பத்திரிகை ஆசிரியர் மீதான தாக்குதல்: ராணுவ வீரர் கைது

பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு  தாக்கப்பட்ட சம்பவத்தில் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சன்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்கா என்பவர் கடந்த 2009-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடைபெற்று 2 வாரங்களுக்குப் பிறகு, ரீவிரா பத்திரிகை ஆசிரியர் உபாளி தென்னகூன், அவரது மனைவி ஆகியோர் பயங்கரத் தாக்குதலுக்கு ஆளாகினர். பத்திரிகை அலுவலகத்துக்கு காரில் சென்றபோது, இருவரையும் மர்ம கும்பல் கடுமையாக தாக்கியது.
இலங்கை அதிபராக மஹிந்த ராஜபட்ச கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். இக்காலக்கட்டத்தில் ஊடகத்தினர் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது கூறப்பட்டது.

இதையடுத்து இலங்கையில் இருந்து வெளியேறி, அமெரிக்காவில் உபாளி தென்னகூன் வசித்து வருகிறார்.

இதனிடையே, உபாளி தென்னகூன் மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய போலீஸார், அவரது காரில் இருந்த கைவிரல் ரேகையை கொண்டு ராணுவ வீரருக்கு தொடர்பிருப்பதை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து இலங்கை அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தகவலின்பேரில், தாக்குதலில் தொடர்புடைய ராணுவ வீரரை கைது செய்யும்படி அட்டார்னி ஜெனரல் உத்தரவிட்டார். அதனடிப்படையில், இலங்கை ராணுவ வீரரை அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர்.

Share:

Author: theneeweb