வெடிக்காத (அரசியல்) குண்டுகள் – – கருணாகரன்

“இந்த அரசாங்கத்தின் மீது எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. (அப்படியா சங்கதி? இதென்ன புதுக்கதையாக இருக்கே!) ஓரிருமாதங்களில் நாங்கள் தீர்க்கமான முடிவுக்கு வரவுள்ளோம். (!) தமிழர்களுக்குத்தீர்வு கிடைக்கா விட்டால் ஆயுதம் ஏந்திப் போராடுவதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும்” என்று எச்சரித்திருக்கிறார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்மந்தன். மேலும் அவர், “அரசாங்கம் எம்மை ஏமாற்றுவதைப்போலத் தெரிகிறது” (ஓஹோ) என்றும் சொல்லியிருக்கிறார். (அப்பப்பா, இப்பதான் இதெல்லாம் விளங்குதா? என்று யாரும் கேட்டுவிடாதீர்கள்).

“அரசாங்கத்துக்கு மூன்று அல்லது நான்கு மாதங்கள் கால அவகாசம் கொடுக்கிறோம். அதற்குள் தீர்வைத்தர வேண்டும். அல்லது மக்களை அணிதிரட்டிப் போராட வேண்டிவரும்” என்று எச்சரித்திருக்கிறார் மாவை சேனாதிராஜா. (தேர்தல் நெருங்கும் வரைக்குமான கால எல்லையே இந்த மூன்று நான்கு மாதங்களும். இப்படி எத்தனையாவது தடவையாக இந்தாள் இப்பிடிக் காமடி பண்ணுது என்று சிரிக்க வேண்டாம்).

உஷ், இது வலு சீரியஸான விசயம்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த தமிழரசுக்கட்சியின் 16 ஆவது தேசிய மாநாட்டின்போதே இருவரும் மேற்படி பேசியிருக்கின்றனர்.

இது போதாதென்று அடுத்த நாள் தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்த எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் நினைவு நிகழ்விலும் மாவையும் சம்மந்தனும் இப்படிச்சில குண்டுகளை அடித்திருக்கிறார்கள். (ஒரு போதுமே வெடிக்காத குண்டு என்பதால் எந்தப் பயமுமில்லாமல் எல்லோரும் நிம்மதியாகப் படுத்துத் தூங்கலாம்).

இந்தக்குண்டுகள் இந்தியாவையும் சர்வதேசத்தையும் நோக்கி எறியப்பட்டவை. “தீர்வு விடயத்தில் இந்தியா உட்படச் சர்வதேச சமூகம் பார்வையாளராக இருக்க முடியாது” என்று அதிரடித்துள்ளார் சம்மந்தன். (இதைக் கேட்ட இந்தியப் மோடி பதற்றத்தில் இரவிரவாக இந்திய அரசின் உயர் மட்டப்பிரதிநிதிகளோடு அவசரமாக உயர்மட்டச் சந்திப்பை நடத்த முற்படுவதாகத் தகவல்(!)

இதைப்போல அமெரிக்க, பிரிட்டன் தலைவர்களும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளும் என்ன ஏதென்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேள்வி. பிந்திக் கிடைத்த தகவல்களின்படி வெள்ளைமாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி பசுபிக் – இந்து சமுத்திரப் பிராந்திய விவகாரங்களுக்கான அதிகாரிகளோடு இதைக் குறித்து ஆராய்ந்திருக்கிறாராம். இப்படியே உலகமே இந்த அதிரடி முடிவுகளால் பெருங்குழப்பத்துக்குள்ளாகியுள்ளது.

உண்மையில் இந்தப் பேச்சுகள் எனக்கும் உங்களுக்கும் மட்டுமல்ல பலருக்கும் சிரிப்பையே உண்டாக்குகினால் அது தேசியக் குற்றமாகும். ஆகவே வருகிற சிரிப்பை என்ன விதப்பட்டும் அடக்கி விடுங்கள்.

இந்தச் சிரிப்புக்குப் பல காரணங்களுண்டு என்பது உண்மையே. முதலாவது, 1970 களில் இதே தமிழரசுக் கட்சியினர் இப்படித்தான் அன்றைய அரசாங்கத்தை – அன்றைய ஆட்சியாளர்களை –  எச்சரித்தனர். கூடவே இளைஞர்களிடம் ஆயுதம் ஏந்துவதற்கான ஆர்வத்தையும் ஊட்டினர். (அமிர்தலிங்கத்தின் பேச்சுகள் பலருக்கும் நினைவில் வந்திருக்கும். தெரியாதவர்கள் தெரிந்தவர்களைக் கேட்டறியுங்கள்)

ஆனால், இப்படிப் பேசியவர்கள் ஒரு போதும் ஆயுதம் ஏந்தவுமில்லை. ஆயுதம் ஏந்திய தரப்புகளை அங்கீகரித்ததும் இல்லை.

பதிலாக ஆயுதம் ஏந்தியவர்களையெல்லாம் விமர்சித்தனர். எதிர்த்தனர். பெடியளின்ரை விளையாட்டு, சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்யெல்லாம் பரிகசித்தனர். இதனால் ஆயுதம் ஏந்திய இளைஞர் இயக்கங்களுக்கும் இவர்களுக்குமிடையில் முரண்பாடுகள் வலுத்தன. இறுதியில் தமிழரசுக்கட்சியின் தலைவர்களை இயக்கங்கள் பலியெடுக்குமளவுக்கு நிலைமை மாறியது. எந்த ஆயுதப்போராட்டத்தைத் தூண்டினாரோ அதே போராட்டத்தினாலும் ஆயுதத்தினாலும் அமிர்தலிங்கம் பலியானார்.

இறுதியில் ஆயுதப்போராட்டமும் எப்படியெல்லாமோ நடந்து பேரழிவோடு முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் இப்பொழுது மீண்டும் ஆயுதம் ஏந்துவதைப்பற்றி அதே தமிழரசுக் கட்சி கதைப்பதென்றால்….?

இரண்டாவது, விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பிறகு அரசியற் களத்தில் மீண்டும் முதன்மையடைந்தது தமிழரசுக் கட்சி.  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் வேறு கட்சிகளின் பங்கேற்பிருந்தாலும் தமிழரசுக்கட்சியே ஆதிக்கசக்தியாக உள்ளது. அதுவே கூட்டமைப்பிலும் தமிழரின் அரசியல் அரங்கிலும் கடந்த பத்தாண்டுகளாக தலைமைப்பொறுப்பிலிருக்கிறது.

இதில் ஐந்து ஆண்டுகள் – 2015 க்குப் பிறகான காலம் – அரசுடன் இணக்க அரசியலில் ஈடுபடுகிறது. (இப்படி அரசாங்கத்துடன் கூட்டாக இருந்து கொண்டே அரசுக்கு எச்சரிக்கை விடுவது சிரிப்பை உண்டாக்காமல் வேறு என்னதான் செய்யும்? என்று நீங்கள் கேட்டால் அதற்கு என்னிடம் பதிலே இல்லை)

இதையெல்லாம் விட வேடிக்கை என்னவென்றால், சம்மந்தனும் மாவையும் இப்படிச் சொல்லும்போது அங்கே உடனிருந்தது சக கூட்டாளிகளான புளொட் சித்தார்த்தனும் ரெலோவினரும். இந்த இரண்டு தரப்பினரையும் வைத்துக் கொண்டுதான் இப்படியொரு கதையைச் சம்மந்தனும் மாவையும் சொல்லியிருக்கிறார்கள்.

சரியோ பிழையோ புளொட்டுக்கும் ரெலோவுக்கும் ஆயுதப்போராட்டத்திலீடுபட்ட அனுபவங்களுண்டு. அதற்கான பங்களிப்புமுண்டு. இந்த வகையில் இந்தச் சவாலை இந்த இரண்டு தரப்புகளும் விடுத்திருந்தாலும் அதில் ஒரு பொருளிருந்திருக்கும். மதிப்பிருந்திருக்கும்.

அவர்களே பேசாமலிருக்கும்போது தமிழரசுக் கட்சி இதைச் சொன்னால் காமெடியாப் படாமல் வேறு எந்தப் பொருளைக் கொள்வதாம்! எனவேதான் இதைக் கேட்டு எல்லோரும் சிரிக்கிறார்கள். (தயவு செய்து சத்தம் போட்டுச் சிரித்து விடாதீர்கள். பெரிய மானக்கேடாகப் போயிடும்).

உண்மையில் புளொட்டையும் ரெலோவையும் பார்த்து சம்மந்தனும் மாவையும் கேலிப்படுத்தியிருக்கிறார்கள் என்றே தெரிகிறது. இதோ பாருங்கள், “இந்த அரசாங்கம் எம்மை  ஏமாற்றுகிறது. ஆகவே இதை இனியும் நாங்கள் அனுமதிக்க முடியாது. (பொறுத்தது போதும் தமிழா! பொங்கி எழு. கரும்புலியாக மன்னிக்கவும் கரும்புகையாக மாறு) ஆகவே நாங்கள் அரசுக்கெதிராகப் போராடப்போகிறோம். நீங்கள் (ரெலோவும் புளொட்டும்) எங்களையும் விட இளையவர்கள். ஆயுதமேந்திப் போராடியவர்கள். இயக்க அரசியலின் வழி பாராளுமன்ற அரசியலுக்கு வந்தவர்கள். அப்படி வந்த உங்களுக்கு இந்த அரசாங்கத்தை எதிர்க்கத்திராணி இல்லை. அதற்கான உணர்வுமில்லை. சனங்களின் மீதும் அவர்களுடைய விடுதலையிலும் அக்கறையில்லை. ஆனால், நாங்கள் அப்படியானவர்களல்ல. தமிழரசுக் கட்சி அப்படியானதல்ல. என்பதால் பொறுமையைக் கடந்து விட்டோம். அரசாங்கத்துக்கு வழங்கிய அவகாசம் முடிந்து விட்டது. ஆகவே நாங்கள் ஆயுதப்போராட்டத்திற் குதிக்கப்போகிறோம்” என்று சொல்லியிருக்கிறார்கள். (என்னவொரு தெனாவெட்டு. என்னவொரு வீரம்(?)

இப்படிச் சொல்லிப் புளொட்டையும் ரெலோவையும் கீழிறக்கம் செய்து விட்டு தாங்கள் முன்னேற முயற்சித்திருக்கின்றனர். இதில் அவர்கள் ஓரளவு வெற்றியுமடைந்திருக்கின்றனர். அடுத்த நாள் ஊடகங்களில் தலைப்புச் செய்தி இதுவே. இதை வைத்துப் பலர் பல விதமாகக் கேலிகளைச் செய்திருந்தாலும் தமிழ் ஊடகங்கள் வழமையைப்போல இந்தச் செய்திகளுக்கு முதன்மை அளித்துள்ளன. (தமிழ் ஊடகங்கள் எதையும் சிந்தித்துத் தேர்வதில்லை என்பதால் இப்படித்தானே நடக்கும் என்று நீங்கள் சொல்ல முற்படுகிறீர்கள். அதுவும் உண்மையே! ஆனால், அது இங்கே செல்லுபடியாகாது.)

பதிலாகச் சில சிங்கள ஊடகங்களில் சம்மந்தனையும் மாவை சேனாதிராஜாவையும் கிண்டலடிக்கும் கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன.

சம்மந்தன், மாவை ஆகியோரின் இந்த எச்சரிக்கையைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாராம் ரணில் விக்கிரமசிங்க. கூடவே அரசாங்கத்தின் முக்கியமான தலைவர்களும் சிரித்திருக்கிறார்களாம். அவர்களுக்குத் தெரியும். இந்த (மாவை, சம்மந்தன்) குண்டுகள் ஒரு போதுமே வெடிக்காதவை என்று.

உண்மையில் சம்மந்தனோ மாவையோ இப்படி அரசாங்கத்தை எச்சரிக்கை செய்திருக்க வேண்டாம். அப்படி எச்சரிக்கை செய்வதாக ஒரு தோற்றத்தை (நாடகத்தை) மக்களுக்குக் காண்பிக்கவும் வேண்டாம். சனங்களுக்கு இதனுடைய உள் நோக்கமெல்லாம் தெளிவாகத் தெரியும். இதெல்லாம் அடுத்து வரப்போகிற தேர்தலுக்கான விளையாட்டுகள் என்று.

இப்படிச் செல்லாக்காசாக எச்சரிக்கை விடுவதற்குப் பதிலாக அரசாங்கத்துக்குக் கொடுத்து வரும் நிபந்தனையில்லாத ஆதரவை நிபந்தனையுடனான ஆதரவாக மாற்றினாலே போதும். பல காரியங்கள் தானாவே நிறைவேறும். அதுவே பயனுடையது. அதுவே அரசியல் அணுகுமுறையும் அரசியல் வெற்றியுமாகும். அதுவே ராஜதந்திரம்.

அதைச் செய்யாமல் விட்டு விட்டு இப்படிப் பீலாக்காட்டுவது சனங்களை முட்டாளாக்குவதற்குச் சமன். அதிலும் யாழ்ப்பாணத்தில் ஒரு கதையும் கொழும்பில் ஒரு கதையுமாக கூட்டமைப்பு நடந்து கொள்வதொன்றும் இரகசியமான சங்கதியுமல்ல.

எனவே அரசாங்கத்துக்கு விடுத்துள்ள எச்சரிக்கை என்பது ஒரு செல்லாக் காசே. அப்படியென்றால் இதை ஏன் இவர்கள் செய்ய வேண்டும்?

இதைத்தான் நாம் கவனிக்க வேண்டும். இவர்களைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் சிந்திக்கத் தெரியாதவர்கள். எனவே எப்படியும் இந்தச் சனங்களை ஏமாற்றி விடலாம். தங்கள் மீது மக்களுக்கேற்பட்டிருக்கும் கோபத்தையும் அதிருப்தியையும் போக்குவதற்கு அரசாங்கத்தை எதிர்ப்பதைப்போல பாவ்லாக்காட்டி, அடுத்த தடவையும் தமக்கான வெற்றி வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம் என்பதற்காகவே.

இப்படித்தான் கடந்த காலத்திலும் செய்து வந்திருக்கிறார்கள். நினைவு மறதியும் எதையும் சீர்தூக்கிப் பார்த்து ஆய்வுக்குட்படுத்தும் பழக்கமும் இல்லாத மக்கள் என்பதால் இப்படிச் சிம்பிளாகவே கதை விட்டுக் காதிலே பூவைச் சுற்றி ஏமாற்றி விடுகிறார்கள். இதைக் கணக்கிலெடுத்து உண்மை நிலவரத்தைச் சொல்லியிருக்க வேண்டியவை ஊடகங்களே. ஆனால் அவை அதைச் செய்யவில்லை.

பதிலாக இந்தச் “செம்புச் செய்தி”களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. கூடவே அரசாங்கம் எதையும் செய்ய முடியாதிருப்பதற்குக் காரணம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான முரண்பாடுகள், பிச்சல் – பிடுங்கற்பாடுகள் – என்ற மாதிரியானதொரு தோற்றப்பாட்டையும் உருவாக்க முற்படுகின்றன. இதிலும் எல்லாத்தவறுகளும் ஜனாதிபதியின் மீதே என்ற மாதிரியானதொரு சித்திரத்தையும் உருவாக்க முயற்சிக்கின்றன. இப்படிச்சொல்வதன் மூலம் அரசாங்கத்தையும் பிரதமரையும் மறைமுகமாகக் காப்பாற்ற முற்படுகின்றன. இதன் மூலம் அரசாங்கத்தையும் ஐ.தே.கவையும் ஆதரிக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் பாதுகாக்கின்றன.

இங்கே நாம் ஒரு அடிப்படையான கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. மறுபடியும் ஆயுதம் தூக்கிப் போராட வேண்டிய சூழல் ஏற்படும் என்று சம்மந்தன் யாரை முன்வைத்துச் சொல்லியிருக்கிறார்? என்பதே இந்தக் கேள்வியாகும்.

அப்படியென்றால் தமிழரசுக் கட்சியினர் போராடுவார்களா? அல்லது மக்கள் போராடுவார்களா? தமிழரசுக் கட்சியினர் ஆயுதம் தூக்கிப்போராடினால் மகிழ்ச்சி.

அது ஒரு நிரந்தர முடிவாகவே இருக்கக் கூடும். அப்படியாக அமைந்தால் அது தமிழ்ச்சனங்களுக்கு ஒரு வகையில் விமோசனமாக இருக்கும்.

மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவதாக இருந்தால் கடந்த காலத்தில் அவர்கள் போராடியபோது தமிழரசுக் கட்சி விலகித் தூர நின்றதே, அதைப்போல இப்போதும் நிற்குமா? ஏனெனில் இப்போதே மக்கள் நடத்தும் எந்தப் போராட்டத்திலும் தமிழரசுக்கட்சி உண்மையாகப் பங்கேற்றதில்லை.

ஆகவே இதற்கு என்ன பதிலைச்சொல்லப்போகிறது?

தவிர, ஏற்கனவே ஆயுதம் ஏந்திப் போராடி, ஒப்பற்ற தியாகங்களைச் செய்தவர்களையும் இழப்புகளைச் சந்தித்தவர்களையும் மீளவும் போராட்டத்துக்கு அழைப்பது எந்த வகையில் நியாயம்? இதற்கான துணிச்சல் எங்கிருந்து வந்தது?

இந்த ஆயுதப்போராட்டக் கதையெல்லாம் ஒரு புறமிருக்கட்டும்.

மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்களே. காணாமலாக்கப்பட்டோருக்கான போராட்டம், நில மீட்புக்கான போராட்டம், மரபுரிமைகளைப் பேணுவதற்கான போராட்டம், அரசியற் கைதிகளை விடுவிப்பதற்கான போராட்டம், அத்துமீறிய குடியேற்றத்துக்கெதிரான போராட்டம், மத ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம், பிரதேச செயலகங்களைத் தரமுயர்த்துவதற்கான போராட்டம் என ஏராளம் போராட்டங்கள்.

இவற்றில் ஒன்றிலாவது சனங்களோடு விசுவாசமாக இணைந்து நின்று போராடினாலே போதும். அது ஒரு நல்ல தொடக்கமாக அமையும். ஏன் வீரசிங்கம் மண்டபத்தில் இந்தப் பதினாறாவது தேசிய மாநாடு நடந்த வேளை அதற்கு வெளியே காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் போராடினார்களே. அதைப்போல செல்வநாயகத்தின் நினைவு நிகழ்வு நடக்கும்போது யாழ்ப்பாண நகரத்தில் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகப் போராடினார்களே. அதிலாவது கூட்டமைப்பினர் கலந்து கொண்டிருக்கலாமே!

அப்படியெல்லாம் செய்வதற்கு முயற்சிக்காமல் இப்படி வார்த்தைகளால் ஜம்பமடிப்பதை, பாதிக்கப்பட்ட மக்கள், போராடிய மக்கள், விடுதலைக்காகப்போர் செய்த மக்கள், இழப்புகளைச் சந்தித்த மக்கள், மாபெரும் தியாயகங்களைச் செய்த மக்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

ஒரு அரசியற் தலைமை முதலில் மக்களுக்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும். அதை உருவாக்குவதே இன்று கூட்டமைப்புச்செய்ய வேண்டியுள்ளது. அதற்குப் பிறகே அடுத்த நடவடிக்கைகள்.

இல்லையெனில் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள்தான் செல்ல வேண்டியிருக்கும்.

Share:

Author: theneeweb