எத்திசையில் ? எப்பயணம் ? – சக்தி சக்திதாசன்

ஜக்கிய இராச்சியம் அதாவது இங்கிலாந்து இன்று ஒரு முக்கியமான திருப்புமுனையில் நின்று கொண்டிருக்கிறது.

எமது அடுத்த பிரதமர் யார் ? எனும் கேள்வி அனைத்து மக்களின் மனங்களிலேயும் தொங்கிக் கொண்டிருந்தாலும் அதற்கான விடை பெரிதான ஒரு புதிராக ஒன்றும் இல்லை.

பொதுவாக பொதுத்தேர்தல் நடைபெறும் போதுதான் இந்தக் கேள்விக்கு சரியான பதில் கொஞ்சம் புதிராக இருக்கும். இப்போது இது ஒன்றும் புதிர் இல்லையே !

ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜக்கிய இராச்சியத்தின் வெளியேற்றம் சர்வஜன வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளின் மூலம் ஊர்ஜிதமாக்கப்பட்டதும் அதனோடு சம்பந்தப்பட்டு பல நிகழ்வுகள் நடந்தேறி விட்டன.

அப்போதைய பிரதமர் டேவிட் கமரன் பிரதமர் பதவியிலிருந்து மட்டுமல்ல அரசியலிலிருந்தே ஒதுங்கி விட்டார்.

அவரோடு இணைந்து அரசமைத்த பல மிதவாத கன்சர்வேடிவ் கட்சிகளின் பாராளுமன்ற அங்கத்தினர்கள் பலர் ஓரங் கட்டப்பட்டோ அன்றித் தாமாகவோ ஒதுங்கிக் கொண்டார்கள்.

இதோ மக்களே! உங்களில் பெரும்பான்மையினரின் அபிலாஷையை நிறைவேற்றுகிறேன் என்று கங்கணங் கட்டி பிரதமராகிய அம்மையார் தெரேசா மே அவர்கள் இன்று தீவிரவாதப் போக்குக் கொண்ட கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களின் அழுங்குப்பிடியினால் ஒதுக்கப்பட்டு விட்டார்.

இன்றைய நிலையில் இரண்டு கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்களில்; ஒருவரை சுமார் 160000 கன்சர்வேடிவ் உறுப்பினர்கள் முழு நாட்டிற்குமே பிரதமராகத் தெரிவு செய்யப் போகிறார்கள்.

இந்த வெறும் 160000 மக்களின் முக்கிய பிரச்சனையாக ப்ரெக்ஸிட் எனும் ஜக்கிய இராச்சியத்தின் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நிகழ்வே திகழ்கிறது.

ஆனால் இன்றைய ஜக்கிய இராச்சியத்தின் பிரச்சனை இது ஒன்றுதானா? இல்லை நாட்டை முன்நோக்கியிருக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனை பல இருக்கின்றன.

இந்த ப்ரெக்ஸிட் பிரச்சனை கடந்த முன்றரை வருடங்களாக இங்கிலாந்து அரசியல் களத்தின் முழு நேரத்தையும் தனதாக்கிக் கொண்டது. இப்பிரச்சனையைத் தீர்த்தால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனும் வகையில் அரசாங்கச் செயற்பாடுகள் முடக்கப்பட்டு விட்டன.

முழு நாடுமே இரண்டாகப் பிளவுபட்டு மூர்க்கத்தனமான விவாதங்களுக்குள் தன்னை மூழ்கடித்துக் கொண்டு இருக்கிறது.

இன்றைய மேற்குலக அரசியல் ஒரு பெரும் மாற்றத்துக்குள்ளாகி வருவது போன்றே தெரிகிறது. ஜன்நாயக அடிப்படியில் இயங்கும் நாடுகளாகக் கருதப்படும் நாடுகளில் காலகாலமாக இருந்து வந்த அரசியல் தலைவர்களின் தெரிவுமுறைகளிலும், மக்களின் அதை நோக்கிய பார்வைகளிலும் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

அரசியல்களத்திலே அனுபவமடைந்தவர்களே நாட்டின் தலைவர்களாக பரிணமித்து வந்த முறைகள் மாறி அரசியலிலேயே என்றுமே ஈடுபடாத மக்களிடையே பிரபலமானவர்கள் அரசியலில் குதிப்பதை மக்கள் பெரிதும் வரவேற்கும் ஒரு சூழல் உருவாவதைக் காண்கிறோம்.

மிகவும் சர்ச்சைக்குரிய மக்களின் மனங்களிலே துவேஷங்களை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களைப் பேச்சுரிமைச் சுதந்திரம் எனும் பெயரில் தெரிவிப்பதோடு அதைப்பற்றிய கேள்விகள் ஊடகங்களில் எழும்போது அதனை முற்றாக மறுத்துப் பேதலிப்போர் ஜனநாயகத்தின் உச்ச நாடுகளின் தலைவர்களாவதைக் காண்கிறோம்.

இத்தலைவர்களின், நாட்டு அதிபர்களின் நடவடிக்கைகளைச் சர்வசாதாரணமாக அவரும் சாதாரண மனிதர் தானே எனும் நியாயத்தை முன்வைத்து ஏற்றுக் கொள்ளும் பொது மக்களிடையே வாழும் ஒரு நிலையில் இருக்கிறோம்.

இத்தகைய ஒரு பின்னனியில் தான் இன்றைய ஜக்கிய இராச்சியப் பிரதமரின் தெரிவும் இடம்பெறுகிறது. தன்னைப் பிரதமராகத் தெரிவு செய்யப்போகும் மக்கள் எதைக் கேட்க விரும்புகிறார்களோ அது யதார்த்தத்துக்குப் புறம்பாக இருப்பினும் அதனைத் தனது முக்கிய கொள்கைகளாகப் பேசி தருணத்திற்கேற்ற அரசியல் நடத்தும் ஒருவர் பிரதமராக வரக்கூடிய சந்தர்ப்பம் இன்று அதிகமாகக் காணப்படுகிறது.

தற்போதைய ஊடகக் கணிப்புகளின் படி பிரதமராகப் போட்டியிடும் பொரிஸ் ஜான்சன, ஜெர்மி ஹண்ட் எனும் இருவரில் பொரிஸ் ஜான்சனே வெற்றியடையும் வாய்ப்புகளிருப்பதாகத் தெரிகிறது.

யாரிந்த பொரிஸ் ஜான்சன் ?

நியூயார்க் நகரில் 1964ம் ஆண்டு ஒரு நடுத்தர மேல்வகுப்பு குடும்பத்தில் முதலாவது குழந்தையாகப் பிறந்தார். வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை பிரெஸ்ஸில்ஸ் நகரில் உள்ள யூரோப்பியன் பிஸினஸ் ஸ்கூல் எனும் பள்ளியிலும் பின்பு இங்கிலாந்தின் ஆஷ்டவுண் கல்லூரியிலும், பின்பு புகழ்பெற்ற ஈட்டன் கல்லூரியிலும் பயின்றார். இங்கிலாந்தின் ஆக்ஸ்வேர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர் அக்கல்லூரியின் மாணவர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்திருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஊடகத்துறையில் பணியாற்றத் தொடங்கிய இவர் இங்கிலாந்தின் புகழ் வாய்ந்த தி டைம்ஸ்பத்திரிகையில் நிருபராகப் பணிபிரிந்தார். அப்பணியிலிருந்து தவறான செய்தியொன்றை குறிப்பிட்டமைக்காக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.(ஆதாரம் விக்கிப்பிடியா).

தொடர்ந்து தி டெய்லி டெலிகிராப்பத்திரிகையில் பிரெஸ்ஸில்ஸ் நகர நிருபராகப் பணியாற்றினார். அப்போது இவர் ஜரோப்பிய ஒன்றியத்திற்கெதிரான பல தொகுப்புகளை வரைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது எழுத்துக்கள் கூட கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர் மத்தியில் ஏற்பட்ட ஜரோப்பிய ஒன்றிய எதிர்ப்பலைகளை ஊக்குவிப்பதர்கு துணை நின்றன என்பதும் உண்மையே.

தி டெய்லி டெலிகிராப்பத்திரிகையின் உதவி ஆசிரியராக 1994-1999 வரையும் பின்பு “தி ஸ்பெக்டெட்டர்எனும் இதழின் ஆசிரியராக 1999-2005 வரையும் கடமையாற்றினார். 2001ம் ஆண்டுஆப்போதைய எம்.பி மைக்கல் ஹெசில்டைன் அரசியலிருந்து ஒதுங்கவும் , ஹென்லி எனும் தொகுதியின் கன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

2008ம் ஆண்டிலிருந்து இரண்டு தடவைகள் லண்டன் நகர மேயராகத் தெரிவு செய்யப்பட்டார். இக்காலகட்டத்தில் ரூட் மாஸ்டர் எனப்படும் மாடலிலான லண்டன் பஸ்களை மீள ஓடவிட்டது, லண்டன் சைக்கிள் சேவை மற்றும் தேம்ஸ் கேபிள் கார் எனப்படும் திட்டங்கள் தன்னால் கொண்டுவரப்பட்டன என்று பிரச்சாரம் செய்து கொள்கிறார்.

2015இல் மீண்டும் எம்.பி ஆகப் பதவியேற்றதன் பின்னால் 2016ம் ஆண்டு தனது மேயர் பதவியை இராஜினாமாச் செய்தார். 2016 ப்ரெக்ஸிட் சர்வஜன வாக்கெடுப்பில் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என்று பிரச்சாரம் செய்த அணியின் முன்னனி பிரச்சாரளாலாராகச் செயல்பட்டார்.

டேவிட் கமரன் விலகிய பின்பு தெரேசா மே அவர்களின் அமைச்சரவையில் வெளிநாட்மைச்சமராகப் பதவி வகித்தார். தெரேசா மே அவர்கள் ஜரோப்பிய ஒன்றியத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையை எதிர்த்து தனது பதவியை பொரிஸ் ஜான்சன் இராஜினாமாச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு தடவைகள் திருமணம் செய்து விவாகரத்துச் செய்து கொண்ட இவர் தற்போது தன் காதலியுடன் வசித்து வருகிறார். இவருக்கு இவரது இரண்டாவது மனைவியின் மூலம் இரண்டு மகள்களும், இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இதைத்தவிர திருமணத்திற்கு வெளியான ஒரு தொடர்பூடாக மற்றொரு பெண்குழந்தையும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவரது தந்தைவழியான ஒரு பூட்டனார் துருக்கி தேசத்தைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய ஊடகவியளாலர் எனவும் மற்றொரு வழியான பூட்டனார் இங்கிலாந்தின் இரண்டாம் ஜார்ஜ் மன்னரின் வழி வந்தவர் எனவும், தாய்வழிப் பூட்டனார் ஒரு ரஸ்ய யூத இனத்தவர் என்றும் கூறப்படுகிறது.

இவரது அரசியல் கருத்துக்கள் காலத்துக்குக் காலம் மாறுபட்டு வந்திருக்கின்றன. இவரது ஊடகத்துறைக் காலங்களில் இவரது கட்டுரைகளில் சிலவற்றில் உபயோகிக்கப்பட்ட வார்த்தைகள் வேற்றினத்தவர்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தும் வகையிலமைந்திருந்தன. வெளிநாட்டவரின் குடியேற்றத்த்தில் இவரது கொள்கைகள் புரியாதவைகளாகவே இருக்கின்றதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

இவர்தான் ஜக்கிய இராச்சியத்தின் அடுத்த பிரதமர் என்பது துல்லியமாகத் தெரிகிறது என்கின்றன ஊடகங்கள்.

ப்ரெக்ஸிட் எனும் இப்பாரிய பிரச்சனை இங்கிலாந்தின் மக்களின் மனங்களிலே கசிந்து கொண்டிருந்த இனத்துவேஷம் எனும் உணர்விற்குத் தீனியாகி கொஞ்சம், கொஞ்சமாக புகையைக் கக்கத் தொடங்கியுள்ளது. 4% இனாலேயே பெரும்பான்மை பெற்றிருந்த ஜரோப்பிய ஒன்றிய விலகல் தீர்மானம் அதற்கு எதிரான மக்களை விசனத்தின் விளிம்புக்குத் தள்ளியுள்ளது.

இந்நிலையில் தான் புதிய பிரதமர் வரும் 22ம் திகதி அறிவிக்கப்படவுள்ளார். ஊடகக் கணிப்புகளின் படி அது பொரிஸ் ஜான்சனாக இருந்தால், நாட்டினை ஒன்றுபடுத்தி, மக்களின் மனங்களில் பரவியிருக்கும் இனத்தூவேஷ உணர்வுகளைப் போக்கும் வல்லமை அவருக்கு இருக்கிறதா? என்பது கேள்விக்குறியே !

தன்னிடமிருந்து வெளிவரும் கருத்துக்கள் இருக்கும் பிரச்சனையை இன்னும் பெரிதாக்கி விடுமோ எனும் அச்சம் சிறிதுமின்றி நான் வெளிப்படையாக எனது மனதில் பட்டதைக் கூறுவேன் என்று சொல்லும் இவர் பல சமூகங்கள் இணைந்து வாழும் ஒரு பல்லினக் கலாச்சார நாடான இங்கிலாந்தை சரியான வழியில் கொண்டு செல்வாரா?

இதே நேரம் எதிர்க்கட்சியான இங்கிலாந்தின் லேபர் கட்சி ஒரு இடதுசாரப் பாரம்பரியத்தைக் கொண்டது. தொழிலாளரின் நலனை முன்வைத்தே ஆரம்பிக்கப்பட்டது. வட இங்கிலாந்து பல தொழில் ஆலைகளைக் கொண்டது. அங்கு வாழும் மக்கள் அவ்வாலைகளின் தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். முன்னைய காலத்து நிலக்கரிச் சுரங்கங்களும் இந்தப்பகுதிகளிலேயே அமைந்திருந்தன. கால காலமாக இப்பகுதிகளின் ஆதரவு தொழிற் கட்சிக்கே இருந்து வந்திருக்கின்றது.

சமீப காலமாக ஜரோப்பிய ஒன்றியத்தில் பல முன்னைய சோவியத் யூனியனின் அங்கங்களாக இணைந்திருந்த கிழக்கு ஜரோப்பிய நாடுகள் இணைந்ததும் அந்நாட்டு பிரஜைகள் பலர் ஜரோப்பிய ஒன்றியத்தின் இடநகர்வு சட்டங்களின் வழி இங்கிலாந்துக்குள் இலகுவாக குடியேறி வேலைவாய்ப்புகளைப் பெற்றிருக்கின்றனர்.

பல தொழிலதிபர்கள் தமது இலாபத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக குறைந்த ஊதியத்தில் வேலைக்கமர்த்தக்கூடிய இந்த கிழக்கு ஜரோப்பிய தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவதினால் உள்நாட்டு தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகள் குறைவதோடு அவர்களின் ஊதியமும் குறைக்கப்படுக்கிறது. இது இப்பகுதிகளில் வாழும் மக்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்காரணத்தினால் இப்பகுதிகளில் 2016ம் ஆண்டு நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் ஜரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான வகையிலே வாக்குகள் விழுந்திருக்கின்றன. பாரம்பரியமாக தொழிற் கட்சிக்கு வாக்களிப்பவர்களின் இத்தகைய மனப்போக்குக்கு தொழிற் கட்சி முகம் கொடுக்காத பட்சத்தில் அவர்களின் செல்வாக்கு இப்பகுதிகளில் மறைந்து விடப்போகிறது எனும் அச்சம் இக்கட்சியைப் பிரதிநிதிப்படுத்தும் இக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதேநேரம் தொழிற்கட்சியின் உத்தியோக பூர்வமான கொள்கை ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகினாலும், அதனுடனான உறவுகள் மிகவும் நெருக்கமாகப் பேணப்பட வேண்டும் என்பதுவே. இது இன்றைய இக்கட்சியின் நிலையைத் தர்மசங்கடத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கையில் இன்றைய ஜக்கிய இராச்சியத்தின் அரசியல்களத்தில் மிதவாதப் போக்குக் கொண்ட அரசியல் கட்சிகளின் செல்வாக்கு பலவீனமடையப் போகிறது போலவும், பாப்பியூலிசம் என்கிற பிரபலமான, மக்களின் தீவிர உணர்வுகளுக்குத் தீனி போடும் நபர்களின் அரசியல் தலைவிரித்தாடப் போகிறது போலவும் போன்றதொரு நிலையே தென்படுகிறது.

! ஹிட்லர் கூட முதன் முதலில் ஜனநாயக அரசியலின் மூலம் தான் பதவிக்கு வந்தவரோ ?

எத்திசையில் ? எப்பயணம் ?

Share:

Author: theneeweb