மீட்பர்களில்லாத அரசியல்கைதிகள் – கருணாகரன்

விடுதலை செய்யப்படுவதைப் பற்றிய எந்தத் தீர்மானமும் இல்லாமல் கைதிகளாகச் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் 107 விடுதலையாளர்களில் ஒருவரான முத்தையா சகாதேவன் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையிலேயே உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 16 ஆண்டுகளாகச் சிறைப்படுத்தப்பட்டிருந்திருக்கிறார். 2009 இல் யுத்தம் முடிந்து புதிய அரசியற் சூழல் உருவாகிய பிறகும் இவருடைய சிறைவாழ்க்கைக்கு முடிவு வரவில்லை. 2015 இல் நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்ட பிறகும் இதற்கு நல்ல தீர்வு கிட்டவில்லை.

யுத்தத்திற்குப் பிறகான அரசியல் சூழலில், விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களாக இருந்த 12 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதைப்போல இவரையும் விடுதலை செய்யுமாறு கோரி இவருடைய குடும்பத்தினரும் பொது அமைப்புகளைச் சேர்ந்தோரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தனர். இவரை மட்டுமல்ல, இவரைப்போல அரசியல் காரணங்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டோரை விடுதலை செய்யக்கோரித் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். பல போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. இந்தக் கோரிக்கை நியாயமானதும் கூட. ஏனெனில், புலிகளின் அரசியல் முன்னெடுப்பின்படியே இவர்கள் குற்றமிழைத்தவர்களாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பிறகு, அதனுடைய செயற்பாடுகள் இல்லாதொழிக்கப்பட்ட பிறகு, அதனுடைய ஏனைய உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பிறகும் இவர்கள் மட்டும் சிறைப்படுத்தப்பட்டிருப்பது எதற்காக? இதைக்குறித்து சட்ட ரீதியாகச் சிந்திக்க முடியாது. சட்ட ரீதியாகச் சிந்தித்தால் குற்றமும் தண்டனையும் மட்டுமே புலப்படும். ஆகவே இதை அரசியல் ரீதியாகவே சிந்திக்க வேணும். இவ்வாறான விசயங்களை அரசியல் ரீதியாகச் சிந்திப்பதே சரி. அதுவே உலக நடைமுறையும் கூட. ஏனென்றால் இந்தக் கைதிகள் அரசியற் காரணங்களின் அடிப்படையிலான செயற்பாடுகளால் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களை வழிநடத்திய அரசியற் காரணிகளும் அதன் விசையாளர்களுமே இங்கே முக்கியமாகக் கவனத்திலெடுக்கப்பட வேண்டியது. இதை மையமாக வைத்தே இவர்களுடைய பிரச்சினையை அணுக வேண்டும். இதற்கு அரசாங்கத்திடம் முன்னேற்றகரமான எண்ணங்களிருக்க வேண்டும். எதிர்காலத்தைக் குறித்த கரிசனை வேண்டும். ஜனநாயக உரிமைகளிலும் விழுமியங்களிலும் விருப்பிருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் இந்த மாதிரியான சிக்கலுக்குரிய விடயங்களைச் சிக்கலற்றுக் கையாள முடியும்.

ஆனால், அரசாங்கம் இந்த விசயத்தில் மிகப் பின்தங்கியே உள்ளது. பின்தங்கி உள்ளது என்பதன் பொருள் மிக இறுக்கமாகவே உள்ளது என்பதாகும். அதாவது இன்னும் பழி தீர்க்கும் பகையுணர்ச்சியிலிருந்து அது விடுபடவில்லை. இதை மறைப்பதற்காக அது சட்டத்தின் பின்னால் பதுங்குகிறது.

அரசாங்கத்தின் இந்த இறுக்கத்தையும் தவறான வழிமுறையையும்  உடைக்கக் கூடிய வலுவும் உடைக்க வேண்டிய பொறுப்பும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குண்டு. கூட்டமைப்பின் உருவாக்கம், அடையாளம், அதனுடைய தொடர் இருப்பு போன்றவற்றுக்கு இந்தச் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் அரசியலாளர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் பெரும் பங்காற்றியுள்ளனர். அந்த வகையிலும் பொது நிலையிலும் இதைச் செய்ய வேண்டிய கடப்பாடு கூட்டமைப்புக்குண்டு.  ஆனால் இதைக் கூட்டமைப்பு உணரவில்லை. இவர்களை விடுவிப்பது  தன்னுடைய பொறுப்பென்று அது சிந்திக்கவுமில்லை.

சிறைப்படுத்தப்பட்ட அரசியலாளர்களின் விடுதலையைப் பற்றி அவ்வப்போது ஏற்படும் கொதிநிலைக்கேற்ப கூட்டமைப்பின் அறிவித்தல்களிருக்குமே தவிர, நடைமுறையில் எந்த நடவடிக்கைகளையும் அது மேற்கொள்வதில்லை. கைதிகளின் விடுவிப்புக் குறித்து ஒரு பிரேரணையைக் கூட பாராளுமன்றத்தில் கூட்டமைப்புக் கொண்டு வரவில்லை. இந்த விவகாரத்தை நிபந்தனையாக வைத்து அரசாங்கத்துடன் பேசவில்லை. அரசாங்கத்துக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தவில்லை. ஆனால் அப்படிச் செய்திருக்க வேண்டும். செய்திருக்க முடியும். இந்த அரசாங்கத்தை இப்போது கூட பாதுகாத்துக் கொண்டிருப்பது கூட்டமைப்பே. கூட்டமைப்பின் தயவில்தான் இந்த அரசாங்கம் ஓடிக் கொண்டிருக்கிறது.

கிளிநொச்சியில் உள்ள தன்னுடைய குடும்பத்தைப் பிரிந்திருந்த ஆனந்தசாகரன் நோயாளியான மனைவியை இழக்க நேரிட்டபோது இந்தச் சிறைப்படுத்தப்பட்டிருப்போர் விவகாரம் அலையென எழுந்தது. அந்த அலையைச் சமாளிப்பதற்காக ஜனாதிபதி கூட ஆனந்தசாகரனின் விடுதலையைச் சாத்தியப்படுத்துவேன் என்று வாக்குறுதியளித்திருந்தார். ஆனால், அது சத்தமில்லாமல் அப்படியே கைவிடப்பட்ட – காற்றில் பறந்து விட்ட – வாக்காகி விட்டது.

இதற்கெல்லாம் பிரதான காரணம், சிறைப்படுத்தப்பட்டிருக்கும் அரசியலாளர் என்ற கைதிகளில் எவரும் எந்தக் கட்சியின் பிரதிநிதிகளுமில்லை. பேரறியப்பட்ட தலைவர்களுமில்லை. அப்படி ஏதாவது கட்சியின் பிரதிநிதிகள் (அதிலும் முக்கிய தலைவர்கள்) என்றால் இவை இப்படிச் சும்மா இருக்குமா? இப்படி இவர்களைக் கைவிட்டிருக்குமா? இது புலிகளின் ஆட்களென்று கைது செய்யப்பட்டவர்கள் அல்லவா. ஆகவே உள்ளே இருந்தாலென்ன, வெளியே இருந்தாலென்ன? என்பதே இவர்களுடைய எண்ணம்.

புலிகளை வைத்து அரசியலைச் செய்வோர் கூட இவர்களைத் தங்களுடைய ஆட்கள் என்று உணர்வதில்லை. எப்படி புலிகளின் உறுப்பினர்கள் இன்று பொதுவாழ்வில் இவர்களால் கவனிக்கப்படாதிருக்கிறார்களோ அவ்வாறே இந்தக் கைதிகளும். எப்படி வெளியே உள்ள புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் நெருக்கடிகளைத் தனியே எதிர்கொள்ள வேண்டியிருக்கிறதோ அதைப்போலவே இவர்களும் தனித்து நின்றே தமது நெருக்கடியை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. தனித்து நின்றே விடுதலையைப் பெறப்போராட வேண்டியுள்ளது.

இதனால், யாரெல்லாம் சிறையில் உள்ளனர் என்று பொதுவெளியில் தெரியாது. அவரவர் குடும்பம், நெருங்கிய நண்பர்களைத் தவிர இவர்களைப் பொதுவெளிக்கு அறிமுகப்படுத்தும் பணியை ஊடகங்கள் கூடச் செய்வதில்லை. இவ்வளவுக்கும் இவர்கள் ஒவ்வொருவரின் தகுதியும் சாதாரணமானதல்ல. சிலர் முக்கியமான கலைஞர்கள். சிலர் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள். சிலர் சிறந்த நிர்வாகிகள். சிலர் நல்ல சமூகச் செயற்பாட்டாளர்கள். சிலர் முன்மாதிரியான அரசியல் பணியாளர்கள். சிலர் பொறித்துறையைச் சேர்ந்தவர்கள். இப்படித் தகுதிவாய்ந்த இவர்கள் அரசியற் கைதிகள் என்ற ஒற்றைச் சொல்லினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனரே தவிர, இவர்களின் சிறப்புத் தகுதிகளின் வழியாக அடையாளப்படுத்தப்படவில்லை. அதைச் செய்திருக்க வேண்டியது ஊடகங்களும் பொதுவெளியிலிருப்போருமே.

மிருதங்கக் கலைஞரும் பல்கலைக்கழக விரிவுரையாளருமான கண்ணதாசன் இன்று அரசியல் கைதி என்ற அடையாளத்தின் கீழ் சுருக்கப்பட்டுள்ளார். இவர் முன்னர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து போராளியாகச் செயற்பட்டவர். மிருதங்கக் கலைஞராகவும் இளநிலை விரிவுரையாளராகவும் செயற்பட்டுக்கொண்டிருந்த காலத்தில்தான் அவற்றையெல்லாம் விட்டு விட்டு (துறந்து விட்டு) போராட்டத்தில் குதித்தவர் கண்ணதாசன். அப்படிச் செயற்பட்ட கண்ணதாசன், யுத்தம் முடிந்தபோது சிறைப்படுத்தப்பட்டுப் புனர்வாழ்வளிக்கப்பட்டு அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டவர். ஆனால், இன்று அவர் மீண்டும் இன்னொரு வழக்கினால் குற்றவாளியாகக் கருதப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார். இந்த இன்னொரு வழக்கும் கண்ணதாசன் போராளியாக இருந்த காலத்தில் அவருக்கு அவர் சார்ந்த அமைப்பு (புலிகள்) பணித்த கட்டளையைச் செயற்படுத்தியதை மையமாகக் கொண்டதே. கண்ணதாசன் சிறைப்படுத்தப்பட்டுப் புனர்வாழ்வு பெற்றதோடு அவர் போராட்டக்காலத்தில் செய்த, செயற்படுத்திய அனைத்து விடயங்களுக்கான கணக்கும் தீர்க்கப்பட்டது. இந்த அடிப்படையில்தான் அவர் விடுவிக்கப்பட்டார். அவர் மட்டுமல்ல, 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட புலிகளின் உறுப்பினர்களும் அப்படித்தான் விடுவிக்கப்பட்டனர். அப்படிக் கணக்கு முடிக்கப்பட்டால், பிறகெப்படி மீதி மிஞ்சியிருக்கும்?

கண்ணதாசனைப்போன்று எழுத்தினாலும் பொறித்துறைச் செயற்பாட்டினாலும் அறியப்பட்ட இன்னொருவர் சிவ ஆரூரன். இவர் எந்த இயக்கத்தின் உறுப்பினருமில்லை. ஆனாலும் விடுதலை விரும்பி. இவருடைய இரண்டு நாவல்களில் ஒன்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகிறது. ஒரு நாவல் இலங்கை அரசின் உயர் விருதொன்றைப் பெற்றது.

இன்னொருவர் விவேகானந்தனூர் சதீஷ். விதி சறுக்கியது என்பார்களே, அப்படியொரு நிலையில் சிறைக்கூடத்தில் சிக்கியிருக்கிறார் சதீஷ். கிளிநொச்சியைச் சேர்ந்த சதீஷ் போர்க்கால நெருக்கடியில் துணிச்சலோடு மருத்துவத்துறையில் பணியாற்றியவர். இப்போது பத்தாண்டுகளுக்கு மேலாகச் சிறைவாழ்விலிருக்கிறார். இவரும் இயக்க உறுப்பினரில்லை. ஆனாலும் விடுதலைக்காக உழைத்தவர்.

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்புத்தகுதியும் அடையாளங்களும் உண்டு. ஆனால், இதை உணர்ந்து முன்னெடுத்துச் சொல்வது யார்? ஊடகங்களில் எவற்றுக்கும் உள்ளே யாரெல்லாம் இருக்கின்றனர் என்று தெரியாது. அவர்கள் ஒவ்வொருவரைப்பற்றிய விவரமும் தெரியாது. அதைத் தேட வேண்டும் என்ற அக்கறையும் கிடையாது.

இவ்வளவுக்கும் இந்தச் சிறைப்படுத்தப்பட்ட அரசியலாளர்கள் தமிழ்ச்சமூகத்தின் விடுதலை அரசியலுக்காக உழைத்தவர்கள். அவர்களுடைய செயற்பாடுகள் பற்றிய விமர்சனங்கள் யாருக்காவது இருக்கலாம். ஆனால், அதற்காக அவர்கள் ஆயுள் முழுவதும் சிறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றில்லை. அப்படியென்றால், வெளியே எத்தனையோ குற்றவாளிகள் பெருங்குற்றங்களை இழைத்து விட்டுச் சுதந்திரமாகத் திரிகிறார்களே. இது என்ன நீதி? இதற்கு என்ன நியாயம்?

1970 களில் தம்முடைய இளமைக்காலத்தில் மாவை சேனாதிராஜா, டக்ளஸ் தேவானந்தா, சுகு ஸ்ரீதரன், சி. தவராஜா போன்றோர் அரசியல் போராட்டத்தின் நிமித்தமாக அரசினால் சிறைப்படுத்தப்பட்டவர்கள். அதாவது அரசாங்கத்தை எதிர்க்கிறார்கள், சனங்களை அரசுக்கு எதிராகத் திசை திருப்புகிறார்கள் என்ற அடிப்படையில் சிறைக்குள் தள்ளப்பட்டவர்கள். இவர்களைப்போல காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் எனப் பலர். இவர்கள் சிறைப்படுத்தப்பட்டதை, இவர்கள் அங்கே கொடுமைப்படுத்தப்படுவதையெல்லாம் அன்றைய ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சென்றன. அன்றைய அரசியல் தரப்புகள் இவர்களை மக்களிடம் அறிமுகப்படுத்திப் பேசினார்கள். இதனால் அன்று அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மாணவர்கள் தொடக்கம் பல்வேறு தரப்பினரும் ஆதரவுக்குரலெழுப்பினர். 1980 களில் விடுதலை இயக்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான போராளிகள் இவ்வாறு சிறைப்படுத்தப்பட்டிருந்தனர். இலங்கை இந்திய உடன்படிக்கையின்போது இந்தக் கைதிகளின் விடுதலையை ஒரு கோரிக்கையாக முன்வைத்து அத்தனை பேரையும் விடுதலை செய்தன இயக்கங்கள்.

இன்றோ மீட்பருமில்லாமல் காப்பாருமில்லாமல் சிறை நாட்களை எண்ணிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது நமது சிறைப்படுத்தப்பட்ட அரசியலாளர்கள். ஒரு சமூகத்திற்குத் தலைமை தாங்குவோர், மக்களுக்கான அரசியலைச் செய்கிறோம் என்று தம்மைப்பிரகடனஞ் செய்வோர் அதற்கான அடிப்படைத் தகுதிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்தத் தகுதி செயற்பாட்டினால் விளைவது. செயற்பாடெதுவுமே இல்லாமல் அரசியல் அரங்கில் கொடி கட்டப்பறக்க வேண்டுமானால், அரச எதிர்ப்புப் புராணம் பாடிக்கொண்டிருந்தால் மட்டும் போதும் என்பது தமிழ்ச்சமூகத்திடம்தான் எடுபடும்.

அரசியற் கைதிகள் என்ற சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்களை விடுவிப்பதற்காக முயற்சிகளில் இனியும் தாமதிக்காமல் கூட்டமைப்புச் செயற்பட வேண்டும். கூட்டமைப்புடன் இணைந்து ஏனைய அரசியற் கட்சிகளும் மக்களும் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். தாமதிக்கப்பட்ட நீதி என்பது இல்லாத நீதி என்பதற்குச் சமன். காலம் கடந்த பிறகு நீதி கிடைப்பதும் ஒன்றுதான். இல்லாததும் ஒன்றுதான்.

சிறையில் இருப்பது வேறு யாருமல்ல. உங்கள் தம்பி. உங்கள் அண்ணன். உங்கள் தந்தை. உங்கள் பிள்ளை. உங்கள் நண்பர்கள். உங்கள் உறவுகள். எல்லோருடைய விடுதலைக்காகவும் உழைத்தவர்கள் என்று எண்ணுங்கள்.

விடுதலை கோரி எங்கள் கால்கள் முன்னகரும். கைகள் உயரும். இவர்களை விடுவிப்பது எங்கள் ஒவ்வொருவருடைய பணி. பொறுப்பு.

Share:

Author: theneeweb