காக ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள் போட்டியிட்டனர்.இறுதியாக, கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்ஸனும், ஜெரிமி ஹன்ட்டும் வெற்றி பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து, இரு போட்டியாளர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காக, 1.66 லட்சம் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களிடையே ஜூலை மாதம் 6-லிருந்து 8-ஆம் தேதி தொடங்கி, 22-ஆம் தேதி வரை தபால் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
அதனைத் தொடர்ந்து, வெற்றியாளரின் பெயர் 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share:

Author: theneeweb