நுவரெலியாவிலுள்ள தமிழ்க் கட்சிகளால் மலையகத் தமிழர்களுக்கு துரோகம்

தொழிற்சங்க பிழைப்புக்காகவும், குறுக்குவழி அரசியலுக்காகவும் மலையக மக்களுக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை குழிதோண்டி புதைப்பதற்கு நுவரெலியாவை மையமாகக்கொண்டு இயங்கும் தமிழ்க் கட்சிகள் கங்கணம்கட்டி செயற்பட்டு வருவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

சுயநல அரசியலுக்காக நுவரெலியா மாவட்டத்துக்கு வெளியில்வாழும் மலையகத் தமிழர்களை அடகுவைப்பவர்களுக்கு விரைவில் மக்களாலேயே பாடம் புகட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுடன் நேற்று (03) காலை நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இருந்தால் போதும். ஏனையப் பகுதிகளில் வாழும் மலையக தமிழர்கள் அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்பட்டாலும் பரவாயில்லை என்ற நினைப்பிலேயே நுவரெலியாவிலுள்ள தமிழ்க் கட்சிகள் அரசியல் நடத்திவருகின்றன.

முன்னர் இருந்தவர்கள் எப்படியோ அதே வழியில்தான் தற்போதைய தலைவர்களும் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இது மலையக மக்களுக்கு பெரும் சாபக்கேடாகும்.

கண்டி, இரத்தினபுரி, மாத்தளை உட்பட மலையகத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் தொழிற்சங்க அலுவலகங்களை திறந்து சந்தா வேட்டை நடத்துவதே நுவரெலியாவிலுள்ள தமிழ்க் கட்சிகளின் பிரதான நோக்கமாக இருக்கின்றது.

தமிழ் மக்கள் எந்த கட்சியில் அங்கம் வகித்தாலும், யாருக்கு வாக்களித்தாலும் அது தமக்கு தேவையற்ற விடயமாகவே அக்கட்சிகளின் உறுப்பினர்கள் கருதுகின்றனர். இதன்காரணமாகவே தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை குழிதோண்டி புதைப்பதற்காக பேரினவாதிகளுடன் கரம்கோர்த்து செயற்பட்டுவருகின்றனர்.

‘ஒற்றுமை’ என்ற சொல்லை உதட்டளவில் மட்டும் உச்சரித்துக்கொண்டு செயற்பாட்டில் ‘வேற்றுமை’ காட்டும் அரசியல்வாதிகளுக்கு காலம் வெகுவிரைவிலேயே தக்க பதிலை வழங்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்காகவும், உரிமை அரசியலுக்காகவும் மக்களை பிரித்தாளாமல் ஓரணியில் திரட்டும் முயற்சியில் நாம் ஈடுபட்டுவரும் நிலையில், எங்களின் காலைவார முற்படுவது பச்சோந்தி அரசியலின் உச்சகட்டமாகும்.

குறிப்பாக 19 வருடங்களாக கண்டிவாழ் தமிழ் மக்களுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. அந்நிலைமையை நாம் மாற்றியமைத்தோம். தமிழ்ப் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்தை மக்களும் இன்று உணர்ந்துள்ளனர்.

அதேபோல் இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை நாம் வென்றெடுக்கவேண்டும். தற்போது இருப்பவற்றை தக்கவைத்துக் கொள்ளவேண்டும்.

மாறாக சலுகைகளுக்கு அடிபணிந்து உரிமை அரசியலை விட்டுக்கொடுத்தால் எதிர்காலத்தில் மலையக தமிழ் மக்கள் அரசியல் அநாதைகளாக்கப்படும் அபாயநிலை இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb