மக்கள் கலைஞரை இழந்து நிற்கின்றோம் – சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு

நாடகக்கலையினாலும் சமூகப்பணிகளாலும் மக்களின் மனதில் நிறைந்த  அமரர் அப்பச்சி வல்லிபுரம்  என சமத்துவும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த அமைப்பின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

நாடகக்கலையினாலும் சமூகப்பணிகளாலும் மக்களின் மனதில் நிறைந்த  அமரர் அப்பச்சி வல்லிபுரம் அவர்களை இன்று நாம் இழந்து நிற்கிறோம். இளவயதிலிருந்தே கலைகளின்பால் நாட்டம் கொண்ட கலைஞர் அப்பச்சி வல்லிபுரம் அவர்கள் தன்னை ஒரு முழுமையான கூத்துக் கலைஞராகவும் நாடக நெறியாளராகவும் வளர்த்துக் கொண்டார். தான் கற்றதையும் தன்னுடைய படைப்புத் திறனையும் கொண்டு தன்னுடைய வாழ்நாள் முழுதும் பல நூற்றுக்கணக்கானோரை இந்தக் கலைகளில் ஈடுபடுத்தி வந்தார். கிராமங்களிலிருந்து பாடசாலைகள் வரையில் பலரைக் கலைகளின்பால் ஈடுபடத் தூண்டி பல நூற்றுக்கணக்கான அரங்கேற்றங்களைச் செய்திருக்கிறார். இவரால் பயிற்றுவிக்கப்பட்ட கூத்துக் கலைஞர்களும் நாடக நடிகர்களும் இன்று ஒவ்வொரு ஊரிலும் ஆற்றல் மிக்கவர்களாகத் திகழ்கின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் பல நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகின்றனர். ஒரு சிறந்த கலைஞருக்கான அடையாளமும் சிறப்பும் தன்னுடைய அடிச்சுவட்டில் எதிர்காலத் தலைமுறையை உருவாக்கிச் சுயாதீனமாக நடக்க வைப்பதாகும். அந்த வகையில் இந்தப் பணியை மிகச்சிறப்பாகவே செய்திருக்கிறார் அமரர் அப்பச்சி வல்லிபுரம் அவர்கள்.

எமது மக்கள் இடப்பெயர்வு அலைச்சல் நிறைந்த வாழ்க்கை எனப் பல நெருக்கடிகளைச் சந்தித்தபோதும் சோர்ந்திராமல் மக்களை மகிழ்விக்கும் வகையிலும் எமது பாரம்பரியத்தைப் பேணும் வகையிலும் அளிக்கைக் கலைகளின் மூலமாக சமூகத்தை உயிர்ப்பூட்டி வந்திருக்கிறார் அப்பச்சி வல்லிபுரம் அவர்கள். அப்பச்சி வல்லிபுரம் அவர்களுடைய ஆற்றலையும் ஆளுமையையும் கண்டு அவற்றைப் பல்வேறு அமைப்புகளும் நிறுவனங்களும் மதிப்பளித்துள்ளன. பிரதேச கலாச்சார அவை, மாவட்டக் கலாச்சாரப் பிரிவு போன்றவை சிறந்த கலைஞராகப் பாராட்டி மதிப்பளித்துள்ளன. இந்த வகையில் மிகச் சிறந்த கலைப் பணிகளுக்காகவும் முன்மாதிரியான சிறப்பியல்புக்காகவும் அமரர் அப்பச்சி வல்லிபுரத்தை எமது வரலாறு என்றும் நினைவிற் கொண்டிருக்கும். கிளிநொச்சியில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கலை, சமூகப் பணிகள் என்று செயற்பட்டு மக்கள் கலைஞராக அறியப்பட்ட பண்பாளரை கிளிநொச்சி வாழ்மக்கள் இழந்து நிற்கின்றனர். அமரர் அப்பச்சி வல்லிபுரம் அவர்களின் குடும்பத்தினரும் தமது பேராளரை இழந்து தவிக்கின்றனர்.

முற்போக்குச் சிந்தனையோடு சமூகப் பணிகளிலும் முழுமையான அர்ப்பணிப்போடு செயற்பட்டு வந்த அப்பச்சி வல்லிபுரம் அவர்கள் சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் கொள்கை வழி நின்று பயணித்தவர். அவருடைய இழப்பு சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்புக்கும் பேரிழப்பாகும். துயர் நிறைந்த நெஞ்சுடன் அமரர் அப்பச்சி வல்லிபுரம் அவர்களுக்கு எமது தலைகளைத் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகின்றோம்.

இவ்வண்ணம்

முருகேசு சந்திரகுமார்

தலைவர், சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு

(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)

Share:

Author: theneeweb