யுத்தத்தால் செயலிழந்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குமாறு கோரிக்கை

 காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடையாக இருப்பதாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தம் காரணமாக முற்றாக செயலிழந்தது.

சுமார் 29 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் காணப்படும் இந்தத் தொழிற்சாலை சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மூடப்பட்டதையடுத்து சுமார் 1500 ஊழியர்கள் வேலை இழந்து நிர்க்கதியாகினர்.

இந்நிலையில், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள உருவாக்க வேண்டும் என அரசியல்வாதிகளும் பொருளியல் நிபுணர்களும் புத்திஜீவிகளும் பல கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அது இன்று வரை நிறைவேறவில்லை. ​

இந்த தொழிற்சாலையை மீள உருவாக்க வேண்டாம் எனவும் இதுபற்றி கதைக்க வேண்டாம் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா குறிப்பிட்டதாக கடந்த 4 ஆம் திகதி வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், சீமெந்து தொழிற்சாலை மீள் உருவாக்கத்திற்கு தாம் தடையாக இருப்பதாகக் கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் இணைந்து 330 ஏக்கர் காணியில் தொழில்நுட்பத்துறை சார்ந்த தொழிற்துறையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், சீமெந்து தொழிற்சாலையை ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆரம்பித்தமையால், அதனை மூடவேண்டும் என சிலர் முயல்வதாகவும் அத்தொழிற்சாலை அதே இடத்தில் இயங்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் எஸ்.கஜேந்திரன் குறிப்பிட்டார்.

தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சீமெந்து தொழிற்சாலையிலிருந்து வௌியாகும் கழிவுகளை கீழே போகக்கூடியவாறு செய்து, மீள இயக்கினால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் முன்னர் பணியாற்றிய ஒருவர் கூறினார்.

இலங்கையிலேயே முதற்தர சீமெந்து இங்குதான் உற்பத்தி செய்யப்பட்டது. நிறைய பேர் இந்த தொழிற்சாலை மூலம் வருமானத்தினை ஈட்டினர். இதனை இந்த இடத்தில் இயக்கினால் நாட்டிற்கு நல்ல வருமானம் கிடைக்கும். இதனை இயக்குவதால் எந்த பிரச்சினையுமில்லை

என அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் கீழ் காங்கேசன்துறையில் கைத்தொழில் பேட்டைகளை
நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீடு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள 100 ஏக்கர் காணியை பயன்படுத்தி அந்த பிரதேசத்தில் சிறிய கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை அனுமதி கடந்த வருடம் செப்டம்பர் மாதம்
07 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சு சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, காங்கேசன்துறை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதற்கு 50 ஏக்கர் நிலப்பரப்பை இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திடம் இருந்து இலங்கை துறைமுக அதிகார சபைக்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் துறைமுக மற்றும் கப்பல்துறை விவகார அமைச்சு சமர்ப்பித்த ஆவணங்களுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதி 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பழைய இடத்திலேயே சீமெந்து தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Share:

Author: theneeweb