பாதுகாப்பான புகையிரத கடவை அமைக்க கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி 155 ஆம் கட்டை காளி கோவிலடி புகையிரத கடவையில் மக்கள் இன்று(03) ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

ஏழு கிராமங்கள், 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்ற ஒரு பிரதான வீதியில் பாதுகாப்பான புகையிரத கடவை அமைக்கப்படாததன் காரணமாக இதுவரை பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். எனவே குறித்த இடத்தில் பாதுகாப்பான புகையிரத கடவையினை அமைக்க வேண்டும் எனக் கோரி குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை பிரதேச வாசிகள் மேற்கொண்டிருந்தனர்.

ஏ9 பிரதான வீதியிலிருந்து பாரதிபுரம், மலையாளபுரம், விவேகானந்தநகர், கிருணபுரம், செல்வாநகர், அம்பாள்குளம், அறிவியல்நகர் போன்ற கிராமங்களுக்கு செல்கின்ற வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவையில் பொருத்தப்பட்டிருந்த சமிஞ்சை விளக்குகளும் உரிய முறையில் செயற்படுவதில்லை, குறித்த சமிஞ்சை விளக்குகள் எந்த நேரத்தில் இயங்கும் எந்த நேரத்தில் இயங்காது என கூற முடியாத நிலையில் காணப்பட்டு வந்துள்ளது. இதுவும் விபத்துக்கு காரணமாக அமைந்திருந்தது.

எனவே குறித்த கடவையில் பாதுகாப்பான கடவையாக மாற்ற வேண்டும் என்பதனை வலியுறுத்துகிறோம் என எதிர்ப்பில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்ட இடத்திற்கு ஆநுராதபுலத்தில் இருந்து வருகைதந்திருந்த இலங்கை புகையிரத திணைக்களத்தின் வடக்கு கிழக்குக்கு பொறுப்பான அதிகாரி மற்றும் அநுராதபுரம் காங்சேன்துறை புகையிரத பாதைக்கு பொறுப்பான அதிகாரி, மற்றும் புகையிரத பாதை சமிஞ்சை பொறியிலாளர் ஆகியோர் கருத்து தெரிவித்த போது தாங்கள் இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதாகவும், உடனடியாக புகையிரத பாதையின் இரு புறமும் வேக கட்டுப்பாட்டு தடை ஒன்றை அமைத்து தருவதோடு, பொது மக்களின் கோரிக்கை கடிதம் கிடைத்ததும் நிரதர பாதுகாப்புக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவித்தனர்.

யாழ்தேவியே எங்களை கொல்லாதே, புகையிரத கடவையா?சாவின் கடவையா? கடவை ஒன்று வாராதோ, நம் கவலை நன்றே தீராதோ, சிக்னலின் செயலின்மை மக்களின் தவறா? இலங்கை புகையித திணைக்களமே மக்களின் உயிரை பாதுகாப்பளி போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

Share:

Author: theneeweb