பிரதேச செயலாளர், கிராம அலுவலரின் போலி இறப்பர் முத்திரை, ஒப்பத்துடன் ஏ9 வீதியில் காணி மோசடி

கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் கிளிநொச்சி நகரின் மத்திய பகுதியில் பெறுமதிமிக்க காணி துண்டு ஒன்று மோசடி செய்யப்பட்டுள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது தொடர்பில் கரைச்சி பிரதேச செயலரின் பணிப்புக்கமைய கிளிநகர் கிராம அலுவலர் கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலீஸ் மா அதிபர் அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கரைச்சி பிரதேச செயலாளர் த. முகுந்தன் மற்றும் கிளி நகர் கிராம அலுவலர் எஸ்.வி. ஜெயந்தன் ஆகியோரது பதவி நிலை இறப்பர் முத்திரை போலியாக தயாரிக்கப்பட்டு காணிக்குரிய கடிதம் எழுதப்பட்டு ஒப்பமிட்டு குறித்த காணி மோசடி இடம்பெற்றுள்ளதமை கண்டியறியப்பட்டுள்ளது.

மேற்படி மோசடி செய்யப்பட்ட காணியில் தற்போது இரண்டு மாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. குறித்த காணி காணி சீர் திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணி. எனவே போலியாக கடிதம் தயாரித்தவர்கள் காணி சீர்திருத்த ஆணைக்குழு என தலைப்பிடுவதற்கு பதிலாக காணி சீர்திருத்த அதிகார சபை என தலைப்பிட்டுள்ளதோடு, குறித்த காணியில் 1981 ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த நபர் குடியிருந்து வருகின்றார் என்றும் வன் செயல் மற்றும் ஏனைய தடங்கல் காரணமாக காணிக்கான பயன்பாட்டு பணம் இதுவரை செலுத்தப்படவில்லை என்றும் எனவே குடியிருந்த காலங்களை அத்தாட்சிப்படுத்தி தருமாறும் கோரி எழுதப்பட்டுள்ளது.

இதன் கீழ் கிராம அலுவலரின் உறுதிப்படுத்தலில் தான் அறிந்த வகையில் விண்ணப்பதாரி குடியிருந்தார் அல்லது குடியிருக்கவில்லை என சிபார்சு செய்கின்ற பகுதியில் குடியிருந்தார் ,குடியிருக்கவில்லை என்பதில் எதனையும் வெட்டி நீக்காது கிராம அலுவலர் போன்று ஒப்பம் இடப்பட்டுள்ளது. அதன் கீழ் பிரதேச செயலாளர் போன்று ஒப்பம் இடப்பட்டு இறப்பர் முத்திரை அடிக்கப்பட்டு மோசடி இடம்பெற்றுள்ளது.

குறித்த மோசடி நடவடிக்கைகளுக்கு இந்த மாவட்டத்தில் பணியாற்றி தற்போது இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவரே உறுதுணையாக இருந்து செயற்பட்டுள்ளார் எனவும் தெரியவருகிறது. அத்தோடு நகர அபிவிருத்தி அதிகார சபையில் பணியாற்றுகின்ற ஒருவர் தற்போது குறித்த கட்டடத்தின் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றார் எனவும் அவர் தான் ஒப்பந்த வேலையை பெற்றுக்கொள்வதற்காக கரைச்சி பிரதேச சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபைகளில் தன்னுடைய செல்வாக்கினை பயன்படுத்தி கட்டட அனுமதியினையும் பெற்றுக்கொடுத்திருகின்றார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share:

Author: theneeweb