கேரளாவில் பெண்களின் எழுச்சி – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

புத்தாண்டு தினமான ஜனவரி 1 அன்று, கேரளா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உன்னதமான நிகழ்வினைப் பார்த்தது. ஆம், 55 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள், ஒன்றிணைந்து நின்று, வனிதா மதில் என்கிற பெண்களின் சுவரை எழுப்பியிருந்தார்கள். இவர்கள் மாநிலத்தின் வடக்கு உச்சியான காசர்கோடிலிருந்து தென்கடைசியான திருவனந்தபுரம் வரையிலும் 620 கிலோ மீட்டர் தூரம் வரை இவ்வாறு நின்றிருந்தார்கள்.

இம்மாபெரும் இயக்கத்தில் கலந்துகொண்ட பெண்கள் அனைவருமே, மாநிலத்தில் மறுமலர்ச்சி விழுமியங்களையும், பாலின சமத்துவத்தையும் உயர்த்திப்பிடித்திடவும், கேரளாவை மதவெறியர்களின் புகலிடமாக மாற்றிட அனுமதியோம் என்றும் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்கள். பெண்களின் அனைத்துத் தரப்பினரும், பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்களும், பல்வேறு வயதுடையவர்களும், மாநிலத்தின் வடகோடியிலிருந்து, தென்கோடிவரை செல்கின்ற தேசிய நெடுஞ்சாலையில் குவிந்து, பெண்களின் சுவரை, பெண்களின் ஒற்றுமை மற்றும் உறுதியைக் காட்டும் விதத்தில்     கண்ணைக் கவரும் காட்சியாக மாற்றிக் காண்பித்தார்கள். சபரிமலைக் கோவிலுக்குள் பெண்கள் நுழைவது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் கிளர்ச்சிக்குக் கூட்டாகப் பதிலடி கொடுக்கும் விதத்தில் பெண்களின் சுவர்  அமைந்திருந்தது. படுபிற்போக்கு மதவெறி சக்திகள் இந்தக் கிளர்ச்சியை நடத்திவந்தன. கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக மறுமலர்ச்சி விழுமியங்களின் அடிப்படையில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் போராட்டங்களின் மூலமாக பெண்கள் பெற்றிருந்த உரிமைகளைத் திரும்பப்பெற வேண்டும் என்பதே இவர்களது நோக்கமாகும்.

ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களால் நடத்தப்பட்டுவரும் இந்தக் கிளர்ச்சி, கோவிலுக்குள் நுழைய விரும்பும் பெண்களை மிரட்டியும், தாக்குதல் தொடுத்தும் பணிய வைத்திட திரும்பத்திரும்ப முயற்சிகள் மேற்கொண்டதைப் பார்க்க முடிந்தது. இதற்காக இவர்கள் ஹர்த்தால்கள், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வெளிப்படையாகவே மீறுதல் போன்ற காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். நீதிமன்றத் தீர்ப்புக்கு சவால் விடுக்கும் முறையிலும், அரசமைப்புச்சட்டத்தை அடித்து வீழ்த்தும் முறையிலும் ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மேற்கொண்டுவரும் இழிசெயல்களுக்கு காங்கிரஸ் கட்சியும் வெட்கக்கேடான முறையில் ஆதரவு அளித்து வருகிறது.

பெண்களின் சுவர் இத்தகைய மோசமான பிற்போக்கு சக்திகளுக்கு மிகச்சரியான பதிலடி அளித்திருக்கிறது. சுவருக்காக நடைபெற்ற பிரச்சாரத்தின்போது, மாநிலம் முழுதும் நடைபெற்ற கூட்டங்களிலும், பேரவைகளிலும் மாநிலத்தில் நடைபெற்ற சமூக சீர்திருத்த இயக்கங்களின் வரலாறு குறித்தும், மறுமலர்ச்சி விழுமியங்கள் எந்த அளவிற்கு பெண்களுக்கு எழுச்சியைக் கொண்டு வந்திருக்கிறது என்பது குறித்தும், இவ்வியக்கங்கள் மற்றும் போராட்டங்கள் மூலமாக பெண்களுக்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இவ்வியக்கத்தின்போது கேரளப் பெண்கள் மிகப்பெரிய அளவில் வெளிப்படுத்திய ஒருமைப்பாடும் ஒற்றுமையும் நாடு முழுவதற்கும் ஒரு வலுவான செய்தியை அனுப்பியிருக்கிறது. அதாவது, “எங்களை எவரும் அடக்கி அச்சுறுத்திப் பணியவைத்திட முடியாது” என்பதையும், “சமத்துவம் மற்றும் நீதி கோரி நாங்கள் நடத்திடும் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றிடுவோம்” என்பதையும் அவர்கள் எழுச்சியுடன் உரத்துச் சொல்லியிருக்கிறார்கள். பெண்களின் சுவர் நடைபெற்றுக்கொண்டிருந்த அன்று, பிரதமர் நரேந்திர மோடி, சபரிமலை தொடர்பாக ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மேற்கொண்டிருக்கிற நிலைப்பாட்டை நியாயப்படுத்திக் கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார். ஒரு நேர்காணலில் அவர், முஸ்லீம் பெண்களுக்கான முத்தலாக் விவகாரமும், சபரிமலைக் கோவிலுக்குள் பெண்கள் நுழைகிற விவகாரமும் வெவ்வேறானவை என்றார். முத்தலாக் என்பது பாலின சமத்துவத்தினைக் கொண்டுவரும் பிரச்சனையாக இருக்கும் அதே சமயத்தில், சபரிமலை என்பது கோவில் பாரம்பரிய சங்கதியாகும் என்றார்.

இவ்வாறு பிழையாக இருவிதமான நிலைப்பாட்டை மோடி கூறியிருப்பதன் மூலம், இவர் தன்னுடைய உண்மையான இந்து மதவெறி மனோபாவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். முஸ்லீம் பெண்களுக்கு பாலின சமத்துவத்தை வலியுறுத்துவாராம், ஆனால் இந்துப் பெண்களுக்கு அதனை விரிவாக்கிட மாட்டாராம். எனவே, பெண்களின் சுவர் வெளிப்படுத்தியிருக்கிற செய்தி என்பது, கேரளாவிற்கு மட்டுமல்ல, இன்றைய தினம் இந்துத்துவா மதவெறியர்களால், மனு(அ)தர்மத்தின் அடிப்படையில் ஆட்சி செய்துகொண்டிருக்கிற, ஒட்டுமொத்த நாட்டிற்கும் பொருத்தமானதாகும். பெண்களின் சுவர் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள், ஐம்பது வயதுக்குக் குறைந்த இரண்டு பெண்கள், தற்செயலாக சபரிமலைக் கோவிலின் உள் பிரகாரத்திற்குள் நுழைந்து சாமி கும்பிட்டிருக்கிறார்கள். அவர்கள் இதனைக் காவல்துறையினரின் பாதுகாப்புடன் செய்திருக்கிறார்கள். கோவிலுக்குள் சாமி கும்பிட வரும் பெண்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்கிற மாநில அரசின் நிலைப்பாட்டின்படி இவ்வாறு காவல்துறையினர் அப்பெண்களுக்குப் பாதுகாப்பு அளித்திருக்கிறார்கள்.

ஆர்எஸ்எஸ்/பாஜக மற்றும் அதன் பரிவாரங்கள் பெண்கள் கோவிலுக்குள் நுழைந்ததன் மூலம் கோவிலின் “புனிதம்” கெட்டுவிட்டது என்று குய்யோ முறையோ என்று கூச்சலிடத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் கோவிலுக்குப் பெண்கள் வருவதைத் தடுத்துநிறுத்துவதற்காக செய்துவைத்திருந்த ஏற்பாடுகள் அனைத்தும் தவிடுபொடியாகிவிட்டது என்பதே இவர்களின் ஆத்திரத்திற்கு முக்கிய காரணமாகும்.

இதனால் அவர்கள் தங்கள் எதிர்ப்பை, கற்களை வீசியெறிவதன் மூலமும், கடைகளை மூடச்சொல்லிக் கட்டாயப்படுத்துவதன் மூலமும், காவல்துறையினருடன் மோதுவது மூலமும் செய்து கொண்டிருக்கிறார்கள். தங்களின் விரக்தி மற்றும் ஆத்திரத்தின் அடிப்படையில் முட்டாள்தனமானதொரு நடவடிக்கையாக, ஜனவரி 3 அன்று மாநிலம் தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால், பெண்களின் சுவர், கேரளாவில் மீண்டும் பத்தாம்பசலித்தனமான படுபிற்போக்கான கேரளாவிற்குத் திரும்பும் பேச்சுக்கே இடமில்லை என்று, மிகத் தெளிவான முறையில் செய்தியை அனுப்பியிருக்கிறது. இத்தகைய உன்னதமான சுவர் குறித்து கேரளாவில் உள்ள அனைத்து இடதுசாரிகள், சமூக மற்றும் பெண்களின் அமைப்புகள் பெருமிதம் கொள்ள முடியும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, இது கொள்கையின் அடிப்படையிலான போராட்டமேயொழிய, தேர்தல் கணக்கின் அடிப்படையிலானதல்ல என்று தெளிவு படுத்தியிருக்கிறது. முன்னேற்றத்தை விரும்பும் சக்திகளுக்கும் படுபிற்போக்கு சக்திகளுக்கும் இடையே நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னே உறுதியாக நின்று, அதனை அமல்படுத்திடுவதற்கான போராட்டத்தை உறுதியுடன் நடத்துவதன் மூலம் ஓரடி முன்னேறியிருக்கிறோம்.

(தமிழில்: ச.வீரமணி)

Share:

Author: theneeweb