கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் பரதேச செயலகமாக தரம் உயர்த்தப்பட வேண்டு

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் பரதேச செயலகமாக தரம் உயர்த்தப்பட வேண்டும்.

இன,மத விரிசல்களை உண்டாக்கும் அரசியல் முடிவுக்கு வர வேண்டும்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தப்பட வேண்டும் என்பதில் இரண்டு பட்ட கருத்து இருக்க முடியாது. அது அப்பிரதேசத் தமிழ்மக்களின் நீணட காலக் கோரிக்கை.

கிழக்கில் பிரதேச செயலகங்கள் உருவாக்கப்படும் போது, இத்தகைய பிரச்சனைகள் உருவாகும் போது பாரபட்சமாக தீர்வு காணப்பட்டன என்ற மனக்குறை தமிழ் மக்களுக்கு இருக்கிறது.

ஆனால் இன, மதவாத நோக்கு நிலையில் இருந்து இப்பிரச்சினையை அணுக முடியாது.
அரச நிர்வாக யந்திரம் இலங்கையின் சகல சமூகங்களும் இலகுவாக மனத்தடையில்லாமல் அணுகக் கூடியதாக இருக்க வேணடும்.

அம்பாறை மாவட்ட செயலகமும் சரி கல்முனை பிரதேச செயலகமும் சரி தமிழ் மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு இசைவானவையாக இல்லை என்பது உண்மையான நிலையே. எப்போதோ இப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும்.

வரலாற்று வழிப்பட்டு திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலமே தமிழ் மக்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது.
இலங்கையின் தமிழ், முஸ்லிம் மக்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் இணைந்து செயற்பட வேண்டிய தருணம் இதுவாகும்.

நாடு முழுவதும் இன, மத வெறுப்பு அரசியல் தலைதூக்கியுள்ளது இந்த நாட்டின் எதிர்காலம் பற்றிய கேள்வியை உருவாக்கி உள்ளது. கிழக்கு வடக்கை பிரிப்பதில் முனைப்புடன் செயற்பட்ட அதே விதமான இன, மதவாத சக்திகள் மீண்டும் விளையாட்டை ஆரம்பித்துள்ளன.

இலங்கையை பல்லினங்களின் நாடாக மாற்றுவதிலேயே இலங்கையின் எதிர்காலம் வெற்றிகரமாக அமையும். எத்தகைய அதி தீவிரவாத நிலைப்பாடுகளும் இன, மத ரீதியான விரிசல்களையே ஏற்படுத்தும்.
நாடு முழுவதும் உருவாகியுள்ள, வெறுக்கத்தக்க இன மதவாத தீப்பொறிகள் கொழுந்து விட்டெரியாமல் தணிக்கப்பட வேண்டும். அதி தீவிர இன, மதவாத சக்திகளுக்கு இடமளிக்கப்படக்கூடாது.

நிலைமையின் பாரதூரத் தன்மையை விளங்கிக் கொண்டு அரசாங்கமும், மக்களால் தெரிவ செய்யப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளும் தாமதியாமல் பிரச்சினைக்கு ஒருங்கிணைந்து தீர்வு காணவேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ளது
இந்த நாட்டு மக்கள் பற்றிய சமூகப் பிரக்ஞை, பொறுப்புணர்ச்சி இருந்தால் இது பெருங்காரியமல்ல.

தமிழ்பேசும் சமூகங்கள் என்ற ரீதியில் முஸ்லீம், தமிழ் தலைவர்கள் மனந்திறந்து பேசவேணடும். தமிழ் மக்களின் நீண்டகால, நியாயமன தனி பிரதேச செயலக கோரிக்கைக்கு ஆதரவு வழங்க முஸ்லீம் மக்களின் தலைவர்கள் முன்வரவேண்டும்.
நில-கலாச்சார ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்

தொல் பொருள் திணைக்களத்திற்கு அல்லது வனபரிபாலனத் திணைக்களத்திற்கு சொந்தமானதென, கிழக்கு வடக்கில் சுவீகரிக்கப்படும் காணிகள் இதர ஆதனங்களை பௌத்த மத குருமார்கள் இஸ்டம்போல் பயன்படுத்தலாம் என்பது இலங்கையில் எழுதப்படாத விதியாக உள்ளது. இது பாரதூரமான அதிகார துஸ்பிரயோகமாகும்.

திருமலை கன்னியா தென்னமரவாடி, முல்லைத்தீவு செம்மலை போன்ற பல இடங்களில் பாரம்பரியமான தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுகின்றன.
கன்னியாவில், செம்மலையில் பிள்ளையார் கோவில்கள் இருந்த இடங்கள் பேரின மதவாத ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்படுகின்றன.
வன பரிபாலனம், தொல் பொருளியல் காணி நிர்வாக யந்திரம் பேரின மதவாத நிர்வாக யந்திரம் என்பதிலிருந்து சுயாதீனமாக்கப்பட வேண்டும்.
இன்று நேற்றல்ல. இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இவை இவ்வாறு தான் இயங்குகின்றன.

13 வது திருத்த சட்டத்தின் கீழ் காணி அதிகாரம் மாகாணத்திற்குரியதாக இருப்பினும் அது உதாசீனம் செய்யப்படுவது பேரினவாத, மதவாத நோக்கு நிலையில் இருந்தே.
திருமலையைப் பொறுத்தவரை அங்கு மாவட்ட செயலாளர் அல்லது காணி அதிகாரி அல்லது ஆளுனர் நியமனங்கள் அனேக சந்தர்ப்பங்களில் பேரின மதவாத நோக்கு நிலையில் இருந்தே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த அகங்கார மனநிலையில் இருந்து இலங்கையின் அரசியல் அதிகார நிர்வாக யந்திரம் விடுவிக்கப்பட வேண்டும்.
இலங்கை பல்லினங்களின் பல சமயங்களின நாடு என்பது உறுதி செய்யப்பட வேண்டும் .இலங்கையின் நல்லெதிர்காலம் தலைவிதி இந்த அடித்தளத்தில் தான் தங்கியிருக்கிறது.

தி.சிறிதரன்
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT)

Share:

Author: theneeweb